அத்தியாயம் – 24
அந்த பதவி உயர்வு பெண்ணை அந்தத் தளம் விட்டுப் போக வைத்த நாளுக்குப் பிறகு, ராஜிக்கு நிறைய தோழமைகள் கிடைத்தனர். அவர்கள் குழு இதே போன்ற நாடகங்களை தொடர்ந்தது. ஏதோ பொறாமை காரணமாக ஆரம்பித்திருந்தாலும் மற்ற ஐடிக்களுக்கு வேறு குறிக்கோள்கள் இருந்தன. தொழில் போட்டி, அவர்களது தனிப்பட்ட காரணங்கள் ஏதோ ஒன்று. ஒரு குழுவின் உதவியுடன் தனி நபர்களை பற்றிய பிம்பம் ஒன்றை உருவாக்குவது எப்படி என்று நன்றாக பிராக்டிஸ் செய்தாள். அவர்கள் நினைத்தால் ஒருவரை தொடர்ந்து விளம்பரப்படுத்தி ஏற்றி வைக்கவும் முடிந்தது. இதெல்லாம் ஒரு அல்ப சந்தோஷத்தைக் கொடுத்தது.
சில மாதங்களுக்கு பிறகு அவளுக்காக கமெண்ட்ஸ் போடுவது மாறி மற்றவர்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக அவள் போஸ்ட் போடுவது தொடர்ந்தது. அதுவே சலிப்பைத் தந்தது. ஒரு கிக், சந்தோசம் அடுத்து எதில் கிடைக்கும் என்று யோசித்தவளின் கண்களில் அவளது நாத்தனார் ரஞ்சிதா பட்டாள்.
நாத்தனாரின் கணவன் பள்ளிப்படிப்பைக் கூட முடிக்கவில்லை. அந்த முட்டாள் இப்போது உணவு விடுதி வைத்து நடத்துகிறான். எங்கோ சில விடுதிகளில் வேலை பார்த்து வந்த தத்தி தொழிலைக் கற்றுக் கொண்டு ப்ரைம் ஏரியாவில் ஹோட்டல் தொடங்கிவிட்டது. நூறு ரூபாய்க்கு மாவு அரைத்து தோசை ஊற்றி ஆயிரம் ரூபாயாக மாற்றும் வித்தை தெரிந்துவிட்டது. இந்த ஐடி ஊதாரிகள் எல்லாம் சமைக்காமல் கடையிலேயே மூன்று வேளையும் மூக்குப் பிடிக்க தின்ன வேண்டியது. விளைவு தள்ளுபடி விலையில் ஆயிரம் ரூபாய்க்கு ஐஞ்சு நைட்டி என்று வாங்கி உடுத்திக் கொண்டு லாரிக்காரனுக்காக சண்டை போட்டு தண்ணீர் பிடித்துவரும் ரஞ்சிதா இப்போதெல்லாம் தினுசு தினுசாகக் கட்டி மினுக்குகிறாள்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் புதுசாக மஹாலக்ஷ்மி படம் போட்ட காசுத்தோடும் சின்ன நெக்லெஸும் போட்டுக் கொண்டு உறவினர்கள் திருமணத்திற்கு வர, ராஜி என்று ஒருத்தி இருப்பதையே கண்டு கொள்ளாமல் ரஞ்சிதாவுக்கு கிடைத்த வரவேற்பு இருக்கிறதே…
எல்லாரும் அந்த ஹோட்டலைப் பற்றியே பேச்சு.
“போன வாரம் வந்திருந்தோம் . சாப்பாடு சூப்பர். தம்பி காசு கூட வேணாம்னு சொல்லுச்சு”
“கூட்டம் அள்ளுது.”
“நல்ல காசு வருது போல. இன்னொரு பிரான்ச் தொறந்துற வேண்டியதுதானே…”
“அவன் படிக்கலைன்னாலும் செம்ம கெட்டிகாரன்”
ஒவ்வொரு சொல்லும் ராஜியை அங்கு நிற்கவே விடவில்லை. அமைதியாக மனதில் உறங்கி கொண்டிருந்த வஞ்சம் இப்போது முழு வேகத்தோடு விழித்துக் கொண்டது.
