Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 61

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 61

ருவாரங்களுக்குப் பின் தாயின் தாலாட்டு கேட்டு கண்கள் சொக்கி உறங்க ஆரம்பித்திருந்தான் அபி. மெதுவாய் சத்தம் கசிந்த அறைக்குள் பூனை போல் சென்றான் ஜிஷ்ணு. மகனை மடியில் படுக்க வைத்து தட்டிக் கொடுத்தபடி மெலிதான குரலில் தாலாட்டிக்கொண்டிருந்தாள் சரயு. ஜிஷ்ணு சொன்ன ஒரு வார்த்தைக்காகத் நாள்தோறும் தாலாட்டுப் பாடும் அவன் கண்மணியைப் பார்க்கும்போதே அவளின் கள்ளமில்லா அன்பால் மனம் நிறைந்தது. குதூகலமான குரல் அவளது மனமகிழ்ச்சியைத் தெள்ளன சொன்னது.

‘இன்னமும் சந்தோஷத்தையோ துக்கத்தையோ சாமானியத்துல வெளிய சொல்ல மாட்டிங்கிறா… நானும் அணுகுண்டும் அவளோட செய்கையை வச்சே புரிஞ்சுக்க வேண்டியிருக்கு’ பெருமூச்சு விட்டான்.

ராராரோ ராராரோ
ராரிராரோ ராராரோ

கண்ணுக்கோ கண்ணெழுதி
கடைக்கண்ணுக்கோ மையெழுதி

தூங்காத கண்ணுக்கு
துரும்புகொண்டு மையெழுதி

உறங்காத கண்ணுக்கு
ஓலை கொண்டு மையெழுதி

அன்னம் எழுதி என் கண்ணே
அதன் மேல் புறாவெழுதி

தாரா எழுதி என் கண்ணே
தாய் மாமன் பேரெழுதி

கொஞ்சு கிளியெழுதி என்கண்ணே
குட்டி அம்மான் பேரெழுதி

அஞ்சு கிளி எழுதி என்கண்ணே
அய்யாக்கள் பேரெழுதி

பச்சைக் கிளி எழுதி என் கண்ணே
பாட்டன்மார் பேரெழுதி

ராராரோ ராராரோ என் கண்ணே
ராரிராரோ ராராரோ…

மெதுவாய் நடந்து அவளருகில் அமர்ந்து தோளில் தனது முகவாயை வைத்துக் கொண்டு மனைவியின் மடியில் உறங்கும் மகனை இமைக்கவும் தோன்றாமல் நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் ஆசை, அவன் கனவு, அவன் தவம் முற்றுப் பெற்றதைப் போன்ற ஒரு உணர்வு.

“பங்காரம்… நா ப்ரேயசி” சரயுவின் காதருகே முணுமுணுத்தான்.

“விஷ்ணு, நெசம்மா நீ என் பக்கத்துலையே இருக்கியா?” அவள் குரலில் நடுக்கம்.

அவளது நடுக்கம் குறையாததைக் கண்டு கலங்கியவன், குறும்புக் குரலில்,

“எனக்கும் அதே டவுட்தான்… எதுக்கும் க்ளியர் பண்ணிக்குறேன்” இடுப்பில் கிள்ள, வலி தாங்காமல், “அய்யோ… கையை எடுலே” என்று அன்பாக கத்திய மனைவியின் முகத்தை தன்புறம் திருப்பி, அவளது இதழ்களை தனது இதழ்களால் கைது செய்தான்.

சில நிமிடங்களில் விடுவித்து, “இந்த ஸ்வீட்டை சாப்பிட்டு நாலு வருஷமாச்சு” மயக்கத்துடன் சொன்னான்.

“ஏண்டா இப்படிக் காயப்படுத்தி வைக்கிற” வலியில் சலித்துக் கொண்டாள்.

நினைவு வந்தவளாக,

“அன்னைக்கு உன் வீட்டுல, வலிச்சதா விஷ்ணு… பச்… உன்னை ரொம்ப அடிச்சுட்டேன்ல்ல”

தாரணிக்கோட்டையில் டென்னிஸ் ராக்கெட்டால் தன்னை அடித்ததை சொல்கிறாள் என்பது புரிந்து, “இல்லரா… கொஞ்சம் கூட வலிக்கல…”

பரபரவென அவனது சட்டையை விலக்கிவிட்டு கைகளில் சிலாம்பு குத்திக் கிழித்த இடத்தைப் பார்த்தாள்… ஒன்றும் தெரியவில்லை.

