அக்கரைப் பச்சைகள் – 13

அத்தியாயம் – 13

​காப்பகத்தின் காலை நேரங்கள் ஒரு இராணுவக் கட்டுப்பாட்டுடன் தொடங்கும். காலை ஏழு மணிக்கே பொதுச் சமையலறையில் பல நாட்டுப் பெண்களின் நடமாட்டம் தொடங்கிவிடும். பிரெஞ்சுப் பாண் (Baguette) மற்றும் கோப்பியின் மணம் அந்த இடத்தை ஆக்கிரமித்திருக்கும். மதுவந்திக்கு ஆரம்பத்தில் அந்தச் சூழல் அந்நியமாக இருந்தாலும், மெல்ல மெல்ல அதுவே அவளுக்கு ஒரு பாதுகாப்பான கவசமாகத் தெரிந்தது.

​அவளது அறையில் அவளுடன் தங்கியிருந்தவள் பெயர் பாத்திமா. மொரோக்கோ தேசத்தைச் சேர்ந்தவள். அவளுக்கும் மதுவந்தியைப் போலவே ஒரு கசப்பான கதை இருந்தது. மொழி வேறாக இருந்தாலும், இருவரது கண்களிலும் இருந்த அந்தத் தேடல் ஒன்றுபோலவே இருந்தது. மதுவந்திக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்திலும், பாத்திமாவுக்குத் தெரிந்த அரைகுறை பிரெஞ்சிலும் அவர்கள் தங்கள் வலிகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.

​”மது.. இஞ்ச பார்.. அழுகிறதை நிறுத்து. இந்த நாடு உனக்கு ஒரு வாய்ப்பைத் தந்திருக்கு. உழைக்கிற கைகளுக்கும், துணிச்சலான மனசுக்கும் இஞ்ச மரியாதை இருக்கு,” என்று பாத்திமா அடிக்கடி சொல்வாள்.

​வசந்தி அக்கா வாரத்தில் இரண்டு முறையாவது மதுவந்தியை வந்து சந்திப்பார். “மது.. அடுத்த வாரம் உனக்கு லோயரோட ராந்தேவு (அப்பாயிண்ட்மெண்ட்) இருக்கு. மயூரன் உனக்குச் செய்த சித்திரவதைகளை ஆதாரத்தோட சொல்லோணும். மெடிக்கல் ரிப்போர்ட் இருக்குத்தானே… அவனைக் கண்டு இனிப் பயப்படத் தேவையில்லை. அவன் இப்ப உன்ர அப்பாக்குத் ஆக்கினை குடுக்கத் தொடங்கீட்டான்,” என்றார் வசந்தி.

​மதுவந்தியின் இதயம் ஒரு கணம் அதிர்ந்தது. “அப்பாக்கு என்னவாம் அக்கா? அவர் நல்லா இருக்கிறாரா?”

​”மயூரன் உன்ர அப்பாக்கு ஹோல் பண்ணி வெருட்டியிருக்கிறான்.. உங்கட மகளைக் காணேல்ல, போலீஸ்ல சொல்லப்போறன்’ என்று வெருட்டிறான். ஆனா உன்ர அப்பா கெட்டிக்காரர். ‘என்ர பிள்ளை பாதுகாப்பாக  இருக்க வேண்டிய இடத்தில இருக்கிறா, நீ அவளுக்குச் செய்த கொடுமையைப் போலீஸ்ல சொன்னால் உனக்குத் தான் விசா இல்லாமப் போகும்’ என்று திருப்பி அடிச்சிருக்கிறார். இப்ப மயூரன் கொஞ்சம் அடங்கியிருக்கிறான்,” என்று வசந்தி சொன்னபோது மதுவந்திக்கு ஒரு நிம்மதிப் பெருமூச்சு வந்தது.

