Tamil Madhura யாழ் சத்யாவின் 'இரு மலர்கள்' யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 7’

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 7’

அத்தியாயம் – 07

காதலெனும் தேர்வெழுதி

 

அன்று மாலையிலும் சந்திரஹாஸனே வந்து இருவரையும் வீட்டுக்கு அழைத்து சென்றார்.

 

 

அவர்கள் வருகைக்காகவே காத்திருந்த அருண்யா அவர்கள் காரை விட்டு இறங்க முதலே பரபரத்தாள். 

 

 

அக்கா… ராக்கிங் எல்லாம் என்ன மாதிரி? என்ன செய்யச் சொல்லி கேட்டவங்கள்? ஏதும் பேசினவங்களே? நீ அழுதியா? அஞ்சலி அக்காவை என்ன கேட்டவங்கள்?” 

 

 

மூச்சு விடாமல் படபடத்தவளை தெய்வநாயகியின் குரல் அடக்கியது. 

 

 

ஒழுங்காக படிச்சுப் பாஸ் பண்ணி கம்பஸ்க்குப் போனால் உன்னையும் ராக்கிங் பண்ணுவாங்கள். என்ன கேப்பாங்கள் என்று உனக்கே அப்பேக்க தெரிய வரும். அதை விட்டிட்டு களைச்சு விழுந்து வாறவளை உள்ளேயும் வர விடாமல் வாசலில வைச்சே வம்பளக்கிறாய். டேர்ம் டெஸ்ட் தொடங்கப் போகுது. இந்தப் பிள்ளைக்கு எப்பவாச்சும் படிப்பு நினைப்பு வருதே. எந்த நேரமும் வம்புக்கு தான் அலையுறது. உன்னைப் பெத்த நேரத்துக்கு ஒரு தென்னம்பிள்ளையை பெத்து வளத்திருந்தாலும் இந்நேரத்துக்கு காய்ச்சிருக்கும். ஒரு வீட்டு வேலை செய்யத் துப்பில்லை. புதினமறிய வந்திட்டா பெரிய மனுசி.”

 

 

அருண்யா தேங்காய் துருவித் தர மாட்டேன் என்ற கோபத்தை தன் அர்ச்சனை மூலம் வெளிப்படுத்தினார் அவள் அன்புத் தாயார்.

 

 

வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்தால் அருணிக்குத் தான் அன்றைக்கு தூக்கம் வராதே.

 

 

ஏனணை…. உங்கட குணம் தானே எனக்கும் வரும். நீங்கள் பக்கத்து வீட்டு சாந்தி அக்காவோட கோயிலுக்கு யார் எந்த நகை போட்டு வந்த? எந்த சாரி கட்டி வந்த? என்று கதைப்பியளே அதுக்குப் பேர் வம்பில்லாமல் என்னவாம்? தோட்டத்தில வைச்ச தென்னை மட்டும் ஏதோ காய்ச்சுக் கொட்டுதாக்கும்… ஏதோ நான் தான் என்னைப் பெறுங்கோ என்று இவட்ட வந்து கெஞ்சின மாதிரி ஒரு கதை எப்ப பாத்தாலும்…” 

 

 

என்று சுடு சட்டியில் போட்ட பொப்கோர்னாக  பொரிந்தவள் தந்தையிடம் திரும்பி,

 

 

அப்பா! நீங்கள் பேசாமல் இந்த மனுசிய டைவேர்ஸ் பண்ணிடுங்கோ. எப்ப பாத்தாலும் என்னை ஏசின படி…  மனுசரை ஒரு நிமிசம் நிம்மதியா இருக்க விடாமல் ஒரே ஆக்கினை… நான் உங்களுக்கு வேற நல்ல பொம்பிளையாப் பாத்துக் கட்டி வைக்கிறன்…” என்றாள்.

 

 

இதற்கு பதில் கூறி மனைவியிடம் மண்டகப்படி வாங்கத் தயாராக இல்லாத சந்திரஹாசன் வழக்கம்போல சிரிப்புடன் “நீயாச்சு உன் அம்மாவுச்சு” என்று கூறி விட்டு உள்ளே போய் விட்டார். கவியும் உள்ளே சென்று விட தாயில் இன்னும் கோபம் அடங்காதவளாய் வாயில் படியிலேயே அமர்ந்து விட்டாள் அருண்யா. 