“இங்கதானே கிழிச்சது… எனக்கு ரொம்ப கஷ்டமாயிருந்தது… மறக்காம மருந்து போட்டியா…” அந்த இடத்தில் முத்தமிட்டாள்.

“என் பங்காரத்தோட கோவம் மாதிரிதான் அந்தக் காயமும்… வந்த சுவடே தெரியாம ஓடிப் போயிடுச்சு…” சிரித்தான்.

உண்மையாய் நேசிக்கும் இதயம் உன்னைக் காயப்படுத்தும் முன்பே கவலைப்பட்டிருக்கும்.

கண்ணால் கண்டவன்,

“சரயு இப்படி முத்தம் கிடைக்கும்னு தெரிஞ்சிருந்தா இன்னும் கொஞ்சம் அடி வாங்கியிருப்பேன்”

அவளை வருடியபடி அபிமன்யுவைப் பார்த்தான். “தாங்க்ஸ்டி… உன்னை மாதிரியே ஒரு மகனைப் பெத்துத் தந்ததுக்கு”

“டபிள் தாங்க்ஸ் விஷ்ணு, அபிக்கும் சந்துக்கும்.” கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு மறுபடியும் அவன் மேல் சாய்ந்து கொண்டாள்.

“சந்தனாவை உனக்குப் பிடிச்சிருக்கா? அவ எனக்கும் ஜமுனாவுக்கும் பிறந்தவன்னு கோவமில்லையா?” தயக்கத்துடன் கேட்டான்.

“லூசு, பிள்ளை பெத்துகிட்ட உன்னையே கொஞ்சிக்கிட்டிருக்கேன்… சந்தனா என்ன பாவம் செஞ்சா… எல்லாத்துக்கும் மேல உன் பொண்ணை எப்படி என்னால வெறுக்க முடியும். அவ மேல ரொம்ப ஆசையா இருக்கு. ஆனா நானே ஆம்பள மாதிரி சுத்துவேன்னு எங்கம்மா திட்டும்… எனக்கு பொம்பளைப் பிள்ளையை எப்படி வளக்குறதுன்னு தெரியாதே விஷ்ணு… நான் அவளைக் கோவமா ஏதாவது சொன்னா நீ வருதப்படுவியா?”

அவளை பெண்ணென்று அவளுக்கே உணர்த்தியவன் அடித்து சொன்னான், “அதெல்லாம் நல்லாவே வளப்ப, அம்மாவும் பொண்ணும் என்னமோ பண்ணிக்கோங்க… என்னை உங்க விஷயத்துல இழுக்காதிங்க… என் மகனை ரசிக்க விடுடி” அபியை கண்கள் வழியே இதயத்தில் நிரப்ப ஆரம்பித்தான். அவனது பார்வைக் கலையாததைக் கண்டவள்,

“விஷ்ணு பாப்பா தூங்குறப்ப பாக்கக்கூடாதுன்னு அத்தை சொல்லுவாங்க”

“அவுனா… அப்ப பாப்பாவோட அம்மாவப் பாக்குறேன்” மெலிதாய் அவளது வெற்றுத் தோளில் இதழ் பதித்தான். பின்னர் அவளது முகத்தை அணு அணுவாய் ரசிக்கத் தொடங்கினான். அவன் கண்களின் ரசிப்பு கொஞ்சம் கொஞ்சமாய் ஆசையாக உருமாறி ஸ்னூக்கர் பாலினைப் போல் உடலெங்கும் ஓடியது. அவனது கணவன் பார்வையைக் கண்ட சரயுவின் உடலெங்கும் கூச்சம் பரவியது.

“டேய் விஷ்ணு

தூண்டி முள்ளு கண்ணழகா தூரத்துல பேரழகா

ஆண்டிப்பட்டி ஆணழகா மூக்கு மட்டும் குடைமிளகா

 

கிராமியப் பாடலைப் பாடியபடி அவன் மூக்கை நன்றாகத் திருகினாள்.

