தாமரை குளம் – 23

அத்தியாயம் – 23

ஒரு நான்கைந்து வருடங்களுக்கு முன்பு, ஒரு நாள் மாலை. பெண்கள் போராமில் ஒரு பதிவு வைரலாகத் தொடங்கியது.

நீண்ட நாட்களாக அந்தத் தளத்தின் மெம்பெராக இருக்கும், MNCயில் வேலை பார்க்கும் பெண் ஒருவர் பதிவு போட்டிருந்தார். 

“எல்லாருக்கும் ஹாய்! இன்று எனக்கு பதவி உயர்வு கிடைச்சிருக்கு… மேனேஜராக ப்ரமோஷன்! கஷ்டப்பட்டு உழைச்சதுக்கு கிடைச்ச ரிசல்ட். உங்க எல்லாரோட பிரார்த்தனைக்கும் ஆதரவுக்கும்  ரொம்ப நன்றி”


கீழே அவள் போட்டிருந்த சின்ன படம். ஆபிஸ் விழாவில் எடுத்தது போல தெரிந்தது. முகம் கொள்ளா பூரிப்புடன் நின்றிருந்த அவளது கையில்  கையில் சான்றிதழ் போன்ற ஒன்று , அவள் பக்கத்தில் சிலர், அலுவலக நண்பர்களாக இருக்கலாம் சிரித்துக் கொண்டு நின்றார்கள்.

கமெண்ட்ஸ் முதலில் இனிப்பாகவே போனது.

“வாவ்! சூப்பர் அக்கா!”


“கங்க்ராட்ஸ் ! சந்தோஷமா இருக்கு டியர்!”


“ப்ரவுட் ஆஃப் யூ!”

அந்த கூட்டத்தில் ராஜியும் வந்தாள்.
மிகவும் நன்றாக, அன்பாக.

 “வாழ்த்துக்கள் அக்கா! ரொம்ப சந்தோஷம். உங்க உழைப்புக்கு கிடைச்ச வெற்றி. இன்னும் மேல போங்க ❤️❤️❤️❤️❤️”

அந்தப் பெண் “தாங்க்ஸ் ராஜி” என்று பதில் போட்டாள். எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருந்தது.

அப்போதுதான்… ஒரு புதிய கமெண்ட் உண்மை உமையாள் என்ற பெயரில் வந்தது.
“ப்ரமோஷன் வாங்குனதுக்கு வாழ்த்துகள். ஆனா ஒரு கேள்வி… உங்க உயர் அதிகாரி கூட உங்களுக்கு ரொம்ப நல்ல நட்பு இருக்குன்னு தெரியும்… அந்த நட்புதான் இதுக்குக் காரணமா?”

அந்த ஒரு வரிதான்… த்ரட்டின் போக்கையே  மாற்றியது.

ஒரு சில பேர் “ஏன் இப்படிப் பேசுறீங்க?” என்று கேட்க, 

 சில பேர் “அப்படித்தான் இருக்கும் போல” என்றார்கள்.

அந்தப் பெண் பதில் போட்டாள்.
“உங்க பதிவு ஏன் மனசுக்கு  ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் கடுமையா உழைச்சு தான் இந்தப் பதவிக்கு வந்தேன். இப்படி அபாண்டமா சொல்லாதீங்க.”

அந்த நேரம் தான் நீதி என்று இன்னொரு பெயர்  குதித்தது.

“ஏய்! பொறாமை பிடிச்சவங்களே… அக்கா எவ்வளவு உழைப்பாளி தெரியுமா? அவங்க ராத்திரி 12 மணி வரை வேலை பார்த்தவங்க. அவங்க நல்ல மனசு, நேர்மை. அதனால மட்டுமே இந்த பிரமோஷன் கிடைச்சிருக்கு. இப்படி பேசாதீங்க!”

பார்ப்பவர்களுக்கு நிம்மதி வந்தது. “ஆமாம், சரிதான்” என்று சிலர் இதையே பெரிய ஆதரவு போல நினைத்தார்கள்.

ஆனால் அந்த நிம்மதி நீடிக்கவில்லை.

ஏனென்றால் உமையாள் அதே நேரம் பேஸ்புக்  போய்… பழைய புகைப்படத்தைத் தோண்டி எடுத்தது.