 

 

பொழுது படுற நேரத்தில வாசலில இருந்து என்ன பராக்கு பார்க்கிறாய்

போய் படி பாப்பம்”

 

 

திரும்பவும் அவளை கண்டித்து விட்டு உள்ளே சென்றார் தெய்வநாயகி. அவர் செல்லும் வரை காத்திருந்து விட்டு நேராக கவியின் அறைக்கு சென்று கிணற்றடியில் குளிக்க சென்றவளின் வருகைக்காக காத்திருந்தாள்.

 

 

குளித்து முடித்து இலகுவான பருத்தி இரவுடையுடன் வந்த கவி துவாலையை தாங்கியில் போட்டு விட்டு இவளருகே கட்டிலில் வந்தமர்ந்தாள்.

 

 

ப்ளீஸ் அக்கா… அந்த மனுசி திரும்ப கத்த முதல் என்ன நடந்த என்று கெதியா சொல்லு… தெரியாட்டில் எனக்கு மண்டையே வெடிச்சிடும்”

 

 

தங்கையின் குணம் அறிந்தவள் அவளை மேலும் காக்க வைக்காமல் முகாமைத்துவ மாணவர்கள் அழைத்து தேவாரம் பாடச் சொன்னது, பிறகு நீல சேர்ட்காரனுக்கு ஐ ல் யூ சொல்லச் சொல்லி ஏசினது. அழுது கொண்டே போய்ப் பார்க்க ஸாம் நீல சேர்ட்டோடு இருந்தது. பின் தான் நிரோஜனுக்கு பூக் கொடுத்தது என்று அனைத்து சம்பவங்களையும் சொல்லி முடித்தாள்.

 

 

ஆர்வத்துடன் கேட்டவள், “நீ செய்தது தான் சரி அக்கா… ஸாம் அண்ணா தன்ர வாயால சொல்லுற வரைக்கும் நீ வாய் திறக்காதை… நீ ஏன் வழிஞ்சு கொண்டு போகோணும்… அவரா வரட்டும். ..” என்று பெரிய மனுசியாக தமக்கைக்கே அறிவுரை சொன்னவள்,  

ஸாம் அண்ணாட பிளானா இருக்குமோ? உன்னை சொல்ல வைக்கிறதுக்கு?” என்று தன் சந்தேகத்தைக் கேட்டாள்.

 

 

இல்லடி… என்னை கண்டதும் அவரும் முதல் திகைச்சுப் போனார். நம்பேலாமல் தான் நின்றார். அதால அவரிட ஐடியா இல்லை. நான் நினைக்கிறன் அவரோட கூட சுத்துற மற்ற மூணு வானரங்களிட வேலையா இருக்கும். என்னை முதலே கண்டிட்டு மற்ற பொடியளிட்ட சொல்லி இருக்கிறாங்க போல” என்று சரியாகவே ஊகித்தாள் கவி.

 

 

அதுசரி… உங்கட பக்கல்டில ராக் பண்ணேலையோ?” 

 

 

இல்லடி…. இவங்கள் நல்லா மினக்கெடுத்திப் போட்டாங்கள்…. நாங்கள் போக ஒறியென்டேசன் புறோகிறாம் தொடங்கிட்டு…. நாளைக்கு இனி யாரிட்ட மாட்டுறமோ?” என்று ஒரு பெருமூச்சை வெளியேற்றினாள் கவி.

 

 

அதெல்லாம் இனி கவலைப் படாத அக்கா… ஸாம் அண்ணா இனி பத்திரமா உன்னை பாத்து கொள்ளுவார்…” 

 

 

அருணியின் பேச்சுக்கு ஆமோதிப்பாய் தலை அசைத்தாள் கவி. அவள் மனதினுள்ளும் அதே எண்ணம். 

 

 

அக்காவும் தங்கையும் ரகசியம் கதைச்ச காணும்… ரெண்டு பேரும் சாப்பிட வாங்கோ… இஞ்சருங்கோ… நீங்களும் வாங்கோ… உந்த பேப்பரை பிறகு வாசிக்கலாம் தானே… வீட்டுக்கு வந்தாலே மாறி மாறி ஒவ்வொரு பேப்பராகத் தூக்கிடும்  இந்த மனுசன்”

 

 

தெய்வநாயகியின் குரலுக்கு அனைவரும் சாப்பாடு மேசைக்குச் சென்றனர். இரவு உணவு அனைவரும் சேர்ந்து உண்பது அந்த வீட்டின் எழுதப்படாத சட்டம். 