“உன் திருட்டுக் கண்ணு என்னைப் பாக்கவேயில்லைன்னு சொல்லு”

“அது திருட்டுப் பார்வைரா… இப்ப ரைட் ராயலா உரிமையோட பாக்கப் போறேன்”

தூங்கும் அபியின் தலைமுடியை பூவால் வருடுவது போல் இடக்கையால் வருடினான். அதற்கு மாறாக அவனது வலக்கரம் சரயுவின் இடுப்பை அழுத்தமாய் தடவியது.

“குழந்தையை தனியா பெத்து… வளத்து… எப்படியும் சில பேராவது அபியோட அப்பா யாருன்னு கேட்டிருப்பாங்கள்ள… இந்த கேள்வி வரும்போதெல்லாம் என் மேல கோவமும் வந்துருக்கும்ல… பங்காரம்… நீக்கு எந்த பாத கலிகியுண்டுந்தி… நன்னு மன்னிச்சுரா”

அவனை இமைக்காமல் பார்த்தாள்.

உன்னை எண்ணி முள் விரித்து படுக்கவும் பழகிக் கொண்டேன்

என் மேல் யாரும் கல் எறிந்தால் சிரிக்கவும் பழகிக் கொண்டேன்

உள்ளத்தை மறைத்தேன் உயிர்வலி பொறுத்தேன்

இதை சொன்னால் தாங்குவானா?

“உன்னை எப்படிக் கோச்சுக்குவேன் விஷ்ணு… உனக்கு என் மேல எப்ப காதல் வந்ததுன்னு எனக்குத் தெரியாது… ஆனா பாஸ்கட்பால் மேட்ச் போது இந்த ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி, என் கூட சாப்பிடுற ஆசைல, தட்டுல சாப்பாட்டை வாங்கிட்டு வந்து கிரௌண்ட்ல நின்னியே… அப்பயே விஷ்ணு கல்வெட்டா என் மனசில் பதிஞ்சுட்டான். அது காதலா? ஆசையா? அன்பா? எனக்கு இன்னமும் தெரியல… என் விஷ்ணுவால என்னைக் காயப்படுத்த முடியாது. வருத்தப்படுத்த முடியாது. அப்படியே செஞ்சாலும் அவனுக்கு நல்லதுன்னா அதை நான் சந்தோஷத்தோட தாங்கிக்குவேன். அப்படித்தான் நம்ம பிரிவையும் தாங்கிக்கிட்டேன்”

அவளை மேலும் இறுக்கிக் கொண்டான்.

“எவ்வளவு பெரிய ரிஸ்க்ரா… அணுகுண்டு கர்ப்பத்தைக் கலைக்க மருந்து கொடுத்ததா வருத்தபட்டான். அதை வாந்தி எடுத்துட்டியாமே… ஏன் சரயு?”

“விஷ்ணு உன் பரிசை மறுத்து எனக்குப் பழக்கமில்லையே. நீ எனக்குப் பரிசா தந்த சைக்கிளை வாங்கி சந்தோஷமா ஓட்டினேன், உன் முத்தத்தை மனசார ஏத்துகிட்டு என்னைப் பெண்ணாய் உணர்ந்தேன், நீ கிப்டா தந்த படிப்பை ஆர்வமா படிச்சு நல்ல நிலைக்கு வந்தேன், தாரணிகோட்டைல உன் காதலோட ஒவ்வொரு துளியையும் அனுபவிச்சேன். நீ கொடுத்த காதல் பரிசை மட்டும் கலைச்சிடுவேனா? அபியை சந்தோஷமா பெத்துக்கிட்டேன். ஆசை ஆசையா வளக்குறேன். அபியைப் பார்த்தா என் நினைவு உனக்கு வர்ற மாதிரி, உன் நினைவுதான் எனக்கு வரும். அவனோட ஒவ்வொரு செயல்லையும் உன்னைத்தான் தேடுறேன். உன்னை ஒரு செகண்ட் கூட நான் மறக்கவேயில்லை விஷ்ணு.”

