உள்ளம் குழையுதடி கிளியே – 14


அத்தியாயம் – 14

ஹிமாவுக்கு முதன் முறையாக அந்த வீட்டில் இருப்பது அசௌகரியமாக இருந்தது. அதற்குக் காரணம் சின்னசாமி என்பதை சொல்லவும் வேண்டுமா. வந்ததிலிருந்து அவளை ஆராய்ச்சியுடனேயே தொடர்ந்தது அவரது பார்வை.

அவள் வீட்டில் நுழைந்ததும் நுழையாததுமாக கேட்ட முதல் கேள்வி

“ஆமா நீங்க என்ன ஆளுங்க”

கோபத்தை அடக்கி அமைதியாக “மனுஷாளுங்க” என்றபடி நிதானமாக செருப்பை ரேக்கில் கழற்றி வைத்தாள்.

“மடக்கிட்டதா நினைப்பா… நீ சொல்லலைன்னா என்னால கண்டு பிடிக்க முடியாதுன்னு நினைச்சியா… கண்டு பிடிச்சு என்ன செய்றேன் பாரு”

“உங்களால என்ன செய்ய முடியுமோ செஞ்சுக்கோங்க”

“என் தங்கச்சியை கைல போட்டுட்ட தைரியமா. அவளை எப்படி என் வழிக்கு கொண்டு வரணும்னு எனக்குத் தெரியும்”

கூடத்திலிருந்து உரக்கக் குரலெழுப்பினார். “தெய்வான வயசான காலத்தில் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கோ… இந்த வீட்டு அம்மிணியே அவங்களுக்கு வேணுங்குற மாதிரி காப்பி போட்டுக்குவாங்க”

அவர் குரல் அடங்குவதற்குள் காப்பியுடன் வந்தார் தெய்வானை. தமையனிடம் தம்ளரைத் தந்தவர். “உனக்கு காப்பியும், துருவ்வுக்கு பாலும் எடுத்து வச்சிருக்கேன். போய் குடிங்க” என்றார் மருமகளிடம்.

“தெய்வானை நீ சும்மா இருக்க மாட்ட. இவளுக்கு காப்பி போட்டுத் தரணுமா. உன்னை வேலைக்காரியாவே மாத்திட்டா…”

மருமகள் அவ்விடத்தை விட்டு அகலும் வரைப் பொறுத்திருந்தவர்… தமயனிடம்

“அந்தப் பொண்ணு டான்ஸ் டீச்சர் வேலை பாக்குது. ஆடி ஆடி களைப்பா இருக்காதா”

“ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி களைச்சு போய் வந்திருக்கா. நீ போய் சீராட்டு” என்றார் வெறுப்புடன்.

தெய்வானை அண்ணனை அடக்க முயல்வதும், சின்னசாமி அடங்காமல் பேசுவதும் ஹிமாவின் காதில் விழுந்தது. சிலநாட்களாக சரத்தின் தாயுடன் ஏற்பட்ட சுமூகமான உறவால் அவள் மனதில் ஒரு மகிழ்ச்சி துளிர் விட்டிருந்தது. ஒரு சில தினங்கள் கூட சந்தோஷம் நிலைக்கக் கூடாதென்று இறைவன் தன்னைப் படைக்கும்போதே தலையில் எழுதிவிட்டனா?

இரவு உணவை சமைக்கும்போது அவளது மனம் அவளது நிலையை நினைத்து கழிவிரக்கத்தில் உழன்றது. சத்யா இந்நேரம் இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா… அவன் இருந்திருந்தால் எப்படி என்னைத் தேற்றி இருப்பான். தெரியவில்லை…