​ஆனால், கமலாவின் நிலைமைதான் கவலைக்கிடமாக இருந்தது. ஊரில திருமணத்திற்காக வாங்கிய கடன்காரர்கள் வீட்டு வாசலில் நிற்கத் தொடங்கிவிட்டார்கள். மதுவந்தி பிரான்ஸில் ஒரு காப்பகத்தில் இருக்கிறாள் என்ற செய்தி ஊர் முழுக்கத் பரவினால், ‘கௌரவம்’ என்னாகும் என்பதுதான் கமலாவின் கவலையாக இருந்தது. “மது.. நீ என்ன விளையாடுறியா? அந்த மனுசனோட சண்டை எண்டால் ஒரு கிழமையில சரியாகிடும். அதை விட்டிட்டு இப்பிடித் தெருவுல வந்து நிக்கிறது எங்கட குடும்பத்துக்கே அவமானம். கெதியா அவனிட்டப் போய்ச் சேர்ந்துவிடு,” என்று அவர் அனுப்பிய குரல் செய்திகள் (Voice messages) ஒவ்வொன்றும் மதுவந்தியைச் சுட்டுப் பொசுக்கின.

​மதுவந்தி அன்று ஒரு முடிவெடுத்தாள். தனது கைப்பேசியிலிருந்து சமூக வலைத்தளச் செயலிகள் அனைத்தையும் நீக்கினாள். அந்தப் போலியான ஈபிள்டவர் புகைப்படங்கள், நளினியின் பொறாமை கலந்த கமெண்டுகள் எவையும் இனி அவளுக்குத் தேவையில்லை. அவளுக்குத் தேவை ஒரு வேலை மற்றும் இந்த நாட்டு மொழி அறிவு.

​காப்பகத்தில் நடத்தப்பட்ட தீவிர பிரெஞ்சு வகுப்புக்கு அவள் முதல் ஆளாகச் சென்றாள். “A – B – C – D” என்று சிறுபிள்ளையைப் போலத் தொடங்கி, வினைச்சொற்களையும் (Verbs) வாக்கியங்களையும் கற்கத் தொடங்கினாள்.

​”Je cherche un travail” (நான் ஒரு வேலை தேடுகிறேன்).

​இந்த ஒரு வாக்கியத்தை அவள் நூறு முறை எழுதிப் பார்த்தாள். ஒரு நாள் வசந்தி அக்கா ஒரு புதிய செய்தியுடன் வந்தார்.

​”மது.. இஞ்ச பக்கத்தில ஒரு பெரிய பல்பொருள் அங்காடி (Supermarket) இருக்கு. அங்க மரக்கறிகளை அடுக்கி வைக்கிறதுக்கும், கஸ்டமர்களுக்கு உதவி செய்றதுக்கும் ஆள் தேடுறாங்களாம். ‘ஸ்டாஜ்’ (Stage – Internship) மாதிரித் தான் இருக்கும். ஆனா உன்ர விசா பிரச்சினை முடியுற வரைக்கும் இது உனக்கு ஒரு நல்ல பயிற்சியாக இருக்கும். போறியா?”

​மதுவந்திக்குக் கண்கள் கலங்கின. “போறன் அக்கா.. கக்கூஸ் கழுவுற வேலையாக இருந்தாலும் நான் செய்வன். எனக்கு அவனிட்ட இருந்து விடுதலை கிடைச்சா சரி,” என்றாள் வைராக்கியத்துடன்.

​வேலையில் சேர்ந்த முதல் நாள் அவளுக்குப் பெரும் சவாலாக இருந்தது. விதவிதமான காய்கறிகளின் பெயர்கள், பழங்களின் விலைகள் அனைத்தையும் பிரெஞ்சு மொழியில் மனப்பாடம் செய்ய வேண்டும். வெள்ளைக்காரர்கள் வேகமாகப் பேசும்போது அவளுக்கு ஒன்றும் புரியாது. “பர்தோன் (Pardon)?” என்று மீண்டும் ஒருமுறை கேட்கும்போது அவர்கள் காட்டும் அந்தச் சலிப்பு அவளைக் காயப்படுத்தும்.

