அக்கரைப் பச்சைகள் – 15 (நிறைவுப் பகுதி)

அத்தியாயம் – 15

​பாரிஸின் வசந்த காலம் மெல்லத் துளிர்க்கத் தொடங்கியிருந்தது. குளிரில் உறைந்து மொட்டையாக நின்ற மரங்களில் இப்போது இளம்பச்சை இலைகள் எட்டிப்பார்த்தன. அந்த இலைகளைப் போலவே மதுவந்தியின் வாழ்க்கையிலும் ஒரு புதிய நிறம் படர்ந்திருந்தது. மூன்று வருடங்கள் ஓடிவிட்டிருந்தன. அந்த மூன்று வருடங்களும் அவளுக்குத் தந்த அனுபவங்கள், அவள் யாழ்ப்பாணத்தில் கழித்த இருபத்தி மூன்று வருடங்களை விடவும் பெரிய பாடங்களைக் கற்றுக் கொடுத்திருந்தன.

​மதுவந்தி இப்போது அதே பல்பொருள் அங்காடியில் ஒரு பொறுப்பான நிலையில் (Chef de rayon) இருக்கிறாள். அவளது பிரெஞ்சு மொழி இப்போது சரளமாக இருந்தது. வெறும் மொழியை மட்டுமல்ல, அந்த நாட்டுச் சட்டங்களையும், ஒரு பெண்ணாகத் தனியாக நின்று எப்படி வாழ வேண்டும் என்ற கலையையும் அவள் கற்றுக்கொண்டாள்.

​அன்று விடுமுறை நாள். மதுவந்தி மெதுவாகத் தயார் ஆகிவிட்டு, பாரிஸின் மையப்பகுதிக்குச் செல்ல முடிவெடுத்தாள். ஒரு காலத்தில் மயூரன் அவளை ஈபிள் கோபுரத்திற்கு அழைத்துச் சென்று, போலியான புன்னகையோடு புகைப்படம் எடுக்கச் சொல்லி மிரட்டிய அதே இடத்திற்கு இன்று அவள் தனது சொந்த விருப்பத்தில் சென்றாள்.

​மெற்றோ புகையிரதத்தில் அமர்ந்து ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தபோது, அவளுக்குப் பழைய நினைவுகள் நிழலாடின. இதே புகையிரதத்தில் தான் அவள் பயந்து நடுங்கிப் போய் அமர்ந்திருந்தாள். இன்று அவள் நிமிர்ந்து அமர்ந்திருக்கிறாள். அவளது கையில் இருந்த ‘நவிக்கோ’ (Navigo – பயண அட்டை) அவளது சுதந்திரத்தின் சான்றாக மின்னியது.

​ஈபிள் கோபுரத்தின் முன்னால் நின்றபோது, பழைய மதுவந்தி அங்கே இல்லை என்பது அவளுக்குப் புரிந்தது. அன்று அந்த இரும்புக்கோபுரம் அவளைப் பார்த்து ஏளனமாகச் சிரிப்பது போல இருந்தது. இன்று அது வெறும் ஒரு கட்டிடமாக மட்டுமே தெரிந்தது.

​அவள் தனது கைப்பேசியை எடுத்தாள். நீண்ட நாட்களாகப் பயன்படுத்தாமல் இருந்த தனது முகப்புத்தக (Facebook) பக்கத்தைத் திறந்தாள். அதில் அவள் கடைசியாகப் பதிவிட்டிருந்த அந்தப் போலியான சிவப்பு கோட் அணிந்த புகைப்படம் இன்னும் அங்கே இருந்தது. அதன் கீழே நூற்றுக்கணக்கான ‘லைக்’குகள். அந்த ‘லைக்’குகள் ஒவ்வொன்றும் அவளது கண்ணீரின் விலையில் வாங்கப்பட்டவை.

​மதுவந்தி இன்று ஒரு புதிய புகைப் படத்தை எடுத்தாள். அலங்காரமான உடைகள் இல்லை, முகத்தில் அதிகப்படியான ஒப்பனை இல்லை. அவள் வேலை செய்யும் சீருடையுடன், ஒரு கையில் தனது வேலையின் அடையாள அட்டையை (Badge) ஏந்தியபடி, இன்னொரு கையில் தனது தங்குமிட அனுமதிப்பத்திரத்தை (Carte de séjour) வைத்திருந்தாள்.