அதே பதவி உயர்வு பெற்ற பெண் சில வருடங்களுக்கு முன் பகிர்ந்த ஒரு படம்.
ஆபிஸ் விழா. அவளருகே அவளது உயர் அதிகாரி அமர்ந்திருந்தார். அவள் சிரித்த முகம். அருகில் இருக்கிறவர் பெரிய பதவியில் இருப்பது போலவே தெரிந்தது.

அந்த பழைய படத்தையே எடுத்து, உமையாள் ஐடி, பதவி உயர்வு பெண்ணின் ஐடி மற்றும் பக்கத்தில் இருந்த ஒரு ஆணையும் சேர்த்து  பெரியதொரு கட்டம் போட்டது. அதை பெண்கள் தளத்தில் போஸ்ட் போட்டு குத்திக்காட்டியது.


“இவன்தான் இவளுக்கு க்களோ…செஸ்ட் ஃப்ரெண்ட்…” என்ற மாதிரி அருவருப்பான சந்தேகம் ஊட்டும் போக்கு.

 “இத பாருங்க  உங்க ‘அக்கா’ எப்படி பிரமோஷன் வாங்கினான்னு.. பக்கத்துல யாரு? அதே உயர் அதிகாரி தானே? கட்டம் கட்டி ஸூம் பண்ணி பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”

உமையாள் போராமுக்கு வந்து அந்த லிங்கை இணைத்தது.
அந்த லிங்கை பார்த்தவர்கள் கிளிக் செய்தார்கள். த்ரட்டுக்கு பார்வையாளர்கள் எகிறினர்.

பெண்கள் தளத்தைத் தொடரும் சில ஆண்களில் ஒருவன் எதிர்த்து கமெண்ட் போட்டான்:
“ஏண்டி, பக்கத்தில் உட்காந்தா அது குற்றமாடி?”

அதுக்கு  உடனே பதில்:

 “குற்றமா இல்லையா அதை உன்  தீர்ப்புக்கே விடுறேன் டா . என்னோட தரப்புக்கு ஆதாரமா நான் லிங்க் தந்து  இவர்தான் இண்டர்வியூ நடத்தினார்னு நிரூபிச்சு இருக்கேன். அவங்கள வேணும்னா வந்து எங்க கூட தர்க்க ரீதியா மோத சொல்லுங்க. இண்டெர்வியூ பேனலில் இவளோட நண்பர் இல்லைன்னு ஆதாரத்தோட அவங்களுக்கு அலுவலகத்திலிருந்து வந்த இமெயில்களை இங்க போஸ்ட் பண்ணி  நிரூபிக்க சொல்லுங்க. செய்யல இல்லையா..  இதிலிருந்தே தெரியல இவளோட லட்சணம். இந்த மாதிரி  பதவி உயர்வுக்கு பழகுறதுதான் ஒரே தகுதி போலருக்கு”

அந்த வார்த்தைகள்… ஏனோதானோ என்று  அதுவரைக்கும் அந்தத் திரியைப் படித்தவர்களை கூட இரண்டாகப் பிளந்தது.

ஒருபக்கம் “அய்யோ, இப்படி பேசாதீங்க”

ஒன்றிரண்டு குரல்கள் தீனமாக “படிப்பு பதவி இது சம்பந்தமான கடிதப்போக்குவரத்துகள் எல்லாம் கான்பிடென்ஷியல். எப்படி பகிருவாங்க? அவங்க கல்லூரி படிக்கும்போதிருந்தே இந்தத் தளத்தில் இருக்காங்க. அப்போதிருந்தே எங்களை அவங்களுக்கு தெரியும்” என்று ஒலித்தது. 

அவர்கள் எல்லாம் “என்ன இப்படி பேசச் சொல்லி அவ காசு கொடுத்தாளா” என்று கேட்டு சத்தமே எழும்பாதவண்ணம் அவர்கள் குரவளைகள் நெறிக்கப்பட்டன. இந்த சாக்கடையில் எதற்கு நாம் கல்லெறிய வேண்டும் என்ற எண்ணத்தில் எல்லாரும் அடங்கிப் போனார்கள்.  


மற்றுபக்கம் “நல்லா தோண்டுறாங்க, ஒரு வேளை இந்த உமையாளும் அந்த பதவிக்கு அப்ளை பண்ணிருக்கலாம். இவ குறுக்கு வழில பதவியை வாங்கிருக்கலாம். படம்தான் சொல்லுதே… அதனால உண்மை தெரியுமோ என்னவோ”

அந்தப் பெண் நடுங்கி பதில் போட்டாள்:

“இந்த மாதிரி அவதூறு எல்லாம் பேசாதிங்க. என்னால  தாங்க முடியாது. இது பொய். நான் கம்ப்ளைண்ட் பண்ணப்போறேன்.”

