அக்கரைப் பச்சைகள் – 05

அத்தியாயம் – 05

​கல்யாண மண்டபம் அதிர மேள தாளங்கள் ஒலிக்க, மயூரனின் கையில் இருந்த தாலி மதுவந்தியின் கழுத்தில் ஏறியது. அவளது மனதிற்குள் இருந்த பயமும் தயக்கமும் அந்த தாலியின் பாரத்தை விட அதிகமாகவே இருந்தது. ஆரம்பத்தில் தொலைபேசியில் கதைக்கும் போதே அவனது அதிகார தோரணை அவளுக்குப் பிடிக்கவில்லை என்று தாயிடம் எத்தனையோ முறை சொல்லியும், கமலாவின் பிடிவாதத்தால் இந்தத் திருமணம் நடந்தேறியிருந்தது.

​கமலா பெருமிதத்தில் மிதந்தார். தான் ஆசைப்பட்டபடியே தன் மகளை வெளிநாட்டு மாப்பிள்ளைக்குக் கட்டிக் கொடுத்து விட்டோம் என்ற கர்வம் அவர் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. ஆனால் சுந்தரமோ கண்கலங்கி நின்றார். சொந்த ஊரிலேயே மகளைக் கட்டிக் கொடுத்திருந்தால் கண்ணுக்கு முன்னாலேயே சந்தோசமாக இருந்திருப்பாள், இப்போது எங்கே போகிறாளோ என அந்தத் தந்தையின் மனம் அடித்துக் கொண்டது.

​திருமணத்தின் பின்னரான சில நாட்கள் யாழ்ப்பாணத்தில் ஒருவித மாயையாகவே கழிந்தன. மயூரன் ஊரவர் கண் முன்னே யூரோக்களைத் தண்ணீராகச் செலவழித்தான். சொந்தக்காரர்கள் முன்னால் படாடோபமாக நடந்து கொண்டாலும், தனிமையில் மதுவந்தியிடம் அவன் முகம் சிடுசிடுவென்றே இருந்தது.

​”நான் அங்கை பல வேலைகள் வைச்சிருக்கிறன்.. உனக்காகத்தான் இஞ்ச வந்து இவ்வளவு நேரத்தை வேஸ்ட் பண்ணிக் கொண்டிருக்கிறன். கெதியா பெட்டி படுக்கையை ரெடி பண்ணு,” என்று அதிகாரமாகவே கட்டளையிட்டான்.

விசாவுக்காக இவள் காத்திருந்த நாட்களிலும் தொலைபேசியில் சண்டை மட்டுமே. அல்லது இருவரும் பேசிக் கொள்வதில்லை. இறுதியில் விசாவும் வந்து சேர்ந்தது.

​பிரிவுபசார நாளில் சுந்தரம் மகளைக் கட்டிப்பிடித்துக் குலுங்கி அழுதார். கமலாவோ, “அழாதை மது.. அங்கை போய் வடிவா இரு.. ஆம்பிளையள் எண்டால் அப்பிடித்தான் இருப்பாங்கள், நீதான் சமாளிச்சுப் பொறுமையாக நடக்க வேணும்..” என்று வழமையான தனது அறிவுரையைக் கூறி வழியனுப்பி வைத்தார்.

​விமானப் பயணம் முழுவதும் மதுவந்திக்கு ஒருவித நடுக்கமாகவே இருந்தது. மயூரன் அவளுடன் பெரிதாகப் பேசிக் கொள்ளவில்லை. அவனது கவனம் முழுவதும் தன் கைப்பேசியிலும், விமானப் பணிப்பெண்கள் ஊற்றிய மதுக் கோப்பையிலுமே இருந்தது.

