அத்தியாயம் – 10
மறுநாள் காலை, மயூரன் அவசர அவசரமாக வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான். மதுவந்தி அவனுக்குத் தெரியாமல் மறைத்து வைத்திருந்த அந்த ஒரு யூரோ நாணயம் அவளது பையில் கனப்பது போலவே அவளுக்குத் தோன்றியது. அவன் கதவைத் தாழிட்டுச் சென்றதும், மதுவந்தி நேராக அந்தப் பழைய கடிதங்கள் இருந்த இடத்திற்குச் சென்றாள்.
நேற்று அவள் பார்த்த அந்தக் கடிதத்தை மீண்டும் எடுத்தாள். அதில் ‘Préfecture’ (பிரபெக்ச்சர்) என்ற முத்திரை இருந்தது. அவளுக்குத் தெரிந்த அரைகுறை பிரெஞ்சு மற்றும் கூகுள் லென்ஸ் (Google Lens) உதவியுடன் அதை மொழிபெயர்க்க முயன்றாள்.
”உங்கள் தங்குமிட அனுமதிப்பத்திரம் (Titre de séjour) தொடர்பான நேர்காணலுக்குத் தம்பதிகளாகச் சமூகமளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்” – இதுதான் அந்தத் தகவலின் சாரம்சம்.
மதுவந்திக்கு இப்போதுதான் புரிந்தது, மயூரன் ஏன் தன்னை வெளியே விட மறுக்கிறான் என்று. அவளது விசா நடைமுறைகள் முழுமையாக அவனது கையில் இருந்தன. அவளைத் தனித்து இயங்க விட்டால், அவள் யாரிடமாவது உண்மையைச் சொல்லிவிடுவாள் அல்லது அவனை விட்டுப் பிரிந்து விடுவாள் என்ற பயம் அவனுக்குள் இருந்தது. விசா என்ற அந்த ஒற்றைப் பலத்தை வைத்துத்தான் அவன் அவளை மிரட்டி வைத்திருந்தான்.
அவள் ஜன்னலருகே அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தபோது, அவளது கைப்பேசி சிணுங்கியது. கமலாவின் அழைப்பு.
”மது.. என்னம்மா செய்துகொண்டிருக்கிறாய்? மயூரன் வேலைக்குப் போயிட்டாரா?” கமலாவின் குரலில் ஒருவிதமான குதூகலம் இருந்தது.
”ஓம் அம்மா.. இப்பதான் போனவர்.. நீங்கள் எப்படி இருக்கிறீங்கள்? அப்பாவையும் ஒருக்கால் என்னோட கதைக்கச் சொல்லுங்கோ.. ” என்று தழுதழுத்த குரலில் சொன்னாள் மதுவந்தி.
”அப்பா தோட்டப் பக்கம் போயிருக்கிறார்.. அதிருக்கட்டும் மது, உனக்கு ஒரு சந்தோசமான செய்தி. அந்த கடுக்காய் ரோட்டுச் சிவகாமி இருக்காளே.. அவட மகள் இப்ப லண்டனுக்குப் போயிருக்கிறாளாம். அவட அம்மா என்னட்ட வந்து ‘உங்கட மகள் அங்க என்ன செய்யிறா?’ என்று கேட்டா. நான் சொன்னன், ‘என்ர மகள் பாரிஸ்ல ராணி மாதிரி இருக்கிறா, மயூரன் அவளை ஒரு வேலையும் செய்ய விடாமல் கண்ணுக்குள்ள வைச்சுக் கவனிக்கிறான்’ என்று. அவட முகம் அப்படியே சுருங்கிப் போயிட்டுது பாரு..” என்று கமலா பெருமையாகச் சிரித்தார்.
மதுவந்திக்கு நெஞ்சு பாரமாக இருந்தது. “அம்மா.. தயவுசெய்து இதையெல்லாம் நிப்பாட்டுறியளா? இங்க நான் படுற கஷ்டம் உங்களுக்குத் தெரியாது அம்மா.. மயூரன் குடிக்கிறார், என்னை மதிக்கிறதே இல்லை, ஒரு ரூமுக்குள்ள அடைச்சு வைச்சிருக்கிறார்.. எனக்கு இங்க இருக்கவே பிடிக்கேல்லம்மா.. நான் ஊருக்கு வந்துடட்டுமா?” என்று கேட்டுவிட்டு விம்மி அழுதாள்.
மறுமுனையில் ஒரு கணம் மௌனம் நிலவியது. பின் கமலாவின் குரல் கடுமையாக மாறியது.
”என்னடி கதைக்கிறாய்? ஊருக்கு வாறதாவது? உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருக்கா? இவ்வளவு கஷ்டப்பட்டு, ஊர் உலகம் எல்லாம் தெரியக் கலியாணம் செய்து அனுப்பிட்டு, இப்ப திரும்பி வாறாய் என்று சொன்னால் ஊர் சனம் என்னைக் காறித் துப்பாதா? உனக்கு என்ன குறை? இருக்க இடம் இருக்கு, தாலி கட்டின புருசன் இருக்கிறான். அவன் குடிக்கிறான் என்றால் அது ஆம்பிளையள் செய்யிறதுதான். அங்க இருக்கிற கஷ்டத்தால குடிக்கிறான் போல கிடக்கு.. நீதான் பொறுமையா இருந்து அவனைத் திருத்தோணும்.”
”அம்மா.. நான் சொல்லுறதைக் கேளுங்கோ.. அவன் என்னை அடிக்கிறான் அம்மா.. நேத்துக்கூட என்னை நிலத்தில தள்ளிவிட்டான்..”