 

 

புட்டும் சுறா மீன் குழம்பும் சுறா வறையும் கவிக்கும் சந்திரஹாசனுக்கும் பரிமாறி விட்டு முட்டைப் பொரியலும் இடித்த கட்டைச் சம்பலும் அருணிக்குப் பரிமாறினார். 

 

 

ஆம். என்ன தான் அருண்யாவோடு எப்போதும் சண்டை போட்டாலும் அவளுக்கு பிடித்த உணவுகளை சளைக்காமல் செய்து பரிமாறுவார். 

அவளுக்கு மீன் பிடிக்காது என்று சம்பலும் செய்து முட்டையும் பொரித்திருந்தார்.

 

 

அனைவரும் சாப்பிடவே தெய்வநாயகி கவியை மெதுவாக,

 

 

ஏன் பிள்ளை… பொடியள் ஏதும் உன்னை அழ வைச்சவங்களே… ஒண்டும் பிரச்சினை இல்லத் தானே… மாமாட்ட ஒரு வார்த்தை சொல்லி வைக்கவே… உன்னை கவனமாக பாக்க சொல்லி…” என்று ஒரு அன்னைக்கே உரிய கவலையுடன் கேட்டார். 

 

 

இல்லம்மா… அதெல்லாம் பெருசா ஒரு பிரச்சினையும் இல்ல… நீங்கள் மாமாவிடம் ஒண்டும் சொல்ல வேண்டாம்…”

 

 

தன்னவன் அங்கே இருக்கும் போது வேறு யார் அவளைக் காப்பாற்றிட முடியும்? தெய்வநாயகியின் அண்ணன் யாழ் பல்கலைக்கழகத்தில் தான் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். 

 

 

அவ்வளவு நேரமும் அமைதியாக இருந்த சந்திரஹாசன் வாயைத் திறந்தார். 

 

 

கவி! சனிக்கிழமை உம்மட உடுப்பு சாமான் எல்லாம் கொண்டு போய் றூம்ல வைப்பம். அஞ்சலிட்டயும் சொல்லும்.  அதுவரைக்கும் நான் கொண்டு போய் விடுறன்”

 

 

ஓகேப்பா… ஆனால் நாங்க பஸ்ல போய் வாறம். .. நாலு நாள் தானேப்பா… நீங்களும் ஒபிஸ்க்கு போற. வீணாக அலைய வேணாம்” என்று தந்தையின் நேரம் தவறாத கடமை உணர்ச்சி தெரிந்து சொன்னாள்.

 

 

பஸ்ஸில இடிபட்டுக் கொண்டு போகப் போறியேம்மா?” கவலையுடன் கேட்ட தாய்க்கு,

 

 

எல்லா பிள்ளையளும் போகுதுகள் தானேம்மா…. காரில போறது கண்டால் அதுக்கு தனியா ராக் பண்ணுவாங்கம்மா…” என்று பதிலுரைத்தாள் கவி.

 

 

அதுவரைக்கும் ஏதோ யோசனையாக புட்டிலே படம் கீறிக் கொண்டிருந்த அருண்யா,

 

 

அப்பா… சனிக்கிழமை அஞ்சு மணிக்கு பிறகு போங்கோ… அப்பதான் நான் ரியூசனுக்கும் போய்ட்டு வரலாம்”

 

 

ஏன்… நீ போய் என்ன செய்யப் போறாய்?” கொஞ்சம் காட்டமாக கேட்ட தாய்க்கு,

 

 

அக்காவுக்கு சாமான் எல்லாம் அடுக்கி குடுக்க வேணாமே…” சொன்னது தான் தாமதம் தெய்வநாயகி மறுபடியும் ஆரம்பித்து விட்டார். 

