Tamil Madhura ஆடியோ நாவல் (Audio Novels),தமிழ் மதுராவின் 'கடவுள் அமைத்த மேடை' தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 2’

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 2’

மும்பையில் பருவமழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. சாலையில் பெருக்கெடுத்த நீரால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நவி மும்பையிலிருந்து அந்தேரிக்கு பயணம் செய்தே களைத்துப் போனான் ரங்கராஜ். 

“சாதாரணமாவே குறைஞ்சது ரெண்டு மணி நேரமாகும். இப்ப ட்ரைன் லேட் அது இதுன்னு பயணம் செய்றதே ஒரு நரகமாட்டம் ஆயிடுச்சுப்பா” – ரங்கா 

அவனுக்கு டேலி செய்ய உதவியபடி கேட்டான் சிவா “ஏன் அவ்வளவு தள்ளி வீடு பாத்திருக்க இங்கேயே வந்திருக்கலாமே”

“எனக்கு முதலில் நவி மும்பை பிரான்சில்தான் போஸ்டிங் போட்டாங்க. அப்பறம் இந்த பிரான்ச்சுக்கு பதவி உயர்வோடு மாறுதல் கிடைச்சதுன்னு ஒத்துகிட்டேன். இப்ப ஏண்டா வந்தோம்னு இருக்கு. தண்டபாணி சார்கிட்ட சொல்லி பழைய பிரான்ச்லையே  சீட் ஏதாவது காலியான மாறுதல் தர சொல்லிருக்கேன். ஆனா அந்த வாய்ப்பு எப்ப வரும்னுதான் தெரியல”

“கவலைப்படாதே இன்னொரு புது பிரான்ச் அங்க ஆரம்பிக்கப் போறதா தகவல். உனக்கு வீட்டுப் பக்கத்திலேயே மறுபடி வேலை பார்க்க வாய்ப்பு பிரகாசமா இருக்கு” ஆருடம் சொன்னான் சிவா.

கனமழை ரங்காவை ஒரு வகையில் கடுப்பாக்கியது என்றால் சிவாவுக்கோ உடல் சுகமில்லாது போனது. உணவகங்களில் உண்டு கொண்டிருந்தவனுக்கு எப்படியோ காய்ச்சலும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டு கடும் பாதிப்புக்கு உள்ளானான். 

“என்ன மாத்திரை சாப்பிட்டாலும் குணமாகல டாக்டர்” வயிற்றைப் பிடித்துக் கொண்டே சொன்னவனை தனது மூக்குக் கண்ணாடியை சரி செய்தபடி நிமிர்ந்து பார்த்தார் மருத்துவர். 

“மாத்திரைனால் உடம்பு சரியாகணும்னு நினைக்கிறிங்களா”

“நீங்க சொல்றது புரியலையே”

“மனித உடம்பு ஒரு அற்புதமான விஷயம். தவறான பழக்கவழக்கங்களால் அதைக் கெடுத்துட்டு இருக்கோம். இப்ப கையில் ஏதாவது காயம் ஏற்பட்டா என்ன செய்வோம்? அதில் மேலும் அடிபடாம காயம் ஆறும் வரை பாதுகாப்பா கவனிப்போம். உங்களுக்கு அதே மாதிரி  வயத்தில் புண்ணு ஏற்பட்டிருக்கு. அதை குணப்படுத்த மருந்து சாப்பிடும் அதேவேளையில்  நீங்க எண்ணைப் பதார்த்தம், மசாலா, காரம், ஆல்கஹால்ன்னு ஒண்ணு மாத்தி ஒண்ணு தந்து குணமாகாம தடுக்குறிங்க” சற்று உஷ்ணமாகவே பேசினார்.

“ஹோட்டல்ல தங்கிருக்கார் டாக்டர். அங்க இந்தவகை உணவுதான் கிடைக்குது” சப்போர்ட்டுக்கு வந்தான் ரங்கா. அவன்தான் தமிழ் டாக்டரிடம் அழைத்து வந்தான். அவர் நம்மவர்கள் என்றதும் சற்று உரிமையோடு திட்டினார். 