“சரயு… அர்ஜுனன் சித்ராங்கதாவை ஏத்துகிட்டது பெரிசில்லரா… ஏற்கனவே கல்யாணமாகிக் குழந்தை இருந்தாலும் அவனை அவனுக்காகவே காதலிச்சு, காதல் பரிசா அவன் குழந்தையை சுமந்து, மனசில அவனையும் ஒவ்வொரு நிமிஷமும் சுமக்குற இந்த சித்ராங்கதாவைப் பாத்து உறைஞ்சு நிக்கிறேன் டார்லிங். இவ்வளவு அன்பை வச்சுட்டு எப்படிரா என்னை விட்டுத் தள்ளி நின்ன…”

“சித்ராங்கதா அர்ஜுனனை விட்டுத் தள்ளி இருந்தா… அவனையே நினைச்சுட்டு இருந்தா… அவனுக்காகவே வாழ்ந்துட்டு இருந்தா… அவ அவனை மிஸ் பண்ணல, தினமும் கனவிலையும் கற்பனைலையும் அவனோட குடும்பம் நடத்திட்டு இருந்தா… அவளுக்கு அந்த சந்தோஷம் போதும். அர்ஜுனனுக்கு இதை அவ தெரிவிக்கணும்னு நினைக்கல. ஏன் சொல்லணும்? எதுக்கு சொல்லணும்?”

“சரயு… உன் அன்பால என்னைக் கொல்லாதடி… நான் உன்னை விட்டு இனிமே பிரியவே மாட்டேன்…”

சற்று யோசித்துப் பார்த்துவிட்டு நகைத்தாள் சரயு.

“நேத்துத்தான் உன்னை உன் குடும்பத்தோட சந்தோஷமா வாழ வைக்கணும்னு சபதம் எடுத்திருந்தேன்”

“பரவால்லையே.. உன் சபதம் இவ்வளவு சீக்கிரம் நிறைவேறிடுச்சே.. மக்கு, எனக்கும் சந்துக்கும் இதுதான் குடும்பம்”

தலையணைக்கு அடியில் சுருட்டி வைத்திருந்த அவனது பனியனை எடுத்தாள். அதனுள் பத்திரமாக வைக்கப்பட்டிருந்தது அவன் கழுத்தில் கட்டிய சிவப்புமணித் தாலி.

“அன்னைக்கு தாரணிக்கோட்டைல உன் வீட்டை விட்டுக் கிளம்புறப்ப பாத்ரூமுல நீ கழட்டிப் போட்ட அழுக்கு பனியன். உனக்குத் தெரியாம திருடிட்டு வந்துட்டேன்” ரகசியமாய் சொன்னாள்.

“நான் உன் கல்யாண சாரியை பத்திரமா எடுத்து வச்சிருக்க மாதிரியா… நைட் அதைக் கட்டிப் பிடிச்சுட்டுத்தான் தூங்குவேன்” பதிலுக்கு அவனும் ரகசியம் பேசினான்.

அவனது உச்சந்தலையில் முத்தமிட்டு அவளது சந்தோஷத்தைத் தெரிவிக்க, அதை மறுத்து கையால் அழித்துவிட்டுக் கன்னத்தைக் காட்டினான் அந்தக் குறும்பன். அவன் கன்னத்தைப் பிடித்து வலிக்கும்படி திருகினாள்.

“கல்யாணம் முடிஞ்சதும் உன்கிட்ட சில பேப்பர்ஸ்ல சைன் வாங்கினேனே நினைவிருக்கா… என் பிஸினெஸ், சொத்து எல்லாத்திலையும் அதில் சரிபாதி உரிமையை உனக்கு எழுதி வச்சிருக்கேன். என் சொத்துக்களில் நீ என்னோட பார்ட்னர். ஆனா என் மனசு மட்டும் முழுசா உனக்கு மட்டுமே சொந்தம்”

மனதில் இறைவனை வேண்டி, கவனமாக சிவப்பு மணியை அவளது கழுத்தில் அணிவித்தபடி சொன்னான்.

