Tamil Madhura ஆடியோ நாவல் (Audio Novels),தமிழ் மதுராவின் 'கடவுள் அமைத்த மேடை' தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 7’

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 7’

ந்தியா உன்னை அழகுப் போட்டிக்கு கூப்பிடலைம்மா. ப்ளீஸ் சீக்கிரம் கிளம்பு” என்று மனைவி சந்தியாவைக் கிளப்பிவிட்டு சிவா தங்கியிருக்கும் இடத்திற்கு அழைத்து வந்தான் ரங்கராஜன். 

சந்தியாவின் அறுவை சிகிச்சையின் போது அவள் பெற்றோர் வரும் வரை துணைக்கு இருந்த சிவபாலனின் மேல் ஒரு இனம் தெரியாத அன்பு அவளுக்கு. சிவாவால் ஒரு தப்பு கூட செய்ய முடியாது. அவன் மனதை நோகடித்தவர்கள் ராட்சஷர்கள் என்று கணவனிடம் வாதாடுவாள். 

“ஏதேது சிவாவுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிச்சுடுவ போலிருக்கு” என்று சிரிப்பான் ரங்கா.

“என்னமோ ரங்கா அவரைப் பார்த்தா என் உடன்பிறப்பு மாதிரி, ஒரு நம்பிக்கைக்கு உரிய ஆள் மாதிரி மனசில் எண்ணம் வருது” என்று மருமொழியளிப்பாள் 

மதியம் சிவபாலன் ரங்கராஜனை அழைத்து செந்திலின் மனைவி தகராறு செய்து கிளம்பியதை சொன்னான். அத்துடன் சங்கரி தன்னிடம் பகிர்ந்து கொண்ட விவரத்தையும் சொன்னான். அதைக் கேட்டதிலிருந்து வைஷாலியை சந்திக்க அழைத்து செல்லுமாறு கணவனை நச்சரிக்கத் தொடங்கினாள் சந்தியா.

“தெரியாதவங்க வீட்டுக்குப் போயே ஆகணுமா? அப்படி என்ன அந்தப் பொண்ணைப் பாக்கனும்னு வேண்டுதல்?”

“இன்னைக்கு விட்டா அடுத்த வாரம் தான் உங்களுக்கு டைம் கிடைக்கும். நான் அந்த வைஷாலியைப் பாத்தே ஆகணும். நர்த்தனாவோட இவ எந்த விதத்தில் அழகுன்னு கம்பேர் பண்ணனும்”  

“அடிப்பாவி இதுக்குத்தான் வர்றியா? சிவா மேல இருக்குற அக்கறைல வரேன்னு நினைச்சேன்… “ நிறுத்தியவன் 

“சந்தியா என் மனசில் ஒண்ணு தோணுது” என்று தொடர்ந்தான்.

நிறுத்தும்படி சைகை காட்டினாள் சந்தியா “உங்க மனசில் என்ன தோணுதுன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. நான் அனுமதி தரும் வரை எந்த எண்ணமும் தோணக் கூடாது. புரிஞ்சுதா”

“எஸ் யுவர் ஆனர்” எனத் தலையாட்டினான். 

அவள் சிரித்தால் ஒரு பூ மலர்வதைக் கண்ணெதிரே கண்டதைப் போலிருக்குமாம். இப்போது சிருப்பின் சுவடு கூட அந்த முகத்தில் இல்லை. வைஷாலி கடுமையான குணத்தை மட்டுமே காட்டியதாய் சிவா சொல்லி இருக்கிறான். சந்தியா ஏற்கனவே துடுக்கானவள். ஏதாவது பேசி பிரச்சனையாகி விட்டால் என்று பயந்தவாறே அழைத்துச் சென்றான். 

வீட்டிற்கு வந்தவர்களை சங்கரியும் வைஷாலியும் வரவேற்றனர். சங்கரி டீ போடச் சென்றார். வைஷாலியோ யாரும் பார்க்காதபோது சிவாவை முறைத்தவாறே வெளியே கிளம்பினாள். ஓரக்கண்ணால் அவளை கவனித்த சந்தியாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. மொத்தத்தில் அந்த வரவேற்பறையில் சந்தோஷமாய் விளையாடியது தீபிகாவும், ரங்காவின் மகன் பிரவீனும்தான்.

“சிவாவோட முறைப்பொண்ணா இவ? இப்படி முறைக்கிறா.. ரங்கா உன் மனசில் இருக்குற நினைப்பை எல்லாம் சுத்தமா துடைச்சுட்டு வா, வீட்டுக்குப் போலாம்.” கொதித்த மனைவியை அடக்க முடியாமல் திணறினான் ரங்கா. 

