தாமரை குளம் – 12

அத்தியாயம் – 12 

காவல் நிலையத்தில் நுழைந்த விஜயா முதல் வேலையாக அல்லியை அழைத்தார்

“சொல்லும்மா என்ன பாதி காய் பாதி பழம்? கலாரூபம்ல என்னதான் சொன்னாங்க?”

“பழம்னு சொன்னது 100% அந்த உடை சென்னையில் தான் விற்கப்பட்டு இருக்கு அப்படின்னு சொன்னாங்க “

“அதுதான் ஏற்கனவே நமக்கு தெரியுமே. மும்பை ஆபீஸ்லயே சென்னை பிரான்ச்சுக்கு அனுப்புனது தான் அப்படின்னு உறுதி பண்ணி இருந்தாங்களே”

“இன்னொரு சாதகமான விஷயம்… நான் ஷேர் பண்ண புகைப்படத்தை பார்த்து அந்த உடையை வாங்குனது

இறந்து போன பொண்ணு தான் அப்படின்னு நூறு சதவிகிதம் அந்த விற்பனை லேடி உறுதி செய்து இருக்கா”

“சூப்பர் அதைத்தானே நம்ம எதிர்பார்த்தோம். இந்த விற்பனை பெண் ஒன் டைம் கஸ்டமர்னா மறந்துடுவாங்க. பலமுறை அல்லது சில முறை பார்த்த முகம் தான் நினைவு இருக்கணும். அதையும் மீறி ஒரே தடவை பார்த்த முகம் நினைவிருந்துச்சுன்னா அன்னைக்கு ஏதாவது சம்பவங்கள் நடந்து அந்த முகம் மறக்க முடியாமல் இருக்கணும்… இது தான லாஜிக்”

“கரெக்ட் மேடம் இந்த பொண்ணு வழக்கமா இந்த கடையில் வாங்குற வாடிக்கையாளர் தான் அப்படின்னு உறுதி பண்ணி இருக்காங்க.  வரும்பொழுது லேட்டஸ்ட் உடைகளை பார்த்து ஒரு நாலு அஞ்சு அப்படின்னு வாங்கிட்டு போவாங்களாம். அதே மாதிரி போன மாதம் வந்தப்ப வாங்கின உடைகளில் ஒன்றுதான்  இந்த கருப்பு வெள்ளை சுடிதார் அப்படின்னு உறுதி செய்து இருக்கிறார்கள்”

“வெரி குட் அப்ப பில்ல பாத்து அவங்க டெபிட் கிரெடிட் கார்டு, ட்ரான்ஸாக்ஷன் நம்பர் குடுத்தாங்கன்னா நம்ம அதை வச்சு டிரேஸ் பண்ணி அட்ரஸ் கண்டுபிடிச்சிடலாம் சிம்பிள்”

” அவ்வளவு சிம்பிள் எல்லாம் இல்ல மேடம். அந்த பொண்ணு கார்டு தராதாம். கேஷ் தான் தரும் அப்படின்னு சொல்லி இருக்காங்க”

“கேஷா? அது நீ சொல்றத பாத்தா அந்த புள்ள அம்பதாயிரத்துக்கு குறையாம ஒவ்வொரு தடவையும் டிரஸ் வாங்கும் போல இருக்கே. ஐம்பதாயிரமும் கேஷா தந்தாங்களா”

“ஆமாம் மேடம் ஐம்பதாயிரம் மட்டும் இல்ல… ஒவ்வொரு தடவையும் இவங்க துணி வாங்கும் பொழுது ஒரு லட்சம் ஆனாலும் கேஷ் ஆகத்தான் தருவாங்களாம். அதனாலே இவங்க முகம் நல்லா ஞாபகம் இருக்கிறதா அந்த கடையில் ஒரு சேல்ஸ் கேர்ள் சொல்லி இருக்காங்க”

“நம்ம டிஜிட்டல் டிஜிட்டல் னு சொல்லிட்டு இருக்கோம். இந்த  பொண்ணு லட்சக்கணக்கா பணத்தை தூக்கிட்டு சுத்திருக்கு பாரேன். ஏன் கடைக்காரங்க கார்டு ட்ரான்ஸ்பர் பண்ண சொல்லி கேக்கலையா”

