தாமரை குளம் – 11

அத்தியாயம் – 11

“என்னம்மா சொல்ற அதெல்லாம் மருத்துவமனை  கழிவுகளா?” திகைப்புடன் கேட்டார் ராஜாராம்.

“ஆமா சார் அதற்கான ஆதாரங்களை இங்கே சமர்ப்பித்து இருக்கேன். சிலவற்றில் பில்கள் கூட இருந்தது. அதில் கிளியரா எந்த மருத்துவமனையில், எத்தனாம் தேதி, எந்த சிகிச்சைக்காக பணம் கட்டப்பட்டது போன்ற விவரங்கள் தெளிவாக இருக்கு. இந்த பண விவகாரங்களை கண்டிப்பாக அந்த மருத்துவமனை சார்ந்த நபர்கள் தான் குப்பையில் போட்டு இருக்கணும். அந்த குப்பையும் சேர்ந்து இதில் வந்திருக்கு நம்ம அதை ஆதாரமா பயன்படுத்தலாம்.”

“ஆதாரமா பயன்படுத்துறதா… இது எவ்வளவு பெரிய செய்தி தெரியுமா?  எதிர்க்கட்சிகள் எல்லாம் இந்த செய்தியை எடுத்துட்டு ஒரு மாநிலத்துக்கு எதிரா திரும்பினா என்ன ஆகிறது? இரண்டு  மாநிலங்களுக்கும் பதட்டத்தை விளைவிக்கும் அளவுக்கு சென்சிட்டிவான விஷயம்.  இத கமுக்கமா தான் கையாளனும் எடுத்தோம் கவுத்தோம்னுட்டு ஆதாரங்களை சமர்ப்பித்து கேஸ் போட முடியாது”

தெரியும்யா இப்படித்தான் நீ சொல்லுவேன்னு. மாநிலங்களுக்குள்ள பிரச்சனை  உண்டாகுமோ இல்லையோ உனக்கும் உன் பிரண்டு அந்த டாக்டர் சிங்காரத்துக்கும் கண்டிப்பா பிரச்சனை உண்டாக்கும். அதனால நீ பிரச்சனையை கமுக்கமா க்ளோஸ் பண்ண தான் பார்ப்ப… அதுக்காகத்தான் முன்னேற்பாடுகள் எல்லாம் பலமா செஞ்சுட்டு வந்து இருக்கேன் என்று மனதினுள் நினைத்துக் கொண்டார் விஜயா.

“சரி சார் அப்ப சொல்ல வேண்டாம். மீடியா எல்லாம் இதை சைக்கோ கொலைன்னே சொல்லட்டும். நம்ம அதுக்கு தகுந்த மாதிரி பிரச்சனையை எப்படி ஹாண்டில் பண்ணனும்னு சொல்லுங்க. நான் அப்படி ஹாண்டில் பண்ணுறேன்”

ஏற்கனவே சைக்கோ கொலைகாரனை கண்டுபிடி என்று அமைச்சர் அழுத்தம் தந்ததும், அதன் பொருட்டே இன்று மாலை செய்தியாளர் சந்திப்பில் மேலும் முக்கிய தகவல் சொல்கிறேன் என்றும் சொன்னது ராஜாராமுக்கு ஞாபகம் வந்தது. சரியான இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டார்.

அதற்கு தகுந்தார் போல் அவரது அலைபேசியில் சிங்காரம் வர, இப்பத்தான் இந்தம்மா  கண்டுபிடிச்சுருக்கு அதுக்குள்ள எப்படித்தான் இவன் ஸ்மெல் பண்ணனான்னு தெரியலையே என்று யோசித்தபடி

” கொஞ்சம் வெளியில இருங்க. நான் கூப்பிடுறேன்” என்று சொல்லிவிட்டு சிங்காரத்தின் போனை அட்டென்ட் செய்தார் ராஜாராம்.

மனதினில் சிரித்தபடியே வெளியே அமர்ந்த விஜயா  குண்டு சம்பா நியூஸில் தலைப்புச் செய்திகளாக ஓடிக்கொண்டிருந்த ‘தாமரைக் குளம் எப்போது கழிவுக்  குளமானது’ என்ற செய்தியை மொபைலில் பார்த்துக் கொண்டிருந்தார்.

