தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_22’


அத்தியாயம் – 22

 

பாபு கத்திச் சென்றதற்குப் பின் கூனிக் குறுகி நின்றுவிடாமல் மனதை தனக்குத் தானே தைரியப்படுத்திக் கொண்டபடி அதினனின் வீட்டு பால்கனியில் அமர்ந்திருந்தாள் வெண்ணிலா.

யாருக்கும் சாப்பிடக் கூட மனமில்லை.

“அதினனைப் பத்தி முதல் முதலில் தப்பா செய்தி வந்தப்ப ஊரில் எல்லாரும் என்னை அத்தனை கேள்வி கேட்டாங்க. என்னால வெளிய தலை காட்டவே முடியல. அதுக்கப்பறம் அப்படியே அவன் ஒரு மாதிரின்னு முடிவு கட்டி பல செய்திகள் தினமும் வருது. நாங்களும் கடந்து செல்லப் பழகிட்டோம்” என்றார் அவனது அன்னை.

“இருந்தாலும் இந்த பாபு செஞ்சது அதிகம்தான். இப்படி ஒரு வக்கிரம் பிடிச்சவன் கிட்ட எப்படித்தான் குப்பை கொட்டினியோ”

வெண்ணிலாவின் நிர்வாணப் படங்கள் என்று சில படங்களை அவர்களது நெருங்கிய சொந்த பந்தங்களுக்கு அலைப்பேசியில் அனுப்பி இருந்தான் பாபு. அவளது சொந்தங்கள் அனைவரும் அவளது வீட்டை சுற்றிலும் சில மைல் தொலைவில் இருப்பவர்களே.

பொன்னுமணியின் வழியே அந்த செய்தி வந்த பொழுது கொதித்துப் போனார்கள் அனைவரும்.

“மார்பிங்க் பண்ணிருக்கலாம்… சைபர் க்ரைம் டீம்ல சொல்லி அவனை ஒரு வழி பண்ணிடலாம் வெண்ணிலா” ஆறுதல் சொன்னான் அதினன்.

“மார்பிங்க் பண்ணிருக்கலாம், இல்லை எனக்கே தெரியாம கூட எடுத்திருக்கலாம், இல்லை மிரட்டி கூட எடுத்திருக்கலாம் அதினன். ஆனால் அவன் இப்படி அனுப்புறது முதல் முறை இல்லை”

அதிர்ந்தான் அதினன். ஒரு குடும்பப் பெண்ணிடம் அதுவும் தனது மனைவியின் படத்தை முறையற்ற முறையில் அனைவருக்கும் அனுப்புகிறான் என்றால் எத்தனை கேவலமான இழிவான பிறவி.

“ஆமாங்க அதினன். சுத்து பத்து சொந்தக்காரங்க எல்லாருக்கும் அனுப்பிருக்கான். ஆனால் அவனுக்கு தெரியாத விஷயம் ஒண்ணு இருக்கு. எங்க சொந்தக்காரங்க எல்லாரும் இதை அப்படியே செருப்புல ஒட்டிக்கிட்ட அசிங்கம் மாதிரி தூக்கிப் போட்டுகிட்டு போய்ட்டே இருப்பாங்க”

“நிஜம்மாவா?” என்றான் நம்ப முடியாமல். கிராமம் என்றாலே இது போன்று நிகழ்வுகளால் பெண்களைக் குற்றவாளியாக்கி அவளை மனதளவில் கொன்று விடுவார்கள் என்றே நினைத்திருந்தான்.

“நிசம்தான். ஆறேழு வருசத்துக்கு முன்னாடி எங்க சொந்தக்கார பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணாங்க. அப்ப இந்த மாதிரி படம் வந்ததில் மனசு உடைஞ்சு அந்தக் குடும்பமே தற்கொலை பண்ணிக்கிச்சு. போன உசுரை திரும்ப கொண்டு வர முடியுமா சொல்லுங்க.

அதிலிருந்து எங்க பெரியவங்க எல்லாரும் ஒண்ணு கூடி இந்த மாதிரி வார போட்டோ எல்லாத்தையும் ஒதுக்கி வச்சுடணும். சொல்லப் போனா அந்தக் குடும்பத்தையோ இல்லை பொண்ணையோ இதைக் காரணமா வச்சு வேறுபாடா நடத்துறவங்களைத்  தள்ளி வச்சுடுவோம்னு தீர்மானம் போட்டாங்க. இப்பல்லாம் நிர்வாண போட்டோ, வீடியோ இப்படியெல்லாம் காமிச்சு எங்களை மிரட்ட முடியாது.”

