தாமரை குளம் – 27 (நிறைவுப் பகுதி)

அத்தியாயம் – 27

அடுத்து கிட்டத்தட்ட நான்கு மணி நேரம்.
அள்ளிப் போட்ட ஆதாரங்களோடு காரின் டிக்கியில் இருந்த பைகள் தூத்துக்குடி உப்பளத்தில் அள்ளிய உப்பு மூட்டை கணக்காய் நிறைந்திருந்தது. தென்னாடன் கண்களில் தூக்கம் இல்லை. அல்லி முகத்தில் உற்சாகம் இல்லை. விஜயா மட்டும் அமைதியாக இருந்தார். அமைதி என்றால் சாந்தம் இல்லை, காவல்துறையினரின் “இதுக்கு மேல் என்ன” என்ற யோசனை இந்த கணக்கிற்கு இந்த ஃபார்முலா ஒத்து வரவில்லை எங்கே தப்பு விட்டோம் என்று சிந்தனை.

கார் சிட்டியில் மெதுவாக உருண்டது. வீதிகளின் விளக்குகள் மங்கத் தொடங்கி, வானம் சாம்பல் நிறமாக மாற ஆரம்பித்திருந்தது. வழியில் கடைகளை திறக்கத் தொடங்கும் சத்தம், பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கும் நிழல்கள், மழையில்லாத காலையிலும் கடல் காற்று வீசும் சென்னை வாசனை… எல்லாம் சேர்ந்துகொண்டு ஒரு விசித்திரமான மயக்கம்.

அப்போது கார் பீச் ரோடு பக்கம் திரும்பியது. திறந்திருந்த ஜன்னல் வழியே காற்று முகத்தில் அறைந்து தூக்கத்தை விரட்டியது.

“மேடம்…” அல்லி ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடி சொன்னாள். “மெரினா…”

தென்னாடன் உடனே முகத்தைச் சுருக்கினான். “இப்போ இதென்ன விளையாட்டு, அல்லி? கார் முழுக்க ஆதாரம். இதை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம்மளிது. நம்ம தூங்காம ஓடிட்டு இருக்கோம்.”

அல்லி வாயை மூடி விட்டாள். ஆனாலும் கண்களில் ஒரு குழந்தை ஆசை. கடற்கரை மணலும் அலைகளும் அவளுக்கு ஒரு நிமிடம் சாதாரண வாழ்க்கையை நினைவூட்டியது.

விஜயா மட்டும் மெதுவாகச் சொன்னார் “இருக்கட்டும். ஆசைப்படுறா இல்லையா? பத்து நிமிஷம் போய் நின்னுட்டு வாங்க.இவ்வளவு நேரம் ஒண்ணும் ஆகல இல்ல. இனியும் ஒண்ணும் நடக்காது”

தென்னாடன் ஆச்சரியமாக விஜயாவைப் பார்த்தான். “மேடம்…”

“நீங்க ரெண்டு பேரும் போய்ட்டு வாங்க,” விஜயா தொடர்ந்தார். “நான் காரில காத்திருக்கேன்.”

“ஆனா மேடம்…” தென்னாடன் தயங்கினான்.

“இதை எல்லாம் வச்சு என்ன செய்றதுன்னே தெரியல தென்னாடன். அதிகபட்சம் சாந்து நிரபராதி, கொலை செய்யப்பட்டிருக்கிறான்னு வேணும்னா சொல்லிப் பாக்கலாம். ராஜியோட ஆதாரங்கள் அவனை நிரபராதினு நிரூபிக்கப் போதும். ஆனால் அவனோட கொலை… கஷ்டம்தான்…

நீங்க ரெண்டு பேரும் போய் நின்னுட்டு வாங்க. மனசு லேசாகட்டும். இப்படியே வண்டியை ஓட்டிக்கிட்டு இருந்தா நம்ம மண்டையே குளம்பிரும்,” என்று விஜயா சொன்னார்.

அல்லி உடனே, “நன்றி மேடம்,” என்று ஒரு சின்ன புன்னகை செய்தாள். “சின்ன வயசிலிருது மெரினா பாக்கணும்னு ரொம்ப ஆசை”

கார் கடற்கரைக்கு அருகே நிறுத்தப்பட்டது. டிக்கி, டோர், எல்லாம் விஜயா கவனமாக பூட்டினார். தென்னாடன் மற்றும் அல்லி கடற்கரைப் பக்கம் நடந்தார்கள். அலை சத்தம் கேட்கும் தூரம். மணலில் காலடி பதியும் சத்தம். அல்லியின் முகத்தில் மலர்ச்சி  வந்தது.

விஜயா மட்டும் காருக்கு பக்கத்தில் நின்றார். முன் சாய்ந்து, இரண்டு கைகளையும் சேர்த்து, தூரத்தில் கடலை பார்த்தார்.

