இன்று ஒரு தகவல் – 16

கிறுக்குசாமி கதை – யார் பொறுப்பு?

கிறுக்குசாமி அன்று தனக்குப் பிடித்தமான குதிரை வண்டியில் ஏறி பக்கத்து ஊருக்கு ஒரு முக்கியமான வேலையாகக் கிளம்பினார். அவருடன் அவரது ஊர்க்கார வாலிபன் தங்கராஜனும் இணைத்துக் கொண்டான். தங்கராஜனுக்கு பல பிரச்சனைகள். அதனால் மனம் உடைந்து போயிருந்தான்.

“மனசு முழுக்க கவலைதான் சாமி. ஆறுதல் தேடி தியானம், தவம், யோகா, இசை, நடனம் எல்லா இடத்துக்கும் போயிட்டேன். யாருமே  எனக்கு நிம்மதி தரல. என் கவலைய போக்கல. இதைப்  புரிஞ்சுக்காம எங்கம்மா அப்பா கூட என்னைத் திட்டிக்கிட்டே இருந்தால் எப்படி சாமி? பெத்தவ கூட என் மனசைப் புரிஞ்சுகிட்டு ஆறுதலா இல்லைன்னா எப்படி?” என்று புலம்பித் தள்ளிவிட்டான்.

கிறுக்குசாமி அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டே வந்தார். அதுதானே அவரது வழக்கம். இருவரும் பக்கத்து ஊருக்கு சென்று அவர்கள் வந்த வேலையை முடிக்க இரவாகிவிட்டது. மார்கழி மாதக் குளிர் வேறு நடுங்கச் செய்தது. அதற்கு மேல் பயணம் செய்ய முடியாது அவர்கள் வந்த  குதிரையும் களைத்துவிட்டது. எனவே அந்த ஊரிலேயே  தங்கிக் கொள்ள முடிவு செய்தனர்.

அந்தக் கிராமத்தில் வழிப்போக்கர்கள் தங்கும் விடுதி ஒன்றிற்குச் சென்றனர். அவர்களை வரவேற்று உபசரித்தார் அந்த விடுதியை வைத்து நடத்துபவர். விடுதி சுத்தமாக இருந்தது. சமையலறையில் இருந்து வந்த உணவின் மணம் அவர்கள் பசியைத் தூண்டியது. தங்கராஜனுக்கு வெகு திருப்தி.

ஆனால்  கிறுக்குசாமி விடுதியின் சொந்தக்காரரிடம்  “அய்யா எனது குதிரையை இங்கு நிறுத்தி இருக்கிறேன். அதனை குதிரை லாயத்தில் கட்ட வேண்டுமே”

“கவலைப்படாதீர்கள் இங்கு ஒரு அருமையான குதிரை லாயம் உள்ளது. எனது வேலையாட்கள் பத்திரமாக அதனைக் கட்டிவிடுவார்கள்”

“வெளியே குளிராக இருக்கிறதே. குதிரையைக் கட்டுமிடம் இதே மாதிரி குளிர்ந்த தன்மையோடு இருந்தா குதிரை குளிரில் நடுங்குமே”

“சே சே… குதிரை இருக்குமிடம் எல்லாம் மிக அழகாக வெப்பமாக சாக்குகள் போட்டு வைத்திருப்போம்”

“குதிரைக்கு உணவு”

“அய்யா நீங்க கவலையே படாதீங்க. அருமையான பச்சைப் புல்லை உங்க குதிரைக்கு சாப்பிடக் கொடுத்து. நல்ல ரஜாய் ஒண்ணைப் போத்தி தாலாட்டுப் பாடித் தூங்க வைப்போம். நீங்க கவலையே படாதிங்க” என்று பேசி அவர்களை விருந்தினர் அறைக்குக் கூட்டிச் சென்றார்.

இரவு உணவு கண்ணுக்கும் மனதுக்கும் அப்படி ஒரு விருந்தாக இருந்தது. “ஆஹா பிரமாதம்” என்று சப்புக் கொட்டிக் கொண்டு சாப்பிட்டான் தங்கராஜன்.

இரவு உணவு சாப்பிடும்போது கிறுக்குசாமி அவனிடம் “குதிரைக்கு ஒழுங்கா புல்லு வச்சிருப்பாங்களா”

“நமக்கே இப்படி ஒரு விருந்து வைக்கிறவங்க குதிரைக்கு சாப்பாடு வைக்காம இருப்பாங்களா?”