ரெண்டு பேரும்தான்  கூட்டுக் களவாணிகளா? என்ற கேள்வியோடு பார்த்தவர், 

“இப்படியே தொடர்ந்தா அறுவை சிகிச்சை வரை போக வேண்டிருக்கும். நீங்களே சமைச்சுக்கோங்க இல்லை வீட்டில இருக்கவங்களை இங்க வந்து ஒரு ஆறு மாசம் சமைச்சுப் போட சொல்லுங்க” எச்சரித்து அனுப்பினார்.

“உனக்கு எப்படி இவ்வளவு மோசமான அல்சர் வந்திருக்கு?” என்று கேட்டான் ரங்கா.

“நான் பொறந்ததும் அம்மா செத்துட்டாங்க. அப்பாதான் வளர்த்தார். எங்க அப்பத்தா எனக்கு ஒரு பதினைஞ்சு வயசு வரைக்கும் கூட இருந்தது. அது போனதுக்கப்பறம் எல்லாரும் கடை சாப்பாடுதான்”

“உங்கண்ணனுக்கு கல்யாணம் ஆனதும் அண்ணி வந்திருப்பாங்களே”

“வந்தாங்க. அப்ப நான் ஹாஸ்டல் போயிட்டேன்” 

அவனது வாழ்க்கையின் சில பக்கங்களை தன்னை நம்பி பகிர்ந்து கொண்ட சிவாவை சற்று பரிதாபத்துடன் பார்த்தான் ரங்கா. 

“என்ன செய்யப் போற” மேலும் சிலநாள் கழித்து கேட்டான் ரங்கா. 

உணவு இடைவேளையில் இருவரும் அலைந்து திரிந்து இட்லி விற்கும் ஒருவனைக் கண்டுபிடித்திருந்தனர். காலையில் அவனிடம் இட்லியை பார்சல் வாங்கி அதையே மதியமும் இரவும் தயிர் தொட்டு சாப்பிட்டான் சிவா. 

ரங்காவே அதிகாலை எழுந்து அவன் மனைவிக்கு சமைக்க முடியாததால், காலை சாப்பாடு பிரட் ஜாம், மதியம் வெளி சாப்பாடு என்று ஓட்டிக் கொண்டிருக்கிறான். இரவுதான் அவனுக்கு வீட்டு சாப்பாடு. அவனெங்கே சிவாவுக்கும் சேர்த்து வீட்டு உணவு கொண்டுவருவது. 

சர்க்கரையைத் தொட்டு இட்லியை உண்டபடி 

“நானே வீடு ஏதாவது பாத்து சமையல் கத்துட்டு செய்ய வேண்டியதுதான் எங்க வீட்டில் எனக்கு சமைச்சுப் போடுற மாதிரி பெண்கள் யாரும் இல்லை. அண்ணா குடும்பமும், அப்பாவும் மட்டும்தான்”

“ நீ எப்ப வீடு பாத்து? எப்ப சமைச்சு? அதுவரைக்கும் இட்டிலி சக்கரை தயிர் மட்டும் சாப்பிட்டு உயிர் வாழப் போறியா. இங்க பாரு சிவா, வீட்டு சாப்பாடு கிடைக்கிறது கஷ்டம்தான். ஆனால் முடியாதது இல்லை”

சற்று நேரம் சிந்தித்தவன் “ஐடியா.. நீ ஏன் பேயிங் கெஸ்ட்டா தங்கக் கூடாது. உனக்கு வீடு அலாட் ஆகுற வரை  நம்ம ஊர் ஆள் யார் வீட்டிலாவது கொஞ்ச நாள் தங்கு. சாப்பாட்டுக்கும் சேர்த்து பணம் தந்துடலாம். என்ன சொல்லுற?”

“அதெல்லாம் ஒத்துவராது” என்று அப்போதைக்கு அந்த பேச்சுக்குக் கமா போட்டான். 

மேலும் நான்கு நாட்கள் சென்றதும் இட்டிலியைப் பார்த்தாலே வேகமாய் ஓடும் நிலைக்கு வந்த சிவா, ரங்காவின் யோசனைக்கு சம்மதித்தான்.  

