அக்கரைப் பச்சைகள் – 04

அத்தியாயம் – 04

“அம்மா! தயவுசெய்து சொல்லுறதைக் கேளுங்கோ.. எனக்கு இந்த மாப்பிள்ளையை சுத்தமாகப் பிடிக்கேல்ல..”

“இப்ப என்ன நடந்துச்சு என்று இந்தக் குதி குதிக்கிறாய்? உனக்குக் கலியாணம் என்றால் விளையாட்டாப் போச்சுதா? எவ்வளவு கஷ்டப்பட்டு இந்தச் சம்பந்தத்தை முற்றாக்கியிருக்கிறன்.. இப்ப வந்து மாப்பிள்ளையைப் பிடிக்கேல்ல என்று சொல்லிக் கொண்டிருக்கிறாய்..”

“மூக்குத்தியை கழட்டாம்.. நான் எவ்வளவு ஆசைப்பட்டு மூக்குத்தி குத்தினான் என்று உங்களுக்கே தெரியும் தானே..”

“நானும் என்னவோ ஏதோ என்று பயந்து போனன். இதுக்குப் போயே இவ்வளவு துள்ளுறாய்? மூக்குத்தியோடபட்டிக்காடு போல பிரான்ஸ்க்குப் போகப் போறியே.. அதுதான் கழட்டச் சொல்லி இருப்பார்”

“அது மட்டும் இல்லையம்மா.. ரெண்டு வீடு தள்ளியிருக்கிற நளினி வீட்டுக்கே போக வேணாமாம்.. வீட்டிலேயே இருக்கட்டாம். வேலைக்குப் போக வேணாமாம்..”

“கலியாணம் முற்றாகிட்டால் நீ அவரிட பொறுப்பு என்று நினைச்சிருப்பார். அவர் வெளிநாட்டில இருக்கேக்க நீ வேலைக்குப் போய் உழைக்கிறது அவருக்கு வடிவில்லைத்தானே.. அதுதான் வேலையை விடச் சொல்லியிருப்பார்..”

“இது நல்ல கதையாயெல்லோ இருக்கம்மா.. கலியாணம் முடிஞ்சாலும் என்னை அங்க கூப்பிட எத்தினை வருசம் செல்லுமோ தெரியாது. அதுவரைக்கும் நான் என்ன சும்மா வீட்டில குந்திக் கொண்டு இருக்கவே.  வேலைக்குப் போனால் பொழுதும் போச்சு வருமானமும் ஆச்சு..”

“இங்க பாரு மது.. ஆம்பிளையள் அப்பிடித்தான் ஆயிரத்தெட்டு ரூல்ஸ் போடுவினம்.. பொம்பிளையள் தான் சமாளிச்சுப் பொறுமையாக நடக்க வேணும். சும்மா எடுத்ததுக்கும் தையத்தக்க என்று குதிக்கிறதை முதல்ல நிப்பாட்டு.. இப்பத்தானே கதைக்கத் தொடங்கியிருக்கிறாய்.. கதைக்க கதைக்க சரியாகிடும்..”

“நீங்கள் என்ன வேணும் என்றாலும் சொல்லுங்கோ.. எனக்கு ஒண்டுமே பிடிக்கேல்ல. இப்பவே அங்க இருந்து கொண்டே இவ்வளவு கொன்றோல் பண்ணிறவர் நான் அங்க போய் முடிய என்ன பாடுபடுத்துவாரோ.. எனக்கெண்டால் ஒண்டும் சரியாப் படேல்லையம்மா.. பேசாம இந்தக் கலியாணத்தை நிப்பாட்டிட்டு ஊரில மாப்பிள்ளை பாருங்கோவன்..”

“உன்ர கொப்பரோடு சேர்ந்து சேர்ந்து உனக்கும் நல்லா விசர் முத்திட்டுது மது.. கொழுக்கட்டை மாத்தி நாளும் வைச்சாப் பிறகே மாப்பிள்ளையை பிடிக்காது என்று சொல்லுறது?:

“கொழுக்கட்டை மாத்த முதல் நீங்கள் என்னைக் கதைக்க விட்டனியளே.. அதுவும் இல்லை.. நான் இப்பதானே கதைச்சுப் பாக்கிறன்.. அப்ப என்னால இப்பதானே சொல்ல முடியும்?”

“உனக்கு செல்லம் குடுத்து குடுத்து குட்டிச் சுவாரக்கி வைச்சிருக்கிற இந்த மனுசனைச் சொல்ல வேணும்..”

“என்னவோ பண்ணித் துலையுங்கோ அம்மா.. எனக்கெண்டால் பிடிக்கேல்ல அவ்வளவுதான்..”

கூறிவிட்டு வேலைக்குப் புறப்பட்டுச் சென்றாள் மதுவந்தி. 

‘ஆரம்பத்தில அப்படி இப்பிடித்தான் இருக்கும். போகப் போக எல்லாம் சரியாகிடும்.. 