அந்த நேரம் விடிய ஆரம்பித்திருந்தது. வாக்கிங் போகிற சிலர், யோகா க்ரூப் என்று மக்கள் வரத்து தொடங்கியிருந்தது.

“சுக்கு காப்பி… அருகம்புல் ஜூஸ்…” என்று இரண்டு மூன்று குரல்கள் சாலையோரத்தில் சுத்தத் தொடங்கியிருந்தன. கடலோர விளக்கின் வெளிச்சத்தில் தென்னாடனும் அல்லியும் சின்னதாய் நிழலாகத் தெரிந்தார்கள்.

விஜயா கண்களை திருப்பினார்.

அங்கே, சுக்கு மல்லி காப்பி விற்றுக் கொண்டிருந்த ஒரு முப்பது வயது மதிக்கத்தக்க ஒல்லியான நபர்.

விஜயா சற்று நேரம் அவனை கவனித்தார். அவன் கூட விஜயாவை கவனித்தான்.

“இங்க வா…” விஜயா அழைத்தார்.

அவன் நெருங்கி வந்தான். விஜயா சுருக்கமாக, “ஒரு காப்பி தா,” என்றார்.

காப்பி கைப்பிடியில் இருந்த வெப்பம் கை விரல்களில் பதியும் முன்னே விஜயா கப் வாங்கிக் கொண்டார். ஒரு சிப்பும் எடுக்கவில்லை. அப்படியே அவனை பார்த்து:

“சொல்லுப்பா,” என்றார்.

“என்ன சொல்ல, மேடம்?” அவன் திகைப்பாய் கேட்டான்.

“என்ன சொல்றதுக்காக உங்க டீம் எங்களைத் துரத்திட்டு வந்தீங்களோ… அதை சொல்லுங்க.”

அவன் முகத்தில் ஒரு கணம் திகைப்பு.பிறகு புன்னகை. கற்றாரைக் கண்ட கற்றார் போல…

விஜயா கண்களைச் சுருக்கினார். “என்ன சிரிப்பு?”

“நீங்க எங்களை நோட்டம் விட்டுட்டு தான் இங்க ஸ்டாப் பண்ணச் சொன்னீங்க, இல்ல?”

“ஆமாம் ஆள் மாத்தி மாத்தி பின் தொடர்ந்திங்க”

“உங்க டீம் ராஜி வீட்டுக்கு போனதும் உங்களுக்கு தெரியும், மேடம்,” அவன் நிதானமாகச் சொன்னான்.

“அங்க இருந்த ஆதாரங்கள் இன்னும் முழுசா அழிக்கப்படாம இருக்குறதே… எனக்கு பெரிய ஆச்சர்யம்தான். அப்படி விட்டு வச்சிருந்தா, அது பயனில்லாத ஆதாரங்களாத்தான் இருக்கணும்.” சரியா என்றார் விஜயா

“சுத்தமா ஒண்ணுமில்லைன்னு சொல்ல முடியாது ஒருத்தரை நிரபராதின்னு நிரூபிக்கத் தேவையான ஆதாரங்கள் தகுத்த புத்திசாலி நபர்களுக்காக விட்டு வச்சிருந்தோம்”

ஒரு நொடி மூச்சை அடக்கினார். இது ஒரு சின்ன கூட்டம் இல்லை.

“எதுக்காக மூணு பேரையும் கொன்னிங்க?” விஜயா நேரடியாக விஷயத்துக்கு வந்தார். “ராஜி. லால். புலிக்கரை மோகன்.”

அவன் புன்னகை மாறவில்லை. ஆனாலும் குரல் ஒரு படி கடினமானது. “நீங்க அந்த வீடியோவை பார்த்தீங்களா?”

“பார்த்தேன்,” விஜயா சொன்னார்.

“அதுல ஷாந்து மட்டும் தனியா இருக்குற வீடியோவை பாருங்க,” என்று அவன் சொன்னான்.

விஜயாவின் கண்களில் சந்தேகம். “அந்த வீடியோவில் என்ன?”

அதை நினைவில் கொண்டு வந்தவாறே கேட்டார்.

அவன் கண்ணால் “பின்னே” என்று சைகை செய்தான். “அவன் பின்னால இருந்த பெட்டிகள்.”

விஜயா உடனே உள்ளுக்குள் அந்த ஃப்ரேமை நினைத்தார். ஒரு கோடு, ஒரு லேபிள், ஒரு பெட்டி… அப்போ அது தான்.

“இந்தப் பெட்டியா? அதுல என்ன விஷயம்?” விஜயா கேட்டார்.

அவன் சற்று கண்ணை இறுக்கி சொன்னான்:

“போலி விதைகள்.”