திடீரென்று ஞாபகம் வந்து

‘நம்ம ஏழுமலைய ஏர்போர்ட்ல இந்த பொண்ண பத்தி விசாரிக்க சொல்லி இருந்தேன் விசாரிச்சீங்களா”

“உங்கள் யூகம் சரிதான் மேடம். இவ்வளவு காஸ்ட்லி டிரஸ் போட்ட பொண்ணு , ஃப்ளைட்ல வரதுக்கு சான்சஸ் இருக்குன்னு போய் விசாரிச்சுட்டு வர சொன்னிங்க .அதே மாதிரி விசாரிச்சிட்டேன.ஏர்போர்ட் கேமரால இந்த பொண்ணு பிளைட்ல இருந்து இறங்கி நடந்து வருகிறது பதிவாகி இருக்கு”

“வெரி குட் அப்ப அந்தப் பெண்ணை பத்தின விவரங்கள் விரைவில் கிடைச்சிரும்னு நம்புவோம்”

காரில் ஆக்சிடென்ட் ஆகி இருந்த அந்த நபர் கூட விமானத்தில் வந்திருக்கலாமோ? ஆனால் முழுவதுமாக சிதைந்து போன உருவத்தை வைத்து எப்படி அடையாளம் கண்டுபிடிப்பது? வேறு வகையில் தான் முயற்சி செய்ய வேண்டும்

ஆள்காட்டி விரலால் நெற்றி தட்டியபடி உருவத்தை சுருக்கி கொண்டு கண் மூடி யோசித்தார்

இந்தப் பொண்ணு தற்கொலை பண்ணுகிறதுக்காக சென்னையில் இருந்து இங்க வந்தா அப்படின்றது நம்பும்படியாக இல்ல. ஏழுமலை விசாரிச்சாலும் அந்த பொண்ணோட பேரு கிடைக்கலாம் ஆனால் விலாசம் தவறா இருக்கத்தான்  சான்சஸ் இருக்கு.  அவகிட்ட என்னமோ நெருடலா இருக்கு.

இந்த பொண்ணு ஏன் டிஜிட்டல் டிரான்ஸ்பர் பண்ணல அப்படிங்கிறதும் கேள்விக்குறிய விஷயம். அதுக்கும் அந்த பொண்ணோட மரணத்துக்கும் ஏதோ தொடர்பு இருக்குதா? கணக்கில் வராத பணமாகவோ அல்லது முறைகேடான பணமாகவோ இருக்கலாம். யார் இவள்? எதனால் இவளுக்கு இந்த முடிவு?

“கிரேஸ் நம்ம பி.சி சுந்தரம்  மெட்ராஸ்ல தான இருக்கான்”

“ஆமாம் மேடம் அவன் தம்பி கல்யாணத்துக்கு மெட்ராஸ் போனவன் அங்க தான் இருக்கான். அவன் இல்லாம அவனோட வேலையும் சேர்த்து நம்ம செய்ய வேண்டியதா இருக்கு”

“நம்மளால இப்ப மெட்ராஸ்ல போயி விசாரணைக்காக அலைஞ்சிட்டு வர முடியாது. ராஜாராம் கொடுத்த கெடு வேற இன்னும் 48 மணி நேரத்தில் முடியுது. சுந்தரத்தை கூப்பிட்டு கலாரூபம் சென்னை பிரான்ச்ல போயி நேரடியா விசாரிக்க சொல்லு. அவனுக்கு இன்னைக்கு டியூட்டி போட்டுவிடு.

ஒவ்வொரு ஆளுங்களையும் விசாரிக்கணும் கடை ஆளுங்க, செக்யூரிட்டி, அக்கம் பக்கத்து கடைகள் எல்லாத்தையும் தனித்தனியா பார்த்து, இந்த பொண்ணு போட்டோவை காமிச்சு, எங்கேயாவது பார்த்து இருக்காங்களா அப்படின்னு கேட்டு சொல்ல சொல்லு. இன்னிக்கி ராத்திரி ஒன்பது மணிக்குள்ளார சுந்தரம் விசாரிச்சு பதில் சொல்லணும் அப்படின்னு சொல்லிடு”

ராஜாராமின் 48 மணி நேர கெடு அவர்களுக்கு அன்றும் சிவராத்திரி தான் என்று உணர்த்தியது.