தனக்குள்ளே எண்ணியவராக மதிய உணவுக்காக ஆயத்தங்களில் ஈடுபட்டார் கமலா. 

மகள் அவ்வளவு சொல்லியும் கணவர் ஆரம்பத்திலிருந்தே அவ்வளவு மறுத்தும் தனது முடிவில் பிழை இருப்பதாகக் கொஞ்சமும் எண்ணமில்லை கமலாவுக்கு. இன்னமும் மூன்று மாதங்களில் நடைபெறப் போகும் திருமணத்திற்கான ஆயத்தங்கள் பற்றிய யோசனை தான் அவர் மனம் முழுவதும் நிரம்பிக் கிடந்தது. 

மதுவந்தி தொடர்ந்து வேலைக்குப் போய்க் கொண்டுதான் இருந்தாள். திருமண சமயத்தில் மட்டும் ஒரு மாத விடுப்பெடுத்தாள். மாப்பிள்ளை மயூரனுக்கும் அவளுக்கும் தொலைபேசியிலேயே பிரச்சனை ஆரம்பமாகி விட்டது. 

மயூரனின் சொல்லை மீறி அவள் வேலைக்குச் சென்றது அவனுக்குப் பிடிக்கவில்லை. நான்கரை மணி நேரம் இரு நாடுகளுக்கும் இடையிலான நேர வித்தியாசம் வேறு அடிக்கடி பேசுவதற்குத் தடையாக இருந்தது.

இவள் வேலையில் இருக்கும் நேரங்களில் பேச முடியாது. அவன் வேலையில் இருக்கும் நேரங்களில் பேச முடியாது. பின்பு இருவருக்முப் தூங்கும் நேரம் என்று ஆளாளுக்கு ஏன் தொலைபேசி எடுக்கவில்லை என்று அதற்குச் சண்டை பிடிப்பதிலேயே காலம் கழிந்தது. 

“அம்மா.. எனக்கெண்டால் இந்த வெளிநாட்டு மாப்பிள்ளையே வேண்டாம் அம்மா.. கதைக்கத் தொடங்கிய நாளில இருந்து ஒரே சண்டைதான். நான் அடிச்சா அந்தாள் எடுக்காது.  அந்தாள் அடிக்கேக்க எனக்கு எடுக்க ஏலாமப் போய்டும்.. அதையும் தாண்டி கதைக்க வெளிக்கிட்டால் ஏன் முதல் போனை எடுக்கேல்ல என்ற சண்டையிலேயே காலம் போகுது.. இப்பிடிச் சண்டை பிடிக்கிறதுக்குத்தான் கலியாணம் என்றால் எனக்கு இந்தக் கலியாணமே வேணாம் அம்மா..”

மதுவந்தி விரக்தியும் வெறுப்புமாகத் தன் மனதில் உள்ளதைத் தாயிடம் கொட்டினாள். 

“இங்க பாரு மது.. அது அங்கயும் இங்கேயும் இருந்து கொண்டு டெலிபோன்ல மட்டும் கதைக்கேக்க இப்பிடிப் பிரச்சினை வாறது வழக்கம் தான். இதையெல்லாம் பெருசு படுத்தாமல் போய் பேசியல் செய்யிற வேலையைப் பார். வேலைக்குப் போகாதை என்று சொன்னா கேட்டால் தானே.. வெயிலுக்க திரிஞ்சு மூஞ்சியெல்லாம் காய்ஞ்சு போய்க் கிடக்குது பார்..”

“நான் சொல்லுறதைக் கொஞ்சமாவது காதில விழுத்துறியளா? அந்தாள் போன் அடிக்குது என்றாலே எனக்கு நெஞ்செல்லாம் படபடக்குதும்மா.. என்ன சொல்லிக் கத்தப்போகுதோ என்று.. போனிலேயே எனக்கு இவ்வளவு பயமாக் கிடக்கு.. நேரில எப்பிடித்தான் பார்த்துப் பழகி வாழுறதும்மா.. எனக்கெண்டால் ஒரே பயமாக்கிடக்கணை..”

“முதல்ல புருசனை அந்தாள், இந்தாள் என்று மரியாதை இல்லாமச் சொல்லுறதை நிப்பாட்டு.. அதெல்லாம் தாலி கட்டின உடன சரியாகிடும். பேசியலுக்கு போக நேரமாகிட்டுது..கெதியா போ..”

தான் என்ன சொன்னாலும் அன்னை புரிந்து கொள்ளப் போவதில்லை என்று உணர்ந்தவாளய் மதுவந்தி ஒரு பெருமூச்சோடு திருமணத்திற்கு தயாராக ஆரம்பித்தாள். அவள் கண்ட கல்யாணக் கனவுகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அவளை விட்டு விலக ஆரம்பித்தன. 

பூவையவள் வாழ்வு பூந்தோட்டமாகுமா? இல்லை போர்க்களமாகுமா?

You cannot copy content of this page