அத்தியாயம் – 16
“‘விபத்து இல்லை இது திட்டமிட்ட கொலைன்னு சொல்லுறேன்,” என்று விஜயா மெதுவாக ஆரம்பித்தார். மேசைமேல் புகைப்படங்கள், நோட்டுகள், சின்ன சின்ன சாட்சிப் பொருள்கள் எல்லாம் வரிசைபடுத்தி இருந்தன. அல்லி, கிரேஸ், தென்னாடன் மூவரும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“முதல்ல, நம்ம ஊர்ல பொதுவா நமக்கு அடிக்கடி கேட்கும் பாம்புகள் என்னன்னு ஒரு சின்ன பட்டியல்,” என்று விஜயா சொன்னார்.
- ‘நல்ல பாம்பு’ கிராமத்தில எல்லாரும் சொல்ற இதுக்கு இன்னொரு பேரு ‘எலி பாம்பு’தான். வீட்டோட சுற்றுல எலிகளைக் கட்டுப்படுத்துகிற பாம்பு.
- ‘கட்டு விரியன்’ இது விஷமா இருக்கும். இவன் கடிக்கும்போது குத்தும் இடத்தில வலி அதிகமா இருக்காமலேயே போகலாம். ஆனா கொஞ்ச நேரத்துல கண் இமை விழுந்து கனத்தது போல தோணும், தலை சுத்தும், உடம்பு பலம் குறையும், முதல்ல மூச்சுவிட கஷ்டம். அதிகமா இரவுலதான் கடிக்கும். சிகிச்சை இல்லனா 4–8 மணி நேரத்துக்குள்ள விஷம் சுவாசத்தை பாதிச்சுடும்.
- ‘கண்ணாடி விரியன்’ இது கடிச்சா உடனே கடித்த இடம் சுற்றி வலி, வீக்கம், இரத்தம் உறைச்சு உடம்புல பல இடமா ரத்தக் கசிவு, சிலருக்கு சிறுநீரக பாதிப்பு. சிகிச்சை தாமதமானா ஒரு நாள், இரண்டு நாளுக்குள்ளே உடல் மோசமா போயிடும்.
“இவைகளை எல்லாம் நம்மோட அரசாங்க மருத்துவமனையிலக் கிடைக்கிற ‘ஆண்டிவெனம்’ சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்தால் உயிரிழப்பை தவிர்க்கும் ” என்று விஜயா சுருக்கமா சொன்னார்.
ஒரு ஃபைலை திறந்து அடுத்தப் பக்கத்தை காட்டினார். “இப்போ லாலோட சம்பவத்துக்கு வர்றோம்”
தென்னாடன் ஆரம்பித்தான்
“குளத்துல இருந்த காரை வெளியே எடுக்கும்போது ஒன்னும் தெரியல, ஆனால் தடையங்களை தேடுனப்ப கார் டோரில் ஒட்டிக்கிட்டிருந்த சில செதில் கிடைச்சது. அந்த நேரத்துல கூட பாரென்ஸிக்ல கூட ‘கார் விழுந்தப்போ ஏதாவது உயிரினம் சிக்கி நசுங்கி இருக்கும்’ னு யாரும் பெருசா எடுத்துக்கல.
நான் எதோ ஒரு உள்ளுணர்வில் அதை அப்படியே சேகரிச்சு வச்சேன். கவர்ல போட்டுட்டேன். அதுமட்டுமில்லாம, லால் ஒட்டி வந்த காரோட கால் பக்கத்தில், பெடல்ஸ் பக்கமா, டோரின் உள்ளே சில இடங்களில் நசுங்கி சிறு படலம் தோல்/செதில துகளங்கள் இருந்தது. அதையும் ஸ்வாப் எடுத்து சேகரிச்சேன்,”
“அதுக்கப்புறம்,” விஜயா தொடர்ந்தார், “தென்னாடன் கிட்ட பிரேத பரிசோதனை செய்த டாக்டர்ஸ் மரணம் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்க சந்தர்ப்பம் செகண்டரி தான் , முதல் காரணம் விஷத்தால் ஏற்பட்டிருக்க சான்ஸ் இருக்குன்னு சந்தேகத்தை தெரிவிச்சிருக்காங்க . இதை அவர் என்கிட்டே சொல்லவும் எனக்கு எதிர்பார்க்காத இடத்தில் எங்கேயோ லீட் கிடைச்ச மாதிரி பட்டது.
