அத்தியாயம் – 15
“ஏய் என்ன கருமம்டா இது? போதையே ஏறல, கலப்பட சரக்கத் தந்து ஏமாத்துறிங்களா? கூப்பிடு உங்க மேனேஜரை” என்று சலம்பிக் கொண்டிருந்தவனை அடக்க முடியாமல் மேனேஜர் கடுப்பானார்.
அவன் அங்கிருந்து கிளம்பி போனால் தேவலை என்றிருந்தது. பத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை இவனால் அந்த இரவு இழந்திருந்தார். காசு கூட வேண்டாம்ப்பா இவன் கிளம்பிப் போனால் போதும் என்ற மன நிலைக்கு வந்திருந்தார்.
லால் அந்த மாலையிலிருந்து இரவு வரை முட்ட முட்டக் குடித்திருந்தான். ஹோட்டல் வாசலில் சண்டையைத் தொடர்ந்தவாறே, கார் கீயை கைப்பிடியில் சுழற்றிக் கொண்டு பார்க்கிங் லாட்டுக்கு வந்தான். கார் ஏறியவுடனே ரிவர்ஸில் போட்டான். ‘டமார்’ பின்னால் இருந்த காரின் பம்பர் உடைந்ததால் ஏற்பட்ட ஒலி.
“ம.., இந்த மாதிரி நெரிசலாவா நிறுத்துவாங்க!” என்று நான் எழுதினால் கூட சென்சார் போட்டுவிடும் அளவுக்கு கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டியவாறே முன்புறம் வேகமாய் முடிக்கி விட, வரிசையில் இருந்த இரு சக்கர வண்டி ஹேண்டில் ‘டங்’ என்று மோதி பக்கமாக விழுந்தது.
யாரோ அடிபட்டுவிட்டது போல “அய்யோ!” என்று சத்தமிட்டார். லால் இதெல்லாம் எனக்கு பழக்கம்டா என்பது போல பொருட்படுத்தாமல், சத்தமாக மியூசிக் போட்டுக் கொண்டு கார் ஓட்டத் தொடங்கினான்.
எங்க அப்பன் வீட்டு ரோடுடா என் இஷ்டத்துக்குத் தான் வண்டியை ஓட்டுவேன் என்று திமிராய் ரோட்டில் இருக்கும் மற்ற பொதுசனத்துக்கு அறிவிப்பது போல இருந்தது அவனது செய்கைகள்.
சில நிமிடங்களில் அவனுக்கு உடம்பு சரியில்லை என்று தோன்றியது. முதலில் தலைச் சுற்றல். கண்கள் மங்குவது. நாக்கு வறண்டு வாயில் ஒட்டுவது. முகத்தில் வெப்பம் ஏறும் உணர்வு. கையில் சிறு நடுக்கம்.
“இது சரக்கினாலதான், டூப்ளிகேட் சரக்கு. நானே எத்தனை பாட்டில் இந்த மாதிரி போலியை வித்திருப்பேன். எனக்குத் தெரியாதா? அதனாலதான் கண்ட கடைல குடிக்கிறது இல்ல. ஊருக்கு போனதும் நம்மளே காய்ச்சிற வேண்டியதுதான்” யாரிடமோ சொல்வது போல தன்னிடம் சொல்லிக்கொண்டான்.
ஆனால் வலது காலின் குதிகால் அருகே திடீரென ஊசி குத்தும் மாதிரி கூர்மையான வலி. “ஏய்!” என்று அவன் சத்தமிட்டான். வலியைப் பொருட்படுத்தாமல், ஸ்டீரிங்கை பிடித்து நேர் பார்த்தான். ஆனால் பார்வை இரண்டாக உடைந்தது போலத் தெரிந்தது. என்னடா ரெண்டு ஷிடியரிங்க் இருக்கு தலையிலே சுழன்று கொண்டே இருந்தது.
காலடியில் ஏதோ ஒன்று ஒட்டிக் கொண்டிருக்கிறதுபோலத் தோன்றியது. ஆக்சிலரேட்டர் மிதித்திருந்த வலது காலுக்கே ஏதோ குளிர்ந்தது சுற்றிக் கொண்டு நெருக்குவது போல. சாலைவிளக்கின் ஒளி உள்ளே விழுந்த நேரத்தில் கீழே பார்த்தான். கருப்பு நிறம். நீளமாக சுருண்ட உடல். பளபளக்கும் தலை. அது அவன் காலை சுற்றியிருந்தது.
