அத்தியாயம் – 03
“இஞ்சருங்கோ.. எங்க நிக்கிறியள்.. கெதியா வாங்கோ.. கனகண்ணை வந்திருக்கிறார்..”
வெளிவாயில் கதவு திறந்த சத்தத்தைக் கேட்டதும் யார் என்று எட்டிப் பார்த்த கமலா கல்யாணத் தரகரைக் கண்டதும் பின் வளவில் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த கணவனை அழைத்தார். கணவனுக்கு குரல் வைத்து விட்டு வாயிலை நோக்கி விரைந்தவர், சொத்தை விழுந்து பிடுங்கிய பின்னர் மீதமிருந்த முப்பது பற்களையும் காட்டி வாயெல்லாம் பல்லாகச் சிரித்தவாறே தரகரை அன்பொழுக வரவேற்றார்.
“வாங்கோண்ணை.. வாங்கோ.. உள்ளுக்குள்ள வந்து இருங்கோ.. உள்ள ஃபான் இருக்கு. இதில சரியான வெக்கை.. காத்தையும் காணேல்ல இப்ப..”
“பரவாயில்ல பிள்ளை. நான் இங்கேயே இருக்கிறன்.. இதில முந்தி வேப்பமரம் நிண்டதெல்லோ.. வெட்டிப் போட்டியள் போல..”
“ஓமண்ணை.. மதில் கட்டேக்க அப்பிடியே மரத்தையும் வெட்டி முழுக்க நிலம் போட்டிட்டம்..”
“ஹூம்.. முந்தி இது நீட்டுக்கு வேலி நிறைய மரங்கள்.. ஊரே குளுகுளு என்றிருந்தது. இப்ப கலர் கலரா மதிலுகள்.. மரங்களில்லாம எங்கயிருந்து காத்து வரப் போகுது…”
பெருமூச்சு விட்ட கனகண்ணைக்கு வயசு எழுபதுக்கும் மேல். அந்த ஊரிலேயே வெற்றியடையும் திருமணங்களை செய்து வைக்கும் கைராசித் தரகர் என்று பேர் வாங்கிய ஆள். சுந்தரமும் கட்டியிருந்த சாரத்தில் கையைத் துடைத்துக் கொண்டு உடனேயே வந்து விட்டார்.
“வணக்கம் அண்ணை.. எப்பிடி இருக்கிறியள்.. நானே பின்னேரம் போல வந்து சந்திப்பம் என்று தான் இருந்தனான்..”
“முதலில வெயிலுக்கால வந்தவருக்கு குடிக்க ஏதாவது கொண்டு வாறனப்பா.. என்ன குடிக்கிறியள்? தேசிக்காய் தண்ணி கரைக்கவோ இல்லை எண்டால் சோடா தரட்டோ..”
“அதெல்லாம் ஒண்டும் வேணாம் பிள்ளை. வெறும் தேத்தண்ணி ஒண்டு போட்டுத்தா.. அது போதும்.. எந்த வெயில் வெக்கை எண்டாலும் எனக்கு தேத்தண்ணி மட்டும் தான் தொண்டைக்க இறங்கும்..”
விரைவாய் சமையலறைக்குள் நுழைந்தார் கமலா. கை பாட்டுக்குத் தேநீர் போடுவதில் முனைந்தாலும் காது இரண்டும் வராந்தாவில் பேசிக் கொண்டிருந்தவர்களின் பேச்சிலேயே இருந்தது.
‘வீட்டுக்கே வந்திருக்கிறார் என்றால் நல்ல சம்பந்தம் வந்திருக்குப் போல.’
மனதிலே ஓடிய எண்ணங்களோடு தேநீரைக் கொடுத்து விட்டு அவரும் அவர்களின் பேச்சில் பங்கெடுத்தார்.
“இங்க பாரு சுந்தரம். பிள்ளையிட குறிப்புக்குப் பொருத்தமா இரண்டு சாதகம் வந்திருக்கு.. ஒண்டு அந்த ஃபாங்கில வேலை செய்யிற பொடியன்ட.. உங்களுக்காகவே நான் இன்னும் வேற பிள்ளையளிடயப் பொருத்தம் பார்க்காமல் வைச்சிருக்கிறன்..
இன்னொரு குறிப்பு பிரான்ஸ் மாப்பிள்ளை ஒண்டிட..”
அவர் முடிக்க முன்னமே ஆர்வமாய் குறுக்கிட்டார் கமலா.
“என்ன பிரான்ஸோ அண்ணை.. இங்க ஊரில எந்த இடம்? பொருத்தம் எல்லாம் சரியோ..? எத்தினை வயசு? பிரான்ஸ்ல ரெஸ்டோரண்ட்டோ? கடையோ?”
