அத்தியாயம் – 08
பாரிஸின் குளிர் மெல்ல மெல்லக் கூடிக்கொண்டே போனது. அந்தச் சிறிய அறைக்குள் ஒரு ஹீட்டர் (Heater) இருந்தும், அது தரும் வெப்பத்தை விட மதுவந்தியின் மனதுக்குள் உறைந்திருந்த பயத்தின் குளிர் அதிகமாக இருந்தது.
மயூரன் இப்போது தினமும் நள்ளிரவைத் தாண்டியே அறைக்கு வருகிறான். வரும்போதே அவன் உடலில் இருந்து வீசும் மதுவின் மணம் அந்தப் பத்தடிக்கு பத்தடி அறைக்குள் அவளை மூச்சுத் திணறச் செய்யும். ஆரம்பத்தில் வார இறுதி நாட்களில் மட்டும் குடித்தவன், இப்போது வேலையின் களைப்பைக் காரணம் காட்டித் தினமும் குடிக்கத் தொடங்கியிருந்தான்.
அன்று இரவு சுமார் ஒரு மணி இருக்கும். மதுவந்தி அரைத்தூக்கத்தில் இருந்தபோது, கதவு பலமாகத் தட்டப்படும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள். மயூரன் வழமை போலத் தள்ளாடியபடி உள்ளே வந்தான். அவன் கையில் ஒரு சிகரெட் பொதி இருந்தது. உள்ளே நுழைந்ததும் கதவைச் சாத்திவிட்டு, ஒரு வார்த்தை கூடப் பேசாமல் ஜன்னலைத் திறந்து வைத்துவிட்டுச் சிகரெட்டைப் பற்றவைத்தான்.
”இப்ப எதுக்கு இதைக் குடிக்கிறியள்? வெளியில செம குளிரு.. ஜன்னலைத் திறந்தால் உறைஞ்சு போயிடுவம்,” என்று மெதுவாகச் சொன்னாள் மதுவந்தி.
மயூரன் அவளை ஏளனமாகத் திரும்பிப் பார்த்தான். “எனக்குத் தெரியும் என்ன செய்ய வேணும் என்று. நீ உன்ர வேலையைப் பாரு. இந்த நாத்தமெடுத்த வாழ்க்கையில இதைக் குடிச்சாத்தான் நித்திரை வருது. உனக்கென்ன.. மகாராணி மாதிரி வீட்டில இருக்கிறாய்..” என்று வார்த்தைகளைத் துப்பினான்.
மதுவந்திக்கு அழுகை வந்தது. “மகாராணி மாதிரியா? இந்த நாலு சுவத்துக்குள்ள அடைபட்டுக் கிடக்கிறதுதான் ராணி வாழ்க்கையா? எனக்கு இஞ்ச ஒருத்தரையும் தெரியாது. வெளியில போனால் ஒரு ஆள் கதைக்கிறது விளங்காது. அட்லீஸ்ட் நீங்களாவது என்னோட அன்பா ஒரு அஞ்சு நிமிசம் கதைக்கலாம் தானே?”
”கதைக்கவா? உன்னோட கதைக்க எனக்கு நேரமில்லை மது. எனக்கு இப்ப இருக்கிற கடன் பிரச்சினைக்குத் தலையை எங்க வைப்பேன் என்று தெரியாம ஓடிக்கொண்டிருக்கிறன். அந்தத் தரகர் கனகண்ணைக்கு நீ குடுத்த நகை காணாது என்று சொல்லுறான். உன்ர அம்மா வேற ‘விசா எப்ப வரும்? அடுத்த முறை ஊருக்கு வரும்போது பெரிய கார் எடுத்துக்கொண்டு வர வேணும்’ என்று போன் பண்ணிப் பண்ணி என்ர உயிரை எடுக்கிறா,” என்று கத்தினான்.
மதுவந்தி அதிர்ந்து போனாள். “கையில இருந்த நகையையும், காணியையும் வித்துத்தானே உங்களைக் கட்டிக் குடுத்தவை. இன்னும் என்ன கடன்?”
மயூரன் கோபத்தில் கையில் இருந்த சிகரெட்டை நிலத்தில் போட்டு மிதித்தான். “உனக்கு ஒண்டும் தெரியாது. உன்னை இஞ்ச கூப்பிடுறதுக்கு ஏஜன்டுக்கு எவ்வளவு குடுத்தனான் என்று தெரியுமோ? உனக்கு என்ன நான் எல்லாம் ஒழுங்காப் பதிஞ்சு கிடைச்ச விஸா என்ற நினைப்போ? இங்க எல்லாம் முறைப்படி பதிஞ்சு உன்னைக் கூப்பிட எத்தினை வருசம் செல்லும் தெரியுமோ? போன முறை ஊருக்கு வரும்போது நான் காட்டின பந்தாவுக்கு எவ்வளவு வட்டிக்குக் காசு வாங்கினனான் என்று தெரியுமோ? இஞ்ச நான் பாத்திரம் கழுவி உழைக்கிற காசு எல்லாம் வட்டி கட்டவே சரியாப் போகுது. இதுக்க நீ வேற வந்து எனக்குப் பாரமா நிக்கிறாய்..”
அவனது ஒவ்வொரு வார்த்தையும் அவளது இதயத்தில் ஈட்டியாக இறங்கியது. தான் ஒரு பாரம் என்று அவன் சொன்னது அவளைச் சுக்குநூறாக உடைத்தது.