“தெரியாதவங்க வீட்டில் எப்படி தங்கறது?” சந்கோஜப்பட்டான் 

“போய் ஒரு வாரம் கழிச்சு எல்லாம் தெரிஞ்சவங்களா மாறிடப்போறாங்க. ஒரு ஆறுமாசம்தான பல்லைக் கடிச்சுட்டு இரு. இல்லை வேலையை ராஜினமா செய்துட்டு உங்க வீட்டுக்கு நடையைக் கட்டு” 

“இல்லை என்னால ஊருக்குப் போக முடியாது. இங்கதான் இருப்பேன்” உறுதியோடு சொன்னான் சிவா.

சில வீடுகளைப் பாத்தார்கள். ஆனால் இருவருக்கும் ஒரு இடம் கூட திருப்தி தரவில்லை. கடைசியாய் ‘மிரா ரோடு’ எனும் பகுதியில் இருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்புக்கு சென்றனர். 

சற்றே பெரிய படுக்கையறை குளியலறை வசதியுடன் வாடகைக்கு தர முன்வந்தான் அந்த வீட்டு எஜமானன் செந்தில். உணவும் தர முன்வந்தனர் அந்தத் தம்பதியினர். 

ஆனால் செந்திலின் மனைவியைப் பார்த்தாலே சமைப்பவள் போலத் தெரியவில்லை. அவளது மராத்தி வாடை வீசிய தமிழும், ஆங்கிலமும் அவளுக்கு சப்பாத்தி தவிர வேறு எதுவும் கண்ணால் பார்த்திருக்க மாட்டாள் என்று சத்தியம் செய்தது.. அவளது அலட்டலான பேச்சு வேறு இவளுக்குப் பொய் சொல்வது கை வந்த கலை என உள்ளுணர்வு எச்சரித்தது.  

“எனக்கு காரம் ஒத்துக்காது. நீங்க சமைச்சுத் தரணும்னு அவசியமில்லை. நேரம் கிடைக்கும்போது நானே எனக்கு வேண்டியதை செய்துப்பேன். அதுக்கு அனுமதி தந்தா போதும்” வலியுறுத்தினான் சிவா. ஏதோ ரைஸ் குக்கர், வேக வைத்த காய்கறிகள், தயிர் வைத்து சமாளிக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தான். 

சிவாவின் உடம்புக்கு என்ன என்று அக்கறையாய் விசாரித்தான் செந்தில்.

 “நீங்க சமயநல்லூரா, நான் மதுரை. எங்க அம்மா உங்களுக்கு வேண்டிய பத்திய சாப்பாட்டை நம்ம ஊர் டேஸ்ட்டுக்கு உங்க வாய்க்கு ருசியா சமைச்சுத் தருவாங்க. அதுக்குத் தனியா பணம் தந்துட்டா போதும்” என்று அவசர அவசரமாய் சொன்னான். 

அவன் கேட்ட தொகை சற்று அதிகம்தான். பணத்திலேயே குறியா இருக்கானே, இங்க தங்கணுமா என்று நண்பர்கள் பார்வையாலே பேச, மெதுவாய் கதவைத் திறந்து உள்ளே யாரோ நுழைந்தார்கள். சிவாவின் கவனம் வாயிலை நோக்கித் திரும்பியது. 

சோர்வான நடை, இளைத்த உடம்பு, அதை மறைத்த தொளதொள சுடிதார், ஏனோதானோ என்று பின்னப்பட்ட தலைமுடி, கவலையும் வெறுமையும் சுமந்த பெரிய கண்கள் என்ற தோற்றத்தில் உள்ளே நுழைந்தாள் ஒரு பெண். 

அவ்வளவு நேரம் அமைதியாய் இருந்த அந்த வரவேற்பரையில் திடீரென ‘ம்மா.. ஞா… ’ எனப் புரியாத யாழ் குரல் கேட்டது. காச் மூச்சென்று சந்தோஷக் கூச்சலிட்டபடி ஒரு குட்டிப் பாப்பா தத்தக்கா பித்தக்கா என்று ரெண்டெட்டு நடந்து, பாதி வழியில் நடக்க முடியாமல் கேழே விழுந்து, தவழ்ந்து தனது தாயை நெருங்கியது. 