‘பரவால்ல சவுண்ட் எபெக்ட், கிராபிக்ஸ் சேர்த்து, குப்பை வரும் ரூட் மேப்பை வேற போட்டு சூப்பரா செஞ்சிருக்கான் அதுவும் இவ்வளவு குறைந்த  நேரத்தில்… திறமைசாலி தான் அருள்’ என்று மனதினில் பாராட்டி கொண்டார்.

கதவை திறந்து கொண்டு ஆவேசமாக வெளியே வந்த ராஜாராம்

“என்ன நடக்குது? எப்படி மீடியாவுக்கு இந்த தகவல் எல்லாம் போனது? தாமரைக் குளமும் கழிவுகளும்னு மருத்துவமனை பேர் எல்லாம் போட்டு நியூஸ் வந்துட்டு இருக்கு. எப்படி அவங்க காதுக்கு விஷயம் போணுச்சு?”

என்று காட்டுக் கூச்சல் போட, அங்கிருந்த அனைவரும் தங்களது வேலையை நிறுத்திவிட்டு எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல என்று கத்தும் ராஜாராமை கவனிக்க ஆரம்பித்தனர்.

அவருக்கு மாறாக, அமைதியின்  சொரூபமாய் விஜயா

“எனக்கு எப்படி சார் அது தெரியும்? எப்படி கொலை நடந்தப்ப மீடியா நியூஸ் போட்டுச்சோ அதே மாதிரி இதையும் எப்படியோ கண்டுபிடிச்சு இருக்காங்க. நாங்களும் எங்களால ஆன வரைக்கும் தகவல் லீக் ஆகாமதான் பாத்துட்டு இருக்கோம். இருந்தாலும் மீடியாவை எங்களால் கண்ட்ரோல் பண்ண முடியல. நம்மள விட டெக்னாலஜிலயும் அவங்க கில்லியா இருக்காங்க. எப்படித்தான் கண்டுபிடிக்கிறாங்கன்னு தெரியலையே… வேணும்னா இந்த வீடியோ ஆள கூப்பிட்டு வந்து நாலு மிதி மிதிக்கட்டுமா”

“ஏன் போலீஸ் அராஜகம்னு என்னை தூக்கி போட்டு மேலதிகாரிகள் மிதிக்க வா”

பற்களை நறநறவென கடித்தார் ராஜாராம்.அவரே சில மக்களிடம் நைசாக சொல்லி இந்த கேசில் விஜயாவை இழுத்து விட்டு பேரைக் கெடுத்து விடும்படி சொல்லி இருந்தார். ஆனால் இந்த உலகமே இப்போது இவருக்கும் சிங்காரத்துக்கும் அல்லவா எதிராக திரும்பி நிற்கிறது. இரு பக்கமும் கூர்மையான இந்த கத்தியை என்ன செய்வது?

“சார் நீங்க கூட மீடியா மீட்டிங் சொல்லி இருக்கீங்க எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க “என்று அவரிடம் ஒருவர் நினைவூட்ட

இன்னொருவர் “சார் அமைச்சர் உங்களை அவசரமா கூப்பிட சொன்னாரு உங்கள உங்கள ரீச் பண்ண முடியலையாம்”

வந்த வேகத்தில் அறைக்குள் ஓடினார் ராஜாராம். இந்த விஜயாவ ஒழிக்கணும்னு பார்த்தா நமக்கு எதிரா எல்லாமே திரும்பிட்டு இருக்குதே மனதில் திட்டிக் கொண்டே இருந்தாலும் பவ்யமாக போனில் “சார் சொல்லுங்க, சார், ஆமா சார்” என்று தணிந்த குரலில் பேச ஆரம்பித்தார்.

வெளியே வந்தவர் விஜயாவை முறைத்துக் கொண்டே செய்தியாளர் சந்திப்பிற்கு சென்றார்.

