தாமரை குளம் – 17

அத்தியாயம் – 17 

விடியற்காலை ஐந்து மணிக்கு வாட்ஸ்அப்பில் ‘தாமரைக்குளம் கேஸ்’ என்று பெயரிட்ட குழு பிங் பிங் என்றது. திரைமீது சுந்தரத்தின் மெசேஜ்:


“மேடம், வடபழனி போலீசாரோட ஒத்துழைப்புல ரித்திக் கிடைச்சாச்சு. ஸ்டேஷன்ல இருக்கார். மேலிடத்திலிருந்தே உங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கணும்னு உத்தரவு.”

விஜயா கண்களைத் தேய்த்துவிட்டுக் கொண்டு எழுந்தார். படுக்கவே மூன்றரை மணியாகி இருந்தது. இருந்தாலும் இந்த சமயத்தில் சோறு தூக்கம் பார்க்க முடியுமா “கிரேஸ், அல்லி அலர்ட். சுந்தரத்துக்கிட்டருந்து மெஸேஜ். வீடியோ கால்ல கனெக்ட்  பண்ணு,” என்றார். 

சில விநாடிகளில் திரை இரண்டாகப் பிளந்து, ஒருபக்கத்தில் வடபழனி ஸ்டேஷன். அங்க எஸ்.ஐ. சோலைமலை பைல் புரட்டிக் கொண்டிருந்தார். அடுத்தப் பக்கத்தில் சுந்தரம்.

“மேடம், குட் மார்னிங். இந்த கேஸ்ல  உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து உடனடியா விவரங்கள் கொடுக்கும்படி மேலிடத்தில் சொல்லிருக்காங்க. ப்ரெஷர் ஜாஸ்தி போலிருக்கு. மீடியால வேற… ஆளுக்கு ஒரு கதை சொல்றாங்களே.  ”

“நன்றி  சோலைமலை சார். ஆமாம் சார். அதுதான் உங்களை எல்லாம் அர்த்த ராத்திரில தொல்லை பண்ண வேண்டியிருக்கு. ஆமா அந்த ரித்திக் எங்கே?”

கேமராவை  சற்று தள்ளி திருப்ப, அங்கே ஒரு முப்பத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு நபர். பெஞ்சில் உட்கார்ந்திருந்தான். மெல்லிய உடம்பு. கண்ணில் அழுது அழுது இனிமேல் கண்ணீரே இல்லை என்பது போல வறண்டு வீங்கியிருந்தது. அத்துடன் சேர்த்து தூக்கமோடு பயம். அவன் எழுந்து கைகளை எடுத்து கும்பிட்டான். “மேடம்…” என்று பேச முடியாமல் திக்கிய குரல்.

விஜயா மெதுவாக. “சும்மா. உட்காருங்க. உங்களுக்குத் தெரிஞ்ச உண்மைகளை மட்டும் சொல்லுங்க  போதும்.”

ரித்திக் தலை மீசை ஓரங்களில் எண்ணெய் தடவி, சாதாரணமாக தினமும் டூ வீலர்களில் வேலைக்கு போகும் சராசரி தென்னகத்து ஆண்மகனின் சாயல். ராஜலக்ஷ்மியின் பாஷ் உடைக்கும் இவனுக்கும் பொருந்தவேயில்லை.  சோலைமலை அவன் முன்னே இரண்டு கப் டீ வைத்தார். விஜயா அவன் இரண்டு வாய் குடித்துவிட்டு தெம்புடன் பேசும் வரை காத்திருந்தார். அத்துடன் அவனது உடல் மொழிகளையும் கண்காணித்தார். 

“ரித்திக்,” விஜயா விஷயத்துக்கு நேராகச் சென்றார், “உங்க மனைவி ராஜலக்ஷ்மி, ராஜி தூத்துக்குடி போயிருந்தது தெரியுமா?”

அவன் கண்கள் வலியைக் காட்டின “தூத்துக்குடியா? தெரியாது மேடம்? அவ கம்பெனிலே பெங்களூர் ஆபீஸ்ல க்ளையண்ட் மீட்டிங்னு சொன்னா, சதாப்தில புக் பண்ணிட்டேன்னு சொன்ன நினைவு. விமானம் னு சொல்லவே இல்லை. தூத்துக்குடி போனதா கண்டிப்பா சொல்லல மேடம். அதனாலதான் தாமரைக்குளம் செய்தி கூட எனக்கோ எங்க சொந்தக்காரங்களுக்கோ நெருடலா இல்லை?”