இடும்பன், பாம்பு பிடிப்பதுல பயிற்சி பெற்ற நபர். அவனை கூப்பிட்டேன். ‘நீர் ஓரம், தாமரைத் தண்டுகளுக்குள்ள ஏதாவது சிக்கிருக்கான்னு பாருங்களேன்’ னு சொன்னேன். அவனோட ஹெல்ப்புல துண்டாகி பாதி நசுங்கியிருந்த பாம்பு உடலும் குளத்திலிருந்து கிடைச்சுச்சு. அதுதான் இந்த வழக்குல பெரிய திருப்பம்.”
அல்லி ஆர்வம் தாங்காது கேட்டாள். “அந்த உடல் பார்த்தவுடனே நீங்கயா ‘இது கொலை’ன்னு முடிச்சுட்டீங்களா, மேடம்?”
விஜயா புன்னகை. “அப்படியில்ல. முதல்ல பார்த்தேன். உடல்ரோமம் இல்லை மாதிரி மிருதுவா இருந்தது; நிறம் சுத்த கருப்பு இல்ல மஞ்சள் கலந்த கம்பளி சாம்பல். தலை வடிவம் நீளமா. சின்ன சின்ன அடையாளம் அந்த செதில வடிவம் இதெல்லாம் வித்யாசமா இருந்தது. இதை நம்ம ஊரில நடமாடுற பாம்புகளோட பொருத்தி பார்க்கும்போது பொருந்தவே மாட்டேங்குது. அந்த வாய் உள்ளபக்கம் கருப்பா இருக்கும் இனம்தான் இதுக்கு பொருந்துது.
என்னுடைய ஊகத்தையே இடும்பனும் உறுதி செய்தார். தென்னாடனும் டாக்சிக்காலஜி டெஸ்ட் அனுப்பிச்சுட்டு, அவங்க சோதனை முடிவுக்கு காத்திருக்காம, கூடுதல் முயற்சியா சென்னை பாம்பு பண்ணைல வேலை செய்த அனுபவசாலிகள் கிட்ட பாம்பின் படங்களை அனுப்பி விளக்கம் கேட்டபோது கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது.”
கிரேஸ் சுட்டினாள்: “எந்த இனம்னு வந்துது?”
விஜயா அந்த வார்த்தையை மெதுவா நிறுத்தி சொன்னார்: “பிளாக் மாம்பா.”
அவன் பெயரை கேட்டதும் அல்லிக்குஆச்சரியம்: “என்னது பிளாக் மாம்பாவா அது ஆப்பிரிக்காவுல வாழுறது இல்லையா? நம்ம நாட்டுல இருக்க சான்ஸ் இல்லையே?”
“அதுதான் எங்க சந்தேகமும்” என்று விஜயா தலையசைத்தார். “பிளாக் மாம்பா (Black Mamba) இந்தியா நாட்டுப் பாம்பு இல்ல. சஹாரா கிழக்கு. தெற்குப் பகுதி ஆப்பிரிக்காதான் தாயகம். நம்ம ஊர் வகை பாம்புகளோட பல மடங்கு விஷம் இருக்குறது. சில நிமிடங்களில் விஷம் பரவ ஆரம்பிச்சுரும். நம்ம தமிழ்நாட்டுல இயற்கையா வந்துசேர வாய்ப்பே இல்ல.
இதோட விஷம் மிக வேகமான நியூரோடாக்ஸிக். கடிச்சா சில நிமிஷங்களுக்குள்ளே நாக்கு கனக்கும் , பேச முடியாது, கண் இமை விழுதல், இரட்டை பார்வை, உடம்பு சோர்வு, அதுக்குப்பிறகு மூச்சுதிணறல். இதெல்லாம் ஆதி வேகமா நடக்கும். சிகிச்சை இல்லனா மணித்துளிகளிலேயே உயிருக்கு ஆபத்து. முக்கியமா இதுக்கு நம்ம ஊர்ல இருக்கும் வழக்கமான ஆண்ட்டிவெனம் போதாது” என்று அவள் எளிமையாக விளக்கினாள்.