​அந்தப் புகைப்படத்தைப் பதிவேற்றியவள், அதற்குக் கீழே இப்படி எழுதினாள்:

“அக்கரைப் பச்சை என்று நம்பி ஓடி வரும் உறவுகளுக்கு.. இதுதான் பாரிஸ். இங்கே ஈபிள் டவரை விடவும், லா சப்பல் வீதிகளில் சிதறிக் கிடக்கும் எமது மக்களின் கண்ணீரும் உழைப்புமே அதிகம். வெளிநாடு என்பது சொர்க்கம் அல்ல, அது ஒரு போர்க்களம். இங்கே தாலி கட்டியவன் மட்டும் உங்களுக்குப் பாதுகாப்பைத் தந்துவிட மாட்டான். உங்கள் கல்வி, உழைப்பு, மற்றும் சுயமாகச் சிந்திக்கும் திறன் மட்டுமே உங்களைக் காப்பாற்றும். நான் இன்று ஒரு ‘வெளிநாட்டு மாப்பிள்ளையின்’ மனைவியாக அல்ல, ஒரு உழைக்கும் பெண்ணாக, சுதந்திரமான மனுசியாக பாரிஸில் நிற்கிறேன். நிஜமான வாழ்க்கை புகைப்படங்களில் இல்லை, நமது சுயமரியாதையில் இருக்கிறது.”

​அந்தப் பதிவைப் போட்ட சில நிமிடங்களில் ஊரிலிருந்து அழைப்புகள் வரத் தொடங்கின. நளினி முதலில் அழைத்தாள்.

​“மது.. என்னடி இதெல்லாம்? உனக்கு என்ன பைத்தியமா? மயூரன் இப்ப சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறானாம், கடன் காரங்கள் அவனைக் குடையுறாங்களாம்.. நீ அவன்கூடவே இருந்து அவனைத் தேத்தியிருக்கலாம் தானே?” என்றாள் நளினி.

​மதுவந்தி அமைதியாகச் சொன்னாள், “நளினி.. அவனைத் திருத்துறதுக்கு நான் ஒன்றும் அவனுக்குத் தாய் இல்லை. நான் ஒரு மனுசி. என்னை அடிமையா கொடுமைப்படுத்தி நடத்துற ஒருத்தன்கூட வாழ்றதை விட, தெருவில நிக்குறது மேலென்று நான் நினைச்சன். இப்ப நான் தெருவில இல்லை, என்ர சொந்தக் கால்ல நிக்கிறேன். மயூரனைப் பற்றிக் கவலைப்படுற நீ, ஒருநாளாவது நான் அந்த ரூமுக்குள்ள எப்பிடி அழுதிருப்பன் என்று யோசிச்சியா? இனிமேல் இதுபற்றிக் கதைக்காதே..” என்று இணைப்பைத் துண்டித்தாள்.

​அடுத்து அவளது தந்தை சுந்தரம் அழைத்தார்.

​“மது.. உன்ர போஸ்டைப் பார்த்தன் பிள்ளை. மனசுக்கு ஒரு பக்கம் கஷ்டமா இருந்தாலும், நீ துணிச்சலா எடுத்த முடிவைப் பார்த்துப் பெருமையா இருக்கு. உன்ர அம்மா இப்பவும் ஓயாம அழுதுகொண்டிருக்கிறா. ‘மகள் இப்படியொரு போட்டோவைப் போட்டுட்டாளே, ஊர் சனம் என்ன சொல்லும்’ எண்டதுதான் அவட கவலை. ஆனா நீ கவலைப்படாதே பிள்ளை.. நீ உழைச்சு அனுப்பின காசை வைச்சு முழுக் கடனையும் அடைச்சிட்டன். இனியும் இங்க எங்களுக்கு என்று அனுப்பாமல் நீ உன்ர எதிர்கால வாழ்க்கைக்கு என்று சேர்த்து வை. நீ அங்க நிம்மதியா இரு.. சந்தோசமாக இரு. அதுதான் முக்கியம் அம்மா.. உனக்குத் திரும்ப கலியாணம் செய்ய விருப்பம் எண்டால் தயங்காமல் அப்பாட்டச் சொல்லு.. உனக்கு யாரையும் பிடிச்சிருந்தாலும் யோசிக்காமல் சொல்லு..” என்றார் சுந்தரம்.

