அத்தியாயம் – 26
Project – Sh
இதென்ன ப்ராஜெக்ட்? இந்தக் கேள்விதான் அங்கிருந்த மூவரின் மனதிலும்.
“ஹிடன் போல்டெர்ல இருந்து எடுத்தது. என்க்ரிப்ட் பண்ணி வச்சிருந்தாங்க. நம்ம ஏத்திகல் ஹேக்கர் தான் டீக்ரிப்ட் பண்ணி கொடுத்தார்”
“இதில் ரெண்டு காலகட்டமா பிரிச்சு டைம்லைன் 1 அண்ட் 2 அப்படின்னு பிரிச்சிருக்கே…”
“அப்ப அதைத்தான் நம்ம டீகோட் பண்ணனும். நம்ம ஹேக்கர் டீம் கூட இதுக்கு ஹெல்ப் பண்ணா நல்லாருக்கும். ஏன்னா டார்க் வெப் மாதிரி இடங்களில் என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்குற அளவுக்கு நமக்கு பொது அறிவு இல்லை. உதாரணமா ஹியூமன் டிராபிக்கிங் சந்தை அங்க நடக்குது.
ஒரு சாதாரண பொது ஜனம் ஒருத்தர் ஆர்வக்கோளாறில் இந்த மாதிரி டார்க் வெப்ல இருக்குற ஒரு ஆன்லைன் சைட்டில் எக்கச்சக்கமா விலை கொடுத்து ஒரு ஷூ ஆர்டர் பண்ணிருக்கார். அது ரத்தக்கறையோட பழைய காலணி வந்திருக்கு. அதுக்குள்ளே ஒரு வீடியோ பதிவோட எலெக்ட்ரானிக் உபகரணம். போட்டுப்பார்த்து பயந்து போயிட்டார். இதை மாதிரி நம்ம நினைச்சு கூட பார்க்கமுடியாத பல கொடூர செயல்கள் நடக்குறதா செய்திகள் வருது.
இந்த ப்ராஜெக்டை பத்தி நம்ம அவங்களை கலந்து கண்டுபிடிச்சா நல்லது”
தென்னாடனின் யோசனைப்படி அவர்களும் சேர்ந்து கொண்டார்கள். அந்த நள்ளிரவில் அனைவரும் சிறு சிறு பகுதிகளாக பிரித்துக் கொண்டு குற்றப்பிண்ணனியை நூல் பிடித்தார் போல பின் தொடர்ந்தனர். கிடைத்த தகவல்கள் பகீர் ரகம்.
அங்கே சில விடியோக்கள் இருந்தன. சில குறிப்புக்கள்
Phase 2 – Noise required. Pick public face
அடுத்து விடியோக்கள் சில அதில் ஒரு 25-30 வயதில் ஒருவன் அழகாக சிரித்தான். கண்களால் பேசினான். அந்தப் புன்னகை அப்படியே மறைந்து டெவில் முகமாக மாறியது. ரெண்டு கோரை பற்கள் மற்றும் கொம்புகள் அவன் முகத்தில் முளைத்தன.
“இது ஆக்டர் ஷாந்து தானே?”
“இந்த வீடியோதானே கொஞ்ச நாள் முன்னாடி ஆன்லைனில் சுத்திக்கிட்டு இருந்தது”
முதலில் இதில் குறிப்பிட்ட நபரைப் பற்றி சுருக்கமான குறிப்பு எழுதிடலாம் என்று எண்ணி தொடங்கினர்.
ஷாந்து, இவனை தொலைகாட்சி ஷோ மற்றும் வெள்ளித்திரையில் பார்த்திருப்பீர்கள். ஆறடி உயரம் அழகிய உருவம் ஆப்பிள் போலே இருப்பானே என்று இளம் பெண்கள் பாடும் வண்ணம் இருப்பான். ஏகப்பட்ட ரசிகை பட்டாளங்கள். எல்லாரும் பப்புக்கும், டேட்டிங் என்று அலைந்தால் இவன் ட்ரெக்கிங், இமயமலை பயணம் என்று போவான். இது போன்ற வித்தியாசங்கள் அவனை தமிழ் மக்களை விரும்ப வைத்தது. தஞ்சாவூர் பக்கத்திலிருக்கும் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் என்பது கூடுதல் ப்ளஸ் பாயிண்ட்.
அந்த ஷாந்துவின் மேல் ஒரு நாள் மக்களே அதிரும்படி பாலியல் குற்றம் சுமத்தினாள் ஒரு பெண். அதுவும் 17 வயதே நிரம்பியவள். போக்ஸோ சட்டம் பாய்ந்து உடனே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். ஏற்கனவே தொழில் போட்டி, குற்றம் வேறு மக்களை அவனிடமிருந்து விலகச் செய்தது. அதனால் அவன் நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் அவன் இருந்த திசையை விட்டே விலகினார்கள்.