சத்யா அவளது ஒன்றுவிட்ட மாமன் மகன். கல்லூரியில் கடைசி வருடம் படிக்கும் பொழுது உறவினர்கள் முயற்சியால் அவர்கள் திருமணம் நிச்சயமானது. நிச்சயம் செய்ததும் சத்யாவைக் கண்டதும் அவளுக்கு வெட்கம் வந்தது. அவனுக்கு அவள் மேல் ஆசை வந்தது. திருமணம் சில காரணங்களுக்காக ஒரு வருடம் தள்ளிப் போகவும் ஈர்ப்பு மலர்ந்து காதலாயிற்று. உலகத்தில் சத்யாவைத் தவிர அவளுக்கு வேறு யார் மீதும் ஈர்ப்பு வந்ததில்லை. அவனுக்கும் இறுதிவரை அப்படித்தான். ஆனால் இன்றோ இவளை ஆள்மயக்கி என்று முன் பின் தெரியாத நபர் தூற்றுகிறார்.

“சமையல் ரூம் ஜன்னலுக்கு வெளிய ஏதாவது அதிசயம் தெரியுதா ஹிமா? அங்கேயே பார்த்துட்டு இருக்க” அந்தக் குரலைக் கேட்டதும் அந்த நிமிடம் வரை அவளை வாட்டிக் கொண்டிருந்த கவலைகள் எல்லாம் ஓடிப் போய் ஒளிந்து கொண்டது.

“சரத்… வரேன்னு சொல்லவே இல்லை” அவளது கண்கள் ஆச்சிரியத்தில் விரிந்தன.

சுவாதீனமாக நடந்து அவளருகே இருந்த சமையலறையின் மேடை மேலிருந்த காலி இடத்தில் அமர்ந்து கொண்டான்.

“இந்தக் கண்ணு இன்னொரு தடவை ஆச்சிரியத்தால விரியிறதைப் பாக்க ஆசையாயிருந்தது. அதுதான் சர்ப்ரைஸ் விசிட்”

“இன்னொரு தடவைன்னா… எப்ப முதல் தடவை”

“அன்னைக்கு கடைல பாத்தப்ப… சரத்…” அவளைப் போலவே கண்களை விரித்துக் காட்டினான்.

“சரத்…” என்று சினுங்கியவண்ணம் பைப்பில் வந்த தண்ணியை அள்ளித் தெளிக்க.

“ஹே… சட்டை அழுக்காச்சு… அப்பறம் நீதான் துவைச்சுத் தரணும். அதுவும் கைலையே துவைக்கணும்” என்று சரத் சொல்ல அவள் பதிலுக்கு அவனிடம் வாயடிக்க அந்த சூழ்நிலையே கலகலப்பாக மாறியது.

சரத் வாங்கித் தந்த பரிசினைப் பிரித்து ஏரோப்ளைன் பொம்மையை எடுத்துக் கைகளில் பிடித்தபடி வானத்தில் ஒட்டியபடியே சமையலறை இருந்த பக்கம் சென்றான் துருவ். மகனும் ஹிமாவும் சிரிக்கும் குரலை ரசித்துக் கொண்டிருந்த தெய்வானை துருவை இடைமறித்து அவரது ரூமுக்குக் கடத்தி சென்றார்.

“அம்மாட்ட காமிக்கணும்”

“அதெல்லாம் அப்பறம் காமிக்கலாம். இப்ப என்கிட்டே காமி”

“சரி ஏரோப்ளைன் வாங்கித் தந்ததுக்கு தாங்க்ஸ் சொல்லிடு வரேன்”

“அம்மா அப்பாவத் தொந்தரவு பண்ணாதே. அப்பறம் சொல்லிக்கலாம்”

“லேட்டா சொன்னா அம்மா திட்டுவாங்களே”

“அம்மால்லாம் திட்ட மாட்டாங்க. நான் சொல்லிக்கிறேன்”

அவன் கண்களில் பட்ட வெள்ளைத் தாளில் அந்த ஏரோப்ளேனை வரைய ஆரம்பித்தான்.