“பா…ம்…பு”
என்றவுடன் இரண்டாவது குத்து. இந்த முறை கணுக்கால் மேல் பக்கம். அவன் உடம்பில் முழுக்க சூடாகப் பரவும் போதை; அதற்குள் இந்த வலியும். நாக்கு மெதுவா கனத்தது. வார்த்தை சரியாக வரவில்லை. மூச்சுவிட சிரமமாக இருப்பதாக உணர்ந்தான்.
பயத்தாலும், போதை காரணமாக தெளிவாக யோசிக்க முடியவில்லை.
“எப்படியாவது தப்பிக்கணும்,” மனசு உரக்க சொல்லியது. என்று கதவைத் திறக்க முயன்றான். கதவு சற்று திறந்தது. அப்போது காலைச் சுற்றியிருந்த அந்த நாகம் கூட தப்பிக்க போவதுபோல கதவின் இடையில் நுழைய முயன்றது.
“என்னையா கொத்தின, இந்த லாலை கடிச்சுட்டு அவ்வளவு சுலபமா தப்பிச்சுருவியா?”
லால் வலியிலும் கோபத்திலும் கதவை திடீரென்று உள்ளே இழுத்து சாத்தினான். உலோகக்கதவின் இடுக்கில் அது சிக்கி “கட்” என்று உடல் துண்டானது. அவன் முகம் பயத்தினாலோ இல்லை கோபத்தினாலோ ஒளியின்றி கருமையானது. உள்ளே இரத்தத்தின் வாசனை கலந்து மழை வாசனை போல ஏதோ பரவியது.
அதைத் தொடர்ந்து வேறொரு பிரச்சனை. வலது கால் துடிக்கும்போது ஆக்சிலரேட்டர் மீது மேலும் அழுத்தம் பட்டது. கார் “வ்ரூம்…ம்ம்ம்” என்று நூறைத் தாண்டி பேய் வேகமெடுத்தது. முன்புற பாதை நிமிடத்தில் ஓடிச்செல்லும் வெள்ளை கோடுகளாக மாறின. ஸ்டீரிங் கையை விட்டுத் தவறியது. ரோட்டின் ஓரம் திரும்ப வேண்டிய இடத்தில் கார் நேரே பாய்ந்தது. பக்கத்தில் இருந்த தாமரைக் குளத்தின் திண்டுக்கோணத்தில் “தட் தட்” என்று தாவி, களைகளிலும் தண்டுகளிலும் சறுக்கிக் கொண்டு படு வேகமாக கீழே இறங்கியது.
கதவு லேசாக திறந்திருந்ததால், கார் குளத்தில் இறங்கியதும் உள்ளே நீர் பாய்ந்தது. குளிர்ந்த நீர் முகத்தில் மோதியது. லால் தன்னை காத்துக்கொள்ள கையை நீட்டி கதவை முழுக்கத் தள்ளினான். கதவு திறந்தவுடன், கதவிடுக்கில் சிக்கியிருந்த பாம்பின் துண்டான உடல் பாகமும் சத்தமில்லாமல் நீருக்குள் விழுந்தது. கார் சக்கரங்களுக்கு சுற்றி குளத்தில் இருந்த தாமரைத் தண்டு, வல்லி, பாசி எல்லாம் சிக்கிக் கொண்டன. எஞ்சின் இரண்டு மூன்று முறை “மம்… மம்…” என்று குமுறி இறுதியில் அமைதியாக நின்றது.
லால் நீரில் இருந்து தலையை மேலே கொண்டு வர முயன்றான். ஆனால் உடம்பு ஒத்துழைக்கவில்லை. கைகள் பலம் குறைய. விரல்கள் தளர்ந்து போக, கண் இமைகள் கனமாக மூடிக்கொண்டது. நாக்கு சரியாக இயங்காததால் சத்தம் கூட வரவில்லை. மூச்சு குறைய ஆரம்பித்தது.