குழந்தையைக் கண்டதும் அவளது கண்களில் பளிச்சென்று சந்தோஷ மின்னல் வெட்டியது. 

“பாப்பா பாத்து வா” என்றபடி கையோடு தூக்கி குழந்தையை முத்தமிட்டாள். 

குழந்தையும் நீண்ட நேரம் கழித்துத் தாயைக் கண்ட மகிழ்ச்சியில் அவள் கன்னத்தில் அடித்து விளையாடியது. தாய் மகள் இருவரும் சுற்றுப்புறத்தை மறந்து அவர்கள் உலகில் லயித்திருந்தனர். 

“சாலி உள்ள போய் காப்பி குடி” என்ற செந்திலின் குரல் கேட்டு நிகழ்காலத்துக்குத் திரும்பினான் சிவா. 

“என் தங்கை” என்று சுருக்கமாய் அவர்களிடம் உரைத்துவிட்டு அவளைப் பற்றி  வேறு ஏதும் பேச விரும்பாமல்

 “அப்பறம் என்ன முடிவு செஞ்சிருக்கிங்க” என்றான்.

“அட்வான்ஸா இந்த அஞ்சாயிரம் வச்சுக்கோங்க. உங்க பாங்க் அக்கௌன்ட் நம்பர் தந்தா மீதப் பணத்தை அதில் போட்டுடுறேன். வர்ற வெள்ளிக்கிழமை குடிவந்துடுறேன்” என்று பணத்தை நீட்டினான். 

செந்திலை முந்திக் கொண்டு சிவாவின் கையிலிருந்து பணத்தை பெற்று வாயெல்லாம் பல்லாகப் புன்னகைத்தாள் சோனா.

“சிவா அவசரப் பட்டுட்டியோன்னு தோணுது. இந்த வீட்டில் கணவன் மனைவி ரெண்டு குழந்தைகள் மட்டும்தான்னு நினைச்சேன். பார்த்த இவன் அம்மா, தங்கை அவளோட குழந்தை, அவ கணவன் எல்லாரும் இருப்பாங்க போலிருக்கு. ரெண்டு படுக்கை அறை வீடு இவங்களுக்கே பத்தாது. இதில் நீ எப்படிடா. பச்…. ரெண்டே மாசத்தில் அலறி அடிச்சுட்டு வேற வீடு பாக்கப் போற”

“செந்தில் தங்கச்சி வைஷாலியைப் பார்த்தேல்ல”

“அவ பேர் வைஷாலியா? உனக்கெப்படி அது…. முன்னமே அவளைத் தெரியுமா?”

“ம்ம்… அவ கண்ணு எப்படித் துரு துருன்னு சந்தோஷமா இருக்கும் தெரியுமா? இப்ப அந்த சந்தோஷம் எங்க ஓடிப் போச்சுன்னு தெரிஞ்சுக்கணும். அதனாலத்தான் அங்க தங்குறதுன்னு தீர்மானிச்சேன்” 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சிலிகான் மனது – Audio novelசிலிகான் மனது – Audio novel

Follow my anchor channel: https://anchor.fm/tamilmadhura/episodes/Silicon-Manathu—Tamil-short-story-eb9d8r Thanks to Writer Hasha Sri for the beautiful narration தூரத்தில் பச்சைக் கம்பளிப் போர்வையை உதறி விரித்ததைப் போல அழகான மலை. அதிலிருந்து பால் போலப் பொங்கி வரும் அருவி .

காதல் வரம் ஆடியோ நாவல் – 2 youtube linkகாதல் வரம் ஆடியோ நாவல் – 2 youtube link

வணக்கம் தோழமைகளே காதல் வரம் ஆடியோ நாவல் நீங்கள் கேட்டு மகிழ வசதியாக இப்பொழுது youtube லும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கேளுங்கள்… சேனலில் மற்ற நாவல்களைக் கேட்க வசதியாக சப்ஸ்க்ரைப் செய்துக் கொள்ளுங்கள். தங்களது ஆதரவிற்கு நன்றி. அன்புடன், தமிழ் மதுரா