அத்தியாயம் – 02
மதுவந்தி, உயர்தரம் முடித்து விட்டுப் பல்கலைக்கழகம் கிடைக்காது சோர்ந்து போனவளில் ஒருத்தி. இருந்தாலும் விடா முயற்சியோடு போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து பிரதேச சபையில் பணிபுரிகிறாள். பார்த்தவுடன் அனைவரும் அழகான பெண் என்று சொல்லி விட அவள் நீண்ட முடியொன்றே போதும். வயதோ முன்னிருபது. அழகாய் இருந்தும் கூடத் தாய்க்குப் பயந்ததிலேயே வந்த காதல் விண்ணப்பங்கள் எதையும் ஏற்கவில்லை.
சிறுவயதிலிருந்தே கூடப் படித்த அவள் தோழி நளினி வீட்டுச் சமையலறைக் கட்டில் ஏறியிருந்து கைப்பேசியில் இன்ஸ்டாகிராமில் மூழ்கியிருந்தாள். நளினியின் தாய் எங்கேயோ வெளியே சென்றிருக்க, நளினி யூடியூப் பார்த்துச் சமையலோடு போராடிக் கொண்டிருந்தாள்.
“ஹேய் நளின்.. இதைப் பாரடி.. கௌரியக்கா வீடியோ போட்டிருக்கிறா.. ஸ்நோக்குள்ள நடந்து போறது போல.. சூப்பரா இருக்குடி..”
கத்தரிக்காயோடு கதகளி ஆடிக் கொண்டிருந்தவள் அதை அப்படியே போட்டு விட்டு இவளின் தொலைபேசியில் தானும் தலையை ஓட்டினாள்.
“வாவ்.. செம என்னடி.. எங்கட ஊரையும் பாரன்.. எப்ப பாரு வெயில் கொளுத்தினபடி.. இல்லையோ மழை சோவெண்டு அழுது வழியும்.. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்.. இப்பிடிப் பனிக்குள்ள கால் புதையப் புதைய நடக்கிற சுகமும் தனிதான் என்னடி.. எங்க பார்த்தாலும் வெள்ளை வெளேரென்று எவ்வளவு வடிவா இருக்குப் பாத்தியா..?”
“ஓமடி.. கௌரி அக்கா எந்த நாடு கனடாவோ சுவிஸோ?”
“சுவிஸ் என்று தான் நினைக்கிறன்.. முந்தநாள் பிள்ளையிட முதலாவது பிறந்த நாள் போட்டோஸ் போட்டிருந்தவ பார்த்தனியே.. ஹோல் எடுத்துப் பெருசாச் செய்திருக்கினம்.. மிக்கி மவுஸ் உடுப்புப் போட்டு ரெண்டு பேர் ஆடிக் கொண்டிருக்கினம். வீடியோ எல்லாம் போட்டிருந்தவ..”
“ஆ.. நான் பார்க்கேலையேடி.. எப்பிடி மிஸ் பண்ணினான்?”
கூறிக் கொண்டே நளினியின் கையிலிருந்த கைப்பேசியைப் பறித்து முகப் புத்தகத்தில் கௌரியின் கணக்கைத் தேடி பார்க்க ஆரம்பித்தாள். நளினியும் கத்தரிக்காயோடு மறுபடியும் மாரடிக்கத் தொடங்கினாள்.
“இங்க இருக்கேக்க அவ பெருசா வடிவில்லைத் தானேடி.. பள்ளிக்கூடத்துக்கு ஒரே எண்ணை வழிஞ்ச முகத்தோட தானே வருவா.. இப்ப பாத்தியே ஆளிட ஸ்டைலை.. சும்மா மேக்கப் எல்லாம் பிய்க்குது என்ன?”
“ஓமடி.. என்ன செஞ்சாவோ தெரியேல்ல.. பிள்ளை பிறந்த பிறகு கூட நல்ல வடிவாத்தான் கொழுகொழுன்னு அமுல் பேபி போல இருக்கிறா..”
“அதுதான்டி வெளிநாட்டு வாழ்க்கை.. ஏன் நீ இவள் ரேகாட போட்டோஸ் பாத்தனியே.. அவுஸ்ரேலியால இப்ப சமர் போல.. துடையளவில சோர்ட்ஸ் போட்டிருக்கிறாளடி.. முந்தி நான் டைட்ஸ் ஸ்கேட் போட்டதுக்கு எனக்கு எவ்வளவு நக்கல் அடிச்சிருப்பாள்.. உடம்பைக் காட்டுறன் என்று..”
“அவள்ட புருசன் விடுறார் அவள் போடுறாள்.. உனக்கு என்ன வந்துச்சாம்?”
“எனக்கு ஒண்டும் வரேல்ல.. வெளிநாடு போய் எங்கட ஆக்கள் இப்பிடியெல்லாம் மாறுகினம் என்று சொல்லுறன்..”
