அத்தியாயம் – 06
மதுவந்தி கண் விழித்தபோது, ஜன்னல் கண்ணாடிகளில் உறைந்திருந்த பனித்துளிகள் அவளது வாழ்க்கையின் உறைநிலையை ஞாபகப்படுத்தின. அந்தச் சிறிய ‘ஸ்டுடியோ’ அறையின் கூரையைப் பார்த்தபடி படுத்திருந்தவளுக்கு, தான் இன்னும் யாழ்ப்பாணத்தில் தன் விசாலமான அறையில்தான் உறங்குகிறோமோ என்றொரு மயக்கம் ஒரு கணம் எழுந்து மறைந்தது. ஆனால் பக்கத்தில் கட்டிலின் கீறல் சத்தம் அவளைப் பாரிஸின் லா சப்பல் (La Chapelle) நிஜத்திற்கு இழுத்து வந்தது.
நேரம் காலை ஆறு மணியைக் காட்டியது. மயூரன் அவசர அவசரமாக எழுந்து குளியலறைக்குள் நுழைந்தான். அவன் முகம் தூக்கமின்மையாலும், ஏதோ ஒரு சொல்ல முடியாத அழுத்தத்தாலும் இறுகிக் கிடந்தது. அவளும் மெதுவாக எழுந்து போர்வையை விலக்கிக் கொண்டு சமையலறைப் பக்கம் சென்றாள். சமையலறை என்று தனியாக எதுவும் இல்லை, கட்டிலில் இருந்து மூன்று தப்படி வைத்தால் ஒரு சிறிய சிங்க், அதருகே ஒரு மின்சார அடுப்பு. அவ்வளவுதான். ஊரில் பெரிய சமையலறையில் பலகாரம் சுட்டுத் திரிந்தவளுக்கு இது ஒரு விளையாட்டுச் சாமான் போலக் காட்சியளித்தது.
”உங்களுக்கு தேத்தண்ணி ஏதும் போடவா?” என்று தயக்கத்தோடு கேட்டாள் மதுவந்தி.
”அதெல்லாம் ஒண்டும் வேணாம். நான் கடையில குடிப்பன். எனக்கு நேரம் போய்ட்டுது.. நீ உனக்குப் போட்டுக்குடி,” என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லியவாறே, கசங்கிய ஒரு கறுப்பு நிற ரி-ஷேர்ட்டையும், பழைய ஜீன்ஸையும் மாட்டிக் கொண்டான்.
”நான் வேலைக்குப் போறன். வர எப்படியும் இரவு பதினொன்று, பன்னிரண்டு ஆகும். அந்த அலுமாரியில கொஞ்சம் மரக்கறியும், பஸ்தாவும் இருக்கு. வடிவாச் சமைச்சு சாப்பிடு. வெளியில எங்கயும் போய்த் துலையாதை. வழி மாறிப்போனால் என்னால வேலையை விட்டிட்டு வந்து தேடிக் கொண்டிருக்க ஏலாது. விளங்கிச்சோ?”
”ஓம்…” என்று மெல்லிய குரலில் தலையாட்டினாள்.
”கதவை வடிவாப் பூட்டி வை. யாராவது தட்டினால் திறக்காதை. இஞ்ச ஊரில மாதிரி எல்லாரும் நல்லவங்கள் இல்லை. எல்லாம் கள்ளப் பயலுகள்.. தேவையில்லாம ஜன்னலால எட்டிப் பாத்துக் கொண்டும் நிக்காதை,” என்று கட்டளையிட்டு விட்டு, ஒரு பதற்றத்துடனேயே படியிறங்கிப் போனான் மயூரன்.
கதவு சாத்தப்பட்ட சத்தம் அந்தச் சிறிய அறைக்குள் பெரும் எதிரொலியாகக் கேட்டது. மதுவந்திக்கு இப்போதுதான் தனிமை முழுமையாக உறைத்தது. தேநீர் ஒன்றைப் போட்டுக் கொண்டு ஜன்னலருகே வந்து நின்றாள். அது நான்காவது மாடி. கீழே பார்த்தால் வீதியில் மக்கள் அவசர அவசரமாக நடந்து கொண்டிருந்தார்கள். கறுப்பு நிறக் கோட்டுகளை அணிந்து கொண்டு, குளிருக்கு முகத்தை மூடியபடி எந்திரங்கள் போல் நகர்ந்தார்கள். யாழ்ப்பாணத்தில் காலை வேளையில் கேட்கும் அந்தச் சுறுசுறுப்பான, சந்தோசமான சத்தங்கள், கோயில் மணியோசைகள் எதுவும் இங்கில்லை. பஸ் சத்தமும், புகையிரதத்தின் இரைச்சலுமே பின்னணி இசையாக இருந்தது.