“ஈ க்ஷணம் கோசம் படின கஷ்டம் கொன்சம் நன்சம் காது…ப்ராணம் போய்யொச்சிந்தி (இந்த ஷணத்துக்கான பட்டக் கஷ்டம் கொஞ்சம் நஞ்சமில்லை. உயிரே போயிட்டு வந்தது)” நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

“ஸ்கூல்ல படிக்குறப்ப பாஸ்கட்பால் மேல அவ்வளவு ஆர்வம். மனோரமா டீச்சர் என்னை ஒரு வருஷம் டீம்ல சேத்துக்கவேயில்ல… தினமும் எல்லாப் பிள்ளைங்களும் விளையாடுறதைப் பாத்து ஏங்குவேன். டீச்சர் என்ன காரணம் சொன்னாங்க தெரியுமா? கஷ்டப்பட்டு கிடைச்சாத்தான் அதோட அருமை தெரியும். பிளேயர் ஸ்டேட்டஸ பாடுபட்டு அடைஞ்சிருக்க, இனிமே இந்த விளையாட்டை விடமாட்டன்னு சொன்னாங்க. அதே மாதிரிதான் நம்ம காதலும்… ரெண்டு பேருக்குமே இயல்பாவே வந்துடுச்சு. ஒரு வேளை அந்த சின்ன வயசில் சேர்ந்திருந்தா, குருடன் காலடில கெடந்த வைரப்பாறை மாதிரி நம்ம காதலோட மதிப்பும், அன்போட ஆழமும் நமக்கே தெரிஞ்சிருக்காம போயிருக்கலாம். எப்படியோ விஷ்ணு… எனக்கு பரம சந்தோஷம். இதுவரை பட்ட கஷ்டமெல்லாம் பஞ்சாப் பறந்து மனசு இறகாட்டம் லேசா இருக்கு”

பேசியபடியே நேரம் போகிறதே என்று ஜிஷ்ணுவுக்குக் கவலை.

“பங்காரம்… பார்க்ல எனக்கு கிஸ் குடுத்தேல்ல அப்பயிருந்து உன் நினைவாவே இருக்கு… மத்யானம் தூங்கும்போது கனவுல கூட நீ முத்தம் கொடுத்ததே வருது. அது ஏன்?” சரயு முதல் முத்தம் முடிந்தவுடன் கேட்ட சந்தேகத்தைக் கேட்டு,

“என்கிட்டே அடி வாங்கி நாளாச்சில்ல அதுதான்” என்ற பதிலுடன் அவள் கையில் கொட்டு வாங்கினான்.

நினைவு வந்தவனாக அவனது வேலட்டில் எப்போதும் குடியிருக்கும் சரயுவினது செயினை அவளது கழுத்தில் மெதுவாய் பூட்டினான். அவன் முதன் முதலாக சரயுவுக்கு வாங்கித் தந்த அன்புப் பரிசு. சிவப்புக்கல் பென்டன்ட் தனக்கு சொந்தமான கழுத்தில் மறுபடியும் வந்து பெருமையில் பிரிவுத் துயர் நீங்கி பன்மடங்கு பிரகாசத்துடன் ஒளிர்விட்டது.
சரயு ஜிஷ்ணுவின் கரங்களில் தனது இதழ்களை மெதுவாய் பதிக்க, கள்ளன் ஜிஷ்ணுவோ அவளது இதழ்களில் அழுத்தமாய் முத்திரை பதித்துவிட்டு அவசர அவசரமாய் அவளது பென்டன்ட்டில் முரட்டு முத்தம் பதித்து நிமிர்ந்தான்.

மெதுவாக ஆரம்பித்த அவனது இதழ்களின் ஊர்வலம் கொஞ்சம் கொஞ்சமாய் வேகம் பிடிக்க, மகனை மடியில் வைத்துக் கொண்டு எழவும் முடியாமல், ஜிஷ்ணுவைத் தள்ளியதும் பலன் தராமல் திக்குமுக்காடிப் போனாள் சரயு.

“விஷ்ணு கொரங்கே, இப்படியா கடிப்ப”

“கோத்தி(குரங்கு) எப்படிடி கடிக்கும்? குக்கா(நாய்) தானே கடிக்கும்… கோத்தி இப்படி டிரஸ்சைப் பிராண்டி கிழிக்கும்” கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த அந்த ஜொள்ளனுக்கா கற்றுத் தரவேண்டும்.