“விமானத்தில்தான் வந்திருக்காங்க. உங்க சொந்தக்காரங்க யாராவது இந்த பக்கம் திருச்சி மதுரைக்கு தெற்கில் இருக்காங்களா? ”

“இல்ல மேடம்” அவன் விரல்கள் நடுங்கின. “வெளில எங்க போனாலும் அவதான் எல்லாம் புக் பண்ணுவா. அவ சம்பளத்தில் தான்…  அவளுக்குத்தான் அதிக சம்பளம் ”

அல்லி நடப்பது அனைத்தையும் உள்வாங்கி  நோட்டுப் புத்தகத்தில் குறிப்புகள் எழுதிக் கொண்டாள்.

 “ரித்திக், நீங்க மெக்கானிக் னு சொன்னாங்க. எங்க வேலை?”

“ஆவடில  இருக்குற பாக்ட்ரி. லேத், பிரஸ், மெஷின் ரிப்பேர். காலை ஏழு மணிக்கு போய்டுவேன். ராத்திரி எட்டு மணிக்கு திரும்பி வந்ததும்  களைப்புல விழுந்துடுவேன். சம்பளம் எப்படியாவது 35 ஆயிரம் கொண்டு வந்துருவேன். அதுக்கு  ரெண்டு சின்ன ஓவர்டைம்ஸ் பண்ணனும்”

விஜயா மெதுவாக, “35 ஆயிரம்தான் சம்பளமா? உங்க வீட்டில் எடுத்த வீடியோவை  நாங்க பார்த்தோம். மாடுலர் கிச்சன், 50 இன்ச் பெரிய டிவி, புது மாடல் 2 டன்  ஏசி, டபுள் டோர் ஃபிரிஜ், ஆப்பிள் லேப்டாப், ஐபோன் உங்க சம்பளத்தில்  இவை எல்லாம் எப்படி? ஈஎம்ஐ விவரம்?”

ரித்திக் சற்றுத் தலையைத் தாழ்த்தினான். “மேடம், ராஜியும் நானும் ஸ்கூல்ல க்ளாஸ்மேட்ஸ். அவளுது கொஞ்சம் ஏழ்மையான  குடும்பம்தான். டிஸ்டன்ஸ் எஜுகேஷன்ல டிகிரி படிச்சா. அப்பத்தான் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அந்த சமயத்தில் எங்க வீடு அவங்களை விட உயர்ந்திருந்தது. எதிர்ப்பை மீறி கல்யாணம் செய்துகிட்டோம். 

நான் ஏழையா பிறந்தது என்னோட தப்பில்ல. ஆனா ஏழையா வாழறது பெரிய தப்பு. இப்படித்தான் அடிக்கடி சொல்வா. வெறியோட வெற்றியைத் தேடி அலைஞ்சா. அவளோட உழைப்பின் பலனா ஐடி வேலை. இதுக்காக நிறைய கோர்ஸ் எல்லாம் பண்ணா. ராப்பகலா கஷ்டப்பட்டா. இப்ப  இரண்டாண்டாக நல்ல சம்பளம். ‘ஈஎம்ஐ நானே பே பண்ணுறேன்,’ னு பிடிவாதம் பிடிச்சு எங்க வீட்டை வாங்கினா. எல்லாம் ஆன்லைன்ல ஹேண்டில் பண்ணுவா. என்கிட்ட பாஸ்வேர்டு, யூபிஐ இல்லை.”

அவர் ரித்திக்கிடம் திரும்பி: “ராஜி கடைசில பேசினப்போ என்ன சொன்னா?”

“காலையில ‘மீட்டிங், லேட் ஆகும்’ன்னு சொன்னா. அப்புறம் . ‘ஓட்டல் போய் ரெஸ்ட் எடுக்குறேன்’ன்னு. எங்க ஓட்டல் எதுவும் சொல்லல.”

ரித்திக் தலை பிடித்தபடி, “என்ன நடந்துச்சுன்னே எனக்கு  புரியலை.”

சம்பளம் குறைவாக வாங்கும் தாழ்வு மனப்பான்மையால் நியாயமான கேள்விகள் கூட அவன் கேட்பதில்லை என்று விஜயாவுக்குப் பட்டது. மேலும் சில கேள்விகளுக்கு பிறகு அவனை அனுப்பி வைத்தார். 

