உள்ளம் குழையுதடி கிளியே – 20

அத்தியாயம் – 20

மனதில் பூட்டி வைத்ததைப் பகிர்ந்து கொண்டதில் மனமே சற்று லேசானதைப் போலத் தோன்றியது சரத்துக்கு.

“இப்ப காதல் டாபிக்குக்கு வருவோமா…” என்று ஹிமா கேட்டதும் ஒரு வினாடி திகைத்து விழித்தவன். மறுபடியும் குறும்புடன்

“நீ மனைவியா நடிக்க மட்டும்தான் சம்மதிச்சேன்னு நினைச்சேன்… இந்த நல்லவனை, வல்லவனை, நாலும் தெரிஞ்சவனைப் பார்த்து மயங்கிட்டயா…”

அவன் மேல் தலைகாணியை தூக்கி எறிந்தவள் “காதல் விளையாட்டில்ல… நீங்க இந்த மாதிரி விளையாட்டெல்லாம் பண்ற ஆளும் இல்லை.

சொல்லுங்க சரத் உங்களை முதலில் ப்ரபோஸ் பண்ணது நக்ஷத்திரா தானே…”

வெட்கத்துடன் சிரித்தான்.

“அட காதல் தேவியை சொன்னதும் பையனுக்கு வெட்கத்தைப் பாரடா…”

அவன் கையிலிருந்த தலையணையை அவள் மேல் மறுபடியும் எறிந்தான். அதனை கட்சிதமாகக் கேட்ச் பிடித்தாள்.

“உண்மையை சொல்லணும்”

“ஆமாம்…”

“அவங்க சொன்னதும் நூறு ஜென்மமாய் சேர்ந்து வந்த சொந்தம் போல இருந்ததா… ‘தேன் பூவே பூவே வா’ன்னு இளையராஜா பிஜிஎம் காதில் ஒலிச்சதோ”

“ஹேய் உனக்கும் சத்யாக்கும் நடந்ததை எல்லாம் என்கிட்டே சொல்லக் கூடாது… நிஜத்தில் சொல்லணும்னா ராஜி ப்ரபோஸ் பண்ணதும் நல்லா திட்டி விட்டேன்”

“அடப்பாவி… அப்படி ஒரு அழகியை எப்படி திட்ட மனசு வந்தது”

“அழகிதான்… என் ஆபிஸ்ல ரிசப்ஷனிஸ்ட்டா இருந்தா… திடீருன்னு என் டேபிளில் ரோஸ் பொக்கே… சர்ப்ரைஸ் கிப்ட் எல்லாம் இருக்கும். யாரோ என்னை கிண்டல் பண்றாங்கன்னு கடுப்பா இருந்தா ஒரு நாள் இவ லவ் லெட்டரை நீட்டினா… பயங்கரமா கடிச்சு விட்டேன்”

“ரொம்ப மோசமான ஆள்பா நீங்க”

“ஒரு ஆறு மாசம் கழிச்சு தலையாட்டினேன்”

“அதுல அவ்வளவு பெருமையா…”

“பெருமையோ ஈகோவோ இல்லை ஹிமா… எனக்குக் குடும்பம்னு ஒரு செட்அப்ல இல்லாததால எதிலயும் ஒட்டுதல் இல்லை. ராஜியின் பேமிலி பணக் கஷ்டத்தைப் பத்தி அவளோட வாயால் சொல்லிக் கேட்டபோது அந்தக் குடும்பத்தில் நானும் இணைய ஆசை.

அப்பறம் அது எப்படி லவ் ஆச்சுன்னு தெரியல ஹிமா… ஆனால் என்னைப் பத்தித் தெரியுமே ஒண்ணை ஒத்துகிட்டா ஒரு பொழுதும் அதிலிருந்து பின் வாங்குறது என் வழக்கம் இல்லை:”

அவன் சொன்னது சரிதான் அவளது அம்மா அப்பாவுடன் கூட நன்றாய் ஒட்டிக் கொண்டவன்தான். இதற்கெல்லாம் அடிநாதமாய் இருப்பது குடும்பமாய் வாழ வேண்டும் என்ற உள்மனதின் ஆசைதான் போல.