தேநீரைக் குடித்து விட்டு, தனது உடுப்புகளை ஒழுங்குபடுத்தலாம் என்று அந்தச் சிறிய அலுமாரியைத் திறந்தாள். அவளது பட்டுச் சேலைகளுக்கும், நகைப் பெட்டிகளுக்கும் அந்த ஒற்றை அலுமாரியில் இடமில்லை. மயூரன் தட்டிப் பறித்து வைத்திருந்த அவனது உடுப்புகளுக்குக் கீழே, ஒரு பழைய பை கிடந்தது. அதை எடுத்துச் சுத்தப்படுத்தி வைக்கலாம் என்று எண்ணித் திறந்தாள்.
உள்ளே சில காகிதங்களும், சம்பளப் பற்றுச்சீட்டுகளும் (Payslip), சில கடிதங்களும் இருந்தன. சும்மா புரட்டிப் பார்த்தவளுக்கு அதில் இருந்த பிரெஞ்சு வார்த்தைகள் எதுவும் புரியவில்லை என்றாலும், ‘Plongeur’ என்ற சொல் மட்டும் ஒரு தாளில் கொட்டை எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது. அவளுக்கு லேசாக சந்தேகம் வந்தது. தன்னிடம் தொலைபேசியில் அகராதி (Dictionary) செயலி ஒன்று இருப்பதை ஞாபகப்படுத்தி, அதில் அந்த பிரெஞ்சு வார்த்தையை உள்ளிட்டுப் பார்த்தாள்.
’Dishwasher’ – பாத்திரம் கழுவுபவர்.
மதுவந்திக்குத் தூக்கி வாரிப் போட்டது. நம்ப முடியாமல் மீண்டும் மீண்டும் அந்தப் பேப்பரைப் பார்த்தாள். அது மயூரனின் பெயர் போடப்பட்ட வேலை ஒப்பந்தம் (Contract) என்பது அவளுக்குப் புரிந்தது.
”நான் அங்க பெரிய கொம்பனியில மனேஜராக இருக்கிறன், என்ர கீழ பத்து வெள்ளைக்காரங்கள் வேலை செய்யிறாங்கள்” என்று அவளது தாயிடம் மார்தட்டியது அவளுக்கு நினைவுக்கு வந்தது. கல்யாணத் தரகர் கனகண்ணை, “பொடியன் பெரிய உத்தியோகத்தில இருக்கிறான், கை நிறைய யூரோக்கள்” என்று தன் தந்தையிடம் பம்மாத்து விட்டது காதுகளில் ஒலித்தது.
”அம்மா… நீங்க என்னைத் தள்ளி விட்ட கிணறு எவ்வளவு ஆழமானது என்று இப்ப விளங்குதும்மா” என்று தனக்குள்ளேயே முனகிக் கொண்டாள். எந்த வேலையும் கேவலமில்லை தான், ஆனால் ஆரம்பத்திலிருந்தே இவ்வளவு பெரிய பொய்யைச் சொல்லி, ஊரில் அத்தனை பேருக்கும் முன்னால் பெரிய பணக்காரன் போல் நாடகமாடித் தன்னை ஏமாற்றியிருக்கிறான் என்ற உண்மை அவளைச் சுட்டுப் பொசுக்கியது. ஊரில் தாலி கட்டும் போது அவனது கழுத்தில் கிடந்த தடிமனான தங்கச் சங்கிலியும், போட்ட பவுடரும் எல்லாம் வெறும் வேஷம்தானா?
