Tamil Madhura ஆடியோ நாவல் (Audio Novels),உன்னிடம் மயங்குகிறேன்,Tamil Madhura தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 5’

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 5’

அத்தியாயம் – 5

கோடை ரோடு ரயில் சந்திப்பில் டீ காபி…. என்று கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தவர்களிடம் வேண்டாம் என மறுத்துவிட்டு, தமிழ் பத்திரிக்கைகளை மட்டும் வாங்கிக் கொண்டான் ப்ரித்வி.

 

பயணிகள் கவனத்திற்கு……

யாத்திரிகா க்ருபயா ஜாயங்கே….

 

என்று சலிப்படையாமல் அறிவித்துக் கொண்டிருந்தார் அறிவிப்புப் பெண்மணி. நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் கோடை ரோடு சந்திப்பில் ஒரு நிமிடம் மட்டுமே நிற்கும். அவர்கள் அதிர்ஷ்டம் இன்று மூவரும் யாருக்கும் தெரியாமல் பயணம் செய்து சரியாக வண்டியைப் பிடிக்க முடிந்தது. பெண்கள் அறையில் ஈர உடையினை மாற்றி வருமாறு நந்தனாவை அனுப்பிவைத்தனர். மழை அதிகம் மற்றும் இன்று அலுவலக நாள். அதனால் உட்கார இடமிருக்கும் என நினைத்தான் ப்ரித்வி. இவள் எங்கே சென்றாள் என நகத்தைக் கடித்துக் கொண்டு பெண்கள் காத்திருக்கும் அறையை திரும்பித் திரும்பிப் பார்த்தபடி நின்றுக் கொண்டிருந்தான்.

 

 

“ப்ரித்வி…. அவ என் கூட பிறக்காத தங்கை மாதிரி. பத்திரமா பாத்துக்கோடா” தெரிந்தவர் கண்களில் நந்தனா பட்டுவிடக்கூடாதென்று எச்சரிக்கையில் சுற்றும் முற்றும் பார்த்தபடி சொன்னான்.

 

 

“என் மேல நீ வச்ச நம்பிக்கையைக் காப்பாத்துவேண்டா…. “ பேசியவனின் பேச்சு நின்றது. அறையிலிருந்து வாடிய கொடி போலத் துவண்டு  வந்தவளைக் கண் கொண்டு பார்க்க முடியவில்லை நண்பர்களுக்கு.

 

 

“இவ மறுபடியும் தற்கொலை முயற்சி செய்வாளோன்னு பயம்மா இருக்கு”

 

 

“தற்கொலை முடிவுன்னுறது கண நேரத்துல வர்றதுதானே. அந்த நேரத்தை எதிர்த்து நின்னுட்டா, பின்னாடி எவ்வளவு பெரிய தப்பு பண்ண இருந்தோம்னு  கண்டிப்பா உணரமுடியும். நந்தனா தைரியமான பெண்தான். சொந்த வீட்டிலேயே வேலைக்காரி மாதிரி இருந்தாலும் பாதுகாப்பா இருந்தா. பெரியப்பா  குடும்பத்தை ரொம்ப நம்பினா. இப்ப நம்பிக்கை துரோகத்துல உடைஞ்சு போயிருக்கா.

 

இங்க இருந்தா நந்து  உயிருக்கே பாதுகாப்பில்ல. இவ பெரியம்மா நந்து ஆத்தோட போயிட்டதாவே நினைக்கட்டும். நீ இவளைக் கூட்டிட்டுப் போ. பிரச்சனை  அடங்கட்டும். நான் அப்பாகிட்ட மெதுவா நந்தனாவைப் பத்தி சொல்லுறேன். உனக்குத்தாண்டா ரொம்ப சிரமம். ஊர் சுத்திப் பார்க்க வந்தவன் சுமையோட திரும்பிப்போற”

நடக்க   முடியாமல் தடுமாறியவளை இரண்டெட்டில் விரைந்து சென்றுத் தாங்கிப்பிடித்தான் ப்ரித்வி  ‘ஆமாம் சுகமான சுமை’  என மனதில் சொல்லிக்  கொண்டான்.