“மேடம் அந்த ஆக்சிடென்ட் கேஸ். கார் நம்பர் கூட பேக்னு வந்துச்சு மேடம்” அல்லி நினைவூட்டினாள்.

“கார் ஆக்சிடென்ட் தானே… அந்தக் காரு தூத்துக்குடியில இருக்கும் ஒருத்தருக்கு சொந்தமானது. நம்பர் போலி தான். ஆனால் தூத்துக்குடி மெக்கானிக் ஷெட்டோட லேபிள் ஸ்டிக்கர் அதில் ஒட்டி இருந்தது. மறைவாக இருந்ததுனால யாரு கண்ணிலேயும் படல. அதை வைத்து ட்ராக் பண்ணி அட்ரஸ் கண்டு பிடிச்சாச்சு. சட்டவிரோத வேலைகளுக்கு யூஸ் பண்ணி இருக்கலாம் அதனால தப்பான நம்பர் ப்ளேட் மாட்டி இருந்திருக்கலாம்”

“வடநாட்டு மொழில ஸ்டிக்கர் எல்லாம் ஒட்டி இருக்குன்னு சொன்னீங்களே மேடம்”

” கார் ஓனர் வடநாட்டுக்காரர் தான். ரொம்ப நாளா முன்னாடி தூத்துக்குடியில் ஒரு ஆபீஸ் போட்டு பிசினஸ் பண்ணிட்டு இருக்காரு. இங்க ஒரு வீடு இருக்கு. அவரோட நண்பர்தான் ஆக்ஸிடெண்ட் ஆன நபர் அப்படின்னு தெரிய வந்திருக்கு. இப்ப அங்க தான் போயிட்டு இருக்கேன்”

விஜயா கிளம்பியதும் கிரேஸ் அல்லியிடம் ” நீ வருத்தப்பட்டதெல்லாம் வீணாயிடுச்சு பாரேன் .இந்த பொண்ணு என்னமோ தகிடுதத்தம் பண்ணி இருப்பா போல. சே… சின்ன கேஸ், உடனே முடிஞ்சிடும் நினைச்சேன் இப்படி  இழுக்குதே”

” கிரேஸ் அக்கா உண்மைய சொல்லப்போனால் இது கொஞ்சம் கஷ்டப்படுத்தினாலும் முடியிற கேசு. அந்த ஆக்சிடென்ட் இருக்கே அது என்னமோ சீரியஸான கேஸ்னு என் மனசுல படுது.

நம்ம மேடம் க்கு அதைப்பற்றி  ஏதோ ஒரு தடயம் கிடைச்சிருக்கு. விஷயம் பூதாகரமா இருக்கும்னு நினைக்கிறேன். சொல்லப்போனால் பெரிய தலைகள் கூட இன்வால்வ் ஆகலாம்”

“அப்படின்னு  மனசுல படுதாக்கும்… ஏண்டி இப்படி பீதிய கிளப்புற. நல்லா கேட்டுக்கோ, இந்த கேஸ்ல குற்றவாளிகளை கண்டுபிடிக்கிறோமோ இல்லையோ இன்னும் 48 மணி நேரத்தில் முடிஞ்சிடும்”

“அது எப்படி? பாரன்சிக்  ரிப்போர்ட் வரவே இன்னும் ஒரு வாரமாகும் போல இருக்கே”

” அதெல்லாம் ரூல் புக் ஃபாலோ பண்றவங்களுக்கு. ராஜாராம பல வருஷமா பார்த்து இருக்கேன். அந்த ஆளு நினைச்சாருன்ன இந்த நிமிஷமே க்ளோஸ் பண்ணிடுவாரு”

“ஆமாக்கா ஏற்கனவே இந்த மருத்துவமனை கழிவுகள் பிரச்சனையில் ராஜாராம் பேரும் இப்ப அடிபட ஆரம்பிச்சிருச்சு. நம்ம அந்த சீன்லேயே இல்லாத அளவுக்கு பெரிய விஷயம் ஆயிடுச்சு. கண்டிப்பா அந்த காண்டில் இருப்பார்”

***

தூத்துக்குடி கணேஷ் நகரில் அந்த பெரிய பங்களாவை கண்டு பிடித்து விஜயா சென்றபோது மணி கிட்டத்தட்ட இரவு 8 ஆகிவிட்டது.