மதியச் சாப்பாட்டை ஏனோதானோவென்று சமைத்து முடித்தாள். சாப்பிடுவதற்கு சுத்தமாகப் பசியில்லை. தொலைக்காட்சியைப் போட்டால் அதிலும் பிரெஞ்சு மொழியிலேயே செய்திகள் ஓடின. தொலைபேசியை எடுத்தாள். நளினிக்கு அழைத்துப் பேசலாம் போலிருந்தது. ஆனால் என்னவென்று சொல்வாள்? “உன்ர புருசன் பெரிய இடமடி, நீ குடுத்து வைச்சவள்” என்று நளினி பெருமையாகச் சொன்னது நினைவுக்கு வர, போனை அப்படியே வைத்து விட்டாள். அவமானம் அவளைப் பிடுங்கித் தின்றது.
மீண்டும் ஜன்னலருகே தஞ்சம் புகுந்தாள். லா சப்பல் வீதி மெதுவாக சூடுபிடிக்கத் தொடங்கியிருந்தது. வீதியின் மூலையில் சில தமிழ்க் கடைகள் தெரிந்தன. அங்கு ஆட்கள் வந்து போவது தெரிந்தது. வீதியின் மூலையில் சிலர் நின்று கொண்டு சிகரெட் பிடித்துக் கொண்டும், சத்தமாகப் பேசிக் கொண்டும் இருந்தார்கள். அவர்கள் பேசும் தமிழ் ஏதோ ஒரு வகையில் அவளுக்கு ஆறுதலாக இருந்தாலும், அந்த இடம் முழுவதுமே ஒருவித பதற்றத்துடனேயே இயங்குவது போல் தோன்றியது. யாரைப் பார்த்தாலும் ஒரு களைப்பு, ஒரு ஓட்டம். ஊரில் இன்ஸ்டாகிராமில் பார்த்த அந்த ஈபிள் கோபுரப் படங்களுக்கும், இந்தச் சாம்பல் நிறக் கட்டிடங்களுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.
மாலை மங்கத் தொடங்கியது. ஊரில் இந்த நேரம் என்றால் கோவிலுக்குப் போய் விட்டு, முற்றம் கூட்டி, அம்மாவுடன் சம்பல் இடித்துக் கொண்டு கதைத்திருப்பாள். பிரதேச சபையில் தன்னுடன் வேலை செய்யும் நண்பிகளுடன் சிரித்துப் பேசி ஒரு வாழ்க்கை இருந்தது. இங்கு இந்த நான்கு சுவர்களுக்குள், ஒரு கைதி போல அடைபட்டுக் கிடக்கிறாள். மொழி தெரியாத ஒரு நாட்டில், யாருடைய உதவியும் இல்லாமல் வெளியே கூடப் போக முடியாத கையறு நிலை. நேரம் போகப் போக, அவளுக்கு மூச்சுத் திணறுவது போல் இருந்தது. தனக்குத் தெரிந்த உலகம் இவ்வளவு சீக்கிரம் சுருங்கிப் போய்விட்டதே என்ற ஏக்கம் அவளை வாட்டியது.
இரவு பதினொரு மணியைத் தாண்டியிருந்தது. படியேறும் சத்தமும், சாவியைக் கதவில் போடும் சத்தமும் கேட்டது. மயூரன் உள்ளே நுழைந்தான். அவன் உடலிலிருந்து வந்த ஒருவித புளித்த வாசனையும், வியர்வை நாற்றமும், சிகரெட் புகையும் அந்தச் சிறிய அறையை ஆக்கிரமித்தது. பல மணி நேரங்கள் உணவகத்தின் சமையலறையில் நின்ற களைப்பு அவன் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. கண்கள் சிவந்திருந்தன.
”சாப்பிடுறியளா? நான் சாப்பாடு சூடாக்கி வைக்கிறன்,” என்று எழுந்தாள் மதுவந்தி.
”வேணாம்… நான் கடையிலயே சாப்பிட்டிட்டன். நீ சாப்பிட்டனியா?” என்று தன் கோட்டைக் கழற்றி வீசியபடி கேட்டான்.
”ஓம்…” என்றாள் மெதுவாக.
அவன் கட்டிலில் வந்து அப்படியே விழுந்தான். அவளுக்குக் காலையில் பார்த்த அந்தப் பேப்பரின் ஞாபகம் வர, மனதை ஒருவாறு திடப்படுத்திக் கொண்டு, தயங்கித் தயங்கி வாயைத் திறந்தாள்.