“விஷ்ணு அடிச்சுருவேண்டா… ரொம்ப பேட் டச் பண்ணுற… ஏண்டா இப்படி படுத்துற”

“அப்படித்தான்டி பேட் டச் பண்ணுவேன். பதிலுக்கு வேணும்னா நீயும் பண்ணேன். என்ன சொன்ன? லைட் ஆப் பண்ணா எல்லாப் பொண்ணுங்களும் ஒண்ணா? நான் அவ்வளவு சீப் இல்லரா… எனக்கு இந்த உலகத்திலேயே நீ மட்டும்தான் வேணும். என் பெட்ரூம் லைட் ஆப் பண்ணவும், என் லைஃபை ஆன் பண்ணவும் உனக்கு மட்டும்தான் பவர் இருக்கு. நீ பேசினது மனசில இருந்து வரலைன்னு எனக்குத் தெரியும்… இருந்தாலும் ஒவ்வொரு வார்த்தைக்கும் விதவிதமா தண்டனை யோசிச்சு வச்சிருக்கேண்டி என் சண்டி ராணி”

பெற்றவர்களின் பேச்சினால் உறக்கம் கலைந்து அபிமன்யு சிணுங்க, முரட்டுக் கணவனை முறைத்தாள் சரயு. கண்களாலே அவளிடம் மன்னிப்பை வேண்டியவன் தாலாட்டும் வேலையைத் தான் எடுத்துக் கொண்டான்.

வடபத்ர சாயிக்கி வரஹால லாலி

ராஜீவ நேத்ருனிக்கி ரதனால லாலி

முரிபால க்ரிஷ்ணனுக்கி முதியால லாலி

ஜகமேலு ஸ்வாமிக்கி பகதால லாலி

மாடியிலிருந்து சற்று முன் ஒலித்த தமிழ் தாலாட்டைக் கேட்ட ராம், ஜிஷ்ணுவின் சுந்தரத் தெலுங்கில் ஒலித்த தாலாட்டைக் கேட்டபடியே நிம்மதியாக உறங்கிப்போனான்.

ங்காரம்…” அபியைப் படுக்க வைத்துவிட்டு தரையில் படுக்கையை விரித்துக் கொண்டிருந்த சரயுவின் முதுகை சொரிந்தான் ஜிஷ்ணு.

“நீ பெட்ல படுத்துக்கோ விஷ்ணு” என்றபடி படுக்கையில் படுத்தவளைக் கொலைவெறியோடு பார்த்தான்.

“ஒத்து, நான் இங்க தரைல உன் பக்கத்துலதான் படுப்பேன்”

“சொன்னாக் கேளு… தரை உனக்குப் பழக்கமில்லை விஷ்ணு… கட்டில்ல படுத்துத் தூங்கு”

“எனக்கு பாஸ்கெட்பால் கோர்ட்ல கூடத் தூங்கிப் பழக்கம்” என்றவன் அவள் முறைப்பைக் கண்டவுடன்,

“ஹே தப்பாப் பாக்காதே… உன் நினைவு வரும்போதெல்லாம் தாரணிக்கோட்டைல பாஸ்கெட்பால் கோர்ட்லதான் தூங்குவேன்” என்று அசடு வழிந்தான்.

“ஓகே.. பேஸ்கெட்பால் கோர்ட்லையே தூங்கினவனுக்கு தரைல மெத்தை தலையணை எல்லாம் அதிகம்தான்.” துள்ளி எழுந்து கட்டிலில் படுத்தாள். “சரி தரைல படுத்துக்கோ… நான் பெட்ல படுத்துத் தூங்குறேன்… குட் நைட்”

கண்ணை மூடிப் படுத்தவளைப் பார்த்து முறைத்தவன், அவனது படுக்கையில் முட்டிப் போட்டு அவளது உடையைப் பிடித்து கோவமாய் இழுத்தான்.

“நாலு வருஷமா வீட்டுக்காரனை நாய் மாதிரி அலைய விட்டுட்டு… அதுவும் இந்த அஞ்சு நாளும் பக்கத்திலேயே இருந்துட்டு, விரல் கூட படாம, பார்வையையும் மனசையும் கண்ட்ரோல் பண்ணி, எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கேன்… இதெல்லாம் உனக்கு விளையாட்டா… குட்நைட் செப்பு தாவா… கொன்னுடுவேண்டி…” கத்தியவனைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தபடி அவனருகில் படுத்துக் கொண்டாள்.