அப்போது மயூரனின் கைப்பேசி ஒலித்தது. அவன் போனை எடுத்துப் பார்த்துவிட்டுப் பதற்றமடைந்தான். “இப்ப எதுக்கு இவன் போன் பண்ணுறான்?” என்று முணுமுணுத்தபடி இணைப்பை ஏற்றுக்கொண்டான். மறுமுனையில் பேசியவன் பிரெஞ்சு மொழியிலும் தமிழிலும் கலந்து கத்தினான். அவனது சத்தம் மதுவந்திக்கும் கேட்டது.
”காசு நாளைக்குத் தாரன் என்று சொன்னனான் தானே.. ஏன் இப்ப கரைச்சல் பண்ணுறாய்?” என்று மயூரன் கத்தினான். ஆனால் மறுமுனையில் இருந்தவன் விடுவதாகத் தெரியவில்லை. போனை வைத்த பிறகு மயூரனின் முகம் பேயறைந்தது போலிருந்தது.
”யாரப்பா அது?” என்று மதுவந்தி பயத்துடன் கேட்டாள்.
”அதெல்லாம் உனக்கு எதுக்கு? இஞ்ச பார்.. நாளைக்கு யாராவது வந்து கதவைத் தட்டினால் திறக்காதே. சும்மா எதையாவது சொல்லிச் சமாளி. விசா பிரச்சினையில இவங்கள் தலையிட்டால் எனக்கு டிபோர்ட் (Deport) பண்ணிடுவாங்கள். விளங்கிச்சோ?”
மதுவந்திக்கு உடல் நடுங்கியது. விசா பிரச்சினை, கடன் காரர்களின் மிரட்டல் எனத் தான் ஒரு பெரும் சுழலுக்குள் சிக்கியிருப்பது அவளுக்குப் புரிந்தது.
மயூரன் மீண்டும் மதுப் போத்தலைத் திறந்தான். “குடிக்காதைங்கோ.. உடம்பு கெட்டுப்போயிடும்” என்று அவள் தடுத்தபோது, அவன் அவளது கையைப் பலமாகப் பிடித்துத் தள்ளினான். அவள் கட்டிலின் முனையில் மோதி நிலத்தில் விழுந்தாள்.
”என்னைத் தடுக்காதே என்று சொன்னனான் தானே! நீ உனக்குக் கொடுத்த வேலையை மட்டும் செய். சமூக வலைத்தளத்தில அந்தப் போட்டோவைப் போட்டுட்டுப் பேசாமக் கிட,” என்று அதட்டினான்.
மதுவந்தி நிலத்தில் அமர்ந்தபடி விம்மி விம்மி அழுதாள். அவளது கைப்பேசியில் இன்னும் நளினியும், ஊர் உறவுகளும் ஈபிள் டவர் புகைப்படத்திற்கு ‘வாழ்த்துகள்’ தெரிவித்துக்கொண்டே இருந்தார்கள். “நீ கொடுத்து வைத்தவள் மது” என்ற கமெண்டுகளைப் பார்க்கும் போது அவளுக்குச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.
அந்தச் சிறிய ஸ்டுடியோ அறையின் கூரை அவளை அமுக்குவது போலிருந்தது. வெளியே பாரிஸ் நகரின் அவசர கதியில் ஆம்புலன்ஸ் சைரன் சத்தம் தூரத்தில் கேட்டது. தனக்கு ஏதும் ஆபத்து என்றால் கூட யாரிடம் உதவி கேட்பது என்று தெரியாத அந்த அனாதை நிலை அவளை உலுக்கியது.
தனது திருமணத்திற்காகத் தனது தந்தை பட்ட கஷ்டங்களும், தாய் கண்ட கனவுகளும் ஒரு பெரும் ஏமாற்றத்தில் வந்து முடிந்திருப்பதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. “அம்மா.. வெளிநாடு என்றது வெறும் பளபளப்பான காகிதமாம்மா? உள்ளுக்குள்ள வெறும் சாம்பல்தானா இருக்கு?” என்று அவள் மனதுக்குள் கதறினாள்.
மயூரன் போதையில் கட்டிலிலேயே மயங்கிச் சரிந்தான். அவனது குறட்டைச் சத்தமும், சிகரெட் நாற்றமும் நிறைந்த அந்த அறையில், மதுவந்தி ஜன்னலோரம் சென்று நின்றாள். இருட்டில் லா சப்பல் வீதிகள் ஏதோ ஒரு பயங்கரத்தை ஒளித்து வைத்திருப்பது போலத் தோன்றியது. அங்கங்கே வீதியோரங்களில் போதையில் கிடந்த மனிதர்களும், ஏதோ ஒரு ஓட்டத்தில் இருக்கும் அந்த நகரமும் அவளுக்குப் புதியதாகத் தெரிந்தாலும், தனது சொந்த வாழ்க்கையை விட அவை ஒன்றும் மோசமில்லை என்று அவளுக்குத் தோன்றியது.
அவள் மெதுவாகத் தனது டைரியை எடுத்தாள். அதில் எதையோ எழுதத் தொடங்கினாள். அது அவளது போராட்டத்தின் முதல் புள்ளியாக இருக்கும் என்பது அவளுக்கே அப்போது தெரிந்திருக்கவில்லை.
(அக்கரை தொடரும்…)