“சந்தியா அவங்க டீ போடுறாங்க. ப்ளீஸ் அதை மட்டும் குடிச்சுட்டு போங்களேன்” நடுவில் புகுந்து கெஞ்சினான் சிவா.

“குடிக்கிறேன். அதுவும் உங்களுக்காகதான் சிவா. உங்க முறைப்பொண்ணுக்காக இல்லை. இவளை எனக்குப் பிடிக்கல. உங்களுக்கு லீஸ்ட் ஹவுஸ் சீக்கிரம் சாங்க்ஷன் ஆயிரும்னு ரங்கா சொன்னார். கிடைச்ச மறுநாளே பெட்டியைக் கட்டிட்டு அங்க போறிங்க” அவன் செய்ய வேண்டியதை கட்டளையிட்டாள். 

பேசிக் கொண்டிருக்கும் போதே பையுடன் வைஷாலி மின்னல் வேகத்தில் சமயலறையில் நுழைந்தாள். சின்ன தட்டுகளில் சூடாய் சமோசாவை அனைவருக்கும் கொண்டு வந்தாள். 

“இதை வாங்கத்தான் அவசரமா போனிங்களா” குற்ற உணர்ச்சியுடன் சந்தியா வைஷாலியிடம் கேட்டாள். 

“மும்பையோட ஒரு கோடில இருந்து இன்னொரு கோடிக்கு இவரைப் பாக்க வர்றிங்க. உங்க பிரெண்ட் நீங்க வர்றதை முன்னாடியே சொல்லிருந்தா வீட்டிலேயே ஏதாவது செஞ்சிருக்கலாம். இப்ப கடைல வாங்க வேண்டியதா போச்சு” சிரித்தபடி சொன்னாள். 

அப்போதுதான் வீட்டில் பால் இருந்ததா என்ற கேள்வி சிவாவுக்கு உரைக்க, சமையலறைக்கு சென்றான். வைஷாலி வாங்கி வந்த பால் பாக்கெட்டை வெட்டப்பட்டு பால் காய்ந்தது. “ச்சே…” தலையில் அடித்துக் கொண்டான் சிவா. 

“சாரிம்மா… முன்னாடியே சொல்லிருக்கணும். நான் அவங்களை வெளில கூட்டிட்டு போகலாம்னு நினைச்சேன்”

“நம்ம வீட்டுக்கு வந்துட்டு எதுவும் சாப்பிடாம போனா எங்களுக்கு வருத்தமா இருக்காதா” என்று சங்கரி பதிலளிக்க 

“நீங்க உங்க பிரெண்ட்ஸ் கூட பேசிட்டு இருங்க” என்று சிவாவிடம் கூறினாள் வைஷாலி.

“அம்மா சமையலுக்கு காய்கறி எடுத்து வைக்க சொல்லிருக்கேன். வேற என்ன வேணும்னு சொல்லு”. என்று மெதுவாகக்  கேட்டவாறு  பையைத் தோளில் மாட்டியபடி  கடைக்குச் செல்லத் தயாரானாள். 

சமையலறைக்குள் உரிமையாக நுழைந்தாள் சந்தியா. “அம்மா உங்க எல்லாரையும் பார்க்கத்தான் வந்தோம். நீங்க பாட்டுக்கு சமைச்சுட்டு இருந்தா எப்படி உங்க கூட பேசுறது?”

“ஐடியா, பேசாம நம்ம எல்லாரும் வெளிய போயிட்டு ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு வரலாம்” என்றான் ரங்கராஜ். அனைவரும் ஆமோதிக்க, சங்கரி தயக்கத்தோடு வைஷாலியின் முகத்தைப் பார்த்தார். 

“அம்மா நீ அவங்க கூட பேசிட்டு இரு. நான் சிம்பிளா சமைச்சுடுறேன்” என்றாள் வைஷாலி கண்டிப்பாக. அவளுக்கு விருப்பமில்லை என்று தெரிந்ததால் வேறு வழியின்றி அனைவரும் வீட்டிலேயே சாப்பிட அரைமனதாய் ஒத்துக் கொண்டனர். 

 

சிவா, தான் காய்கறி வாங்கி வருவதாய் பிடிவாதமாய் கடைக்கு சென்றான். அவன் தோளில் தீபிகாவும், கையைப் பிடித்தபடி பிரவீனும் சென்றனர். சந்தியாவைத்  தனியே வைஷாலி வீட்டில் விட்டு சிவாவுடன் கடைக்குச் சென்றால் ஏதாவது ஏடாகூடமாய் பேசி விடுவாளோ என்ற பயத்தில் ரங்கா நாற்காலியில் கோந்து போட்டு ஒட்டி வைத்ததைப் போல், அங்கேயே அமர்ந்துவிட்டான்.