“அவங்க வீட்டில் எப்படி சரத். உங்க கல்யாணத்துக்கு சரி சொல்லுவாங்களா”

“அதை நடிகை ஆவதற்கு முன் நடிக்க ஆரம்பித்ததற்குப் பின் இப்படி ரெண்டு டைப்பா பிரிக்கலாம். எங்க காதலை முதலில் கொண்டாடினது அவங்க குடும்பம்தான். இப்ப அவங்க சுயலாபத்திற்காக கல்யாணத்தைத் தள்ளிப் போடுறதும் அவங்கதான்”

“உங்க ராஜி நினைச்சா இந்தத் தடைகளை உடைச்சுட்டு வர முடியாதா”

பெருமூச்சு விட்டான் “அதுதான் சொல்லிட்டியே… ராஜி நினைச்சான்னு… இதுக்கு மேல நான் என்ன சொல்றது”

“அவங்க ஏன் நினைக்கல… உங்க காதல் வேணும் ஆனால் உங்ககூட வாழ்க்கை வேண்டாமா”

கனத்த மௌனம் நிலவியது

“சாரி சரத்… வெறும் கியூரியாசிட்டில இதைக் கேட்கல. நீங்க ரெண்டு பேரும் ஒண்ணு சேர என்னாலான முயற்சியைப் பண்ணலாம்னு ஒரு ஆசை”

“முயற்சி செய்றேன்னு ஏதாவது கிறுக்குத்தனம் பண்ணிடாத. ராஜிக்கும் அந்த மாய உலகத்திற்கும் இருக்கும் பந்தம் ஸ்ட்ராங் ஆயிட்டே இருக்கு. அதை என்னாலத் தடுக்க முடியல. அவளைக் காப்பாத்த நான் ரெடி. ஆனால் அவளைக் கல்யாணத்துக்கு வற்புறுத்தி கட்டிப் போட என்னால முடியல”

“நீங்க சொன்னது நிஜம்தான் சரத். அவங்களுக்கும் அந்த மாய உலகத்துக்கும் நெருக்கம் அதிகமாயிடுச்சுத்தான். நீங்க நேத்துக் குறிப்பிட்ட படத்தோட ட்ரைலர் அதே உடையோட அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு முறை டிவில வருது. அதைப் பார்த்து அப்செட் ஆயிடாதிங்க” என்று ஹிமா சொல்லவும் சரத்தின் முகத்தில் அதிர்ச்சி.

“மொபைலை எடு ஹிமா”

செல்லில் யூடியூபில் நஷதிராவாய் ஆட்டம் போட்ட அவனது காதலி ராஜியின் ஆட்டத்தை முழுவதுமாக பார்க்க முடியாமல் அணைத்து செல்லைத்தூக்கி எறிந்தான். அது சென்று சோபாவில் விழுந்தது.

படம் ஒப்புகிட்டிருக்கேன்னு ரெண்டு நாள் முந்தி சொன்னா… இப்ப ட்ரைலர் வந்திருக்குன்னா முன்னாடியே படம் ஷூட்டிங் முடிஞ்சிருக்கும். கடைசி சமயத்தில் சொல்லிருக்கா… நான் வேற என் ஒப்பினியன் கேக்குறாளோன்னு சந்தோஷப் பட்டேனே… அவள் மேல் வைத்த நம்பிக்கை காற்றில் கற்பூரமாய் கரைந்து போனது. நம்பிக்கை பொய்த்துப் போனதில் அவனது கண்களில் நீர்.

அவனது நிலை பொறுக்க இயலாத ஹிமா அவனது கைகளைப் பற்றினாள் “ஷ்… சரத் என்னதிது குழந்தை மாதிரி… ஹாலில் டிவில இந்த விளம்பரம்தான் காலைலேருந்து ஓடிட்டு இருக்கு. திடீருன்னு பார்த்துட்டு நீங்க ஷாக் ஆயிடக் கூடாதுன்னுதான் இப்பவே சொன்னேன்”

அங்கே அதுவரை விளையாடிக் கொண்டிருந்த துருவ் ஓடிச் சென்று சரத்தின் மடியில் அமர்ந்து கொண்டான்

“நீங்க குட் பாய்தானே… யார் உங்களை அடிச்சதுன்னு சொல்லுங்க… நான் டிஷும் டிஷும் சண்டை போடுறேன்”

அவன் பதில் சொல்லாதிருக்கவும்

“சொல்லுங்கப்பா…” என்று கொஞ்சினான்.