 

 

முதல்ல உன்ர அறையை போய் அடுக்கு… எடுத்த சாமான் எடுத்த இடத்தில வைக்கிறேல்ல. பள்ளிக்கூடத்தால வந்து கழட்டி எறிஞ்ச வெள்ளைச் சட்டை கட்டில்ல கிடக்கு… பிறகு அதை தூக்கி நிலத்தில போட்டிட்டுப் படுக்க வேண்டியது… சப்பாத்து ஒரு இடம், சொக்ஸ் ஒரு இடம்… மொட்டைத் தலை இழுத்த சீப்பு இங்க சாப்பாட்டு மேசையில இருக்கு… பள்ளிக்கூட ஃபாக் ஹோல் ஸோபாவில… ரியூசன் கொப்பி இன்னும் சைக்கிள் கூடைக்க… இவ போய் அவளுக்கு றூம் அடுக்கிக் குடுக்கப் போறாவாம்…”

 

 

இப்ப எதுக்கு மனுசரை சாப்பிட விடாமல் கத்துறியள்? அக்காட றூமைப் பாத்திட்டு அப்பிடியே ரியோவில ஐஸ்கிரீம் குடிக்க தான் போறன்… அதில உங்களுக்கு என்ன பிரச்சினை?” என்று தான் செல்லும் உண்மை காரணத்தைப் போட்டுடைத்தாள் அருணி. 

 

 

அப்பிடிச் சொல்லுடி என் ராஜாத்தி… நீயாவது றூம் அடுக்கிக் குடுக்கப் போறதாவது… நீயெல்லாம் வாறவனிட்ட நல்லா நாலு வாங்கி தான் திருந்துவாய்…”

 

 

சராசரி தாயாக சாபம் போட்ட தெய்வநாயகியும் வாயடித்துக் கொண்டிருந்த அருண்யாவும் தங்களை அங்கே விதி பார்த்து சிரித்துக் கொண்டிருந்ததை அறியவில்லை. 

 

 

அங்கே ஸாம் வீட்டில்…

 

 

அடுத்த நாள் மதியத்துக்கு பின்பே விரிவுரைகள் இருந்தமையால் விடுதியில் தங்காமல் வீட்டுக்கு வந்திருந்தான். டிவிடியில் ஜெயம் படம் ஓடிக் கொண்டிருக்க கையில் ரிமோட்டை சுழற்றிக் கொண்டு சிந்தனை வயப்பட்டவனாக விட்டத்தில் பார்வையைப் பதித்திருந்தான். 

 

 

அவனின் மோன நிலையை பார்த்தவாறே அருகில் சென்று அமர்ந்தார் அந்தோனி. 

 

 

என்ன தம்பி! யோசனை பலமாக் கிடக்கு? எந்தக் கோட்டையை பிடிக்க திட்டம்? அல்லது ஏதும் கப்பல் கவிழ்ந்து போச்சோ?” சிரித்தவாறு கேட்டார் தந்தை.

 

 

அவர் மடி மீது தலை வைத்துப் படுத்துக் கொண்டவன்,

அப்பா… உங்களிட்ட ஒரு விசயம் சொல்ல வேணும்…” என்று இழுத்தான். 

 

 

என்னப்பன் வேணும்? மோட்ட சைக்கிள் எடுக்கப் போறன் என்றாய்… எப்ப காசு எடுத்து தர…? அல்லது சோதினை ஏதும் ஃபெயில் விட்டிட்டியோடா மோனை?” 

 

 

கரிசனமாய் கேட்டவரிடம்,

 

 

என்னைக் கொஞ்சம் சொல்ல விடுங்கோவன்”

 

 

சரி… சரி… நீயே சொல்லு கண்ணா…”

 

 

அப்பா… நான் ஒரு பிள்ளையை விரும்புறன் அப்பா…”

 

 

என்னடா தம்பி சொல்லுறாய்?” கொஞ்சம் அதிர்ச்சியாகவே கேட்டார். ஆனால் அந்த தந்தையின் அதிர்ச்சி மகன் காதலிக்கிறான் என்பதற்காக இல்லை. காதலிக்கும் அளவு மகன் பெரியவனாகி விட்டதை தான் இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை என்பதனால் விளைந்தது. 

 

 

பத்து வயதில் தாயை இழந்து நின்ற கடைக்குட்டி மகனிடம் அவருக்கு பாசம் கொஞ்சம் அதிகமே. அவனும் எல்லாவற்றிற்கும் அப்பா.. அப்பா.. என்று அவர் காலையே சுற்றுவான். அன்னையின் பாசத்தையும் முடிந்தளவு அவரிடமே பெற முனைந்தான்.

