அக்கரைப் பச்சைகள் – 07

அத்தியாயம் – 07

​பாரிஸின் ஞாயிற்றுக்கிழமை காலைகள் மற்றைய நாட்களை விடவும் ஒரு விசித்திரமான அமைதியைக் கொண்டிருக்கும். ஆனால், லா சப்பல் வீதிகளில் அந்த அமைதிக்கு இடமில்லை. முதல் நாள் இரவு நடந்த கசப்பான விவாதத்திற்குப் பிறகு, மயூரன் அன்று வழக்கத்திற்கு மாறாகச் சீக்கிரம் எழுந்திருந்தான். மதுவந்திக்கும் அவனுக்கும் இடையே ஒரு மௌனப் போர் நடந்து கொண்டிருந்தது. அவள் அவனிடம் அதிகம் பேசுவதைத் தவிர்த்தாள்.

​”இஞ்ச பாரு மது.. பழைய கதையளை வைச்சுக்கொண்டு முகத்தைத் தூக்கி வைச்சிருக்காதை. இண்டைக்கு எனக்கு லீவு. உன்னைக் கூட்டிட்டுப் போய் பாரிஸைச் சுற்றிக் காட்டலாம் என்று இருக்கிறன். நல்ல உடுப்பாப் போட்டுக்கொண்டு ரெடியாகு,” என்றான் மயூரன். அவனது குரலில் நேற்றைய ஆத்திரம் மறைந்து, ஒருவித போலியான மென்மை கலந்திருந்தது.

​மதுவந்திக்கு வெளியே போக ஆசைதான். ஆனால், அவனது இந்தத் திடீர் மாற்றத்தின் பின்னணியில் ஏதோ இருக்கும் என்பது அவளுக்குப் புரிந்தது. “எங்க போகப் போறம்?” என்று ஒற்றைச் சொல்லில் கேட்டாள்.

​”ஈபிள் டவர்.. பிறகு அந்தப் பெரிய ஆர்ச் ஒண்டு இருக்குமே.. அங்கயெல்லாம் போவம். ஊரில உன்ர அம்மா, நளினி எல்லாம் கேக்கினமாம், இன்னும் ஒரு போட்டோவும் போடேல்ல என்று. இண்டைக்கு வடிவா நாலு போட்டோ எடுத்து அனுப்புவம். அப்பத்தான் வாயைத் திறந்தவை எல்லாம் அடங்குவாங்கள்,” என்றான் மயூரன்.

​அப்போதுதான் மதுவந்திக்கு உறைத்தது. அவளைச் சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்வது அவளது மன மாற்றத்திற்காக அல்ல; ஊருக்குக் காட்ட வேண்டிய ஒரு ‘ஷோ’ (Show) க்காகத்தான். வேறு வழியின்றி, பெட்டியிலிருந்த ஒரு அழகான சுரிதாரை எடுத்து அணிந்து கொண்டாள். மயூரன் அவளுக்கு ஒரு புதிய மென்சிவப்பு நிறக் கோட் (Coat) ஒன்றைக் கொடுத்தான். “இதைப் போடு.. இது போட்டோவில பார்க்கப் பந்தாவாக இருக்கும். லா சப்பல் கடையில நேத்துத்தான் வாங்கினனான்,” என்றான்.

​அவர்கள் மெற்றோ (Metro) புகையிரதத்தில் பயணித்து ‘துரோக்காதேரோ’ (Trocadéro) நிலையத்தை அடைந்தனர். புகையிரத நிலையத்திலிருந்து வெளியே வந்த மதுவந்தி ஒரு கணம் திகைத்துப் போனாள். இதுவரை சிதைந்த சுவர்களும், குப்பை நிறைந்த சந்துகளுமாக லா சப்பலைப் பார்த்தவளுக்கு, கண் முன்னே விரிந்த அந்த ஈபிள் கோபுரத்தின் பிரம்மாண்டம் பிரமிப்பைத் தந்தது. சாம்பல் நிற வானத்தின் பின்னணியில், இரும்புக் கவிதையாக அது நின்றிருந்தது.

​”அங்க நில்லு.. அந்தத் தூணுக்குப் பக்கத்தில.. கையை அப்பிடியே தூக்கிப் பிடி.. கோபுரத்தைத் தொடுற மாதிரி இருக்கும்,” என்று மயூரன் அவளை இயக்குவித்தான்.

​அவளுக்குச் சிரிப்பே வரவில்லை. குளிரில் உதடுகள் துடித்தன. மனதுக்குள் பாரம் அழுத்திக் கொண்டிருந்தது. “கொஞ்சம் சிரி மது.. பேயைப் பாத்த மாதிரி நிக்காதை.. பல்லக் காட்டி நல்லாச் சிரி,” என்று மயூரன் கத்தினான்.