பின்னர் சோலைமலையிடம்  “எந்த ஊருக்கு போயிருக்கான்னு கூட யாருக்கும் முறையா தெரிவிக்கல.  இவனை பார்த்தால் ஒரு உண்மை தெரியுது. கணவருக்குத் தெரியாம எதோ நிழல் வேலைகள் இருக்கும் போல இருக்கு.”

“அதேதான் எனக்கும் சந்தேகம். போன் நம்பரைத் தந்து அவ லாஸ்ட் லொகேஷன் ட்ரேஸ் பண்ணா தூத்துக்குடி காட்டுது. அங்க இருந்துகிட்டே பெங்களூரில் இருக்கேன்னு மெசேஜ் அனுப்பிருக்கா”

“சோலைமலை சார், ராஜலக்ஷ்மி வீட்ல இருந்த அவங்க லேப்டாப், செல்போன்,  ஹார்ட்டிஸ்க் யெல்லாம் பறிமுதல் பண்ணுங்க. நானே செக் பண்ணறேன்.”

“யெஸ் மேடம்,” 

நன்றி சொல்லிவிட்டு காலை கட் செய்தார். அல்லி தம்ப்ஸ் அப் காட்டி குறிப்புக்களை எடுத்துக் கொண்டேன் என்றாள்.

காலை ஏழு மணி ஆனது, காவல் நிலையத்தில் அனைவரும் பரபரப்பாக பணியில் இருக்க சுவரில் மாட்டியிருந்த டிவியில் திடீரென்று FLASH NEWS பட்டை பளிச் பளிச் என்றது. தாமரைக் குளம் கேஸ் முடிவு. 

“மேடம் தாமரைக் குளம் கேசில் ஃபிளாஷ் நியூஸ் போடுறான். நமக்கே தெரியாம அப்டி என்ன செய்தி. சூ… எல்லாரும் அமைதியா இருங்க. அந்த டிவில சவுண்டு வை” என்றார் கிரேஸ். 

விஜயாவும் அல்லியும் ஓட்டமும் நடையுமாக தொலைக்காட்சி முன்பு வந்து நின்றுக் கொண்டனர். 


ராஜாராம் செய்தியாளர் கூட்டத்தில் மைக்ரோஃபோன் முன் நின்று பேசுகிறார்.

“தாமரைக்குளத்தில் நடந்த கார் விபத்தில் இறந்தவர் முத்துராமன்,” என்றார் அவர் உறுதியான குரலில்.

 “குடிபோதையில் தள்ளாடி குளத்தில் விழுந்து இறந்ததாக ஆரம்ப விசாரணை சொல்கிறது. அவரோட குடும்பத்தினர் இதனை உறுதி செய்திருக்கின்றனர். அதே நேரம், ராஜலக்ஷ்மி என்ற பெண் குழந்தை இல்லாத மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டார். இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு இல்லை. ஒன்று விபத்து, மற்றொன்று தற்கொலை. பொதுமக்கள் அமைதியாய் இருக்க வேண்டுகிறோம்…”

விஜயா அதே இடத்தில் அதிர்ச்சியாய் நின்றார். சில விநாடிகள் அவர் மூச்சைப் பிடித்துக்கொண்டது போல இருந்தது. கையில் இருந்த பேனா தரையில் விழுந்த சத்தம் மட்டும் அறையில் எதிரொலித்தது.

அல்லி டிவியை நோக்கி அதிர்ச்சியில்  “விபத்தா? செத்தது முத்துராமனா? சென்னையில் வாழும் ராஜி குழந்தை இல்லாததால் விமானம் ஏறி தூத்துக்குடி வந்து தாமரைக் குளத்தில் தற்கொலையா? எப்படி மேடம் இப்படி புதுசா கதை ஜோடிக்கிறாங்க…”

திரைமேல் ராஜாராமின் முகம் உறுதியாகத் தெரிந்தது; கீழே “அவ்ளோதான் பஞ்சாயத்து கலைஞ்சாச்சு வீட்டுக்கு கிளம்புங்க CASE CLOSED” என்ற வார்த்தை ஓடியது போலவே மூன்று பெண்களின் கண்களுக்கும் தெரிந்தது. 

You cannot copy content of this page