“இங்க பாருங்க இன்வெஸ்டிகேஷன் நடந்துட்டு இருக்குது. ரொம்ப டீப்பான கேள்விகள் கேட்க வேண்டாம், அது இந்த கேசுக்கே எதிராக திரும்பலாம்”

“மருத்துவமனை கழிவுகள் தாமரை குளத்தில் கொட்டப்படுறதா செய்திகள் கிடைத்தது அது உண்மையா சார்”

கொலையை பத்தி கேப்பான்னு பார்த்தா கரெக்டா மருத்துவமனை கழிவு பத்தி கேக்குறாங்களே… இப்ப கொலையை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்த நியூஸ் பரவுவதை தடுக்கவே முடியாது என்பதை ராஜாராம் உணர்ந்து கொண்டார். இது இவர் மேல் பழி கொண்டு வருவதற்கும் நிறைய சான்சஸ் இருக்கிறது. இந்த சிங்காரம் கிளப்பில் பிரண்ட் என்பதால் அவன் செய்யும் தகிடுதத்தங்களை கண்டுகொள்ளாமல் விட்டது இவரது வேலைக்கு வேட்டுவைத்து விடும் போலிருக்கிறது. சரி நாம் தப்பிக்க வேண்டும் என்றால் சிங்காரத்தை மாட்டி விட வேண்டியதுதான்.

“ஆமாம் அது வருத்தத்துக்குரிய விஷயம். நாங்களும் இது ஒரு கொலை என்று நினைத்து தான் மூட்டை எல்லாம் பார்த்தோம். ஆனால் கழிவுகள் எங்கிருந்தோ கொட்டப்பட்டு இருக்கு அதை பத்தின விவரங்களையும் ஆதாரங்களையும் சேகரிக்க தொடங்கி இருக்கிறோம். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தயவு தாட்சண்யம் இன்றி தண்டிக்கப்படுவார்கள்.”

“சார் அதான் மீடியால எந்த ஹாஸ்பிடல் அப்படிங்கிற லேபிள் கூட தெளிவா போட்டு இருக்காங்களே. அது கூட இங்கே இருக்கிற ஒரு ஃபேமஸான மருத்துவமனை கூட ரொம்ப நெருக்கம்   என்று சொல்றாங்களே… கைது செய்ய ஏன் தாமதம்?”

“இங்க பாருங்க நீங்க என்ன வேணாலும் சொல்லலாம். ஆனால் எங்களை பொறுத்தவரைக்கும் ஸ்ட்ராங்கான எவிடன்ஸ் தேவை. இப்ப மீடியால வந்த செய்தியை நம்பி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. நாங்க ஆதாரங்களை பாக்கணும், அதோட உண்மை தன்மையை பரிசோதிக்கணும், அதற்கு அடுத்த கட்ட நடவடிக்கைகளை அப்புறம்தான் யோசிக்க முடியும். இப்போது இருக்கிற டெக்னாலஜியில ஒரு போலியான கடிதத்தையோ, வீடியோவோ இல்லை  புகைப்படத்தையோ கூட ரெடி பண்ண முடியும். அதனால இந்த மீடியா நியூஸ் வெச்சு நீங்க எந்த ஒரு முடிவுக்கு வந்திர முடியாது”

“இத பத்தின தகவல்கள் மேற்கொண்டு எப்ப சார் எங்களுக்கு கிடைக்கும்?”

“விரைவில்…  ஆதாரங்கள் கிடைத்தவுடன் எங்களோட அடுத்த கட்ட நடவடிக்கைகளை இதே மாதிரி ஒரு மீட்டிங் வச்சு உங்ககிட்ட பகிர்ந்துக்கிறேன். வேற ஏதாவது கேள்வி”

அவ்வளவாக கேள்விகள் இல்லை

அங்கே இருந்த சற்று பழக்கமான நிருபரிடம் ” ஏன்யா இந்த தாமரை குளம் கொலை பற்றின செய்திகள் வேண்டாமா? அதுக்காக தானே இந்த மீட்டிங்கே”

“அட போங்க சார் அது நேத்தைய நியூஸ். நல்லா ஆறி பழைய கஞ்சி ஆயிடுச்சு. நடந்ததை பார்த்தா  சைக்கோ கொலை மாதிரி  இன்ட்ரஸ்டிங்காவும் தெரியல. இனிமேல் மக்கள் ஃபாலோ பண்ண மாட்டாங்க. குளத்தில் விழுந்த அந்தக் காரைப் பத்திக் கூட ‘உங்க கன்டன்டுக்காக ஆக்சிடென்ட் கேஸ் எல்லாம் சைக்கோ கொலைன்னு போட்டு ஏன்யா பொய்யா பீதிய கிளப்புறீங்க’ன்னு கமெண்ட்ஸ்ல கழுவி கழுவி ஊத்துறாங்க. மீறிப் போட்டால் ஸ்கிப் பண்ணிட்டு போயிட்டே இருப்பாங்க.

