அக்கரைப் பச்சைகள் – 14

அத்தியாயம் – 14

​பாரிஸின் புறநகர்ப் பகுதியில் இருந்த அந்தச் சிறிய ‘ஸ்டுடியோ’ (Studio) அறைக்குள் நுழைந்தபோது, மதுவந்திக்கு முதல் முறையாக அந்த வெளிநாட்டு மண்ணின் வாசனை பிடித்திருந்தது. அது மல்லிகைப் பூ வாசனையோ அல்லது விலையுயர்ந்த வாசனைத் திரவியத்தின் மணமோ அல்ல; அது ‘சுதந்திரத்தின்’ வாசனை. மயூரனின் அறையில் இருந்த அந்தச் சிகரெட் நெடியும், குப்பைகளும், அதிகாரமும் இல்லாத அந்தப் பத்து சதுர மீட்டர் அறை அவளுக்கு ஒரு அரண்மனையாகத் தெரிந்தது.

​அரசாங்கத்தின் சமூக உதவித் திட்டத்தின் (HLM) மூலம் அவளுக்கு அந்தத் தற்காலிகத் தங்குமிடம் கிடைத்திருந்தது. வசந்தி அக்காவின் விடாமுயற்சியாலும், அவளது லோயரின் வாதத்தாலும் அவளுக்குப் பத்து வருடத் தங்குமிட அனுமதிப்பத்திரம் (Titre de séjour) கிடைத்துவிட்டது. “குடும்ப வன்முறைக்கு ஆளான பெண்” என்ற ரீதியில் அவளுக்குக் கிடைத்த அந்தத் தார்மீக வெற்றி, அவளது கைகளில் ஒரு புதிய வலிமையைத் தந்திருந்தது.

​அன்று மாலை அவள் தனது முதல் வேலைநாளை முடித்துவிட்டுத் திரும்பியிருந்தாள். இப்போது அவள் ஒரு ‘சுப்பர் மார்க்கெட்டில்’ (Supermarché) காசாளராக (Caissière) வேலை செய்கிறாள். நாள் முழுவதும் நின்று கொண்டே ‘பீப்.. பீப்..’ என்று ஓசை எழுப்பும் அந்த இயந்திரத்தின் முன்னால் நிற்பது அத்தனை சுலபமல்ல. கால்கள் கடுகடுக்கும், முதுகுத் தண்டுவடம் வலிக்கும். ஆனால், ஒவ்வொரு முறை ஒரு வாடிக்கையாளருக்குப் பிரெஞ்சு மொழியில் “மெர்சி.. ஒவ்வா (Merci.. Au revoir – நன்றி, மீண்டும் வருக) என்று சொல்லும்போதும், அவளுக்குள் ஒரு பெருமிதம் பொங்கும்.

​அவள் அடுப்பில் ஒரு சிறிய தேநீரைப் போட்டுவிட்டு ஜன்னலருகே அமர்ந்தாள். வெளியே பாரிஸின் புறநகர் ரயில் (RER) வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.

​அவளது கைப்பேசி சிணுங்கியது. கமலாவின் அழைப்பு.

​“மது.. என்னடி செய்றாய்? இஞ்ச பார், உன்ர ஒண்டவிட்ட தங்கச்சிக்கு ஒரு நல்ல சம்பந்தம் வந்திருக்கு. ஆனா அங்க இருக்கிற ஆக்கள் யாரோ குழப்பிவிட்டிருக்கினம்.. நீ புருசனைப் பிரிஞ்சு ஒரு ‘காப்பகத்தில’ (Shelter) இருக்கிறாய் என்று. தயவுசெஞ்சு அந்த மனுசனிட்டத் திரும்பிப் போயிடேன்.. அப்பத்தான் தங்கச்சிட கலியாணமாவது உருப்படும், உன்ர சித்தி என்னோட வந்து சண்டை பிடிக்கிறாள். நீ வாழாவெட்டியாக இருக்கிறதால தன்ர பிள்ளையிட வாழ்க்கையும் வீணாகப் போகுது என்று சொல்லிக் கத்துறாள்” கமலா வாய் விட்டே அழுதார்.