அவள் உண்மையிலேயே தளத்தில் புகார் செய்தாள்.
“Harassment” என்று எழுதினாள். ஸ்கிரீன் ஷாட்கள் அனுப்பினாள்.

இது மாதிரி புகார்களை பரிசீலிக்க எங்களுக்கு அவகாசம் தேவை என்று பதில் வந்தது. புகாருக்கு உடனடியாக நடவடிக்கை இல்லை. அடுத்த நாளும் அந்த ஐடிக்கள் இருந்தது.


மாறாக இன்னும் பல புதிய ஐடிக்கள் வந்து சேர்ந்தன.

“சொன்னது உண்மையா இருக்கும்.”


“அதனாலதான் அவள் கம்ப்லைண்ட் பண்ணுறா.”

அந்தப்பெண்ணின் நண்பர்கள், உறவினர்கள் கூட அந்தத் திரியை பார்த்துவிட்டு விசாரித்தார்கள்


“அவளுக்கு உண்மை தெரிஞ்சதும் ஓடிட்டா.”

நீதி ஐடி மீண்டும் கமெண்ட்ஸ் போட்டது
“அக்காவை விட்டுடுங்க. ஏன் இப்படி? அவங்க நல்லவங்க. இந்தப் பொறாமைக்காரங்களை பிளாக் பண்ணுங்க அட்மின்”

அந்த நல்லவள் கமெண்ட்டுக்கு பின்னே 

“அட நீ எதுக்கு இவ்வளவு அழுகுறா? உங்கக்கா உண்மையா இருந்தா நேருக்கு நேர் சண்டை போட்டு நிரூபிச்சிருப்பாளே…”

அந்த பெண் இதை படித்ததும்… அவள் பதில் கூட போடவில்லை.
ஒரே வரி:

“நான் இந்த தளத்தில இருந்து போறேன்.”

அதற்கு பிறகு அவள் அக்கவுண்ட் மௌனமானது.
பேஸ்புக்கிலும் அவள் இல்லை.
சில நாட்களில், அவள் வேலை இடத்தில கூட அவள் மனம் தளர்ந்து போனது. “ராஜினாமா” செய்ததாக ஒரு வதந்தி கிளம்பியது.

அந்த வதந்தியே இந்த கும்பலுக்குத் தீனி.

உமையாள் ஐடி உண்மையை உலகுக்கு உரக்க சொன்னது
“பாருங்க! உண்மை தெரிஞ்சதும் ஓடிட்டா. நேர்மையானவளா இருந்தா நின்னு நிரூபிச்சிருப்பா.”

அதைப் படித்த  பலர் சிரித்தார்கள். சிலர் கைதட்டினார்கள்.
இன்னும் சிலர் அந்த உண்மை விளம்பும் ஐடிக்களுடன் “நட்பு” பிடித்தார்கள்.
“நீங்க ரொம்ப தைரியமா உண்மை பேசுறீங்க” என்று  பாராட்டினார்கள்.

வெற்றிச் சிரிப்பில் லேப்டாப்பில் தனது உமையாள் ஐடியை மூடி வைத்தாள் ராஜி. அத்துடன் சேர்த்து அனைத்து போலி ஐடிக்களையும் கூட. அந்த பாராட்டு, கைத்தட்டல்கள் தான் ராஜிக்கு போதை.

அந்த இரவு ராஜி தன் வீட்டில் அமர்ந்து, வழக்கம்போல நல்ல மனைவியாக ரித்திக்குக்கு  சாப்பாடு பரிமாறினாள்.
அவன் “இன்னைக்கு இண்டெர்வியூ எப்படி போச்சு?” என்று கேட்டான்.

“நல்லா போச்சு,”  என்று சுருக்கமாக பதிலளித்தாள். 