வியப்பாக சொன்னான் அதினன் “எக்ஸ்ஸெல்லெண்ட்… உங்களை மாதிரியே நம்ம நாட்டு மக்கள் மனசெல்லாம் மாறிட்டா எவ்வளவு நல்லாருக்கும்”

“இந்த கிராமத்துல இருக்குற எங்க வயசு பசங்க எல்லாரும் ஒரே க்ரூப்பா பிறந்த மேனியா இதே புழுதில திரிஞ்சு வளந்தவங்கதான். எங்களுக்கு துணியில்லாம இந்த புள்ளைங்க படத்தை அனுப்பினா அனுப்பினவன் மேல கொலை வெறிதான் வரும். நாங்க எல்லாரும் சேர்ந்து ஒரு தடவை அந்த நாயை அடி பின்னிட்டோம். அப்பறம் எங்களால தன்னோட உயிருக்கு ஆபத்துன்னு புகார் தந்துட்டான். அதனால அடிக்கக் கூட முடியல. இருக்கட்டும் ஒரு நாள் சிக்காமலா போயிருவான் அன்னைக்கு கொத்து புரோட்டா போட்டுடுறேன்”

“தயவு செய்து அவனைப் பத்தி பேசாதிங்க. நம்ம வாழ்க்கைல ஒரு நிமிஷத்தைக் கூட அந்த நாயைப் பத்திப் பேசி வேஸ்ட் பண்ண வேண்டாம்” என்று வெண்ணிலா சொன்னது அனைவரின் மனதையும் வேறு திசை நோக்கித் திருப்பியது.

குழந்தைகளிடம் சென்று “நம்ம எல்லாரும் சேர்ந்து ஏதாவது சமைக்கலாமா?” என்றாள்.

அவளைப் பார்த்த மித்துவின் விழிகளில் பிரமிப்பு “செய்யலாம் ஆண்ட்டி”

“இன்னைக்கு எங்க ஊர் ஸ்பெஷல் ஜில் ஜில் ஜிகிர்தண்டா செய்யலாமா?”

“ஜிகிர்தண்டா, பொதி சோறு எடுத்துட்டு மலைக்கோவிலில் போய் சாப்பிடலாம்மா” என்றான் வெற்றி.

“வாவ் சூப்பர் பிளான்… எப்படி செய்யணும்”

“நான் சொல்ல சொல்ல நீ செய்வியாம். முதல்ல ஜிகிர்தண்டா நல்ல திக் பால் வேணும், சக்கரை, ஐஸ்க்ரீம், கடல் பாசி” அவள் சொல்ல சொல்ல குட்டிக்குழு தயாரானது. அப்படியே பொதி சோறும் சேர்த்து எடுத்து வைத்தார்கள்.

வாழை இலையை சூடான தோசைக்கல்லில் மெலிதாக வாட்டி அது கிழியாமல் மடங்கும் பதம் வந்ததும் அதன் நடுவில் சோறு, அதன் மேல் குழம்பு, ஓரத்தில் பீன்ஸ் கேரட்டு பொரியல், உருளைக்கிழங்கு வறுவல், ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு வறுத்து அரைத்த தேங்காய் சட்டினி, தயிர் பச்சடி, சிறிய நார்த்தங்காய் ஊருகாய் துண்டு ஒன்று இவை அனைத்தையும் வைத்து நன்றாக இறுக்கமாக மடித்து, வாழைநாரால் கட்டி அதன் மேல் செய்தித் தாளையும் பொட்டலமாகக் கட்டினார் பாக்கியநாதன்.

“பிள்ளைகளா இதுதான் கட்டு சோறு , பொதி சோறுன்னு சொல்லுவாங்க. வாழை இலை வாசம் இந்த சாப்பாட்டில் இறங்கி நம்ம சாப்பிடுற நேரத்தில் அமிர்தமா இருக்கும். இத்தனை வகை செய்ய முடியாலைன்னா கூட வெறும் எலுமிச்சை சோறும் துவையலும் வச்சுக் கட்டிக் கூட எடுத்துட்டு அழகர் கோவிலுக்கு போவோம். இந்த சுவை இதுவரைக்கும் எந்த ஹோட்டல் சாப்பாட்டுலையும் நான் பார்த்ததில்லை”

மாலை வெயில் தாழும் வேளையில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு அனைவரும் வெளியே கிளம்பினார்கள்.

அன்று முழுவதும் யாரும் சரியாக உணவு உண்ணாததால் பொதி சோறு அமிர்தம் போல ருசித்தது.

