Tamil Madhura சிறுகதைகள் வல்லிக்கண்ணன் கதைகள் – நினைத்ததை முடிக்காதவர்

வல்லிக்கண்ணன் கதைகள் – நினைத்ததை முடிக்காதவர்

கொம்பங்குளம் சிங்காரவேலு எங்கோ போய்விட்டான்!

அந்த ஊரில் பரபரப்பான பேச்சாயிற்று அது. “சிங்காரவேலு, போயிட்டானாமே? எங்கே போயிருப்பான்? ஏன் ஊரை விட்டு, சொல்லாமல் கொள்ளாமல் போனான்?” இப்படி பல கேள்விகள் பலராலும் ஒலிபரப்பப்பட்டன.

சிங்காரவேலு கொம்பங்குளம் ஊரின் கவனிப்புக்குரிய முக்கியப் புள்ளியாகத்தான் இருந்தான். ஊரார் எல்லோரும் இன்புற்றிருக்க எண்ணிச் செயல்புரிந்த பராபரமாகத்தான் வாழ்ந்தான். ஏன் அவன் இரவோடு இருளோடு ஓடிப்போக வேண்டும்?

அதுதான் யாருக்கும் புரியவில்லை.

“பிள்ளையாண்டான் பிழைக்கத் தெரியாத பயலாக இருக்கானே! ஒழுங்கா ஏதாவது வேலை பார்த்து, பணம் சம்பாதித்து உருப்படியாக வாழாமல், நாடகம், நடிப்புன்னு சொல்லி, தானும் கெட்டுப்போறதோடு ஊர்ப்பிள்ளைகளையும் கெடுத்துக் கிட்டிருக்கானே!” என்று சில பெருசுகள் குறைகூறிப் புலம்புவது வழக்கம்தான்.

இருந்தாலும், ஊரின் இளவட்டங்களுக்கு அவன்தான் இலட்சிய ஹிரோ. சின்னப் பையன்களுக்கு, அண்ணாந்து பார்த்து வியந்து போற்றப்பட வேண்டிய ஒளிச்சுடர் அவன். எப்பவும் அவனைச் சுற்றி இளைஞர்கள் கூடியிருப்பார்கள். அவனைப் பார்க்கவும், அவன் ஏதாவது வேலை சொன்னால் உடனடியாகச் செய்து முடிக்கவும் சின்னப் பையன்கள் காத்து நிற்பார்கள்.

சிங்காரவேலுவின் நாடகமோகம் தான் இதற்கெல்லாம் காரணம்.

சிவராத்திரி, தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு, கோயில் திருவிழா சமயம் முதலிய விசேஷ நாட்களில், கோயிலை ஒட்டியிருந்த பொட்டல் வெளி ஊரின் திறந்தவெளி அரங்கமாக மாறித் திகழும். சிங்காரவேலுவின் இயக்கத்தில் சத்தியவான், மார்க்கண்டேயர், வள்ளித் திருமணம் போன்ற நாடகங்கள் நடித்துக் காட்டப்படும்.

சில சமயம் சிங்காரவேலுவே சமூக நாடகம் என்று ஏதாவது எழுதி, நண்பர்களை நடிக்கத் தயார் பண்ணுவதும் உண்டு. அவன்தான் ஹிரோ பார்ட். பெண் வேடங்களில் நடிப்பதற்குத் தகுந்த பையன்களும் இருந்தார்கள்,

அவனுக்கும் அவன் நண்பர்களுக்கும் கொம்பங்குளம் ஊரில் மட்டுமின்றி பக்கத்து ஊர்களிலும் நல்ல பெயர் கிட்டிருந்தது. அவன் நிரந்தரமாக நாடகக்குழு ஒன்று அமைத்து, ஊர் ஊராகச் சென்று புகழ் சேர்க்க வேண்டும் என்று ஆசை வளர்த்தான். நண்பர்களும் தூபம் போட்டார்கள்.

அவ்வாறு நாடகங்கள் நடத்தி “ஃபேமஸ் ஆனப்புறம்” சினிமா உலகில் புகுந்து பிரகாசிக்க வேண்டும் என்றும் சிங்காரவேலு எண்ணம் வளர்த்தான்.

“அது நடக்காமலா போகும் அண்ணாச்சி? எதுக்கும் ஒரு டைம் வரணும். நீங்க பிரமாதமா நடிக்கிறீங்க. அருமையா வசனம் பேசுறீங்க. நீங்களே கதை – வசனம் எல்லாம் எழுதி ஜமாய்க்கிறீங்க. சினிமாத் துறையிலே நீங்க கண்டிப்பா ஒரு ஸ்டார் ஆக ஜொலிப்பீங்க” என்று அவனுடைய நண்பர்கள் குழை அடித்து அவனது கிறக்கத்தை அதிகப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

அவன் ஒரு ஹீரோ போலவே நடந்து கொண்டான். தலைவாரிக் கொள்கிற ஸ்டைல், பார்வை எறிகிற தினுசு, நடக்கிற தோரணை, டிரஸ் பண்ணிக் கொள்கிற நேர்த்தி முதலிய அனைத்திலும் நாடகமேடைத்தனமும் சினிமாத்தனமும் மின்வெட்டின.

ஊரில் அம்மன் கோயில் கொடை நடக்கத் திட்டமிடப் பட்டிருந்தது. அப்போது புதுசாக ஒரு நாடகம நடிகக வேண்டும் என்று சிங்காரவேலுவும் நண்பர்களும் உற்சாகமாகப் பேசிப் பொழுது போக்கினார்கள். கதை எப்படி எப்படி இருக்க வேண்டும், யார் யாருக்கு என்னென்ன வேடம தருவது என்றெல்லாம் சர்ச்சித்து மகிழ்ந்தார்கள்.