இன்னிக்கு நியூஸ் மருத்துவ கழிவுகள். அதைப்பத்தி அப்டேட் கேக்க தான் நாங்க வந்தோம். யாருக்குமே தெரியாத சம்பாவோ கும்பாவோ, சுண்டைக்காய் சேனல்ல இதைப்பற்றி தகவல் வந்திருக்கு. எங்கள மாதிரி பெரிய சேனல்ல வரலைன்னா எங்களுக்கு மரியாதை என்ன ஆகிறது? சோ நேத்தைய நியூஸோட இன்னைக்கு சுடச் சுட இருக்கிற நியூஸ போட்டா தான் எங்களுக்கு மதிப்பு”

தமிழ் சமூகமும் என் உலகமே இப்படி நியூஸ் பசியில் வெறி கொண்டு அலைந்து கொண்டிருப்பதை தன்னால் தடுக்க முடியாது என்ற எண்ணி மனதை தேற்றிக்கொண்டவாறு அடுத்த கட்ட நடவடிக்கைகளை யோசிக்க ஆரம்பித்தார்.

கோபத்தை எல்லாம் விஜயாவிடம் காட்ட வேண்டும் என்று ஆத்திரம். ஆனால் இப்போது பலருக்கு அவர் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது. முக்கியமாக அவரது நண்பருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கிறது. ஏனென்றால் சிங்காரம் தானே அந்த கேரள மருத்துவமனையிடம் பார்ட்னர்ஷிப் போட்டுக் கொண்டு கழிவுகளை எல்லாம் இங்கு கொட்டுவதற்கு வழிவகை செய்திருக்கிறார். இதில் சிங்காரத்தின் மருத்துவமனை மட்டுமன்றி இன்னும் சில மருத்துவமனைகளும் ஈடுபட்டிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் அவருக்கு தெரிவித்தன. அதனால் இந்தக் காட்டுத்தீ தாமரைக் குளத்தில் ஆரம்பித்து தென் மாவட்டம் முழுவதும் பரவும்.

மறுநாள் மந்திரியே நேரில் வருவதாக சொல்லி இருக்கிறார். அரசாங்கத்தின் பார்வைக்கு வந்து விட்டதால் சிங்காரம் இனிமேல் தப்பவே முடியாது.இந்த விஜயா மட்டும் சற்று கவனமாக இருந்திருந்தால்  இவரும் இவரது நண்பர் சிங்காரமும் எப்படியாவது தப்பித்து இருப்பார்கள். இப்பொழுது  நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம்.

“என்ன விஜயா புத்திசாலித்தனமா நடந்துக்குதா நினைப்பா? நான் தந்த மூன்று நாள் கெடுல ஒரு நாள் இன்னையோட முடியுது. இன்னும் ரெண்டு நாள்ல நீ அந்த ரெண்டு கேஸ் பத்தின விவரங்களை சமர்ப்பிக்கிற இல்லாட்டி உன்னோட ராஜினாமா கடிதத்தை சப்மிட் பண்ற. எது வேணும்னு நீயே முடிவு பண்ணிக்கோ”

ஆயாசத்துடன் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து ஜீப்பில் அமர்ந்தார் விஜயா.

அல்லியை அழைத்து “கலரூபம்ல இருந்து ஏதும் தகவல் வந்துச்சாம்மா”

“வந்திருக்கு மேடம் ஆனால் பாதி காய் பாதி பழமா இருக்கு. இப்ப முட்டு சந்தில் எந்த பக்கமும் போக வழி இல்லாம முட்டிக்கிட்டு நிக்கிற மாதிரி இருக்கு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page