​மதுவந்திக்கு இப்போது கோபம் வரவில்லை, பரிதாபம்தான் வந்தது. “அம்மா.. இன்னும் எவ்வளவு காலம்தான் இந்தக் ‘கௌரவம்’ என்ற போர்வையில என்னைப் பலிகொடுக்கப் போறியள்? நான் மயூரனோட வாழ்ந்த காலத்தில என்னை எப்பிடி நடத்தினான் என்று உங்களுக்கு ஒருக்காலாவது அக்கறை இருந்ததா? நான் ஒரு ரூமுக்குள்ள அடைபட்டுக் கிடந்தபோது, ‘மது.. நீ அங்க நிம்மதியா இருக்கியா?’ என்று ஒரு வார்த்தை கேட்டியளா? அவன் குடிவெறியில சிகரெட்டால சூடு வைச்ச நேரம் கொஞ்சமாச்சும் நான் அனுபவிச்ச வேதனையை உணர்ந்து கொண்டிங்களா? உங்களுக்குத் தேவைப்பட்டது எல்லாம் ஈபிள் டவருக்கு முன்னால நான் நிக்கிற போட்டோவும், ஊர் சனத்தோட பெருமையும் மட்டும்தான் அம்மா..”

​“அதுக்காக ஒரு பொம்பிளை தனியாவா இருக்கிறது…”

​“அம்மா.. நான் இஞ்ச தனியா இல்லை. எனக்கு என்னைக் காப்பாத்திக் கொள்ளத் தெரியுது. நான் உழைக்கிறேன், என்ர வாடகையை நானே கட்டுறேன். எனக்கு இஞ்ச விசா கிடைச்சிட்டுது. இனி நான் யாரையும் நம்பி இல்லை. தங்கச்சிட கலியாணத்துக்குப் பயந்து நான் ஒரு நரகத்துக்குள்ள திரும்பிப் போக மாட்டேன். அந்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கு என்ர உண்மை தெரிஞ்சு அவங்களுக்கு இது பிடிக்கேல்லையென்றால், அப்பிடியொரு குடும்பத்துக்குள்ள தங்கச்சியை அனுப்பாதையுங்கோ. ஏனென்றால் நான் பட்டது போதும்,” என்று மிகத் தெளிவாக, உறுதியாகச் சொன்னாள்.

​அப்போது பின்னணியில் சுந்தரத்தின் குரல் கேட்டது. “விடு கமலா.. பிள்ளை சொல்றதுதான் சரி. அவளும் ஒரு மனுசி தானே.. அவளுக்கு ஒரு நிம்மதி வேண்டாமா? மது.. நீ பயப்பிடாதே பிள்ளை. உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் ஓடி வருவன். நீ தைரியமா இரு, அங்க உனக்குக் கஷ்டமாக இருந்தால் இங்க ஊருக்கே வந்திடு.. அப்பா பார்த்துக் கொள்ளுவன்” என்றார் அந்தத் தந்தை.

​அந்த ஒரு வார்த்தை மதுவந்திக்கு போதும் என்று தோன்றியது.

​வேலையில் அவளுக்குப் புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். அவளுடன் வேலை செய்யும் ‘சோபி’ என்ற பிரெஞ்சுப் பெண், மதுவந்திக்கு வேலை நுணுக்கங்களைச் சொல்லித்தந்தாள்.

​“மது.. நீ ஏன் எப்போதும் இவ்வளவு சீரியஸாக இருக்கிறாய்? சிரி.. இது பாரிஸ்!” என்று சோபி கிண்டல் செய்வாள்.

​“சோபி.. உங்களுக்கு பாரிஸ் என்பது ஒரு ரொமான்ஸ் சிற்றி. ஆனால் எங்களுக்கு இது ஒரு போராட்டக் களம். இஞ்ச வந்து சேருறதுக்குள்ள நாங்க இழக்குறது எங்கட கனவுகளையும், குடும்பத்தையும் தான்,” என்று மதுவந்தி சொல்லும்போது சோபிக்கு அது புரியவில்லை என்றாலும், மதுவந்தியின் கண்களில் இருந்த அந்தத் தேடல் அவளுக்கு எதையோ உணர்த்துவது போல இருந்தது. 