​பாரிஸ் சார்லஸ் டி கோல் (Charles de Gaulle) விமான நிலையத்தை அடைந்த போது, மதுவந்திக்கு முதல் அதிர்ச்சி காத்திருந்தது. இன்ஸ்டாகிராமில் தோழி நளினியிடம் காட்டிப் பெருமைப்பட்ட அந்தப் பனிப்பொழியும் வெண்ணிறக் காட்சிகள் எங்கும் இல்லை. மாறாக, எலும்பை ஊடுருவும் குளிரும், சாம்பல் நிறத்திலான வானமும் மனதை ஏதோ செய்தது.

​”கெதியா நட.. இஞ்ச ஊரில மாதிரி நின்று நிதானிச்சு நடக்க ஏலாது.. ஓட வேணும்..” என்று அவளது கையைப் பிடித்து இழுக்காத குறையாக நடந்தான் மயூரன்.

​பாரிஸ் நகரத்தின் பிரம்மாண்டத்தை ரசிக்க அவளுக்கு நேரம் கிடைக்கவில்லை. RER B புகையிரதத்தில் ஏறி, ஒரு நெரிசலான பெட்டியில் அவர்கள் பயணித்தனர். பல நாட்டு மக்களும், கசங்கிய முகங்களுமாக அந்தப் பயணம் அவளுக்குள் ஒரு வித பயத்தை ஏற்படுத்தியது.

​அவர்கள் வந்திறங்கிய இடம் லா சப்பல் (La Chapelle). “இதுதான் குட்டி யாழ்ப்பாணம்.. இஞ்ச தமிழ்க்கடைகள் எல்லாம் இருக்கு,” என்றவாறே அவளை ஒரு குறுகிய வீதிக்குள் அழைத்துச் சென்றான். எங்கு பார்த்தாலும் குப்பைகளும், சலசலப்பும், அவசர அவசரமாக ஓடும் மனிதர்களுமாக அந்த இடம் அவளுக்கு கொழும்பின் புறநகர்ப் பகுதி ஒன்றைப் போலத்தான் காட்சியளித்தது. வெளிநாடு என்ற அவளது பிரம்மாண்ட பிம்பம் சுக்குநூறாக உடையத் தொடங்கியது.

​அவர்கள் தங்கும் அறையைச் சென்றடைந்ததும் மதுவந்திக்கு மூச்சே நின்று விடும் போல் இருந்தது. அது ஒரு சிறிய ‘ஸ்டுடியோ’ (Studio) அறை. படுக்கை, சமையலறை, குளியலறை எல்லாம் அந்தப் பத்தடிக்கு பத்தடி அறைக்குள்ளேயே அடங்கியிருந்தன. ஊரில் பெரிய வீடும், வளவும், தோட்டமுமாகச் சுற்றித் திரிந்தவளுக்கு, இந்தச் சிறிய அறை ஒரு சிறைச்சாலை போலத் தோன்றியது.

​”பார் மது.. இஞ்ச எல்லாமே காசுதான். நான் ரெஸ்டோரண்டில வேலை செய்யிறன். காலமை போனால் வர இரவு ஆகும். நீ பாட்டுக்கு வீட்டில இருக்க வேணும். வெளியில எல்லாம் தனியப் போகக் கூடாது. விளங்கிச்சோ?” என்று முதல் நாளே கட்டளையிட்டான் மயூரன்.

​உடுப்புகளை அடுக்கி வைக்கும் போதே அவளுக்குத் தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது. “அம்மா.. எனக்கு இந்த வெளிநாட்டு மாப்பிள்ளையே வேண்டாம் அம்மா..” என்று தான் ஊரில் வைத்து அழுதது அவளது காதுகளில் மீண்டும் ஒருமுறை ஒலித்தது. ஆனால் இப்போது பல ஆயிரம் மைல்கள் தாண்டி, மொழி தெரியாத, முகம் தெரியாத ஒரு தேசத்தில், அறிமுகமில்லாத ஒரு மனிதனுடன் அவள் அடைபட்டுப் போயிருந்தாள்.

அவளுக்கு விடிவு கிடைக்குமா? இல்லை இந்த சிறையிலேயே வெம்பி மடிவாளா?

​அக்கரை தொடரும்…

You cannot copy content of this page