“அப்ப என்ன அங்க போய் பட்டிக்காடு போல திரியச் சொல்லுறியே..”
“நான் அப்பிடிச் சொல்லேலடி.. கொஞ்சம் அளவாய் இருக்கலாம் தானே..”
“இங்க பார் கவியும் சுதாவும் சந்திச்சிருக்கிறாளுகள். ரெண்டு பேரும் பிரான்ஸ்தானே என்ன? ஒரே மாதிரி ஜக்கெட், சப்பாத்து, ஹான்ட் ஃபாக்.. ஆக்களிட எடுவையைப் பாரன் பின்ன..?”
“கவி இங்க இருக்கேக்கயே சும்மா படம் தானே காட்டுறவள் அக்கா வெளிநாட்டில என்று.. இப்ப பின்னக் கேட்கவும் வேணுமே.. பிஎம்டபிள்யூ கார் வலன்டைன்ஸ் டேக்கு புருசன் கிப்ட் தந்தவாரம் என்று போட்டிருந்தாள் பாத்தனியே..”
“நான் அவளை அன்பலோ பண்ணி வைச்சிருக்கிறன்டி.. போன முறை ஊருக்கு வந்த நேரம் போய் சந்திச்சனான் தானே. இங்க ஓஎல்லே பெயில் விட்டிட்டாள் எண்டதை மறந்துட்டு கதைக்கிறாளடி.. இந்த அக்டர் மார் தோத்துப் போவினம்.. அக்சுவலி ரியலி தான் ஒவ்வொரு சொல்லுக்கயும்.. அவளிட இங்கிலிஷ்ல லண்டன் மகாராணி தோத்துப் போய்டுவா போ..”
“ஹா.. ஹா.. அவள் அப்பிடித்தானேடி.. அவளை விடு.. போன கிழமை மீராக்குக் கலியாணம் நடந்தது நீ தான் லீவெடுக்க ஏலாது என்றிட்டு வரேல்லயே.. அதுவும் பிரான்ஸ் மாப்பிள்ளை தானாம்.. கொழும்பில இருந்து மேக்கப்புக்கு ஆள் கூப்பிட்டு இருக்கினம் தெரியுமே.. போட்டோ, வீடியோ எல்லாமே கொழும்பில இருந்து தான் வந்தது.. கண்டில இருந்து உண்மையான பூ எடுப்பிச்செல்லே மணவறை செய்திருந்தவை..”
“ஓமடி.. நான் பிறகு போட்டோஸ் பார்த்தனான் தானே.. மாப்பிள்ளைக்குச் சொட்டைத் தலை போல.. ரிசப்சன் போட்டோவில தெரியுது..”
“சொட்டை என்றால் என்ன மொட்டை என்றா என்ன? பிரான்ஸ் மாப்பிள்ளை என்றதில அதெல்லாம் அடிபட்டுப் போய்டும்தானே..”
“ஹூம் அதுவும் சரி தான்..”
“எல்லாரையும் விடு.. நீயெந்த நாடு போகப் போறாய்..?”
“யாருக்குத் தெரியும்டி? அப்பாவோ வெளிநாடு வேணாம் என்று நிக்கிறார்.. அம்மாவோ வெளிநாடுதான் எண்டுறா.. எவன் என்ர உயிரை எடுக்கப் போறானோ கடவுளுக்கே வெளிச்சம்?
“நான் உன்ர விருப்பத்தைக் கேட்டன்டி லூசு..”
“ஹூம் அது எனக்கே தெரியேல்ல நளின்.. ஒரு பக்கம் பார்த்தா அப்பா சொல்லுறது சரி போல கிடக்கு.. இன்னொரு பக்கம் இந்தப் பேஸ்புக்ல போட்டோக்கள் பாக்கேக்க வெளிநாடு போகவும் ஆசையாக் கிடக்கு.. என்ன என்றாலும் அம்மா அப்பாட முடிவு என்று பொறுப்பை அவையிட கையில விட்டிட்டன்.. என்ன அமையுது என்று பாப்பம்..”
“உன்ர வடிவுக்கு நிச்சயமாக வெளிநாடு தான்டி அமையும்.. இருந்து பாரன்.. பிறகு நீ கேட்பாய் நானெல்லாம் யாரென்று..”
“உதை வாங்காமல் கறிக்கு உப்புப் போடுற வேலையைப் பார்..”
வாழ்க்கையைப் பற்றிய தெளிவான புரிதலின்றி கல்யாணம் என்பதையே விளையாட்டாகக் கருதிப் பேசிக் கொண்டிருந்தார்கள் இரு தோழிகளும்.
மதுவந்திக்குக் கடவுள் போட்டு வைத்திருக்கும் முடிச்சு என்னவோ?
அக்கரை தொடரும்..


