அக்கரைப் பச்சைகள் – 01

அக்கரைப் பச்சைகள் 

அத்தியாயம் – 01

“கமலா.. கமலா.. இங்க ஒருக்கால் வாரும்..”

“எதுக்கு இப்ப வந்ததும் வராததுமாகக் கத்திக் கொண்டிருக்கிறியள்.. ஒரு வேலை செய்ய விடமாட்டியளப்பா.. ஒரே ரோதணையாப் போச்சு உங்களோட..”

“இப்ப எதுக்கு நீர் கத்துறீர்? அதுசரி பிள்ளை எங்க போட்டாள்?”

“அவள் நளினி வீட்ட போய்ட்டு வாறன் என்று இப்பத்தான் போனவள்.. ஏன் என்ன விசயம்?”

“இப்ப சந்தைக்குப் போய்ட்டு வாற வழியில புரோக்கர் கனகண்ணனைக் கண்டனான்.. பிள்ளையிட சாதகத்துக்குப் பொருத்தமாக ஒரு குறிப்பு வந்திருக்காம்..”

அவர் முடிக்க முன்னரே குறுக்கிட்டார் கமலா. 

“எந்த நாடாம் அப்பா?”

“இங்க தான் கமலா.. மாப்பிள்ளை யாழ்ப்பாணத்தில பாங்க்ல வேலையாம்.. ஒரு அண்ணன் தானாம். அவனும் கட்டிட்டானாம். சோழி சுரட்டு இல்லாத குடும்பம்..”

“உங்களுக்கு எத்தினை தரம் சொல்லுறதப்பா.. பிள்ளைக்கு வெளிநாட்டில மட்டும் தான் பாருங்கோ.. ஊரில வேண்டாம் என்று..”

“அதில்லை கமலா.. இந்தப் பொடியனும் நல்ல குணமான பிள்ளையாம்.. கனகண்ணைக்குத் தெரிஞ்ச ஆக்கள் தானாம்.. குடி, சிகரெட் ஒண்டும் இல்லாத பொடியனாம்.. அக்கா, தங்கச்சியவைக்கு கட்டிக் குடுக்க வேணும், சீதனம் குடுக்க வேணும் என்று எந்தப் பொறுப்பும் இல்லை.. சீதனமும் ஒண்டும் தேவையில்லையாம்.. அவைக்கே நல்ல சொத்துப்பத்து இருக்குதாம்..”

“பொடியன் எவ்வளவு வேணும் என்றாலும் தங்கப்பவுணாக இருக்கட்டும்.. எனக்கு இந்தச் சம்பந்தம் பிடிக்கேல்ல.. எங்கட மகளை வெளிநாட்டில தான் கட்டிக் குடுக்கிறது.. சும்மா அதை இதைச் சொல்லிக் கொண்டு ஊர் மாப்பிள்ளையளிட சாதகத்தோட வராதையுங்கோ சொல்லிப் போட்டன்..”

“ஏன்தான் இப்பிடி அடம் பிடிக்கிறீரோ தெரியேல்ல. எங்களுக்கு ஒரேயொரு பிள்ளை அவள். வெளிநாட்டுக்கு அனுப்பிப் போட்டு நாங்கள் ரெண்டு பேரும் இங்க மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்து இருக்க வேண்டியது தான்..”

“ஏன் நாங்கள் இங்க உட்கார்ந்து இருக்க வேணும்? பிள்ளை போய்ட்டால் கொஞ்ச நாளில பிள்ளை பிறக்க கொள்ள எங்களை கூப்பிட்டிடுவாள்தானே.. நாங்களும் போய்ட வேண்டியதுதான்..”

“அங்க போய் என்ன மாப்பிள்ளையிட உழைப்பில உட்கார்ந்து சாப்பிடச் சொல்லுறியோ?”

“ஏன் நாங்கள் என்ன பிள்ளைக்குச் சீதனம் குடுக்காமலே விடப் போறம்.. பிறகு ஏன் அவையோட போய் இருக்க வெட்கப் படப் போறம்..”

“அதைவிட இங்கேயே நல்ல பொடியனா ஒண்டைக் கட்டிக் குடுத்திட்டு சொந்த இடத்திலேயே மதிப்பா வாழலாமே.. எதுக்கு அங்க குளிருக்கயும் பனியுக்கயும் போய் கஷ்டப்பட வேணும்?”

“ஏன் உங்களுக்கு இடைக்கிடை அங்க தவறனைக்குப் போய் குடிக்கிற பனங்கள்ளு கிடைக்காது என்று கவலையாக் கிடக்குதோ? வெளிநாடு வழிய இதை விட நல்ல குடிவகை எல்லாம் கிடைக்கும் உங்களுக்கு..”