​“சரி அப்பா.. நான் உழைக்கிற காசை இனிமேல் எனக்காகவும், உங்களுக்காகவும் மட்டும் சேர்த்து வைக்கிறேன். என்னைப் புரிஞ்சு கொண்ட மாதிரி யாரையும் சந்திச்சால் நிச்சயமாக நான் ரெண்டாம் கலியாணம் கட்டுவன் அப்பா. அப்பிடியொரு சந்தர்ப்பம் அமைஞ்சால் உங்களிட்டக் கட்டாயம் சொல்லுவன் அப்பா. அம்மாட்டச் சொல்லுங்கோ, இனியெண்டாலும் அந்தக் கௌரவம் என்ற போர்வையைத் தூக்கி எறியச் சொல்லி. நான் நிம்மதியா இருக்கிறதுதான் உங்களுக்கு முக்கியம் என்றால், இந்த மதுவந்தி இப்ப ரொம்ப சந்தோசமா இருக்கிறாள் என்று சொல்லுங்கோ,” என்றாள் மதுவந்தி.

​அவள் அங்கிருந்து நடந்து லா சப்பல் (La Chapelle) பகுதிக்குச் சென்றாள். அங்கு ஒரு சிறிய தமிழ்க் கடையில் அமர்ந்து தேநீர் குடித்தாள். அவளைச் சுற்றிப் பல இலங்கைத் தமிழர்கள். சிலர் ஏதோ ஒரு கனவில் ஓடிக்கொண்டிருந்தார்கள், சிலர் போதையில் தள்ளாடிக்கொண்டிருந்தார்கள், சிலர் விசா கிடைக்காமல் கவலையில் மருகிக் கொண்டு இருந்தார்கள்.

​லா சப்பலின் அந்த இருண்ட பக்கங்களை அவள் இப்போது ஒரு சமூக ஆர்வலரின் பார்வையுடன் பார்த்தாள். அங்கு வந்திருக்கும் புதிய பெண்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஒரு புதிய நோக்கம் அவளுக்குள் பிறந்தது. வசந்தி அக்கா செய்ததைப் போல, தானும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று முடிவு செய்தாள்.

​மாலை நேரம் நெருங்கியது. பாரிஸ் நகரம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. ஒரு காலத்தில் அந்தப் பளபளப்பைப் பார்த்து மிரண்டு போன மதுவந்தி, இன்று அந்தப் பிரகாசத்திற்குத் தானும் ஒரு காரணம் என்பதை உணர்ந்தாள்.

​மயூரனின் வாழ்க்கையைப் பற்றி அவளும் கேள்விப்பட்டாள்தான். அவன் தனது வேலையை இழந்து, கடன் தொல்லையால் ஒரு சிறிய அறையில் இன்னும் பலருடன் தங்கியிருப்பதாக வசந்தி அக்கா சொன்னார். அவன் இன்னும் அந்தப் பழைய நினைவுகளிலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறான். ஆனால் மதுவந்தி காலத்தை வென்று முன்னேறிவிட்டாள்.

​அவள் தனது அறைக்குத் திரும்பினாள். அந்தச் சிறிய ஸ்டுடியோ அறையில் அமைதி நிலவியது. மேசையில் இருந்த அந்த ஒரு யூரோ நாணயத்தை அவள் கையில் எடுத்தாள். அவளது போராட்டத்தின் முதல் சாட்சி அது. இன்று அவளது வங்கிக் கணக்கில் அவளது உழைப்பின் பயனாக ஆயிரக்கணக்கான யூரோக்கள் இருக்கலாம், ஆனால் மயூரனிடமிருந்து எடுத்த அந்த ஒரு யூரோ அவளுக்கு அவளின் எதிர்காலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியிருந்தது. 

​மதுவந்தி ஜன்னலைத் திறந்து வைத்தாள். குளிர்ந்த காற்று அவளது முகத்தைத் தழுவியது. தூரத்தில் ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் மின்னின.

​“அக்கரைப் பச்சை இனி எனக்கு ஒரு மாயை இல்லை. நான் நிற்கும் இந்தப் பக்கத்தை நானே பச்சையாக மாற்றிவிட்டேன்,” என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டாள்.

​நிஜமான பாரிஸ் வாழ்க்கை இன்று அவளுக்கு இனிப்பாக இருந்தது. மதுவந்தி எனும் அந்தப் பறவை, தனது கூண்டின் சாவியைத் தானே உடைத்து, சுதந்திரமான வானில் சிறகடித்துப் பறந்தது.

– முற்றும் –

You cannot copy content of this page