‘அப்பாவா’ மகனைக் கட்டுப் படுத்த நினைத்த ஹிமா அதை செயலாற்றுவதற்குள் சரத் அவனைத் தூக்கி அணைத்து முத்தம் பதித்தான்.

“எனக்கு உன்னை மாதிரி ஒரு பையன் இருக்குறப்ப ஏன் பயப்படணும். இந்த சூப்பர் ஹீரோவோட அப்பாவைப் பாத்துத்தான் எல்லாரும் பயப்படணும்” என்றான்.

“எஸ்… குட் பாய்” என்று பதிலுக்கு முத்தம் தந்தான் துருவ்.

“துருவ் ஸ்கூலுக்கு லேட்டாச்சு” என்று கிச்சனிலிருந்து குரல் கொடுத்தார் தெய்வானை.

“பாட்டி… பாட்டி… அப்பா அழுறாங்க…” தொண்டை கிழியக் கத்தினான் துருவ்.

“அழுவறானா… ஏன் கண்ணு…” என்று போட்டது போட்டபடி ஓடி வந்தார் தெய்வானை.

தலையில் அடித்துக் கொண்டான் சரத்.

“இல்லத்த… அவங்க ரெண்டு பேரும் விளையாடுறாங்க…” என்றாள் ஹிமா அவசர அவசரமாக.

“இல்ல பாட்டி அம்மா பொய்சொல்றாங்க… அப்பா அந்த பேட் ஆன்ட்டி டான்ஸ் பார்த்தாரா…”

நக்ஷத்திராவின் டான்சைப் போலவே ஆடிக் காண்பித்தான். குழந்தை ஆடக் கூடிய நடனமே இல்லை அது. அதைப் பார்த்து தெய்வானை முகம் அஷ்டகோணலானது.

“துருவ் நிறுத்து…” அதட்டினாள் ஹிமா

வழக்கமாக அம்மா ஆடுவதை இமிடேட் செய்து காண்பிப்பது அவனது பொழுதுபோக்கு அதே போல ஹிமாவின் எச்சரிக்கையை அலட்சியம் செய்துவிட்டுத் தொடர்ந்தான் சிறுவன்.

“நிறுத்துடா… அந்தக் கிரகம் பிடிச்சவ மாதிரி ஆடாத… உங்கம்மா மாதிரி ஆடு” என்றார் தெய்வானை. சரத்தின் முகம் அவமானத்தால் சிறுத்துவிட்டது.

பட்டென்று ஒரு சத்தம் ஹிமா துருவின் முதுகில் ஒரு அடி போட்ட சத்தம்தான் அது. ஆம் முதன் முறையாக தன் மகனைக் கை நீட்டி அடித்திருந்தாள்.

“ஏன் அடிச்சிங்கம்மா… நான் அப்படித்தான் ஆடுவேன்”

அவன் வீம்பாய் நிற்க, மற்றொரு அடி போட உயர்த்திய கையை உடும்பாகப் பற்றித் தடுத்தான் சரத்.

“இன்னொரு தடவை என் கண்முன்னாடி துருவை அடிச்சா பாரு” உறுமினான் சரத்.

“சரத் பெரியவங்களை அவன் தப்பா சொல்றான்”

தெய்வானை முந்திக் கொண்டு “என்ன பெரியவங்க… அந்தப் பொம்பள வெட்கம் கெட்டு ஆடுறா அது தப்பில்ல விவரம் புரியாத பிள்ளை அதே மாதிரி ஆடினா அடிப்பியா” பிலு பிலுவென மருமகளைப் பிடித்துக் கொண்டார்.