“மத்யானம் என்ன சாப்பிட்ட நந்து”  ராஜேந்திரன் கேட்ட கேள்விக்கு விழித்தாள்

“கடைசியா எப்ப சாப்பிட்ட”  என்றான் ப்ரித்வி

 

யோசித்துவிட்டு  நினைவில்லை என உதட்டினைப் பிதுக்கினாள். இதழ்கள் இரண்டும் காய்ந்து அக்கினியைப் போல் சிவந்திருந்தது. அவளது நெற்றியில் கை வைத்துப் பரிசோதித்தான் ப்ரித்வி.

 

“நல்ல ஜுரம். நான் க்ரோசின் வச்சிருக்கேன். ஆனா சாப்பாடு சாப்பிடாம மாத்திரை போடக் கூடாது. நீ ஏதாவது சாப்பாடு கிடைக்குமான்னு பாரு”

ரயில் நிலையத்தில் ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கி,  பிஸ்கட்டை  டீயில் நனைத்து,  கண்டிப்பாய் சாப்பிட வேண்டும் என  மிரட்டி, ராஜேந்திரனின் உதவியோடு நான்கு பிஸ்கட்டுகளை உண்ண வைத்தான். பின் காய்ச்சலுக்கும், உடல் வலிக்கும் மாத்திரையினை விழுங்க வைத்தான்.

“நந்து இந்த அண்ணன் சொன்னா கேப்பதான?”

“ம்ம்…”

“உன்னைப் ப்ரித்வி  அவன் வீட்டுக்குக்  கூட்டிட்டு போறான். அவன் ரொம்ப நல்லவன். உன்னை நல்லா கவனிச்சுக்குவான். அவன் வீட்டுக்குப் போறியா”

“ம்ம்…”

“உங்க பெரியம்மாவை எதிர்த்துட்டு நாங்க  பெரிய ரிஸ்க் எடுத்திருக்கோம். அங்க போய் நீ மறுபடி தற்கொலைக்கு முயற்சி செஞ்சா, உன்னைக் காப்பாத்தின பாவத்துக்கு ப்ரித்வியும் நானும் கம்பிதான்  எண்ணனும். இனிமே அந்த மாதிரி முட்டாள்த்தனம் செய்வியா”

பதிலில்லை

கடுப்பானான் ராஜேந்திரன் “ப்ரித்வி நீ கிளம்பிப் போடா…  நான் இவளை வீட்டுல விட்டுடுறேன். அந்த பிரதாப்புக்குக்  கல்யாணம் செய்து வைக்கட்டும். அப்பறம் தற்கொலைக்கு அவசியமில்லை, அவங்களே கொன்னுடுவாங்க”

 

“இல்லைண்ணா நான் தப்பான முடிவுக்குப் போக மாட்டேன்” அவசரமாய் சொன்னாள்.

“ப்ரித்விட்ட உனக்கு   ஏதாவது வேலை தேடித் தர சொல்லிருக்கேன். நடந்ததைக் கெட்ட  கனவா நெனச்சு மறந்துட்டு, புது  ஊர்ல புது வாழ்க்கையைத் தொடங்கு” அறிவுரை சொன்னான் ராஜேந்திரன்.

ரயில் வரும் சத்தம் கேட்கவும், பிளாட்பாரம் பரபரப்பானது. ப்ரித்வி பைகளை எடுத்துக் கொண்டு ட்ரெயினில் ஏற, ராஜேந்திரன் ப்ரித்வி பார்க்காதபோது அவளது கையில் பணத்தைத் திணித்தான்.

“இதுல பத்தாயிரமிருக்கு. ப்ரித்விகிட்ட பணம் கேட்க கஷ்டமாயிருக்கும் உன் செலவுக்கு வச்சுக்கோ. உனக்கு ஏதாவது வேணும்னா என்னைத் தயங்காம கேளு”

“அண்ணா….”