இந்தக் கடவுள் ஏன் இப்படி ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு மாதிரி படைக்கிறான். ஒருத்தனை பணக்காரனா இன்னொருத்தனை ஏழையா.. ஒருத்தனை நோயாளியா இன்னொருத்தனை பயில்வானா… உயரமா குட்டையா… கருப்பு சிவப்பு… இதுனால எத்தனை ஏற்றத்தாழ்வு வருது?
லேப்டாப்பை திறந்தாள் நேரடி குற்றச்சாட்டு இல்லை. ஆனால் இந்தத் தொனியில் குறிப்பிட்ட உணவு விடுதியில் சாப்பாட்டில் கலப்படம். அதை ஒரு வருடமாக சாப்பிட்ட உறவினர் பையனுக்கு கிட்னி செயலிழப்பு. ஏதோ கெமிக்கல் கலக்குறாங்க போல என்று ஒரு பதிவு யாரோ எழுதினார்கள். தொனியைப் பார்த்தால்
“என்னவோ…”
“யாரோ சொன்னாங்க…”
“நான் கேள்விப்பட்டேன்…”
இந்த மாதிரி மட்டும்தான். நெருப்பில்லாமல் புகை. ஆன்லைனில் புகை இருந்தால் போதும் நெருப்பு தன்னால் பற்றிக் கொள்ளும். தீர்ப்பு எழுதப்படும்.
ஒலி கொஞ்சம் கொஞ்சமாக சத்தமாக மாறியது.
முதல் நாள் இரண்டு பேர் பேசினார்கள்.
இரண்டாம் நாள் பத்து பேர்.
மூன்றாம் நாள் நூறு பேர். அப்படியே அந்த உணவு விடுதி மோசம் என்ற கருத்து காட்டுத்தீயாகப் பரவியது.
“அங்க தரம் சரியில்லை போல…”
“நேத்து ஒருத்தர் போனாங்க… வயிறு சரியில்லன்னு…”
“அவங்க சுத்தம் இல்லப்பா…”
“பல புகார்கள் வந்ததால புட் இன்ஸ்பெக்ஷன்ல வந்து சீல் வச்சிருந்தாங்க தெரியுமா? அப்பறம் காசு கட்டி வெளிய வந்ததா சொல்லிக்கிறாங்க”
எந்த ஆதாரமும் இல்லை.
ஆனா அந்த வார்த்தைகள் ஒரே நாளில் பல இடத்தில் வந்தது.
அதனால் தான் அது உண்மை போலத் தோன்றியது.
அந்த உணவு விடுதி கூட்டம் மெல்லக் குறைந்தது.
முன்பு ஓடிக் கொண்டிருந்த சின்ன கடை, இப்போ காலியாக நிற்கத் தொடங்கியது. காசு குறைந்தது. கடன்காரர்கள் கடைக்கே வந்து சத்தம் போட்டார்கள். ஊழியர்கள் முகம் மாறியது. அவர்கள் வேறு வேலை பார்த்துக் கொண்டு சென்றுவிட்டார்கள்.
நாத்தனார் கணவன் “யாருடா இப்படி பொய் பரப்புறாங்க?” என்று வீட்டில் கத்தினான். தண்ணியடிக்க ஆரம்பித்துவிட்டான் போல. நாத்தனார் மௌனமாக இருந்தாள். அவர்களைப் புகழ்ந்து பேசிய வாய்கள் எல்லாம் வேறு மாதிரி பேச ஆரம்பித்தன.
ரஞ்சிதாவின் மார்பில் சுருக்கென்று வலி. பிபி ஏறி தலை சுழன்றது. அடுத்த கணம் அவள் மயங்கி விழுந்தாள். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.
டாக்டர் சொன்னார்:
“மனஅழுத்தம் அதிகம். ரெஸ்ட் தாங்க. யாரும் பேசாதீங்க. மொபைல் கூட தரக் கூடாது.”
இதெல்லாம் பார்க்கும்போது ராஜிக்கு உறுத்தல் எல்லாம் இல்லை. பள்ளம் மேடு இரண்டையும் சமன்படுத்தும் ஒரு சமநிலையாகவே அதனை நினைத்தாள். நான் செஞ்சது தப்புன்னா என்னை இப்படி படைச்ச கடவுளும் தப்புத்தான்.