​இருந்தாலும் அவள் தளரவில்லை. தனது பையில் எப்போதும் ஒரு சிறிய நோட் புக்கை வைத்திருந்தாள். புதிய சொற்களை நேரம் கிடைக்கும் போது குறித்து வைத்தாள்.  வேலை நேரத்திற்குப் பிறகு காப்பகத்திற்கு வந்து இரவு முழுவதும் யூடியூப்பே கதி என்று பிரெஞ்சையே படித்துக்கொண்டு இருப்பாள். ஒரு மாத காலத்தில் அவள் தனது முதல் மாத ஊக்கத்தொகையைப் பெற்றாள். அது சில நூறு யூரோக்கள்தான். ஆனால், அந்தப் பணம் அவளது சொந்த உழைப்பில் வந்தது. மயூரனின் அந்தச் சிகரெட் நாற்றமடித்த ஒரு யூரோ நாணயத்தை விட, இந்த உழைப்பு அவளுக்குப் பெரும் கர்வத்தைத் தந்தது.

​ஒரு நாள் வேலையை முடித்துவிட்டு வரும்போது, தூரத்தில் மயூரனைப் போன்ற ஒரு உருவத்தைக் கண்டதும் அவள் உடல் நடுங்கியது. அவசர அவசரமாகக் காப்பகத்திற்குள் ஓடினாள். உள்ளே சென்றதும் தன் மூச்சைப் பிடித்துக்கொண்டு நின்றாள். “இல்லை.. இனி நான் பயப்படக் கூடாது. மயூரன் வெறும் ஒரு நிழல். நான் ஒரு நெருப்பாக மாற வேண்டும்,” என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டாள்.

சில மாதங்கள் இவ்வாறே வேலையும் படிப்பும் விசா அலுவலுகளாகவும் கழிய அன்று வசந்தி அக்கா அவளுக்கு ஒரு இனிப்பான செய்தியைக் கொண்டு வந்தார். “மது.. உன்ர விசாவுக்கு ‘Protection subsidiaire’ (துணைப் பாதுகாப்பு) கிடைச்சிட்டுது. இனி மயூரன் உன்ர விசாவைக் கான்சல் பண்ண முடியாது. நீ இப்ப சுதந்திரமான மனுசி. அடுத்த சில மாசங்களில உனக்குத் தனியாக ஒரு சின்ன ஸ்டுடியோவும்(Appartement) கிடைக்க வாய்ப்பு இருக்கு. வாழ்த்துகள் பிள்ளை!”

​மதுவந்திக்குத் தான் ஒரு கனவு காண்பது போல இருந்தது. ஊரில் அம்மா சொன்ன அந்த ‘கௌரவம்’ இன்று ஒரு விசா அட்டையாக அவளது கையில் இருந்தது. ஆனால், இது யாருக்காகவும் எடுக்கப்பட்டதல்ல; அவளுக்காக, அவளது சுயமரியாதைக்காக எடுக்கப்பட்டது.

​ஜன்னல் வழியே தெரிந்த பாரிஸ் நகரம் இப்போது அவளுக்குப் பயத்தைத் தரவில்லை. பளபளக்கும் அந்த விளக்குகள் அவளது எதிர்காலத்தைப் போலவே பிரகாசமாகத் தெரிந்தன. அவள் மெதுவாகத் தனது டைரியைத் திறந்தாள். “அக்கரைப் பச்சை என்பது அடுத்தவனுடைய வாழ்க்கையைப் பார்ப்பது அல்ல; நாம் நிற்கும் கரையை நமக்குப் பிடித்த மாதிரிப் பச்சையாக மாற்றுவதுதான்” என்று எழுதிக்கொண்டாள்.

​மதுவந்தியின் நிஜமான பாரிஸ் வாழ்க்கை இன்றுதான் தொடங்குகிறது.

​(அக்கரை தொடரும்…)

You cannot copy content of this page