“அட அப்படியே வரையிறியே…” சற்று நேரம் மகனையும் மருமகளையும் தொந்திரவு செய்யாமல் இருந்தால் போதும் என்ற எண்ணத்தில் தெய்வானையும் சிறுவனை வரையச் சொல்லி உற்சாக மூட்டினார்.

சமையலறையில் அவனுக்குக் காப்பி கலந்து தந்த ஹிமா “இவ்வளவு ஷார்ட் டைம் டெலிவரிக்கு ஒத்துகிட்டிங்களே… வேலை இருக்கே சரத். சீக்கிரம் முடிக்கணுமே…” என்றாள் அக்கறையுடன்.

“அதுதான் இந்த அம்மிணி இருக்கிங்களே… ரெண்டு நாள் உங்களை நம்பித்தான் வந்திருக்கேன். கொஞ்சம் கான்பிடன்ஷியல் டாக்குமெண்ட் அடிக்க வேண்டியிருக்கு. ப்ராஜெக்ட் ப்ளான் போடணும் உன்னால ஹெல்ப் பண்ண முடியுமா…”

“சரத்… நீங்க கேட்கவே வேண்டாம். என்னால முடிஞ்ச உதவியைக் கண்டிப்பா செய்றேன். ஆனால் நீங்க எல்லாத்தையும் டிக்டேட் பண்ணிடுங்க. நான் டைப் பண்ணித் தரேன். அவ்வளவுதான். அதுக்கு மேல ஆபிஸ் விவரங்கள் எதுவும் என்னால முடியாது”

“முடியாதுன்னு எதுவும் இல்லை ஹிமா… கொஞ்சம் கஷ்டம்ன்னு வேணும்னா சொல்லலாம். ஒரு டான்ஸ் டீச்சருக்கு இதெல்லாம் ஒரு கஷ்டமா” இருவரும் பேசியபடியே ஹாலுக்கு வந்தார்கள்.

“என்ன டூயட் எல்லாம் பாடி முடிச்சாச்சா…” என்றார் சின்னசாமி ஏகத்தாளமாக.

“அபஸ்வரம் குறுக்க வரப்ப எங்க டூயட் பாடுறது. நீங்க கிளம்புனப்பறம் பாடிக்கிறோம்” என்றான் சரத் அதே தொனியில்.

“பரவால்ல பெரியவங்களை எப்படி அவமானப் படுத்தணும்னு உன் பொண்டாட்டி நல்லாவே ட்ரைனிங் கொடுத்திருக்கா…” என்றார் அவனைப் புண்படுத்தும் நோக்கத்தில்.

“எல்லாரையும் இல்லை. பெரியவங்களா இருந்தும் சின்ன புத்தியோட இருக்கவங்களை மட்டும்” என்றான் அலட்டிக் கொள்ளாமல்.

ஹாலில் பேசும் சத்தம் கேட்டு எழ முயன்றார் தெய்வானை. அவர் அங்கிருந்தால் சகோதரனுக்கும் மகனுக்கும் வாக்குவாதம் முற்றாமல் பார்த்துக் கொள்வார். அப்படித்தானே இத்தனை காலமும் நடக்கிறது.

பாட்டி எழ கைகொடுத்து உதவினான் துருவ். அவர் எழுந்து நின்றவுடன் தான் வரைந்திருந்த படத்தை ஆர்வத்துடன் காண்பித்தான்

“படம் நல்லாருக்கா…”

“ஓ…”

“அங்கிளுக்கு பிடிக்கும்ல”

களுக்கென சிரித்த தெய்வானை பேரனைத் திருத்தினார். “அவரு தாத்தா கண்ணு. அங்கிள்னு கூப்பிடக் கூடாது”

“அய்யே நான் தாத்தாவை சொல்லல பாட்டி. அவரு கூட பேசிட்டு இருக்காரே அந்த அங்கிளை சொன்னேன்”

சரத்தை துருவ் சுட்டிக் காட்டவும் திகைத்தார் தெய்வானை.