​சுற்றியிருந்த சுற்றுலாப் பயணிகள் தங்களை வேடிக்கை பார்ப்பதை உணர்ந்த மதுவந்தி, சங்கடத்துடன் ஒரு போலியான புன்னகையை உதிர்த்தாள். மயூரன் விதவிதமான கோணங்களில் அவளைப் புகைப்படம் எடுத்தான். அவனையும் அவளையும் சேர்த்து சில ‘செல்பி’களையும் எடுத்துக் கொண்டான். அந்தப் படங்களில் அவர்கள் ஒரு மிகச்சிறந்த ஜோடியாகத் தெரிந்தார்கள். அவனது கைகள் அவளது தோளை அணைத்திருக்க, அவன் காட்டிய அந்தப் பல்வரிசைப் புன்னகைக்கு பின்னால் ஒரு பாத்திரம் கழுவும் தொழிலாளியின் விரக்தியோ அல்லது ஒரு கடனாளியின் பதற்றமோ துளியும் தெரியவில்லை.

​திரும்பி வரும் வழியில், ‘சோம்ப்ஸ் எலிசே’ (Champs-Élysées) வீதியில் உள்ள ஒரு புகழ்பெற்ற உணவகத்தின் முன்னால் அவளை நிற்க வைத்துப் படம் எடுத்தான். உள்ளே போய் சாப்பிட அவர்களுக்கு வசதியில்லை என்பது அவளுக்கும் தெரியும், அவனுக்கும் தெரியும். ஆனால், அந்தப் பெயர்ப்பலகை தெரியும்படி எடுக்கப்பட்ட புகைப்படம், அவர்கள் அங்குதான் மதிய உணவு அருந்தியதாகப் பார்ப்பவர்களுக்குத் தோன்றும்.

​அறைக்குத் திரும்பியதும், மயூரன் வேலையைத் தொடங்கினான். தனது கைப்பேசியில் இருந்த சில செயலிகள் (Apps) மூலம் அந்தப் புகைப் படங்களை மேலும் மெருகேற்றினான். முகத்திலிருந்த சோர்வை மறைத்து, நிறத்தைக் கூட்டி, அந்தச் சாம்பல் நிற வானத்தை நீல நிறமாக மாற்றினான். பின் ‘வாட்ஸ்அப்’ (WhatsApp) ஸ்டேட்டஸிலும், முகப்புத்தகத்திலும் (Facebook) அந்தப் படங்களைப் பதிவேற்றினான்.

​அடுத்த ஐந்தாவது நிமிடம் மதுவந்தியின் கைப்பேசி அலறத் தொடங்கியது. கமலாவினது அழைப்பு அது.

​”மது.. என்னடி இவ்வளவு வடிவா இருக்கிறாய்! அந்தச் சிவப்பு கோட் உனக்குச் செம எடுப்பா இருக்கு. மயூரன் உன்னை ராணி மாதிரி வைச்சிருக்கிறான் போல.. அதான் சொன்னேன்ல, அங்க போனால் ராசாத்தி மாதிரி இருக்கலாம் என்று. இப்பப் பாரடி, எலெக்ஷன் ஒபிசர் மகேஸ்வரி இந்தக் கிளிக்ஸைப் பாத்திட்டு எனக்குப் போன் பண்ணுறா.. அவட மருமகனும் லண்டனிலதான் இருக்கிறானாம், ஆனா இப்பிடியொரு கோட் அவளுக்கு இன்னும் வாங்கிக் குடுக்கேல்லையாம்,” என்று கமலா பெருமையில் மிதந்தார்.

​மதுவந்திக்குத் தொண்டை வரை ஒரு அழுகை முட்டியது. “ஓம் அம்மா.. இங்க நல்லாத்தான் இருக்கு.. குளிருதான் கொஞ்சம் கூட..” என்று வார்த்தைகளை விழுங்கினாள்.

​”குளிரென்றால் என்னடி.. மயூரன் இருக்கிறான்தானே.. நளினி கூடப் பாத்திட்டுக் கத்தினவள்.. அவளுக்கும் ஒருக்கால் போன் பண்ணிக் கதையேன்,” என்று சொல்லிவிட்டு வைத்தார் கமலா.

​தொடர்ந்து நளினியின் மெசேஜ்கள் வந்தன. ‘அடியே மது.. நீ செம லக்கிடி! ஈபிள் டவருக்கு முன்னால நிக்கிறதைப் பார்க்க எனக்கே பொறாமையா இருக்கு. உனக்கு ஏதும் கஷ்டம் என்றால் சொல்லு என்று அப்ப சொன்னாய்.. இப்பிடிச் சொகுசாக இருக்கிறவளுக்கு என்னடி கஷ்டம் வந்துடப் போகுது? அங்க சலூன் எல்லாம் பக்கத்தில இருக்கா? உன்னோட பேஷியல் மினுக்கம் இங்க வரைக்கும் தெரியுது’ – என அவள் அனுப்பியிருந்தாள்.