“இவ என்ன ரங்கா இப்படி வெடுக் வெடுக்குன்னு பேசுறா” அவனுக்கு மட்டும் கேட்கும்படி பேசிவிட்டு முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள் சந்தியா.

சில நிமிடங்களேலேயே பை நிறைய சாமான்களுடன் வந்தான் சிவா. அதில் ஒரு கிலோ ஹார்லிக்ஸ் பாட்டில் ஒன்றும் ஒளிந்திருந்தது. 

“ப்ளீஸ்மா நீ அவ கூட கொஞ்சம் பேசேன். சிவாவுக்காக…” என்ற கணவனுக்காக   முணுமுணுத்தபடியே சமையலறைக்குள் சென்றாள் சந்தியா. 

அங்கு ஹார்லிக்ஸ் எதுக்கு என்று வினவிய வைஷாலியிடம் ப்ரவீணுக்குப் பிடிக்கும்னு வாங்கினேன் என்றான் சிவா. 

‘அடப்பாவி சிவா, என் பையன் மேல பழி போடுறியே’ என்று பல்லைக் கடித்தபடி தொண்டையைக் கனைத்தாள் சந்தியா. அவளைப் பார்த்ததும் கண்களாலேயே காட்டிக் கொடுத்துடாதே என்று கெஞ்சியபடி கிட்டத்தட்ட ஓடினான் சிவா.  

வைஷாலியிடம் “நான் ஏதாவது ஹெல்ப் பண்றேனே” என்றாள் சந்தியா வலிய வரவழைத்த பணிவுடன்

“என் சமையலை சாப்பிடுறதே பெரிய ஹெல்ப்” என்றாள் வைஷாலி புன்னகையுடன். 

அவள் சிரிப்பில் அசந்து போன சந்தியா “சிவா சொன்னது ரொம்ப உண்மை”

“என்ன சொன்னார்?” என்று வைஷாலி கேள்வியாகக் கேட்டாள்.

சந்தியா உஷாராய் “நீங்க நல்லா சமைப்பிங்கன்னு சொன்னார்:

“அவருக்கு அரை உப்பு, அரை உறைப்புன்னு பத்திய சாப்பாடு சமைக்கிறேன். இதில் என்ன டேஸ்ட்டைக் கண்டார்” 

அவள் பேசினாலும் கை தான் பாட்டுக்குக் காரியத்தைக் கவனித்தது. பருப்பை குக்கரிலிருந்து மூன்று கரண்டி அளவு மட்டும் எடுத்துத் தனியாக கிண்ணத்தில் வைத்தாள். கடாயில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி, கடுகும் ஜீரகம், கறிவேப்பிலை  தாளித்து உரைப்புக்காக எண்ணி ஐந்தாறு மிளகுகளை உடைத்து அந்தப் பருப்பில் சேர்த்தாள். சிறிதாகக் நறுக்கப்பட்ட கொத்துமல்லித் தலைகளை அதன் மேல் தூவினாள். பின்னர் குக்கரில் மீதமிருந்த பருப்பில் அனைவருக்கும் சாம்பார் வைத்தாள். அதைப்போலவே பொறியல், கூட்டு அனைத்திலும் உப்பு உறைப்பு சேர்க்கும் முன் தனியாக எடுத்து வைத்தாள். வைஷாலி சமைப்பதை கவனித்தவாறே சந்தியாவும் தன்னாலான உதவியை செய்தாள். 

சந்தியா மனதில் ஒரு சந்தேகம் உறுத்திக் கொண்டிருந்தது. அதற்கான விடையை கண்டறியும் முயற்சியில் இறங்கினாள். அனைவரும் உணவு உண்ணும் வேளையில்  விடையைக் கண்டறிந்ததில் அவள் முகம் புன்னகையைப் பூசிக் கொண்டது. 

சந்தியா ஊகித்தபடி வைஷாலி தனியாக எடுத்து வைத்த அனைத்தும் காரம் கம்மியாக சிவாவுக்காக ஸ்பெசலாய் வைஷாலியின் கைகளால் தயாரிக்கப் பட்டது. ஆக சிவாவுக்கு கடை உணவு ஒத்துக்கொள்ளாது என்றுதான் வெளியே உண்ணுவதை மறுத்திருக்கிறாள். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 14’தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 14’

அத்தியாயம் – 14   ‘கௌமாரியம்மா என் மேல அன்பு செலுத்த இந்த உலகத்தில யாருமே இல்லையான்னு உன்னைக் கேட்டுட்டுத்தான் தற்கொலைக்கு முயற்சி செஞ்சேன். ஆனா என்னைக் காப்பாத்தி புது வாழ்க்கை தந்த ப்ரித்வியை நல்லா வை. இனிமேலும் ப்ரிதிவியை சோதிக்காதே.