“அடி வாங்கப்போற… அப்பாவைப் போயி அங்கிள்னுட்டு”

“எங்க அப்பா ஊருக்குப் போயிட்டாரே… ரொம்ப நாள் கழிச்சுதான் வருவாருன்னு அம்மா சொல்லிருக்காங்க…”

தெய்வானை எரிச்சலில் பல்லைக் கடித்தார்.

“ஊர் ஊரா சுத்திட்டு மகனை அங்கிள்னு கூப்பிடுற அளவுக்கு விட்டிருக்கானே… இது மட்டும் வேற யாரு காதிலாவது விழுந்தது அதுக்கும் சேர்த்து கதை ஒண்ணு கட்டுவாங்களே” வாய்விட்டு புலம்பியவர்

சின்னவனிடம் கண்டிப்பான குரலில் சொன்னார்.

“கண்ணு… உங்கப்பா ஊர்லேருந்து வந்தாச்சு. அதுதான் உங்கப்பா… இனிமே அங்கிள்னு கூப்பிட்டா பாட்டிக்கு ரொம்ப கோபம் வந்துடும்”

“கோபம் வந்தா எங்கம்மாவை மறுபடியும் திட்டுவிங்களா…”

“ஆமாம்…”

தலையை சாய்த்து யோசித்தவன் “சரி பாட்டி உங்களுக்காக அந்த அங்கிளை அப்பான்னு கூப்பிடுறேன். எனக்காக நீங்களும் எங்கம்மாவைத் திட்டக் கூடாது. டீலா…”

பிரச்சனை முடிந்தால் போதும் என்ற எண்ணத்தில் நிம்மதிப் பெருமூச்சுடன் “சரி” என்றார் அவர்.

“இப்ப அப்பாட்ட போயி உன்னோட படத்தைக் காட்டிட்டு வா…” என்றார் சமாதானக் குரலில்.

வேகமாக சரத்திடம் ஓடியவன் “இந்தப் படம் நல்லாருக்கா…”

காகிதத்தை வாங்கிப் பார்த்த சரத் “சூப்பர் கண்ணா…” என்று பதிலுரைத்தான் பின் பின்னால் திரும்பி…

“ஹிமா… டைனிங் டேபிளில் பை ஒண்ணு இருக்கும் எடேன்” என்றான்.

ஹிமா எடுத்து வந்து தந்த பையிலிருந்து புதிய ஸ்கெட்ச் பேனாக்களையும், பில்டிங் செட்டுக்களையும், படம் வரைய டிராயிங் புத்தகங்களையும் எடுத்துத் தந்தான் சரத்.

தூக்க முடியாது தூக்கியவண்ணம் முதலில் தாயிடமும் பின்னர் தெய்வானை புறமாக திரும்பியும் பெருமிதமாக சிரித்தான் சிறுவன். பின்னர் ஞாபகமாக சரத்திடம் “தாங்க்ஸ்… அ… அப்பா” என்றான்.

பேரன் தன் சொல்பேச்சு கேட்டதை ரசித்து மகிழ்ந்தார் தெய்வானை.

ஆனால் அந்த இரு சிறிய வார்த்தைகள் சரத்துக்கு திடீரென சில்லென்ற நீரினை உச்சந்தலையில் கொட்டிய அனுபவத்தைத் தோற்றுவித்தன என்றால் ஹிமாவுக்கோ அக்கினி மழையில் நிற்கும் எண்ணத்தைத் தோற்றுவித்தது. அவ்விடத்தில் அவள் முகத்தில் தோன்றிய அதிர்ச்சியை கவனித்தது சின்னசாமி ஒருவர்தான்.

Tags:

2 thoughts on “உள்ளம் குழையுதடி கிளியே – 14”

  1. GS says:

    Missing 13th episode?

  2. Sumathi Siva says:

    Wow wonderful

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.