மீடியாக்களில் அவனைப் பற்றி கிழி கிழி என்று கிழித்தார்கள். எத்தனை பெண்களை பாலியல் கொடுமை செய்த கொடூரன் தெரியுமா என்று மணி கணக்காக விவாதித்தார்கள். ஒன்றிரெண்டு மாதங்களுக்கு பின்பு புது செய்திகள் கிடைக்கவும் ஷாந்து பழைய செய்தி ஆனான்.
சட்டப்போராட்டம் நடத்திய ஷாந்து சில மாதங்கள் கழித்து கடுமையான நிபந்தனைகளுடன் ஜாமீனில் வந்தான். மன உளைச்சல் தாங்காமல் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
இது தான் மேடம் ஷாந்துவோட கதை.
“சொல்லப்படும் கதைன்னு வேணும்னா சொல்லலாம். நானும் அந்த கேசை ஃபாலோ பண்ணேன். அவனைப்பத்தி ஒரு கரும்புள்ளி கூட இல்ல. அவனோட பிஸி லைப், ப்ரோக்ராம் இடையில் மது மாது சூது எதுவும் கிடையாதுன்னு ஒருத்தர் சொல்லிருந்தார். அது அமுங்கிருச்சு”
ஏத்திக்கல் ஹேக்கர் டீமில் ஒருத்தரும் சொன்னார். “நானும் பார்த்தேன். அது உண்மைதான் மேடம். எனக்கு தெரிஞ்ச ஒரு போலீஸ் கூட அவன் ரொம்ப நல்லவன்னு சொன்னார். குற்றம் சாட்டின பொண்ணு அவனைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்லி ரத்தத்தில் எழுதி கார்டு, லெட்டர், அவனுக்கு காய்ச்சல்னா மண்சோறு சாப்பிடுறதுன்னு அவனை லவ் டார்ச்சர் பண்ணிருக்கா. அம்மா அப்பா கண்டிக்கவும் மருந்து குடிக்கப்போறேன்னு மிரட்டிருக்கா. அவளோட பெற்றோரும் யாரோ தெரிஞ்சவங்க மூலமா இவனைக் காண்டக்ட் பண்ணி இவளைப் பத்தி சொல்லி அழுதிருக்காங்க.
சின்ன பொண்ணு இப்படி லைஃபை வேஸ்ட் பண்றாளேன்னு அவனும் கூப்பிட்டு கண்டிச்சிருக்கான். அவளை திசை திருப்புறதுக்காக வேற யாரையோ கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லி இருக்கான். அந்தப் பொண்ணு உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன் அதை யாராலும் தடுக்க முடியாதுன்னு சொல்லி சபதம் போட்டுட்டு போயிருக்கு. அடுத்த நாளே போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துருச்சு”
“கடவுளே…” தலையில் அடித்துக் கொண்டார் விஜயா.
“இது நம்பகமான தகவல் தானே”
“100 சதவிகிதம் மேடம். படப்பிடிப்பு தளத்துல இருக்குற ஒரு ரூமில் தான் நடந்திருக்கு. அந்தப் பொண்ணு கூட அவளோட அம்மா அப்பாவும் இருந்திருக்காங்க. இதையெல்லாம் அந்த சமயத்தில் அங்கிருந்த சிலர் சாட்சியா தந்திருந்தாங்க. இது தவிர அவ எழுதின கார்டு கை பற்றிட்டாங்க. அவங்க ஊருல சிலரும் அந்தப் பொண்ணு ஷாந்து கிறுக்கு பிடிச்சு சுத்தினதை உறுதி செஞ்சிருக்காங்க”
“இவ்வளவு ஸ்ட்ராங்க் எவிடென்ஸ் இருந்தும் இது மாதிரி ஒரு நெரெட்டிவ் செட் பண்ணி ஒரு மனுசனோட பெயரையே அழிச்சுட்டாங்க. கண்டிப்பா இதுக்கான காரணம் ராஜலக்ஷ்மியாத்தான் இருக்க முடியும்”
“கரெக்ட்.. இந்த விடியோக்களே சாட்சி. அவ மூலமாத்தான் கதை உருவாகி எல்லாருக்கும் பரவியிருக்கு. இதுல சந்தேகமே வேணாம்”
“சாட்சிகள் எல்லாம் இருக்கே சுலபமா வெளி வந்திருக்கலாமே. எதுக்காக ஷாந்து தற்கொலை செஞ்சுக்கணும்” அல்லி நியாயமான கேள்வியை எழுப்பினாள்.