​ஒருமுறை தற்செயலாக லா சப்பல் (La Chapelle) பகுதிக்கு ஒரு தேவை நிமித்தமாக மதுவந்தி செல்ல வேண்டியிருந்தது. அந்த வீதிகளில் அவள் நடக்கும்போது, பழைய நினைவுகள் அவளை அச்சுறுத்தின. அதே அழுக்குச் சந்துகள், அதே பரபரப்பு. தூரத்தில் மயூரன் வேலை செய்யும் அந்த உணவகத்தைக் கண்டதும் அவளது இதயம் ஒரு கணம் துடித்தது. ஆனால் இந்த முறை அவள் பயந்து ஓடவில்லை. நிமிர்ந்து நடந்தாள்.

​உணவகத்தின் வாசலில் மயூரன் சிகரெட் பிடித்துக் கொண்டு நின்றிருந்தான். அவன் முகம் இன்னும் கசங்கிப் போயிருந்தது. பழைய அதிகாரத்தொனி மறைந்து, ஒருவிதத் தோல்வியின் சாயல் அவன் முகத்தில் படர்ந்திருந்தது. அவன் மதுவந்தியைப் பார்த்தான்.

​அவன் அருகில் வர முயன்றபோது, மதுவந்தி அவனைத் தீர்க்கமாகப் பார்த்தாள். அவளது அந்தப் பார்வையில் எந்த வெறுப்பும் இல்லை, மாறாக “நீ என்னை ஒன்றும் செய்ய முடியாது” என்ற ஒரு தெளிவு இருந்தது. மயூரன் அப்படியே நின்றுகொண்டான். அவளுக்குப் பின்னால் இருந்த அந்தச் சுதந்திரமான உலகம் அவனுக்கு எட்டாத ஒன்றாகத் தெரிந்தது.

​மதுவந்தி அங்கிருந்து விலகித் தன்பாட்டில் சென்று போன வேலையை முடித்துக் கொண்டு மெற்றோவில் ஏறினாள்.

​அன்று இரவு அவள் தனது டைரியைத் திறந்தாள். ஆரம்பத்தில் அதில் கண்ணீர் கறைகள் மட்டுமே இருந்தன. இப்போது அதில் அவளது வரவு-செலவுக் கணக்குகளும், புதிய பிரெஞ்சு வார்த்தைகளும் நிறைந்திருந்தன.

​“இலங்கையில இருந்து வெளிநாடு போக ஆசைப்படுற ஒவ்வொரு பெண்ணுக்கும் நான் சொல்ல நினைக்கிறது ஒண்டுதான். இலங்கையில இருந்து பாக்கேக்க அக்கரைப் பச்சை என்று நம்பி இங்க வெளிநாடுகளுக்கு ஓடி வராதையுங்கோ. அங்க இருந்து பார்க்கப் பச்சையாகத் தெரியிறது எல்லாம் இங்க வந்து பார்த்தால் வெறும் பாசியாகக் கூட இருக்கலாம். ஆனா, நீங்க துணிச்சலா இருந்தால், அந்தப் பாசியைக் கூட உரமாக்கி உங்களால வளர முடியும்,” என்று எழுதினாள்.

​அவளது அறையில் இப்போது ஒரு சிறிய செடி இருந்தது. அது பாரிஸின் குளிரையும் மீறி மெல்லத் துளிர்விடத் தொடங்கியிருந்தது. மதுவந்தியும் அந்தச் செடியைப் போலவே, ஒரு அந்நிய மண்ணில் தனது வேர்களை ஆழமாகப் பதித்துக் கொண்டிருந்தாள்.

​இனி அவள் யாருடைய நிழலும் அல்ல; அவளே ஒரு வெளிச்சம்.

​(அக்கரை தொடரும்)

You cannot copy content of this page