குழம்பு, பொரியல், வறுவல், துவையல், நார்தங்காய் ஊறுகாயின் கசப்பு கலந்த புளிப்பு எல்லாம் சாதத்தில்  கலந்து வெகு சுவையாக இருந்தது.

“இத்தனை ருசியான ஒரு சாப்பாடு இருக்குன்னே இப்பத்தான் எனக்குத் தெரியும்” என்றார் அதினனின் அன்னை.

“இப்பல்லாம் இதெல்லாம் மறைஞ்சுடுச்சும்மா… அந்த காலத்தில் நாங்க திருவிழாவுக்கு போனா புளிசோறு, எலுமிச்சை சோறுன்னு கட்டிக்கிட்டு கிளம்புவோம். இந்த கட்டு சோறை மலையாளத்துப் பக்கம் மீனு, கறின்னு அசைவ உணவா கூட எடுத்துட்டுப் போவாங்க. அவங்க ஊர் குளுருக்கு அதெல்லாம் ஓகே. நம்ப ஊர் வெயிலுக்கு சைவம்தான் சரிபடும்”

ஜிகிர்தண்டாவை எடுத்து வந்த டம்ப்ளர்களில் ஊற்றி தனக்கும் வெண்ணிலாவுக்கும் எடுத்து வந்து வெண்ணிலா அமர்ந்திருந்த படிக்கட்டில் அமர்ந்தாள் மித்து.

“உங்களால எப்படி இவ்வளவு தைரியமா இருக்க முடியுது ஆண்ட்டி” என்றாள் ஆச்சிரியமாக.

“ஏன் கேக்குற”

“நானும் டீன் ஏஜ் பொண்ணுதான். ரதியை விட எனக்கு விவரம் அதிகமா தெரியும்” கசப்போடு சிரித்தாள் மித்து.

“உங்களை உடல் ரீதியா துன்புறுத்திருக்காங்க. அதைவிட மனரீதியா இந்த நிமிஷம் வரை ஒரு மிருகம் துன்பப்படுத்துது. எப்படி உங்களை எனெர்ஜி குறையாம பார்த்துக்கிறிங்க?”

“பார்த்துக்கணும்னு ஏன் மனசுக்குள்ள எனக்கு நானே சத்தியம் செஞ்சிருக்கேன். நானும் விவரம் தெரியாம தவறான முடிவுகள் எடுத்திருக்கேன். கல்யாணம் அதில் மிகப் பெரிய தவறு. ஒருத்தன் தினமும் வேலை வெட்டி இல்லாம சுத்தி வந்து பரிதாப வேஷம் கட்டினதை நம்பி, குழந்தைகளை வளர்க்க இதுதான் வழின்னு நினைச்சு கல்யாணம்னு ஒரு மிகப்பெரிய கமிட்மெண்ட்ல இறங்கி இருக்கேன். அதுக்கான பலனையும் அனுபவிச்சிருக்கேன். கசப்பான அனுபவங்கள்தான் எனக்குத் தெளிவான சிந்தனைகளைக் கொடுத்துச்சுன்னு நம்புறேன் மித்து.

 

ஒரு சின்ன கதை சொல்றேன். ஆதி பராசக்தி இருக்காங்களே, உலகத்தையே படைச்சவங்கன்னு நிறைய பேர் நம்புற அந்தப் பெண் தெய்வத்தை வெல்லணும்னு ஒரு மந்திரவாதிக்கு ஆசை வந்துடுச்சாம். ஆனால் உலகத்தையே படைச்ச அந்த அன்னையை எப்படி வெல்றது. அதுக்கு ஒரு வழியைக் கண்டுபிடிச்சானாம். பராசக்தியைப் போருக்கு அழைச்சானாம். அங்க அவளைப் பலவாறா நிந்தனை செஞ்சானாம், மோசமான வார்த்தைகளால் திட்டினானாம், குறை சொன்னானாம். அவனோட ஒவ்வொரு நிந்தனைக்கும் அது உண்மை இல்லைன்னு தெரிஞ்சும் அவள் கூனிக் குறுகினாளாம், அன்னையின் சக்தி  படிப் படியா குறைஞ்சதாம்” நிறுத்தினாள்.

“அப்பறம் ஜெய்ச்சுட்டானா?”

“எப்படி அவனால் அன்னையை ஜெய்க்க முடியும். அதிலிருந்து தன்னை மீட்டு எடுத்து போராடி வெற்றி பெற்றாங்க. ஆனால் இங்க ஒண்ணை கவனிச்சியா… ஒரு பெண்ணை அவள் ஆதி பராசக்தியாவே இருந்தாலும் நா கூசத் திட்டினா அவளோட மனவலிமை குறைஞ்சுடும்னு சொல்லிருக்காங்க.