“நீ வா கண்ணு… இனிமே அந்தப் பொம்பளையை எங்கயாவது பார்த்தா அடிச்சுடலாம்” என்றபடி பேரனைக் தூக்கிக் கொண்டு நகர்ந்தார். அவருக்கு அந்த வினாடியிலிருந்து அந்தப் படத்தில் இருந்த பெண்ணின் மேல் தாங்க முடியாத கோபமும் வெறுப்பும் தொற்றிக் கொண்டது.
தனது உடும்புப் பிடியால் கன்றிப் போயிருந்த ஹிமாவின் கைக்கு ஐயோடெக்ஸ் தடவினான் சரத்.
“சாரி சரத்… துருவ் செஞ்சது உங்க மனசை எவ்வளவு புண் படுத்தியிருக்கும்”

“துருவ் செஞ்சதை விட நீ அவனை முதன் முதலில் கை நீட்டி அடிச்சதுதான் எனக்கு ரொம்ப வலிச்சது”

“நான்…”
நிறுத்தும்படி சைகை காட்டினான் “அடுத்தவங்களுக்காக குழந்தையை அடிக்காதே… இன்னொரு சரத்தை உருவாக்க நினைக்காதே…”

“வெரி சாரி ஹிமா… கை பாரு எப்படி சிவந்து போச்சு” என்றபடி மெதுவாக கன்றி போயிருந்த இடத்தில் ஹாட் பேக் ஒத்தடம் தந்தான்.

“சுடுதா…”
“பச்… இல்லை… துருவ் தகப்பனோட அன்பை அனுபவிச்சதே இல்லை. டெம்பரவரிதான் என்றாலும் அவன் உங்க மூலமா அதை அனுபவிக்கிறது மனசுக்குக் குளிர்ச்சியாய் இருக்கு… தாங்க்ஸ் சரத்”

“என்னை முதலில் அப்பான்னு கூப்பிட்ட துருவ்வுக்கு ஒரு தகப்பனோட கடமையை செய்வேன். பயப்படாதே நான் சத்யாவா என்னைக்கும் மாற முடியாது ஆனால் பொன் வைக்குற இடத்தில் பூ வைக்கிற மாதிரி சத்யாவின் இடத்தை ஓரளவு நிரப்ப இந்த சரத் ட்ரை பண்ணுவான்” என்றான் மெல்லிய புன்னகையுடன்.

வீட்டில் ஹிமாவும் சரத்தும் மனதளவில் நெருங்கிய அதே நேரத்தில் காலையிலேயே எழுந்து கிளம்பிய சின்னசாமி ஹிமாவின் தாய் சௌந்திரவள்ளியை அட்மிட் செய்திருக்கும் மருத்துவமனை ரிசெப்ஷனில் நின்றார்.
அங்கிருந்த வரவேற்பறை ஆளிடம்

“ஜான்னு ஒருத்தரை அட்மிட் செஞ்சாங்களே அவரைப் பாக்கணும்” என்றார்

1 thought on “உள்ளம் குழையுதடி கிளியே – 20”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சிலிகான் மனது – Audio novelசிலிகான் மனது – Audio novel

Follow my anchor channel: https://anchor.fm/tamilmadhura/episodes/Silicon-Manathu—Tamil-short-story-eb9d8r Thanks to Writer Hasha Sri for the beautiful narration தூரத்தில் பச்சைக் கம்பளிப் போர்வையை உதறி விரித்ததைப் போல அழகான மலை. அதிலிருந்து பால் போலப் பொங்கி வரும் அருவி .

உள்ளம் குழையுதடி கிளியே – 24உள்ளம் குழையுதடி கிளியே – 24

அத்தியாயம் – 24 சென்னைக்கு வந்தவன் முன்னரே எதிர்பார்த்தபடி உடனடியாக துபாய் செல்ல வேண்டியிருந்தது. அங்கிருக்கும் ஒரு நிறுவனத்தின் காண்ட்ராக்ட்டை கவனிக்க வேண்டியிருந்ததால் அவனது அலுவலக வேலைகள் அதிகமானது. அவனது நிறுவனம் துபாயின் மருத்துவ சேவை நிறுவனத்தின் இன்ப்ரா ஸ்டரக்சர் பொறுப்பை