”அது வந்து… நான் உடுப்பு அடுக்கேக்க… ஒரு பேப்பரைப் பாத்தன்… அதில ஒண்டு போட்டிருந்தது… நீங்கள் மானேஜர் என்றுதானே ஊரில சொன்னீங்கள்? ஆனா…”
அவள் முடிப்பதற்குள் மயூரன் சட்டென்று எழுந்து உட்கார்ந்தான். அவன் கண்களில் ஒருவித ஆத்திரமும் பதற்றமும் சேர்ந்தே வந்தது.
”என்ன பேப்பரை எடுத்த நீ? உன்னை யார் என்ர சாமான்களைத் தொடச் சொன்னது?” என்று கத்தினான். அவன் குரல் அந்த அறையையே அதிரச் செய்தது.
”இல்லை… அது பையில கிடந்தது… சும்மா எடுத்துப் பாக்க…”
”இஞ்ச பாரு மது… நீ உனக்குக் கொடுத்த வேலையை மட்டும் செய். என்ர சாமான்களை நோண்ட வெளிக்கிடாதை. நான் என்ன வேலையெண்டாலும் செய்வன். உனக்கு நான் சோறு போடுறனோ இல்லையோ? அதை மட்டும் நீ பாரு. மிச்சத்தை எல்லாம் ஆராய வெளிக்கிடாதை. இஞ்ச பிரான்ஸில உழைக்கிற கஷ்டம் உனக்குத் தெரியாது. ஊரில இருந்து கொண்டு சும்மா கால்மேல கால் போட்டுச் சாப்பிடலாம் என்று நினைச்சு வந்தியா?” என்று பொரிந்து தள்ளினான்.
அவள் எதுவும் பேசாமல் சிலையாக நின்றாள்.
”நான் காலமை இருந்து இரவு வரைக்கும் மாடா உழைக்கிறன். ஏன்? உன்னையும் உன்ர குடும்பத்தையும் கவனிக்கத்தானே? ஊரில கலியாணத்துக்குப் பட்ட கடன் இன்னும் அப்பிடியே இருக்கு. இங்க வாடகையைக் குடுத்து, விசாவுக்கு லோயருக்குக் காசு குடுத்து, எல்லாத்தையும் பாக்க என்ர உசிரு போகுது. இதுக்க நீ வேற என்னைக் குடையக் கூடாது. சொல்லிட்டன். இனிமேல் எண்ட பொருட்களில கை வைச்சாய், நடக்கிறது வேற,” என்று மிரட்டும் தொனியில் சொல்லிக் கொண்டே படுக்கையில் சாய்ந்து கண்களை மூடினான் மயூரன்.
மதுவந்திக்கு அழுகை தொண்டையை அடைத்தது. விசா எடுக்கவும், ஊரில் படாடோபமாகக் கலியாணம் செய்யவும் அவன் வாங்கிய பல ஆயிரம் யூரோக்கள் கடன் இப்போது தன் கழுத்தை நெரிப்பதை முழுமையாக உணர்ந்தாள். அவன் தன் விரக்தியையும், இயலாமையையும், கடன் சுமையையும் தன் மீது அதிகாரமாகக் காட்டுகிறான் என்பது அவளுக்குப் புரிந்தது. தாலி கட்டியவன், ஊருக்குப் பெரிய மனிதனாகக் காட்டிக் கொண்டவன், இங்கு ஒரு உணவகத்தில் எச்சில் தட்டுகளைக் கழுவிக் கொண்டு, அந்தக் கோபத்தை எல்லாம் தன் மீது கொட்டுகிறான்.
அவள் மெதுவாகப் படுக்கையின் ஒரு ஓரத்தில் சுருண்டு படுத்தாள். ஜன்னல் வழியே தெரிந்த ஒரு மெல்லிய தெருவிளக்கின் வெளிச்சம் அவளது கண்ணீரில் பட்டுத் தெறித்தது. “பிரான்ஸ் மாப்பிள்ளை” என்ற அந்த மாய முகமூடி சுக்குநூறாக உடைந்து, அதன் பின்னாலிருந்த பயங்கரமான யதார்த்தம் அவளைப் பார்த்துப் பற்களைக் கடித்துச் சிரிப்பது போலிருந்தது. அவளது அக்கரைப் பச்சையின் நிஜ நிறம் இருட்டாக மாறத் தொடங்கியிருந்தது.