“நான் மாசத்தில ஒருக்கால் எப்பயாச்சும் குடிக்கிறதை இப்ப ஏன் இழுக்கிறீர்? நான் அதுக்காகச் சொல்லேல்ல.. வெளிநாட்டு மாப்பிள்ளை என்றால் அங்க போய் என்னென்ன பழக்கங்கள் பழகி வைச்சிருக்கிறாங்களோ? நல்லபொடியளோ என்று எப்பிடி விசாரிக்கிறது?”

“அதுதான் எல்லா நாட்டிலயும் தெரிஞ்சவை இருக்கினம்தானே.. அதெல்லாம் வடிவா விசாரிக்கலாம்..”

“இல்லையப்பா.. என்னதான் தெரிஞ்சவை விசாரிச்சாலும்  நாங்கள் இங்க நேரில பார்த்து விசாரிக்கிறது போல வராது தானே..”

“எடுத்த உடனேயே கரிநாக்குப் போல ஏதாவது தடுத்துக் கொண்டு வருவியளப்பா.. அந்த யோகமக்காட பெட்டைக்கு சுவிஸ்ல தானே கட்டிக் குடுத்தவை.. ஒரு கறுத்த ஒல்லிப் பெட்டை.. அவளுக்கெல்லாம் வெளிநாட்டு மாப்பிள்ளை கிடைக்கேக்க இவ்வளவு வடிவான எங்கட பிள்ளையை ஊரிலேயே கட்டிக் குடுக்கிறது?”

“கமலா! நான் சொல்லுறதைக் கொஞ்சம் பொறுமையாகக் கேளும்.. பிள்ளை எந்தப் பிக்கல் பிடுங்கலும் இல்லாமல் சந்தோசமாக வாழ்றது தான் முக்கியமே தவிர அவள் வெளிநாடு போய் வாழுறது முக்கியம் இல்லை. முந்தி என்றாலும் சண்டை அது இதென்று உயிருக்குப் பயத்தில வெளிநாடு வழிய போனது சரி. இப்ப ஏன் வெளிநாடு போக வேணும்.. இப்ப இங்க என்ன இல்லையென்று சொல்லும் பாப்பம்..”

“உங்களுக்கு எத்தினை தரம் சொன்னாலும் ஒண்டும் விளங்காதப்பா.. சண்டை முடிஞ்ச உடன மட்டும் நாட்டு நிலை ஒழுங்காகிற்றுதே.. சாமான் விக்கிற விலைக்கு நாடே சோமாலியாவாகப் போகுது.. பிள்ளையாவது வெளிநாடு போய் சந்தோசமாக இருக்கட்டுமே என்று நினைக்காமல்..”

“விலைவாசி ஏறுறது எல்லாம் ஊரோட ஒத்தது தானே.. கடவுளே என்று நான் உங்களுக்கு என்ன குறை வைச்சிருக்கிறன்? சொந்தமாக வீடு,  வாசல், தோட்டம், பாங்கில காசும் போட்டு வைச்சிருக்கிறன்.. இருக்கிற வரைக்கும் சந்தோசமாக சொந்த ஊரில வாழ்ந்திட்டுப் போறதுதானே..”

“உங்களோட கதைச்சு பிரியோசனமில்லையப்பா.. உங்களோட மாரடிக்க என்னால ஏலாது.. அடுப்பில குழம்பு கொதிக்குது.. நான் சமையலைக் கவனிக்க வேணும்.. நீங்கள் புரோக்கரிட்டத் தெளிவாகச் சொல்லி விடுங்கோ.. வெளிநாட்டு மாப்பிள்ளை மட்டும் தான் வேணும் என்று..”

கூறியபடியே சமையலறைக்கு விரைந்தார் கமலா. மனைவியின் மனதை மாற்றும் வழி தெரியாது ஏக்கப் பெருமூச்சை வெளியேற்றினார் சுந்தரம். 

மகளை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதில் துளி கூட விருப்பம் இல்லை அந்தத் தந்தைக்கு. ஆனால் தாயாரோ வெளிநாட்டு மாப்பிள்ளைக்குத் தான் கட்டி வைப்பேன் என்று ஒரே பிடியாய் நிற்கிறார். மகளுக்குத் திருமணப் பேச்சை ஆரம்பித்த நாளிலிருந்து கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஒரு துவந்த யுத்தமே நடவாத குறை தான். 

சுந்தரமும் தன்னாலான வரை மனைவியின் மனதை மாற்ற முயற்சித்துக் கொண்டேதான் இருக்கிறார். ஆனால் இதுவரை பலன் என்னவோ பூச்சியம் தான். 

இருவரில் வெல்லப் போவது யாரோ?

அக்கரை தொடரும்…..

You cannot copy content of this page