“அழாதம்மா, உயிரைப் பணயம் வச்சு ப்ரித்வி உன்னைக் காப்பாத்தியிருக்கான். அவன்கிட்ட நல்லபடியா நடந்து இந்த அண்ணன் பெயரைக் காப்பாத்து. சரியா”

நந்தனா தலையாட்டவும் ரயில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

போர்டரிடம் தந்த இருநூறு ரூபாய் வேலை செய்ய, நல்ல வசதியான இடமே இருவரும் அமருவதர்க்குக் கிடைத்தது. பொம்மையாய் ப்ரித்வியின் பின் நடந்து சென்றாள். ஒரு நிமிடமே நின்ற அந்த ரயில் நகர ஆரம்பித்ததும் புள்ளியாய் மறைந்து போன ராஜேந்திரனைப் பார்த்தவாறு கண்கள் கலங்க நின்றிருந்தாள்.

“நந்தா” என அழைத்தும் காதுகளில் விழாமல் நின்றவளின் தோள்களைப் பற்றி அழைத்துச் சென்று இருக்கையில் அமரவைத்தான் ப்ரித்வி.

“அழாதம்மா பொம்பளை ஜென்மங்கன்னாலே வேற இடம் போய்தானே ஆகணும். வருத்தப்பட்டா முடியுமாம்மா? தம்பி ராஜாவாட்டமிருக்காரு. உன் வாழ்க்கைக்கு ஒரு கொறையுமிருக்காது” என ஆருடம் சொன்னாள் பக்கத்து சீட்  பாட்டி  .

அமர்ந்த இடத்திலேயே அசையாமல் அமர்ந்திருந்தவளைக்  காணவே கஷ்டமாயிருந்தது ப்ரித்விக்கு. சற்று மட்டுப்பட்டிருந்த காய்ச்சல் நடுஇரவில் மறுபடியும் முழு வேகத்தில் ஆரம்பித்தது. அதிர்ஷ்டவசமாக அவர்களுடன் பயணம் செய்ததில் ஒரு மருத்துவருமிருக்க, அவரே நந்தனாவைப் பரிட்சித்துப் பார்த்தார்.

“எங்க போறீங்க”

“ஜலந்தர் போகணும் டாக்டர். ரெண்டு நாள் பயணம்”

 

“அவ்வளவு தூரமா?”

“பயணம் செய்றதில் ஏதாவது ரிஸ்க் இருக்கா டாக்டர். டிக்கெட்டை ரத்து செய்துட்டு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகட்டுமா”

“தேவையில்லை. ஏதோ  அதிர்ச்சில இருக்காங்க போலிருக்கு. சொந்தக்காரங்க யாராவது இறந்துட்டாங்களா”

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ஆமாமென தலையசைத்து வைத்தான்.

 

“மழைல வேற நல்லா நனைஞ்சிருக்காங்க. எல்லாம் சேர்ந்து காய்ச்சல் வந்துடுச்சு. ஏதாவது சாப்பிட்டுட்டு, கிரோசின், ஐபு ப்ரோபின் சரியான இடைவேளைல எடுத்துக்கணும். தலை ஈரமா இருக்குப் பாருங்க, நல்லா தொடச்சுட்டு விக்ஸ் தடவுங்க. தூக்கத்துக்கு மாத்திரை தரேன். ரொம்ப தேவைன்னா கொடுங்க. பத்திரமா அலுங்காம கூட்டிட்டு போங்க. ஊர்ல போயும் காய்ச்சல் தொடர்ந்தா சிகிச்சை எடுத்துக்கலாம்”

இரவு நந்தனாவுக்குக் காய்ச்சல் அதிகமாக,  ஊசி போட்டதும் மட்டுப்பட்டது. அருகிலிருந்தவர் டிடிஆரிடம் போர்வை வாங்கித் தர, அதனைப் போர்த்தி விட்டு அணைத்தாற்போல் மடியில் படுக்கவைத்துக் கொண்டான். அவன் மடி தந்த கதகதப்பில் அவளும் கண்ணசந்தாள்.