அவன் தொடர்ந்தான்

“எப்படி நம்ம ஊர்ல கருவேலம் செடிகள் வளர்ந்து மண்ணின் ஈரப்பதத்தை உறிஞ்சி, வேற எந்தச் செடியையும் வளர விடாம ஆக்கிரமிச்சதோ… அதைவிட பன்மடங்கு தீவிரமான விஷ விதைகளை… நம்ம பாரம்பரிய விதைகளோட கலக்க முயற்சி. விவசாயத்தை முடக்கி, நாட்டு நம்பிக்கையை உடைக்கிற மாதிரி ஒரு வேலை.”

விஜயா வாயடைத்து போனார் உண்மையான காரணம் “தேச பாதுகாப்பு”

“அப்ப ஷாந்து…?” விஜயா கேட்டார்.

“அவன் எதோ படப்பிடிப்புக்கு ஹார்பர் பக்க பகுதிக்கு போயிருக்கான். தெரியாத்தனமா அந்த பெட்டிக்கு முன்னாடி நின்னு செல்ஃபி பிடிச்சுட்டான். அதில் அந்த பேக்கேஜ் பத்தின தகவல்கள் எல்லாம் பதிஞ்சிருந்தது. அவன் நிஜத்துல குற்றம் செய்யலதான். அவன் கையில இருந்தது ஒரு ஷாட் மட்டும். ஆனா அந்த ஷாட் பரவினா கும்பலுக்கு நஷ்டம். ஏன்னா அரசாங்கம் மோப்பம் பிடிக்க ஆரம்பிச்சா இத்தனை வருஷம் கட்டி வச்ச சாம்ராஜ்யமே சரிஞ்சுடும்”

விஜயா மெதுவாக கண்களை மூடினார். “அதனால அவனை டார்கெட் பண்ணிட்டாங்க….”

“ஆமா, அவனை பலியாடாக்கி கவனம் திசை திருப்பினாங்க. ராஜி கதை பரப்பினா. லால், மோகன் கடைசில  அவன் கதையை முடிச்சாங்க. மூணு பேருக்கும் அந்த விதை இறக்குமதி நகர்வில் பங்கு இருந்தது. உண்மையை எவ்வளவு நாள் மறைக்க முடியும்.”

“நீங்க அவங்களை கொன்னது…” விஜயா சொல்லாமல் நிறுத்தினார்.

அவன் சின்னதாய் தலை ஆட்டினான். “அவங்க பங்கும் முடிஞ்சது. அதுக்குப் பிறகு அவங்க உயிரோட இருந்தா… குற்றம் இன்னமும் தொடரும். அதனால முடிச்சோம்.”

விஜயா காப்பி கப்பை மெதுவாக கீழே வைத்தார். “ஆனா அந்த விதைகள்?”

“சமீபத்துல குடோவுனில் தீ விபத்து பற்றி செய்தி படிச்சிருப்பீங்களே.”

“படிச்சேன்,” விஜயா மெதுவாக சொன்னார். “அதோட அந்த முதலாளியும் கருகிட்டதா போட்டிருந்தாங்க…”

“ஆமா மேடம். சில சமயம் தண்டனைகள் கூட… ரகசியமாத்தான் தர வேண்டியிருக்கு.”

விஜயா அந்த வார்த்தையை உள் வாங்கிக் கொண்டார். இதுதான் அவன் சொல்ல வந்த இறுதி வரி. இது ஒரு ஆபரேஷன். நிழலில் நடந்தது. ரகசியமாய் மட்டுமே நடக்க வேண்டியது. வெளிச்சத்தில் சொல்ல முடியாதது.

அவர் ஒரு கணம் மெரினா கடலை பார்த்தார். அலைகள் சத்தம் வழக்கம்போலவே இருந்தது. மக்கள் வழக்கம்போலவே நடந்து கொண்டிருந்தார்கள். ஆனாலும் அந்த அலைகளுக்குள் இவ்வளவு பெரிய சதி புதைந்திருந்தது என்ற எண்ணமே…

விஜயா நிமிர்ந்து நின்றார். அவனை நேராகப் பார்த்தார்.

“உங்க உண்மையான பெயர் எனக்கு சொல்ல முடியாதுன்னு தெரியும். ஷாந்துவுக்கு நியாயம் செய்ய ஒரு கருவியா என்னை உபயோகப்படுத்தி இருக்கீங்க. அதனாலதான் உண்மையை என்கிட்ட சொல்லிருக்கிங்கன்னு நினைக்கிறேன். உங்க டீமுக்கு என் சல்யூட்” என்று மெதுவாக சொன்னார்.

“நாட்டு பாதுகாப்புக்காக நடந்த இந்த ஆபரேஷனில் என்னோட பங்கு… இந்த மூணு கேசும் விபத்து, தற்கொலைன்னு ஒத்துக்கிடுறதுதான். அதையே நானும் செய்யுறேன்.”