அவர்களது தங்கும் அறையோ பஞ்சு மெத்தையுடன் மெத்து மெத்தென்று இருக்க குறட்டை விட்டுத் தூங்கத் தொடங்கினான். நடு இரவில் ஏதோ சத்தம் கேட்டு எழுந்தவன் கிறுக்குசாமி ஜன்னல் வழியாக குதிரை லாயத்தை எட்டிப் பார்ப்பதைக் கண்டு

“குதிரைக்கு கத கதன்னு சாக்கு போர்த்தி தாலாட்டுப் பாடியே தூங்க வச்சிருப்பாங்க சாமி. நீங்க கவலைப்படாம தூங்குங்க” என்றான்.

“இருந்தும் எனக்கு கவலையா இருக்கு நான் குதிரையைப் பாத்துட்டு வரேன்” என்று வெளியே சென்றார்.

“தனியா போகாதீங்க சாமி நானும் கூட வரேன்” என்று பின் தொடர்ந்தான் தங்கராஜன்.

அங்கே குதிரை லாயத்தில் அவர்கள் கண்ட காட்சி திகைப்பூட்டுவதாக இருந்தது. குதிரை ஈரத்தரையில் பசியோடு, குளுரில் நடுங்கியபடி அமர்ந்திருந்தது.

வேகமாக அதனருகில் சென்ற கிறுக்குசாமி. அதன் மேல் சாக்கினைப் போர்த்தி, தரையை ஈரம் போகத் துடைத்து, பக்கத்தில் இருந்த புல்லை அள்ளிக் கொண்டு வந்து சாப்பிடப் போட்டார்.

“என்ன சாமி இப்படி வாய் கூசாம பொய் சொல்றாங்க?” வருத்ததோடு கேட்டான்.

“பலசமயம் அடுத்தவங்களை நம்பி பொறுப்பை விட்டால் இதுதான் கதி. தங்கராஜா இந்த குதிரைதான் நம்ம மனசு. நம்ம மனசுக்கு சந்தோஷப் படுத்துறதுக்கும் ஆறுதல் சொல்றதுக்கும் பல பேரு முயற்சி செய்வாங்க. யாராலும் முழுமையா அதுக்குத் தேவையானதைப் புரிஞ்சுகிட்டு செய்ய முடியாது. ஆனால் நம்ம கூடவே இருக்குற குதிரையோட தேவையை அறிஞ்சு அதைப் பாத்துக்க நம்மால மட்டும்தான் முடியும். அதை சரியா செஞ்சுட்டா வாழ்க்கை பயணம் நிம்மதியா இருக்கும்”

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

இன்று ஒரு தகவல் -4இன்று ஒரு தகவல் -4

கீழே உள்ள சொற்களைக் கவனியுங்கள். ஆரம்பத்தில், அவற்றைப் படிப்பதில் உங்களுக்கு சிரமம் இருக்கும். இருப்பினும், படிப்படியாக உங்கள் மூளை வார்த்தைகளை சரியாக விளக்கும். இந்த வார்த்தைகள் உங்கள் மூளையுடன் பேசுவதற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்….. 7H15 M3554G3 53RV35 7O PR0V3

இன்று ஒரு தகவல் -20இன்று ஒரு தகவல் -20

பெண்கள் அன்றைய நாட்களில் வழக்கமாக வீட்டு வேலை செய்யவும், துணி துவைக்கவும், பாத்திரம் தேய்க்கவும், சமைக்கவும் மற்றும் அழகுப் பதுமைகளாகவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். காலம் காலமாக அவர்களுக்கு பொருளாதார சுதந்திரமும், தன்னிச்சையாக முடிவெடுக்கும் சுதந்திரமும் தரப்பட்டது இல்லை. இந்த நிலை

இன்று ஒரு தகவல் -8இன்று ஒரு தகவல் -8

சமையலறையில் மரங்களின் பயன்பாடு மிகுதியாக உள்ளது. இதில் மசாலா பொருட்கள் வைக்கும் அஞ்சறைப் பெட்டி முக்கியமானது. இதனை கொடுக்காப்புளி, பலா மரங்களில் செய்வதுதான் நல்லது. ஏனெனில் இவற்றில் செய்யும் போது ஒரு அறையில் வைக்கப்படும் மசாலா பொருளின் வாசனை மற்றொரு அறையில்