அது உண்மைதான். ஒரு சொல் தாங்காம தற்கொலை பண்ணி செத்துப் போனவதான் எங்க அக்கா. அதுக்கப்பறம் என்னாச்சு? என்னோட வாழ்க்கையும் வீணாச்சு.

மஞ்சுளா புருஷன் திட்டின ஒரு சொல் பொறுக்காம, வெற்றிக்கு தான் அப்பா இல்லைன்னு திட்டி அடிச்சிருக்கான். வெற்றிக்கு பாபுதான் அப்பா, தான் பத்தினின்னு நிரூபிக்கத்தான் செத்துப் போனாளாம். இந்த மாதிரி கொடூர மிருகத்துக்கிட்ட தன்னோட சின்ன பிள்ளைகளை விட்டுட்டு போறது அவளுக்கு துரோகமாப் படல. தான் ஒரு பத்தினினு ப்ரூஃப் பண்ணனுமாம்.

இது யாருக்கு நஷ்டம். யாருக்கு நான் பத்தினின்னு ப்ரூவ் பண்ணனும்? யோசிச்சுப் பார்த்தேன். தெளிவு கிடைச்சது. இவனோட எந்த சொல்லும் என்னை பாதிக்காம இருக்க பழகிட்டேன். தினமும் ஒரு பொம்பளை கூட சுத்துற இந்தக் கழிசடை யாரு எனக்கு நன்நடத்தை சர்டிபிகேட் தர”

மித்துவின் கண்களில் நீர் “ஆன்ட்டி யூ ஆர் க்ரேட். உங்களை மாதிரி அம்மா கிடைச்ச ரதியும் வெற்றியும் அதிர்ஷ்டசாலிங்க. அந்த வகையில் நான் மிகப் பெரிய துரதிர்ஷ்டசாலி. அந்த லஸ்யா… “ கேவினாள் மித்து.

“லஸ்யா… இந்தியாவின் சூப்பர் மாடல். அவங்களா உன் அம்மா” வியப்போடு கேட்டாள்.

ஐந்தே முக்காலடி உயரத்தில் பார்பி டால் போன்ற உடலமைப்புடன், முக ஜாடையுடன் அழகின் இலக்கணமாய்த் திகழும் லஸ்யாவா இவளது தாய்?

“அவளை அம்மான்னு சொல்லாதிங்க… ஸ்கூல்ல சில கேர்ள்ஸ் எனக்கு அம்மா யாருன்னே தெரியாதுன்னு கிண்டல் பண்ணாங்க ஆண்ட்டி. அதனால தாத்தா பாட்டிக்கிட்ட அவங்களைப் பத்திக் கேட்டேன்.

அம்மாவுக்கு நான் பிறந்து கொஞ்ச நாள்ல அழகுப் போட்டி வாய்ப்பு வந்ததாம். அந்த அழகிப் போட்டில கலந்துக்கிறவங்களுக்கு கல்யாணம் ஆயிருக்கக் கூடாதாம் குழந்தை பிறந்திருக்கக் கூடாதாம்.

அதனால எல்லாத்தையும் மறைச்சு போட்டில கலந்துக்கிட்டாங்களாம். அதில் வின் பண்ணதும் அப்படியே எங்களை விட்டு விலகிட்டாங்க.

எனக்கு அவங்கதான் அம்மான்னு தெரிஞ்சதும் அவங்களை சந்திக்கணும், அவங்க மடில படுத்துக்கணும்னு ஒரே ஆசை. எப்படியோ அவங்களோட மேனேஜர் மூலமா அவங்க நிகழ்ச்சி ஒண்ணுக்குத் தெரியாம போய் மேக்அப் ரூமில் அவங்களை சந்திச்சேன்”

Tags: ,

4 thoughts on “தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_22’”

 1. helenjesu says:

  இந்த மாதிரி கீழ் தரமான செயல்களை துணிச்சலாக எதிர்கொண்டாலும் இந்த சமுதாயத்திற்கு பயந்தே மஞ்சுளா போன்றவர்கள் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள்.

  1. Tamil Madhura says:

   Unmai thaan @helenjesu . intha nilai maaranum. Kandipa marum endru namburen

 2. bknandhu says:

  Correct dha kka. Adhuku self confident dha venum. Indha varthaiku dha evlo oru power. Story flow interesting. Waiting for u r next update kka😍😊😊😊

  1. Tamil Madhura says:

   Thanks Nandhini. Will post soon ma

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.