​மதுவந்தி அந்தப் புகைப் படத்தையே உற்றுப் பார்த்தாள். அதிலிருப்பது தான் தானா? அந்தப் பளபளப்பான கோட், அந்தச் செயற்கையான புன்னகை, பின்னணியில் அந்தப் பிரம்மாண்டக் கோபுரம்.. எல்லாம் ஒரு மாயை. உண்மை என்பது, அந்தப் புகைப்படம் எடுத்த பின், அங்கிருந்து நடந்து மெற்றோ நிலையத்திற்கு வரும்போது, கடையொன்றில் ஒரு யூரோவுக்குத் தண்ணீர் போத்தல் வாங்கக் கூட மயூரன் யோசித்ததுதான். உண்மை என்பது, காலையிலிருந்து ஒருவேளைச் சாப்பாடு கூட இல்லாமல் பசியோடு அலைந்ததுதான். உண்மை என்பது, அந்தப் புகைப்படத்திற்குப் பின்னால் இருந்த மிரட்டலும் அதிகாரமும்தான்.

​மயூரன் அருகில் வந்து அமர்ந்தான். அவனது போனைப் பார்த்துக் கொண்டிருந்தான். “பாத்தியா மது.. அஞ்சே நிமிசத்தில நூறு ‘லைக்’. உன்ர ஊர் சனத்துக்கு எல்லாம் இப்ப வயிறு எரியும். இதைப் பாரு.. என்ர ஃப்ரெண்ட் ஒருத்தன் போட்டிருக்கான்.. ‘மயூரன் பாரிஸ்ல செட்டில் ஆகிட்டான்’ என்று. இதுதான் வாழ்க்கை,” என்று பெருமையோடு சொன்னான்.

​”இதுதான் வாழ்க்கையா?” என்று மெதுவாகக் கேட்டாள் மதுவந்தி.

​”பின்ன? அங்க ஊரில இருக்கிறவங்களுக்கு நம்மட கஷ்டம் தெரிஞ்சு என்ன ஆகப் போகுது? அவங்களுக்குத் தெரிய வேண்டியது நாம இங்க சந்தோசமா இருக்கிறம் என்கிறது மட்டும்தான். அப்பத்தான் நமக்கு ஒரு கௌரவம் இருக்கும். இனிமேல் வாரா வாரம் இதே மாதிரி போட்டோ எடுக்க வேணும். நீயும் ஒரு இன்ஸ்டாகிராம் ஐடி (ID) ஆரம்பி.. ரீல்ஸ் (Reels) எல்லாம் போடு,” என்று புதிய கட்டளையைப் போட்டான்.

​அன்று இரவு, மயூரன் குடித்துவிட்டு வந்து கட்டிலில் விழுந்தான். அவனது குறட்டைச் சத்தம் அந்தச் சிறிய அறைக்குள் இடி முழக்கம் போலக் கேட்டது. மதுவந்தி கைப்பேசியைத் திறந்து அந்த ஈபிள் டவர் படத்தைப் பார்த்தாள். அதன் கீழே விழுந்து கொண்டிருந்த ‘லைக்’குகள் ஒவ்வொன்றும் அவளது இதயத்தில் ஆணியாக இறங்கின.

​சமூக வலைத்தளங்களின் அந்தத் திரைச்சீலைக்கு பின்னால், லா சப்பலின் இருட்டு அவளை முழுமையாக விழுங்கிக் கொண்டிருந்தது. பளபளக்கும் பாரிஸ் என்பது ஒரு கனவு; ஆனால், அழுக்கு படிந்த அந்தச் சிறிய அறையும், வாசனைத் திரவியத்திற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அந்தப் பாசி நாற்றமும்தான் அவளது நிஜம்.

​அவள் மெதுவாக ஜன்னல் திரையை விலக்கி வெளியே பார்த்தாள். தூரத்தில் ஈபிள் கோபுரத்தின் மின் விளக்குகள் மின்னி மறைந்தன. அது அவளைப் பார்த்து ஏளனமாகச் சிரிப்பது போலிருந்தது. “அக்கரைப் பச்சை” என்ற சொல்லின் முழுமையான, கசப்பான அர்த்தத்தை அவள் அன்று இரவு அணுவணுவாக அனுபவித்தாள்.

​(அக்கரை தொடரும்…)

You cannot copy content of this page