 

 

இப்ப எதுக்குப்பா ஷொக் ஆகிறிங்க?”

 

 

இல்லையடா… நீ அவ்வளவு வளந்திட்டியா என்று பாக்கிறன்…”

 

 

அப்பா… நான் கம்பஸ் செகண்ட் இயர் படிக்கிறன். நான் ஒண்ணும் சின்ன பிள்ளை இல்லை” செல்லமாய் முறுக்கியவனிடம்,

 

 

இப்ப நீ லவ் பண்ணிறதில என்ன பிரச்சினை? எதுக்கு இப்ப மோட்டைப் பார்த்து யோசித்து கொண்டிருக்கிறாய்? அண்ணாவங்கள் பேசுவாங்கள் என்று பயப்பிடுறியே… அவங்களை விடு… நான் பார்த்துக் கொள்ளுறன்..”

 

 

தோளுக்கு மிஞ்சியவன் தோழன் என்று ஒரு தந்தையாக இல்லாமல் நண்பனாக அவன் காதலுக்கு பச்சை கொடி காட்டினார் அந்தோனி. 

 

 

அதுசரி… ஆர் பிள்ளையடா? கம்பஸில கண்டனியோ? போட்டோ இருந்தால் காட்டன். அப்பாவும் மருமகளைப் பாக்கிறன்” 

 

 

எல்லாம் உங்களுக்கு தெரிஞ்ச ஊர் பிள்ளை தான்”

 

 

நீ காதலிக்கிற அளவு எங்கட ஆக்களுக்க ஒருத்தரும் இல்லையே…” என்று வாய் விட்டே யோசிக்க, எழுந்து சென்று கவியின் புகைப்படத்தை கொண்டு வந்து தந்தையின் கையில் கொடுத்தான்.

 

 

புகைப்படத்தை கூர்ந்து பார்த்தவர்,

அடே இது சந்திரஹாசனிட மூத்த பெட்டை எல்லே… டொக்டருக்கு படிக்க கிடைச்சிருக்கு என்று பேப்பரில எல்லாம் போட்டோ வந்திச்சே… என்னடா இப்பிடி குண்டைத் தூக்கிப் போடுறாய்?” கொஞ்சம் கவலையாகவே கேட்டார். 

 

 

ம்ம்… அதுதான்பா பிரச்சினை…”

 

 

அந்த பிள்ளைக்கு உன்னை பிடிச்சிருக்கோ?”

 

 

ஓமப்பா… வாயால சொல்லேல்ல… ஆனால் எனக்காகத் தான் கொழும்பு கம்பஸ் போகாமல் ஜப்னா கம்பஸ் வந்திருக்கிறாள். அவள் கண்ணாலயே தன்ர காதலை இண்டைக்கு சொல்லிட்டாள் அப்பா.”

 

 

அதெல்லாம் சரி தம்பி. அவையும் நாங்களும் வேற வேற ஆக்கள்… சமயமும் வேற… அவையிட வீட்டில ஒத்துக் கொள்ளுவினம் என்று நான் நினைக்கேலடா” கவலையாக கூறினார் அந்த பாசக்கார தந்தை. 

 

 

ஓமப்பா… நான் கவிட தங்கச்சிட்ட கடிதம் குடுத்து விட்டனான். அதை அவையிட அம்மா பாத்திட்டாவாம். தான் உயிரோட இருக்கிற வரை காதல் கத்தரிக்காய் என்ற கதைக்கே வீட்டில இடம் இல்லை என்று பேசினவவாம்”

 

 

ம்… அது தெரிஞ்ச விசயம் தானேடா… இன்னொரு பொம்பிளைப் பிள்ளையும் வைச்சிருக்கினம்… இப்பிடி சாதி, சமயம் மாறி மூத்தவளுக்கு கட்டி வைச்சால் பிறகு இளையவளை ஆர் கட்டுவாங்கள்?”