அல்லி புரிந்தாற்போல சொன்னாள் “ஓ அதுனாலதான் லாலுக்கு அவ்வளவு சீக்கிரமா உடல் பலம் போய்டுச்சு, மூச்சு திணறல் வந்து தப்பிக்க முடியாம போச்சு…”
“ஆமாம்,” என்ற விஜயா. “நம்ம இரண்டு விஷயம்தான் இங்க மெயின். ஒன்று லாலின் உடலிலிருந்த அறிகுறிகள். இரண்டாவது நாம் சேகரிச்ச, கதவின் இடுக்கில சிக்கிய மாம்பா உடல். ஆக்ஸிலரேட்டர் பெடல் பக்கமா, டோருக்குள் கிடைச்ச செதில துகளங்கள். இதை எல்லாம் சேர்த்தா லால் விபத்தால இல்ல, முன்னாடியே திட்டமிட்ட விஷத் தாக்குதலால மரணம் அடைஞ்சிருக்கார்.”
தென்னாடன் நெருங்கிப் பார்த்தான். “ஆனா அது எப்படி லாலின் காருக்குள்ளே?”
கிரேஸ் “அப்ப இதெல்லாம் யாரோ லாலை கொலை செய்ய ஏற்பாடு செஞ்சது”
“அப்படித்தான்,” விஜயா சொன்னார். “நம்ம ஊர்கார பாம்பு தானாக கார் ஏறி, டோர் மூடினதும் அப்படியே பெடலுக்குள்ள கால் சுற்றி இரட்டை கொத்து போட்டுட்டு, இந்த அளவுக்கு கூட்டிச் சேர்ந்த சரியான சம்பவங்கள் ஒரே இரவுல நடப்பது அரிது. அதனால இது விபத்து இல்ல திட்டமிட்ட தாக்குதல்.”
அல்லி ஆழமா மூச்சு விட்டாள். “மேடம், பாம்பு கடின்னா, மக்கள் உடனே அது விபத்து’ன்னு சொல்றாங்க. நீங்க ‘கொலை’ன்னு சொல்லுறதுக்கான காரணம், அந்த இனம்தான் பிளாக் மாம்பா இந்தியாவிலே இல்லாதது அதுதானே?”
“சரியே,” விஜயா தலையசைத்தார். “இயற்கையா இந்த இடத்தில் வாழாத ஒரு பாம்பை யாரோ கொண்டு வந்திருக்கணும். கொண்டு வந்ததுக்குப் பிறகு எங்கே வச்சாங்க? எப்படி காருக்குள்ளே விட்டாங்க?அதுபற்றி இன்னும் நாம் தேடணும். ஆனா அவங்க நோக்கமே ஒரு சதவிகிதம் கூட சான்ஸ் தராம உயிரை எடுக்குறதுதான். பிளாக் மாம்பா கடிச்சு மருத்துவமனைக்கு போனால் கூட சிகிச்சை தர நம்மிடம் போதிய வசதி இல்ல. ஆனால் தாமரை குளத்தில் விழுந்தது அவங்களே எதிர்பார்க்காததா இருக்கணும்.”
தென்னாடன் மெதுவாகக் கேட்டான்: “அந்த பாம்பு எப்படி வந்திருக்கும்? செல்லப் பிராணி, ரிசர்ச் இப்படி எதுவாச்சும்?”
“அதுதான் அடுத்த ப்ளான் ,” விஜயா சொன்னார். “மூலம் எங்கிருந்து? யார் கைக்கு இந்த பாம்பு வந்தது? எதுக்காக லாலை டார்கெட்டா எடுத்தாங்க? இந்த மூணு கேள்விகளுக்கு விடை தேடுறதுதான் நம்ம அடுத்த வேலை. கஸ்டம்ஸ், செல்லப் பிராணி விற்பனைக் குழுக்கள், பிரைவேட் கலெக்ஷன், ரிசர்ச் ஸ்டாப் எல்லா கோணத்துலயும் பார்க்கப் போறோம்.”
“அந்த விக்டர், லாலோட பிரெண்ட் ஏன் பாம்பை விட்டு கொலை பண்ணிருக்க கூடாது?”
“வாய்ப்பில்லை. அந்தாள்தான் சந்தேக லிஸ்டில் முதல் ஆள் அதனால இப்படி ரிஸ்க் எடுத்து முட்டாள்தனம் பண்ண மாட்டான். இது வேற யாரோ ஒருத்தர். மொத்தத்தில் இது கண்டிப்பா ‘கொலை’. ஆனா யார் கொலை செய்தா? எதுக்காக? இதுதான் இப்போ நம்ம கண்டுபிடிக்க வேண்டியது,” என்று அவர் தெளிவாக முடித்தார்.