ஆன்லைனில் சண்டை போடும்போது வெற்றி கிடைத்த மாதிரி இருந்தது. ஒரு வெர்ச்சுவல் வெற்றி. ஏனென்றால் அந்த வெற்றியை நேரா பார்த்து ரசிக்க முடியவில்லை. இப்போதோ அவளால் பார்த்து மனதினுள் டான்ஸே ஆட முடிந்தது.
அடுத்தவர்களை ஏளனமாய் எழுதியே பழக்கப்பட்டிருந்த அவளது லேப்டாப் கீ போர்டு மெம்பெர் ஒருத்தியை கேவலமாக பேச, அவளோ வக்கீலுக்கு படித்தவளாம். ராஜியின் பெயரை டேக் செய்து இப்படி தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தும் உன் வீட்டுக்கு விரைவில் வக்கீல் நோட்டீஸ் வரும். விலாசத்தை கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைக்காதே. நான் மத்தவங்க மாதிரி எதுக்கு சண்டை ன்னு ஒதுங்கி போறவ இல்லை. என் வேலையே சண்டை போட்டு நியாயம் வாங்கித் தர்றதுதான். சைபர் க்ரைம் டிபார்ட்மென்ட் வழியாக உன் ஜாதகத்தையே வாங்கலாம். அப்பாவி வேடம் போட்டுக் கொண்டு தனி மனிதத் தாக்குதல் நடத்தும் உன்னிடம் எத்தனை லட்சம் நஷ்ட ஈடாக கேட்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். என்று போடவும் பயந்துவிட்டாள்.
“எனக்கு உடல்நிலை சரியில்லை. ஆன்லைன் என் மன அமைதியை குலைக்குது. இனி நான் இங்க வரமாட்டேன். மன்னிச்சுக்கோங்க.” என்று சொல்லிவிட்டு தனது ஒரிஜினல் ஐடியை மௌனமாக்கினாள். ஆனால் பேக் ஐடியில் உலவுவது நிற்கவில்லை.
அந்த மாதிரி ஒரு சமயத்தில்தான் அவளது பேக் ஐடிக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதுவும் ராஜி என்று விளித்து
“வெல்டன் ராஜி. உங்க வேலைகளை நாங்க கண்காணிச்சுக்கிட்டே இருக்கோம். அதுவும் கடைசியா ஒரு ஹோட்டல் பிசினெஸை ஒழித்துக் காட்டுனிங்களே பிரமாதம். எங்களுடன் இணையத் தயாரா? உங்களுடைய திறமைக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்.”
ஆச்சிரியப்பட்டுப் போனாள். ஓ என்னை கண்டுபிடிச்சு வேலை கொடுக்குறாங்கன்னா நான் பொறாமைக்காரி இல்லை திறமைக்காரி.
“தயார்” மெசேஜ் அனுப்பினாள்.
“குட். அடுத்து தகவல்கள் எல்லாம் உங்களுக்கு கொரியர் வரும். என்னென்ன செய்யணும்னு தெளிவா சொல்லுவோம். ஒரு எம்என்சி ல உங்களுக்கு வேலை கிடைச்ச மாதிரி அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் அனுப்புறோம். அதை உங்க சொந்தக்காரங்களுக்கு காமிச்சுக்கலாம் நமக்கான வேலை பார்க்க ஒரு தனி இடம் நாங்க சொல்ற மாதிரி செட் அப் எல்லாம் நீங்கதான் ரெடி பண்ணனும். அதுக்கான காசு உங்க சம்பளம் எல்லாம் கேஷா தந்துடுவோம்”
“என்ன வேலைன்னு சொல்லவே இல்லையே…”
“எல்லாம் நீங்க பொழுது போக்கா செஞ்சதைத்தான் இப்ப காசு வாங்கிட்டு செய்யப்போறிங்க”
“அப்படின்னா”
“சுருக்கமா சொன்னா ஒரு ப்ராண்டை அழிக்கிறது. ஆளுக்குத் தகுந்த மாதிரி சன்மானமும் இருக்கும்”