”மது! இதுக்கெல்லாம் போய்ப் புலம்பாதை. எந்த வீட்டில சண்டை இல்லை? வெளிநாட்டில விசா கிடைக்கிற வரைக்கும் எப்பிடியாவது பொறுத்துக்கொள். விசா கிடைச்சிட்டுது என்றால் நீயும் வேலைக்குப் போகலாம், அப்ப எல்லாம் சரியாகிடும். இப்ப நீ வந்து நின்றால், உன்ர தங்கைட கலியாணம் என்னாகும் என்று யோசிச்சியா? ஒரு அக்கா வெளிநாட்டில இருந்து திரும்பி வந்திட்டாள் என்று தெரிந்தால் அவளை யார் கட்டுவாங்கள்? குடும்பக் கௌரவத்தை நினைச்சுப் பார்.”
கமலாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மதுவந்தியின் கழுத்தை இறுக்கின. அவளுக்குப் புரிந்தது, தனது தாய் பார்ப்பது மகளின் கண்ணீரை அல்ல, சமூகத்தில் தனக்குக் கிடைக்கும் அந்தப் போலியான கௌரவத்தை மட்டும்தான். தான் ஒரு உயிரற்ற பொம்மையாக அந்தப் பாரிஸ் வீதியில் நின்றால் கூட, அது கமலாவிற்கு ஒரு கௌரவச் சின்னமாகத் தெரிந்ததே தவிர, சிதைந்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் வாழ்வாகத் தெரியவில்லை.
”சரி அம்மா.. நான் வைக்கிறேன்..” என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தாள்.
தன்னந்தனியாக அந்த அறையில் இருந்தவளுக்கு, தான் ஒரு பெரும் சதிவலைக்குள் சிக்கியிருப்பது போலத் தோன்றியது. ஒரு பக்கம் மயூரன் தனது விசாவை வைத்து மிரட்டுகிறான், மறுபக்கம் தனது தாய் குடும்பக் கௌரவத்தைச் சொல்லித் தன்னை அந்த நரகத்திலேயே தள்ளி விடுகிறார்.
அன்று மாலை மயூரன் வரும்போது ஒரு புதிய ஆவணம் ஒன்றைக் கொண்டு வந்தான்.
”இந்தா.. இதில கையெழுத்துப் போடு. இது உன்ர விசாவுக்குரிய பேப்பர்,” என்று மேசையில் போட்டான்.
மதுவந்தி நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். “இதில என்ன போட்டிருக்கு என்று எனக்குச் சொல்லுறீங்களா? இது என்ன பேப்பர்?”
மயூரன் எரிச்சலடைந்தான். “உனக்கு எதுக்கு அதெல்லாம்? நான் சொன்னால் கையெழுத்துப் போடு. இது ‘Regroupement familial’ (குடும்ப மீளிணைவு) தொடர்பான ஒரு பேப்பர். நீ எனக்குத் துணையாகத்தான் இங்க வந்திருக்கிறாய் என்று உறுதிப்படுத்துற பேப்பர். நீ இதில கையெழுத்துப் போட்டால் தான் உனக்கு அடுத்த கார்டு வரும். ஆனா ஒண்டு ஞாபகம் வைச்சுக்கொள்ளு.. நான் நினைச்சா இந்த அப்ளிகேஷனை எப்ப வேணாலும் கேன்சல் பண்ணலாம். நீ என்ர பேச்சைக் கேட்டு நடந்தால் தான் உனக்கு இந்த நாட்டுல இடம்,” என்று தனது அதிகாரத்தைச் செலுத்தினான்.
மதுவந்தி கையெழுத்துப் போட்டாள். அவளது கை நடுங்கியது. ஒவ்வொரு முறை கையெழுத்துப் போடும்போதும், தான் அவனது அடிமையாக மாறிக் கொண்டிருப்பதை அவள் உணர்ந்தாள். ஆனால், அவனது அந்த மிரட்டல்தான் அவளுக்குள் ஒரு புதிய துணிவைத் தந்தது.
”இவனுக்குத் தெரியாமல் நான் மொழியைப் பழகியே தீருவேன். விசாவுக்காக இவன் முன்னால் கூனிக்குறுகி நிற்பதை விட, இந்த நாட்டுச் சட்டங்களைத் தெரிந்து கொண்டு என்ர காலில நான் நிற்க வேண்டும்,” என்று மனதிற்குள் சபதம் எடுத்துக் கொண்டாள்.
அன்று இரவு, மயூரன் குடித்துவிட்டு உறங்கிய பின், அவள் மெதுவாக அந்த ஒரு யூரோ நாணயத்தை எடுத்துத் தடவிப் பார்த்தாள். நாளை மயூரன் இல்லாதபோது, லெட்சுமி அக்கா சொன்ன அந்த ‘அசோசியேஷன்’ (Association) எங்கே இருக்கிறது என்று தேடிப் போக வேண்டும் என்று முடிவெடுத்தாள்.
விசா அவளுக்கு ஒரு விலங்காக இருக்கலாம், ஆனால் அந்த விலங்கின் சாவியைத் தானே உருவாக்க வேண்டும் என்ற வைராக்கியம் அவளது கண்களில் ஒரு புதிய ஒளியைத் தந்தது. பாரிஸின் குளிர் இரவு அவளுக்கு இப்போது அவ்வளவு பயத்தைத் தரவில்லை.
(அக்கரை தொடரும்…)