சென்ட்ரல் ரயில் நிலையம். சென்னை- அம்ரிதசரஸ் எக்ஸ்ப்ரஸில் சீட்டினைத் தேடிக் கண்டுபிடித்தான் ப்ரித்வி.

அவனது நல்ல நேரம் ஜலந்தர் வழியே செல்லும் அந்த விரைவுவண்டி இரண்டு மணி நேரம் தாமதமாகப் புறப்பட, சென்னை வந்தவுடன் நந்தனாவின் உடல் நிலையைக் காரணம் காட்டி, நாகர்கோவில் ட்ரைன்  டிடிஆரின் உதவியால் இருவருக்கும் அந்த ட்ரெயினில் இடம் கிடைத்தது.

அமிர்தசரஸ் செல்லும் விரைவு வண்டியின் பரிசோதகர் கேட்டார் “மிஸ்டர் அண்ட் மிசர்ஸ் ப்ரித்விராஜ்தானே” இப்படி உரிமையோடு இவள் இடுப்பை அணைத்துக் கூட்டி வந்தால் வேறென்ன நினைப்பார்கள்? ஆமாமென்றான்.

 

“நாகர்கோவில் டிடிஆர் அருளானந்தம் போன் செய்து சொன்னார். டெல்லி டூர் போகும் மாணவர்கள் சிலர் இருக்குற கோச்ல இடமிருக்கு. அவங்கல்லாம் பெரும்பாலும் நண்பர்கள் இருக்குற பகுதிக்குப் போயிடுவாங்க. உங்களுக்கு தொந்தரவிருக்காது”. இருக்கையைக் காட்டினார்.

“நன்றிங்க உங்க உதவியை மறக்கவே மாட்டேன்”

“நீங்க வடக்கு, அவங்க தெற்கு மாதிரி தெரியுது. காதல் கல்யாணம் போலிருக்கு. உங்களைப் பார்த்ததும் தெரிஞ்சது. சீக்கிரம் ஒரு குழந்தையைப் பெத்துக்கோங்க. அம்மா அப்பா கோவமெல்லாம் தன்னால பறந்துடும். சரியாம்மா….” என்றார் இருவருக்கும் பொதுவாக, ப்ரித்வி சிரித்து வைத்தான். காய்ச்சலிலிருந்த நந்தனாவோ மலங்க மலங்க விழித்தாள்.

கூட்டம் அவ்வளவாக இல்லை. இந்த மழையில் ஊருக்கு பத்திரமாக போய்  சேரவேண்டுமே என ப்ரித்விக்குக் கவலையாக இருந்தது. பேசாமல் விமானத்தில் சென்றிருக்கலாம். இந்த டிடிஆர் சிபாரிசு விமானநிலையத்தில்  எடுப்படுமாவெனத் தெரியவில்லை.

அவர்களது அதிர்ஷ்டம் அந்த முதல் வகுப்புப் பெட்டியில் வந்த  மாணவர்கள் கூட்டம் பக்கத்து பெட்டியிலிருக்கும் தனது நண்பர்களைப் பார்க்க சென்றுவிட்டதால் வெகு சிலர் மட்டுமே அந்தக் கோச்சில் இருந்தனர்.

விஜயவாடாவில்  சப்பாத்தியும் சப்ஜியும் உண்டுவிட்டு, சூடாக பாலும் ரொட்டியும் வாங்கி நந்தனாவுக்குப் புகட்டிவிட்டான். மயில் போலத் தோகை விரித்தாடிய  அவளது தலைமுடி காய்ந்து விட்டிருக்க, தன்னுடைய சீப்பில் கோணல் மாணலாக வாரி ரப்பர்பாண்டினை மாட்டி விட்டான்.