மார்புக்குள் காற்று வராததுபோல வீக்கம். “இது குடித்ததால்னு மட்டும் இல்ல…” என்று அவனுக்கு தெளிவாகப் புரிந்தது. கெண்டை காலுக்குக் கீழே ஒட்டுக் காயம் போல இரண்டு இரண்டாய் பாம்புப் பற்களின் சிறு புள்ளிகள். அவன் அதைக் கவனித்தானா என்பதே தெரியவில்லை. ஆனால் அங்கிருந்த வலி முழுக்க உடம்பை வதைத்துக் கொண்டே இருந்தது.
நீர் முழுக்க அமைதி. குளத்தின் மேல் மழைத்துளிகள் விழுந்த சப்தம். தாமரையின் இலைகள் ஆடும் ஓசை. தொலைவில் ஒரு நாய் குரைத்ததோ என்று தோன்றும் சத்தம். இடியோசை தாண்டி வெளிச்சம் ஒரு முறை மட்டும் மின்னியது. அந்த வெளிச்சத்தில் லாலின் முகம் ஒரு கணம் தெளிவாகக் காட்சியளித்தது; உடனே குளத்தினுள் மறைந்தது. அவன் கைகள் நீரைத் தள்ள முயன்றும், வலிமை குறைந்து விட்டது. கண்ணிமைகள் விழுந்தன. உடம்பு தாமரைத் தண்டுகளில் சிக்கி மெதுவாக சரிவில் முடங்கிக் கொண்டிருந்தது.
காரில் இருந்த மியூசிக் சத்தம் நீரில் மூழ்கிக்கொண்டு “ஸ்ஸ்…” என்று நின்றது. லாலின் மூச்சு ஒன்றிரண்டு தடவை சீறி வந்தது. பின் மெதுவாக மந்தமானது. குளத்தில் பாம்பின் அந்தத் துண்டான கருப்புக் கொடி போல இருந்த உடலின் மீதி அலைகளோடு நகர்ந்து, தாமரைத் தண்டுகளுக்குள் மறைந்தது. நீர் மேல் மெதுவாக இருண்ட வளையங்கள் அவ்வளவுதான் ஜோலி முடிஞ்சது என்று அறிவித்தன.
அந்தக் கணத்தில் ரோட்டில் யாரும் இல்லை. மழை அதிகமாக ஆரம்பித்தது. மின் கம்பங்களில் நீர் சொட்டுவது. சிற்றம்மன் கோயில் முன் இருந்த விளக்கு காற்றில் குலுங்குகிறது. குளத்தின் ஓரம் பச்சை நிறமாக மின்னுகிறது. யாராவது இருந்திருந்தால், “கீழே கார் விழுந்துருக்கு!” என்று ஓடிப்போயிருப்பார்கள். ஆனால் அந்த இரவு, மழையைத் தவிர மயான அமைதி. ஒருவர் கூட பார்க்கவில்லை.
காலை நேரமாக மட்டும் இருந்திருந்தால், மக்கள் கூட்டம் வரும். போலீஸ் வரும். மீட்பு கயிறுகள், கேமரா, ரிப்போர்ட்டர்அனைவரும். பாதையில் இருந்த தடங்கள் சொல்லிவிடும் ஒரு விபத்து நடந்தது என்று. இப்போது அந்த சாத்தியமும் இல்லை.
ஆனால் மூல காரணத்தை முழுதாக கண்டறிந்து உண்மையான காரணத்தை கண்டறிய முயலும் ஒருவருக்குத்தான் அந்தக் கதை எங்கு தொடங்கி எப்படி முடிந்தது என்ற புதிரை அவிழக்க முடியும். பார்க்கிங் லாட்டில் மோதி உள்ள கார், வளைந்து விழுந்த இருசக்கர வண்டி, லால் திட்டிய சத்தம். கார் உள்ளே கதவின் இடுக்கில் சிக்கியிருந்த கருப்பு உடல் மீதியின் அடையாளம். லாலின் காலில் இருக்கும் இரண்டு சிறிய பற்தடங்கள். எல்லாமே கோர்வையாக, லாலின் மரணத்தைப் பற்றி சொல்லத் தொடங்கும்.
அந்த இரவு முடிந்தது. குளம் மீதே பச்சை தாவரங்கள் நிம்மதியாய் பரவி நின்றன. அங்கே கார் ஒரு பக்கம் சாய்ந்து இன்னும் கொஞ்சம் கொஞ்சமாக ஆழத்திற்கு செல்ல ஆரம்பித்தது.