“இப்பத்தான் நீ என் பங்காரு தங்கம். இன்னைக்கு உன்னை தொந்தரவே பண்ண மாட்டேன். நீயும் நானும் இந்த ஹேப்பி மொமென்ட்டை டைஜெஸ்ட் பண்ண இன்னைக்கு ஒரு நாள் எடுத்துக்கலாம். எப்போதும் இந்த ரௌடிபொண்ணு என் பக்கத்துலையே இருக்கணும். இன்னைக்கும் சேர்த்து வச்சு நாளைக்கு கவனிச்சுக்குறேன்” கொஞ்சினான்.

அவனது கன்னங்களைப் பிடித்துக் கிள்ளி, “விஷ்ணு… இது நிசம்தானா… நீ நிஜம்மாவே என் பக்கத்தில தானிருக்கியா… அப்பறம் வழக்கம்போல இதுவும் கனவா இருக்கப் போவுது” நடுங்கிய குரலில் பயத்துடன் கேட்டாள். அடி மேல் அடி வாங்கி ரணப்பட்ட இதயத்திற்கு வசந்தத்தைக் கூட வரவேற்கக் கூடத் தெம்பில்லை.

“நிஜம்தான் டார்லிங்… நம்ம ரெண்டு பேருக்கு நடுவுல இருந்த தூரம் கொஞ்சம் கொஞ்சமா எரிஞ்சு சாம்பலாகிருச்சு”

பயம் கலையாமல் சரயு பார்க்க,

“இல்லரா இது நெனவுதான்… பாரு” என்று ஜிஷ்ணு அவளைக் கிச்சு கிச்சு மூட்டினான்.

சோவிகளைக் குலுக்கிப் போட்டாற்போல சரயுவின் சிரிப்புச் சத்தம் கீழே கேட்க, “முருகா… சரவெடி சிரிக்கவே மறந்துட்டான்னு நெனச்சேனே… மாப்பிள்ளையைப் பாத்தவுடனே மத்தாப்பா அவ மொகம் பூத்துடுச்சு. என் தங்கத்தை கட்டாயப்படுத்தி ராசுக்குக் கட்டி வைக்கப் பாத்தேனே… அப்படி மட்டும் செஞ்சிருந்தா மூணு புள்ளைங்க வாழ்க்கையும் வீணாப் போயிருக்குமே…” என்று மனதினுள் கடவுளுக்கு நன்றி சொன்னார் பொற்கொடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 36 (நிறைவுப் பகுதி)என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 36 (நிறைவுப் பகுதி)

அத்தியாயம் –  36   சித்தாரா குழுவினர் வண்டியை நிறுத்தி வழியில் ஏறிக்கொண்ட நபரைப் பற்றி சித்தாரா ஊகித்தது சரிதானா என்று விவேகானந்தரைக் கேட்டுக் கொண்டாள். அவளுக்கு ஒரே வியப்பு. நடக்கப்போவது நல்லபடியாக முடிய வேண்டுமே என்று கவலை.   அதே

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 30என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 30

அத்தியாயம் – 30   கையைக் கட்டிக் கொண்டு தன் முன் குற்றவாளியாய் நிற்கும் கணவனைக் கண்டு கனியத் தொடங்கி இருந்த மனத்தைக் கல்லாக்கிக் கொண்டாள் சித்தாரா. இது இளகும் நேரம் இல்லை இறுகும் நேரம். ஊரில் இருந்து நேரம் கெட்ட

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 2தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 2

அத்தியாயம் – 2 அன்று வேலை நெட்டி முறித்தது. சரயு ஜெர்மனியில் இருக்கும் மியூனிக்கின் ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்றில் டிசைனிங் பிரிவில் பணியாற்றினாள். அவர்கள் அணி வடிவமைத்த பகுதியைப் பற்றிய இறுதி அறிக்கையை இந்த மாத இறுதிக்குள் ஒப்புவிக்க வேண்டும், அதனால்