 

 

இப்ப என்னதாம்பா என்னை செய்யச் சொல்லுறிங்க? கவியை மறந்திடு என்று மட்டும் சொல்லிப் போடாதிங்கோ… அவளைத் தவிர வேற ஒருத்தரையும் நான் கட்ட மாட்டன்”

 

 

அப்பா அப்பிடி சொல்லுவனா அப்பன்? எடுத்தன் கவித்தன் என்று கலியாணப் பேச்சு பேசேல்லாது தம்பி. எப்பிடியும் அவையிட வீட்டில எதிர்ப்பு வரும்… கொஞ்சம் பொறுமையாக தான் யோசிச்சு செய்யணும் அப்பு… அப்பாட்ட சொல்லிட்டாய் எல்லோ… இனி இது அப்பாட பொறுப்பு… நீ இந்த கவலையெல்லாம் விட்டிட்டு படிக்கிற அலுவலை மட்டும் பார். ரெண்டு பேரும் கம்பஸ்ஸ முடியுங்கோ. அதுக்கு பிறகு பாப்பம். படிச்சு முடிக்க முதல் அவளுக்கு கட்டி வைக்கவா போகினம்? இல்லைத்தானே… அதால அந்த பிள்ளையையும் காதல் அது இதென்று குழப்பாமல் ஒழுங்காக படிக்க விடு… என்னப்பன் அப்பா சொல்லுற விளங்குதா?”

 

 

என்ன தான் மகன் மேல் கண் மூடித்தனமான பாசம் இருந்தாலும் யதார்த்தத்தை உணர்ந்து அதேநேரம் மகனுடைய காதலுக்கு எதிர்ப்பும் தெரிவிக்காமல் பொறுமையாக இருக்கும்படி அறிவுரை கூறினார் அந்த பாசக்கார தந்தை அங்கே தான் தான் தப்புப் பண்ணுவது தெரியாமல். 

 

 

நீங்க சொன்னால் சரிப்பா… நான் அவளைக் குழப்ப மாட்டன். படிப்பு முடியிற வரைக்கும் காத்திருப்பன். சரியா? ஓகேபா… நான் படுக்கப் போறன்..” என்று தந்தையிடம் விடைபெற்று தனது கட்டிலில் வந்து விழுந்தான். 

 

 

கவியின் புகைப்படத்தை பார்த்து, “ரெண்டு வருசமாக காத்திருந்த நான் இன்னும் நாலு வருசம் காத்திருக்க மாட்டனா? என்ர கவிக்குட்டிக்காக சாகிற வரைக்கும் காத்திருப்பன்… ஐ லவ் யூ குட்டி” என்று அவள் புகைப்படத்திற்கு ஒரு முத்தத்தை வழங்கியவன் அதை அணைத்தவாறே தூங்கிப் போனான். 

அவன் வார்த்தைகளே உண்மையாகப் போவதை பாவம் அன்று அந்த உண்மைக் காதலன்  அறிந்திருக்கவில்லை. ஆனாலும் நாளை அவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை வழங்க காலம் காத்துக் கொண்டிருந்தது.

 

 

ஸாமிற்கு நாளை கிடைக்கப் போகும் இன்ப அதிர்ச்சி என்ன

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 6’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 6’

அத்தியாயம் – 06 கவி சந்தித்தாளா ஸாமை?    கவின்யாவுக்கு பல்கலைக்கழக விரிவுரைகள் ஆரம்பமாகியது. பல்கலைக் கழக வாழ்விலே முதலாவது நாள்.      வெண்ணிற பருத்தி ஷல்வாரில் இடப் பக்கத் தோளில் ஷோலை நீள வாக்கில் போட்டிருந்தாள். இடது கையில்

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 9’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 9’

அத்தியாயம் – 9 காதல் கீதம்   அந்த வாரம் முழுவதும் பேருந்தில் தொடர்ந்தது ஸாம் – கவின்யாவின் காதல் மௌனகீதம். காலையும் மாலையும் ஸாம் குழுவினரின் பாதுகாப்போடு பல்கலைக்கழகம் சென்று வந்தாள். அஞ்சலி சுகவீனம் காரணமாக அந்த வாரம் முழுக்க

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 28’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 28’

அத்தியாயம் – 28 என்ன முடிவெடுக்கப் போகிறாள் அருண்யா?   சமையல் முடித்ததும் தோட்டத்தில் நின்றவர்களை சாப்பிட அழைத்தாள் கவின்யா. அவர்களும் கைகால் முகம் கழுவிக் கொண்டு வர, அதற்கிடையே சாப்பாட்டு மேசையில் உணவுப் பதார்த்தங்களை எடுத்து வைத்தாள்.