“இதுதான் நடந்தது,” என்று விஜயா மெதுவாக முடித்தார்.
அல்லி, கிரேஸ், தென்னாடன் மூவரும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். மேசையில் கோப்புகள். சில படங்கள். லேசாக லால் காலில் இருக்கும் இரண்டு சிறிய புள்ளிகள் தெரியும் ஒரு புகைப்படம். கதவின் உலோக இடுக்கில் ஒட்டிக் கிடந்த கருப்புநிற சதைத் துண்டின் படம். குளத்தில் எடுக்கப்பட்ட வீடியோவின் ஸ்கிரீன்-ஷாட். எல்லாம் வரிசைபடுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
விஜயா சுருக்கமாக மறுபடியும் சொன்னார் “பார்க்கிங்-ல தகராறு. ரிவர்ஸ்ல பின்னாடி கார் மோதல். முன்புறம் போனபோது பைக் மோதல். அது சம்பந்தமான வீடியோ கிடைச்சாச்சு. அதுக்கு அப்புறம்தான் லாலுக்கு கால் அருகே ஏதோ ஒட்டிக் கொள்ளும் உணர்வு. இரண்டு கொத்து. உடம்பு விரைவாக பலம் குறைஞ்சது கூடவே மூச்சு குறைப்பு. பார்வை மங்கல். அந்த நிலையில் கதவை அடைத்து அந்த பாம்பை நசுக்க முயற்சி. அதன் விளைவால் ஆக்சிலரேட்டர் மீது கூடுதல் அழுத்தம். கார் கட்டுப்பாட்டை இழந்து தாமரைக் குளத்துல பாய்ஞ்சிருச்சு. அங்கே இருந்து லாலுக்கு வெளியே வர சக்தி இல்லை. இவையெல்லாம் ஒன்றாக சேர்ந்துட்டு இந்த முடிவு ஏற்பட்டிருக்கு.”
தென்னாடன் தாள்களைப் புரட்டிக் கொண்டிருந்தான் கிரேஸ் முந்திக்கொண்டு. “அப்போ இது முழுக்க பாம்புக்கடியிலிருந்து தப்பிக்க முயற்சி அதன் காரணமாக ‘அவசரத்தில் நடந்த விபத்து’ன்னு சொல்லலாமா, மேடம்?” கேட்டாள்.
விஜயா மறுப்பாக தலையசைத்தார். “அப்படி சொல்லலாம்னுதான் எல்லாரும் நினைக்கிறாங்க”
கிரேஸ் மெதுவாக யோசித்துவிட்டு சொன்னாள் “நம்ம ஊருல பாதி இடம் முள்ளுக்காடு, தென்னந்தோப்பு. பாம்புக்கடி சர்வ சாதாரணம் மதியமோ சாய்ந்தரமோ ஏதாவது காட்டுப் பகுதியில் காரை நிறுத்தி கதவை திறந்தப்ப பக்கத்துல பாம்பு ஏதாவது நுழைஞ்சிருக்க வாய்ப்பு இருக்கே மேடம்”
விஜயா நேராக அவர்களைக் கண்டு, “இருக்குத்தான். ஆனால் இந்த கேசில் அந்த அனுமானம் செல்லுபடியாகாது. நான் சொல்றதைத் தெளிவா கேளுங்க. என் கணக்கில், இது சாதாரண விபத்து இல்ல. கொலை. திட்டமிட்டு நடத்திய படுகொலை,” என்றார்.
அதுவரை அமைதியாக இருந்த அல்லி குழம்பியது முகத்திலேயே தெரிந்தது. “மேடம், அப்ப கார் விபத்து லாலின் மரணத்திற்கு தாமரைக் குளத்தில் கார் கட்டுப்பாடில்லாம விழுந்தது காரணம் இல்லை. பாம்பு கடிதான் முக்கிய காரணம். ஆனாலும் அதுவும் விபத்து தானே, எப்படி ‘கொலை’ன்னு சொல்றீங்க…?” என்றவள் கண்கள் மின்ன, “ஏதோ பலமான ஆதாரம் கிடைச்சுருக்கு, அப்படித்தானே மேடம்!” என்று முடித்தாள்.