“ஹா.. ஹா.. சொல்லுறன்.. சொல்லுறன்.. ஓமோம்.. பொருந்தும் என்றபடியாத் தானே உடன வீட்டுக்கே வந்தனான். யாழ்ப்பாணப் பொடியன் தான்.. வெளிநாடு போய் பத்து வருசத்துக்கும் மேல.. நாட்டுப் பிரச்சினையோட போய் விசா எடுத்த ஆள்.. ரெஸ்டோரன்ட் ஒண்டு வைச்சிருக்கிறானாம்.. வயசு முப்பது தாண்டிட்டு.. உங்கட பெட்டைக்கும் அவனுக்கும் பத்து வயசுக்கு மேல வித்தியாசம் வரும். அதுதான்…”
“பத்து வயசெல்லாம் ஒரு வித்தியாசமே .. எனக்கும் இவருக்கும் தான் எட்டு வயசு வித்தியாசம்.. நீங்கள் இந்த பிரான்ஸ் பொடியனிட விவரத்தைத் தாங்கோண்ணை.. பேசி முடிப்பம்..”
“அப்ப அந்த ஃபாங் பொடியன்ட சம்பந்தம் என்ன போல..”
“அது வேண்டாம் அண்ணை..”
“இல்லை கமலா அது ஊரோட.. நல்ல பொடியன்.”
மனைவியின் குணம் அறிந்த சுந்தரம் இடையில் புகுந்தார்.
“நாங்கள் வடிவா ஒருக்கா கதைச்சு முடிவெடுத்திட்டு நாளைக்குச் சொல்லுறம் அண்ணை.. அது வரைக்கும் பொறுங்கோ.. அந்த ஃபாங் பொடியனிட குறிப்பையும் வேற ஆக்களுக்கு குடுத்திடாதையுங்கோ..”
வெளியாளுக்கு முன்னால் கணவனைத் திட்ட முடியாததால் ஒரு முறைப்பைப் பரிசாக வழங்கி விட்டு கனகு குடித்து முடித்து வைத்த தேநீர்க் கோப்பையோடு உள்ளே சென்றார். தரகரும் எந்த சம்மந்தம் பொருந்தினாலும் தனக்கு வருமானம் தானே என்ற மகிழ்ச்சியோடு வீட்டுக்குப் புறப்பட்டார்.
தரகர் வீட்டுக் கேற்றைத் தாண்டியதுமே கமலா, கணவரோடு ஒரு மகாபாரத யுத்தத்தை ஆரம்பித்து விட்டார்.
“ஊரில வேண்டாம் என்று நான் அவ்வளவு சொன்ன பிறகும் எதுக்கு அந்த ஃபாங் பொடியன்ட குறிப்பை வைக்கச் சொன்னியள்..”
“புத்தியோட கதையும் கமலா.. நான் அவனை ஃபாங்கில வேற போய் பார்த்தனான். வடிவான பொடியன் வேற.. ஆக்களிட்ட விசாரித்தும் பாத்தன். நல்ல குணமான பொடியன் என்று தான் எல்லாரும் சொல்லுவினம்..”
“பிரான்ஸ் பொடியனையும் விசாரிப்பம்..”
“எங்க போய் விசாரிக்கிறது?”
“இங்க ஊரில அவன்ட சொந்தக்காரரிட்ட முந்திப் பொடியன் எப்பிடி என்று விசாரிப்பம்..
“என்ர அக்காட மகனும் பிரான்ஸ்தானே.. அவனிட்ட சொல்லி அங்க விசாரிக்கலாம் தானே..”
“அதுசரி.. அவனே அங்க குடிவெறில திரியிறான் என்று கதை.. அவன் விசாரிச்சுச் சொன்ன போல தான்.. பத்து வருசத்துக்கு முந்தி ஊரில எப்பிடி இருந்து என்ன பிரியோசனம்.. இப்ப அங்க நல்லபடியாக இருக்க வேணுமே..”
“ஏனப்பா எடுத்த உடனேயே முட்டுக்கட்டை போடுறியள்? போட்டோவில பாக்க பொடியன் வடிவாத் தானே இருக்கிறான்..
“தொப்பி போட்டிருக்கிறான்.. தலை மொட்டை விழுந்திட்டுப் போல..”
“உங்களுக்கு எல்லாத்திலயும் ஒரே குறை கண்டுபிடிக்கிறதான் வேலை.. “
கணவனை கணக்கெடுக்காது தமக்கைக்கு அழைத்து மாப்பிள்ளையிட விபரம் சொல்லி விசாரிக்க சொன்னார்.
பார்ட்டி ஏதும் என்றால் குடிக்கிற பழக்கம் இருக்கு.. மற்றபடி நல்ல பொடியன்தான்.. ஊரில தமக்கை ஒண்டு.. மற்றபடி எந்தச் சோலி சுரட்டும் இல்லை என்று வந்த விபரத்தோடு மதுவந்தியின் திருமணம் இனிதாகவே முற்றாகியது. சுந்தரத்தின் மறுப்பு செல்லாக்காசாகிப் போயிருந்தது.
தாயின் பேச்சுக்கு எப்போதுமே கட்டுப்படும் மதுவந்தியும் இப்போதும் தலையாட்டி இருந்தாள். மாப்பிள்ளையின் முகப் புத்தகத்திலேயே குடியிருந்தவளின் கனவில் பனிமலைக்குள் டூயட் பாடும் காட்சிகள் வர ஆரம்பித்தன.
கல்யாண கனவுகள் நனவாகுமா?