ராஜி கைபக்கம் கிழிந்திருந்த நைட்டியை நூலால் தைத்து அணிந்திருந்தாள். அந்த ஒற்றை படுக்கையறை வீட்டில், இரவு பத்து மணிக்கு ரித்திக் ஷிப்ட் முடிந்து வந்து சாப்பிட்டதும் மாமனார் மாமியார் படுத்துக் கொள்வார்கள். ஒற்றை அறை இவளுக்கும் கணவனுக்கும். நாத்தனாரும் அவளது கணவரும் வந்தால் இவர்கள் அறையை அவர்களுக்கு கொடுத்துவிட்டு ஹாலில் முடங்கிக் கொள்ள வேண்டும். ஒரு தனி அறை கூட இல்லாமல் என்ன வாழ்க்கை இது. ஆனால் இந்த வாழ்க்கை கிடைக்கவே நாய் படாத பாடு பட்டிருக்கிறாள். தாய்வீடு இதை விட ஏழ்மை. பசித்தவனுக்கு பழைய சோறே அமிர்தம் என்று வாழ்ந்திருப்பான் அவன் எதிரே ஒருவன் அமர்ந்து பிரியாணி சாப்பிடுவதை காணும் வரை.

“எனக்கே எங்க முட்டினாலும் வேலை இல்லைன்னு சொல்றாங்கன்னு கவலைல இருக்கேன். இதில் இவ ஒருத்தி வந்து பதவி உயர்வுன்னு கமெண்ட் போடுறா.. போ இனி நீயும் வேலை இல்லாம உக்காரு” என்று ராஜி விஷமமாய் சிரித்தாள்.

பதவி உயர்வுப் பெண் அவளைப் போலவே கிழிந்த நைட்டியைத் தைத்துப் போட்டுக்கொண்டு, என் செலவுக்கு ஒரு ஐநூறு ரூபா வேணும் தர முடியுமா என்று கேட்பது போல மனக்கண்ணில் தோன்றி அளவிடமுடியாத ஆனந்தத்தைத் தந்தது. ராஜியின்  மனசுக்குள்  குரூர சிரிப்பு.

ஒருத்தியை உடைத்து, யாருக்கும் தெரியாம அவள் அழுவதைப் பார்ப்பது…
அதே அவளுக்கு உண்மையான வெற்றி.

அந்த வெற்றியின் நடுவில் அவள் தன்னைத் தானே சொன்னாள்:

“நான் வயித்தெரிச்சல்ல ஒரு கமெண்ட்தான் போட்டேன். போட்டோவில் அவ பக்கத்தில் உக்காந்திருந்தது யாருன்னு கூட தெரியாது.   ஒருத்தி சைட்டை விட்டு, ஏன் பிரமோஷன் கிடைச்சும் கூட வேலையையே விட்டுட்டு போயிட்டா.  இப்போ நான் சொன்னது உண்மைன்னு நம்பி என் பக்கமா இன்னும் ஐடிக்கள்…  அடுத்த தடவை இன்னும் பெரிய டார்கெட் பண்ணலாம் போலருக்கே”

மனசு இதுவரை ஆன்லைனில் தான் பார்த்த பெரிய தலைகளை லிஸ்ட் போட்டு அடுத்து யார் என்று யோசிக்கத் தொடங்கியது. 

ராஜியின் பழைய கம்ப்யூட்டரை உயிர்பித்து அதில் இருக்கும் தளத்தின் அட்ரெஸ் மற்றும் இன்ன பிற தகவல்களை கொண்டு அவளது பேக் ஐடிக்களை வரிசை படுத்தியிருந்தார்கள் தென்னாடனும் அல்லியும். 

தகவல்களை கேட்டு வாயடைத்து போயிருந்தார்கள் விஜயாவும் சோலைமலையும். 

“இதுனால ராஜிக்கு என்ன லாபம்னு புரியலையே”

அவ இன்னொரு தளத்தில் ஒரு கவிதை மாதிரி ஏதோ எழுதிருக்கா. அந்த வார்த்தைகள் அவ மனசில் இருக்குறதை விளக்க சான்சிருக்கு அதை சொல்றேன் கேளுங்களேன், 

என்னோட மனசுக்குள்ள  ஒரு அறை இருக்கு..

அதுல மட்டும் எப்பவும் இருட்டு.

நான் பேசுற வார்த்தைகள் சத்தமா இருந்தாலும்

என் மனசு மட்டும் மௌனமா அழுது.

அங்கிருந்து வெளிய வரத் தெரியாம… நான் வாழுறேன்.

“இது மாதிரி புலம்பல் கவிதைகள் சிலதை படிச்சேன். ஏதோ மனசு எரிச்சலில் இருந்திருக்கா மேடம்”

“மேல சொல்லுங்க தென்னாடன்” 

You cannot copy content of this page