“அது தான் எங்களுக்கும் புரியல. அவ்வளவு அழகா சிரிப்பான். ஸ்ட்ராங்கான மனுசன் எந்த நொடியில் உடைஞ்சு போனான்னு தெரியல. மத்த ஆளுங்களெல்லாம் ஓநாய் கூட்டமா மாறி அவனை மன உளைச்சலில் தள்ளி கொன்னுட்டாங்க. செத்தும் அவனை விடல மேடம் பாலியல் குற்றவாளி மரணம் அப்படின்னு செய்தி போட்டு செத்த மனுசனையும் திரும்பித் திரும்பி சாகடிச்சாங்க”
“குழந்தைகள் நன்மைக்காக போடப்பட்ட சட்டத்தை தவறா பயன்படுத்தி, யாரு இந்தப் பொண்ணுக்கு இந்த மாதிரி ஐடியா கொடுத்தாங்கன்னு தெரியல. இனிமேல் எப்ப சட்டம் பாய்ந்தாலும் இவங்க உள் நோக்கத்தோட குற்றம் சாட்டிட்டதா மடை மாற்றம் பண்ணி எத்தனை பேரு தப்பிக்க போறானுகளோ..”
“ராஜி சாதாரணமா 4 வரி எழுதி போட்டு சக மனுசங்களை அட்டாக் பண்ணும்போதே கவுண்ட்டர் அட்டாக் பண்ணி விரட்டி விட்டுருந்தா வாலை சுருட்டிக்கிட்டு உயிரோட இருந்திருப்பா… க்ரூப்பிசம் பண்ணி அவளை மேல மேல ஏத்திவிட்டு அப்படியே மரத்து மேலேயே கடைசில ஏத்திவிட்டு கதையை முடிச்சுட்டாங்க” என்றாள் அல்லியும் அவள் பங்குக்கு.
தென்னாடன் “மேடம் ஷாந்துவுக்கு தெரிஞ்சவங்கதான் கொலையாளியா இருப்பாங்களோ? ஏன்னா ஷாந்து செத்த மாதிரியே இவளும் தூக்கு போட்டு செத்தாளே” என்றான் தென்னாடன்
விலுக்கென்று நிமிர்ந்தார் விஜயா “ரைட் தென்னாடன். ஷாந்துவுக்காகத்தான் கொலை நடந்திருக்கு. ஷாந்து மாதிரியே தான் ராஜி செத்திருக்கா… ஆனா ராஜி கொலை செய்யப்பட்டிருக்கா. கொலை செஞ்சது தெரியனும்னே ஸ்டேஜுடு ஹாங்கிங்க் பண்ணிருக்காங்க. உலகத்துக்கு முக்கியமா நமக்கு இது தற்கொலையா மாற்றப்பட்ட கொலைன்னு உரக்க சொல்லிருக்காங்க. அப்படின்னா…. “
“அப்படின்னா ஷாந்துவோடதும் தற்கொலை கிடையாது ஸ்டேஜுடு ஹாங்கிங்க் அப்படின்னு நமக்கு வெளிப் படுத்தி இருக்காங்களா மேடம்”
“யெஸ்… அதுதான் கொலையாளி நமக்கு சொல்ல நினைக்கிற தகவல்”
“ஆனால் லால் எங்க இங்க வந்தான்”
ஹேகெர்ஸ் டீமிடம் “ஷாந்து வீடு எந்த ஏரியா? விருகம்பாக்கம் போலீஸ் ஒருத்தர் ரவுண்ட்ஸ் போனப்ப லாலை பிடிச்சதாவும் புளிக்கரை மோகன் கூட்டாளிகளோட வந்து அவனை மீட்டதாவும் சொன்னார். அந்த சம்பவம் என்னைக்கு நடந்ததுன்னு பதிவு இருக்கா? அந்த தேதியும் சொல்ல முடியுமா?”
அடுத்த அரை மணி நேரத்தில் தகவல் விழுந்தது “யுவர் கெஸ் இஸ் அப்சலுட்டெலி ரைட் மேடம். ஷாந்து தூக்கு போட்டு செத்த அன்னைக்குத்தான் லாலை போலீஸ் பார்த்திருக்கு. அதுவும் ஷாந்து வீட்டுக்கு பத்து நிமிஷ தொலைவில்”
“சோ…. ஷாந்துவை தூக்கில் தொங்க விட்டு கொன்னது இவனுங்கதான்”
“ஆனால் எதுக்காக? ஒரு சாதாரண தொழில் போட்டிக்காக அவனை இந்த அளவுக்கு டேமேஜ் பண்ணி கொலை வரைக்கும் போவாங்களா?” திகைப்புடன் கேட்டான் தென்னாடன்.
“கண்டிப்பா அதுக்கு மேல ஏதோ விஷயம் இருக்கு” என்றார் விஜயா யோசனையுடன்.