வெள்ளை உடை அணிந்த நஸ்கள் இங்கும் அங்கும் பரபரப்பாக நடந்து கொண்டிருக்க மருத்துவர் ஒருவர் விஜயாவிற்காக காத்திருந்தார்.

“இங்க பாருங்க மேடம் விக்டர் சாருக்கு ஏற்கனவே இரண்டு முறை ஹார்ட் அட்டாக் வந்திருக்கு. இப்போது இருக்கும் சூழ்நிலையில அவரு ரொம்ப பயந்து இருக்காரு. ஹை பிரஷர் இருக்கு, மெடிசன் கொடுத்து கண்ட்ரோல் பண்ணி அவரு ரூம்லயே படுக்க வைத்திருக்கிறோம். 24/7 எங்களோட கண்காணிப்பில் இருக்கிறார். அதனால சூழ்நிலையை புரிஞ்சுகிட்டு அவர் டென்ஷன் ஆகுற மாதிரி தயவு செய்து எந்த கேள்வியும் கேட்காதீங்க”

இது என்னடா புதிய தலைவலி என்று மனதுக்குள் அலுத்தவாறு விக்டருக்கு சிகிச்சை அளிக்கும் அறைக்கு சென்றார் விஜயா.

அவர் அறைக்கு வருவதற்கு முன்பே அங்கிருக்கும் அனைவரையும் வெளியே போக சொல்லியிருந்தார் விக்டர். தாங்கள் பேசப் போகும் விஷயம் எவ்வளவு ரகசியமானது என்று விஜயாவுக்குப் புரிந்தது.

“வாங்க விஜயலட்சுமி உட்காருங்க… நீங்க புத்திசாலின்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனால் உங்க புத்திசாலித்தனம் என்னை இந்த கேஸ்ல இருந்து விடுவிக்கணும்னு நான் விரும்புறேன்”

“நான் எதுக்காக உங்களை கேஸ்ல இருந்து விடுவிக்கணும்?”

“ஏன்னா நான் இந்த குற்றத்தை செய்யல”

“எந்த குற்றம்?”

“எந்த குற்றத்தைப் பற்றி நீங்க விசாரிக்க வந்து இருக்கீங்களோ அதே குற்றம்தான்”

“நான் எந்த குற்றத்தை பற்றியும் விசாரிக்க வரலையே… ஒரு ஆக்சிடென்ட் கேஸில் நாங்க கண்டுபிடித்த கார் உங்களுக்கு சொந்தமானது என்று தெரியவந்திருக்கு. அதை உறுதி செய்திட்டு போகத்தான் வந்தேன்”

“அம்மா நீ பெரிய புத்திசாலின்னு எனக்கு தெரியும். இப்போ உன்னை ஏதாவது ஒரு சாக்கு சொல்லி அனுப்பினாலும் நீ கண்டுபிடித்து மறுபடியும் மறுபடியும் திரும்பி வருவேன்னு எனக்கு நல்லாவே தெரியும்.

நானும் பல குற்றங்கள் செய்திருக்கிறேன் அதை மறுக்கல. ஆனால் இந்த ஆக்சிடென்ட்க்கும் எனக்கும் துளி கூட சம்பந்தமில்லை. சொல்லப்போனால் அந்த நபருக்கு உதவுவதற்காக தான் என்னுடைய வண்டில போலி நம்பர் பிளேட் போட்டு கொடுத்தேன்”

“சரி சார் அதெல்லாம் விடுங்க அந்த நபர் யார் அந்த நபரின் பெயரை சொல்லுங்க”

சில வினாடிகள் அமைதிக்கு பின்னர் பயந்த குரலில் “லால்” என்றார்

” மும்பை லாலயா சொல்றிங்க” அதிர்ச்சியுடன் எழுந்துவிட்டார் விஜயா. அவரது இதயம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் லப்டப் லப்டப் என துடிக்க ஆரம்பித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page