“நந்தா ஏதோ என்னால முடிஞ்சது. அட்ஜஸ்ட் பண்ணிக்கோ”

எதுவும் அவள் மனதில் பதியவில்லை. அவளது காய்ச்சல் அதிகமாவதும் குறைவதுமாயிருக்க, ‘இவ மனசுல என்னத்தையோ சுமந்திட்டிருக்கா, அந்த வலி உடம்பையும் பாதிக்குது, அதிர்ச்சி  குறைஞ்சா காய்ச்சலும் குறைஞ்சுடும். நாமளே  மன இறுக்கத்தையும் குறைக்க முடியுமான்னு பார்க்க வேண்டியதுதான்’ நினைத்தவன் வேலையை ஆரம்பித்தான்

“உன் பெரியம்மா ஏற்பாடு செய்த கல்யாணம்தான் உன் தற்கொலை முயற்சிக்குக் காரணம்னு உன் முட்டாள் அண்ணன் வேணும்னா நம்புவான். ஆனால் என்னை ஏமாத்த முடியாது. சொல்லு யாரவன்”  அழுத்தமான குரலில் கேட்டான்.

அதிர்ச்சியில் நந்தனாவின் உடல் சற்று தூக்கிப் போட்டது.

“நந்தா உன் மனசுல என்னதாண்டா இருக்கு? உன் மனச அழுத்திட்டிருக்கிறதை வெளிய கொட்டிடு .  கொஞ்ச நேரத்துக்கு என்னை உன் க்ளோஸ்  பிரெண்டா நெனைச்சுகோயேன்” ஆறுதலாய் சொன்னான்.

நந்தனாவின் மூச்சுக் காற்று வேக வேகமாய் வெளிவந்தது. அவள்  உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதை உணர்ந்தான்.

நந்தனாவின் காதருகே குனிந்தவன் மெதுவாய் சொன்னான் “ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே, நீ எழுதினதுதானே. யார் உன்னோட அழகான இதயத்தை நொறுக்கினவன் ”

“ரஞ்சன்….. ”   அவளது கண்களிலிருந்து கண்ணீர் கோடாய்  வடிந்தது.

தனியாகத் தவிக்கின்றேன்

துணை வேண்டாம் அன்பே போ

பிணமாக நடக்கின்றேன்

உயிர்  வேண்டாம் தூரம் போ

என் காதல் புரியலையா உன் இஷ்டம் அன்பே போ

நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது  அன்பே போ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 50தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 50

இரவு ராஜுவின் வீட்டிலேயே சரயுவைத் தங்க வைத்தார்கள். வீட்டின் முன் நின்று வரவேற்ற வேம்பும், பின்கட்டிலிருந்த கிணறும் சரயுவுக்கு தன் வீட்டை நினைவு படுத்தியது. ஆனாலும் அவள் வீடு பெரியது. ஒரு தெருவில் ஆரம்பித்து பின் தெருவில் முடியும். இந்த வீடு

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 9’தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 9’

அத்தியாயம் – 9 ரஞ்சன் அகிலாண்டத்தை வற்புறுத்தினான்.   “சொல்லு” என்றார் அகிலாண்டம்   “என்னத்த சொல்ல. எனக்கு அவளை ரொம்பப் பிடிச்சிருக்கு. நல்ல பொண்ணு. அழகானவ. அம்மா அப்பா கிடையாது. பெரியப்பாதான் கார்டியன். அவளோட வீட்டையும் நிலத்தையும் கவனிச்சுக்கிறார் போல.

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 2’தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 2’

மும்பையில் பருவமழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. சாலையில் பெருக்கெடுத்த நீரால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நவி மும்பையிலிருந்து அந்தேரிக்கு பயணம் செய்தே களைத்துப் போனான் ரங்கராஜ்.  “சாதாரணமாவே குறைஞ்சது ரெண்டு மணி நேரமாகும். இப்ப ட்ரைன் லேட் அது இதுன்னு பயணம்