அவன் முகத்தில் ஒரு மரியாதை. “நீங்க புரிஞ்சுக்கிட்டதுக்கு நன்றி மேடம். நாங்க சொல்லலை ன்‌னா என்ன மூணு நாளில் இதெல்லாம் கொலைன்னு கண்டு பிடிச்ச மாதிரி மூணு மாசத்தில் எங்களை நெருங்கிருவிங்க. அதனால ஹிண்ட் கொடுத்துருன்னு எங்க பாஸ் சொன்னாரு மேடம்”

அந்த நேரம் கடற்கரைப் பக்கம் இருந்து அல்லியும் தென்னாடனும் திரும்பி வந்தார்கள். அல்லி சற்றே மணலில் கால்கள் நனைந்து, கண்களில் சிறு குழந்தையின் சந்தோஷத்துடன் குதித்து கொண்டே வந்தாள்.

“மேடம்… யாரு அவர்?” என்று தென்னாடன் கேட்டான்.

“யாரு… “

“பேசிக்கிட்டு இருந்தீங்களே”

விஜயா ஒரு நொடிக்கு அவனைப் பார்த்தார். பிறகு, “அவனா… சுக்கு காப்பி வித்தவன். கூப்பிட்டு பேசிக்கிட்டு இருந்தேன்” என்று சாதாரணமா சொன்னார்.

“மேடம் இங்க வந்தும் உங்க விசாரணையை ஆரம்பிச்சுட்டீங்களா… கொஞ்சம் ப்ரீயா இருங்க… ” என்றாள் அல்லி.

தென்னாடன் நிமிர்ந்து பார்த்தான். அங்கே ஏற்கனவே அந்த வண்டி நகர்ந்து விட்டிருந்தது. அவன் நடை பயிற்சிக்கு வந்திருந்தவர்களிடம் வியாபாரம் செய்து கொண்டிருந்தான்.

அல்லி மெதுவாக, “மேடம்… நீங்க காப்பி குடிக்கலையே,” என்றாள்.

விஜயா கப்பை பார்த்தார். “காப்பி சூடு இல்லை,” என்று சொல்லி கப்பை அப்படியே வைத்தார்.

“ரூமுக்குப் போனதும் தூங்கி ரெஸ்ட் எடுங்க. நான் கோர்ட்டில் பார்மாலிட்டி முடிச்சுட்டு வந்ததும் ஊருக்கு கிளம்பிரலாம்”

மூவரும் காரில் ஏறினார்கள். தென்னாடன் காரை ஸ்டார்ட் செய்தான். டிக்கியில் இருந்த ஆதாரங்கள் குலுங்கின. அந்த ஆதாரங்கள் இனி சாட்சி ஆக மாறாது ஏதோ ஒரு பீரோவில் சீல் வைக்கப்பட்டு உறங்கிவிடும்.

கார் நகர்ந்தது. மெரினா பின்னால் போனது. வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. மக்கள் உலகம் வழக்கம்போல் நகர்ந்தது.

“இந்த கேசில் நமக்கு தோல்வியா வெற்றியா?” அல்லி கேட்க,

“நம்ம கண்டு பிடிக்க வேண்டிய ரெண்டு கேசும் கொலைன்னு கண்டுபிச்சு அதற்கான காரணத்தையும் கண்டு பிடிச்சுட்டோம். அது வரைக்கும் வெற்றி”

“கொலையாளியை கண்டு பிடிக்கலையே மேடம்”

“அது நம்ம ஏரியாவில் இல்லையே. மத்ததெல்லாம் ராஜாராம் வேலை”

“அந்தாள்தான் கேசையே மூடிட்டாரே”

“நாமளும் அதையே ஒத்துக்கிடுவோம். செத்து போனவனுங்க எல்லாம் மொள்ளமாரி கொலைக்காரனுங்க. நம்மலால் கைது பண்ணி தண்டனை வாங்கித்தர முடியுமா? அவனுங்களுக்குள்ளயே அடிச்சுட்டு செத்தா நல்லதுதானே. எல்லா கேசுக்கும் முடிவை நாமதான் தலைல சுமக்கணும்னு அவசியமில்லை அல்லி. சிலது தன்னாலேயே நல்லபடியா முடிஞ்சுரும்”

சொல்லிவிட்டு போக்குவரத்து ஆரம்பித்திருந்த சென்னை சாலையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்.

அவர் மனதில் மட்டும் ஒரு வாசகம் ஓடியது.

உண்மை சில நேரம் வெளிச்சத்துக்கு வராது. ஆனா போற போக்கில் யாரையாவது வாழ வச்சுக்கிட்டு இருக்கும்.

(நிறைந்தது)

You cannot copy content of this page