அப்படிப்பட்ட சமயத்திலேதான் திடீரென்று சிங்காரவேலு காணாமல் போய்விட்டான். ஊரில் பரபரப்பு இராதா பின்னே.

அவன் தனிக்காட்டு ராஜா! அவனை தட்டிக் கேட்கவோ, அடக்கி ஆக்கினைகள் செய்யவோ யாரும் கிடையாது. எனவே அவன் எவரிடமும் எதுவும் சொல்ல வேண்டிய தேவையு மில்லை. போய்விட்டான். ஏன் போனான் என்றுதான் பெரியவர்களும், இளைஞர்களும், பையன்களும் குழம்பித் தவித்தார்கள்.

தூத்துக்குடியில் முகாமிட்டிருந்த ஒரு நாடகக் கம்பெனியில் சேரப் போயிருப்பான் என்று சிலர் அபிப்பிராயப்பட்டார்கள். மதுரைக்குப் போயிருக்கலாம் என்று அவன் நண்பர்கள் கருதினார்கள். சினிமாவில் சான்ஸ் தேடி மெட்ராசுக்கே போயிருப்பான் என்று சொன்னவர்களும் இருந்தார்கள்.

இப்படியாகப் பேச்சு வளர்ந்தது. நாட்கள் ஓடின. போனவன் போனவன் தான். அவனைப் பற்றிய தகவல் எதுவும் தெரியவே இல்லை.

காலம் ஒடஒட அவன் போய்விட்ட விஷயமும் ஆறிய பழங்கஞ்சி ஆகியது. ஒதுக்கப்பட்டும் விட்டது. சிவராத்திரி, கோயில் திருவிழா, அம்மன் கொடை போன்ற விசேஷ சமயங்களில் யாராவது நினைவுகூர்வது உண்டு.

“சிங்காரவேலு இருந்தான்னா நல்ல நாடகமா ஏதாவது நடத்துவான். போயிட்டானே பாவிப்பய. எங்கே இருக் கான்னே தெரியலியே. இப்படியா நம்ம மறந்துபோவான்?”

ஊர்க்காரர்கள் மனப்பூர்வமாக அவனை நினைக்கத்தான் செய்தார்கள். ஒருவர் மாற்றி ஒருவர் அவனைப் பற்றிய பூர்வ நினைவு எதையாவது ரசமாகச் சொல்லுவார்.

“எங்கே இருந்தாலும் சரி, நல்லாயிருக்கட்டும்” என்பார் ஒருவர்.

“பய கெட்டிக்காரன். ஏதாவது வழி பண்ணி, தான் நினைத்ததை முடிச்சு முன்னுக்கு வந்திருப்பான். நமக்குத்தான் அவனைப் பற்றிய சமாச்சாரம் எதுவும் தெரியலே” என்று ஒருசமயம் பெரியவர் ஒருவர் குறிப்பிட்டார்.

அப்போது சிங்காரவேலு ஊரை விட்டுப் போய் “பத்துப் பன்னிரண்டு” வருடங்கள் ஆகியிருந்தது.

திடீரென்று எதிர்பாராத விதத்தில் மீண்டும் அவன் அவ்வூராருக்கு பரபரப்புச் செய்தி ஆனான். அதற்கு உதவியவர் உள்ளூர் பெரியபிள்ளை ஒருவர்தான்.

சிவபக்தரான அவர் அவ்வப்போது திருத்தல யாத்திரை போய் வருவது வழக்கம். இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மதுரைராமேசுவரம், காசி என்று போய் வருவார்.

இம்முறை “பாடல் பெற்ற புண்ணிய ஸ்தலங்கள்” அனைத்தையும் தரிசித்து விடுவது என்று அவர் காவேரிக் கரையோர ஊர்களுக்கெல்லாம் போனார். திரும்பி வந்தவர் திருத்தலப் பெருமைகளை அளப்பதற்கு முன்னதாக, அவசரம் அவசரமாக, “ஐயா, நம்ம சிங்காரவேலுவை நான் பார்த்தேனே!” என்று ஒலிபரப்பினார்.

ஆங், அப்படியா?… எங்கே பார்த்தீக?…. என்ன செய்துக்கிட்டிருக்கான் அவன்? இப்ப எப்படி இருக்கான்?…. நாடகமெல்லாம் போடுறானாமா?

ஊராரின் “அறியும் அவா” பலப்பல கேள்விகளாக வெடித்தது.

“எல்லாத்தையும் விவரமாச் சொல்றேன் கேளுங்க” என்று லெக்சரடித்தார் அவர்,

பல ஊர்களுக்கும் போய்விட்டு அந்த ஊருக்கும் வந்தார். “ஊர் பேரு சட்டுனு நினைவுக்கு வரலே. பெரிய டவுணு இல்லே. சுமாரான ஊருதான். ஆனால் கோயில் பெரிசு. நான் கோயிலுக்குப் போயி சாமி தரிசனம் பண்ணிப் போட்டு வெளியே வந்தேன். ரதவீதியிலே எடுப்பா ஒரு ஒட்டலு இருந்தது. சரி, இங்கேயே சாப்பாட்டை முடிச்சுக்கிடலாமேன்னு நுழைஞ்சேன்.

கல்லாவிலே இருந்தவரு என்னையே முறைக்க மாதிரி பார்த்துக்கிட்டிருந்தாரு சட்டுனு எழுந்திருச்சு நின்னு கும்பிட்டபடி, என்ன சார்வாள், ஏது இந்தப் பக்கமின்னு விசாரிச்சாரு. சிரிச்ச முகமும் சிவகளையுமா இருந்த அவரை இதுக்கு முன்னே பார்த்ததா எனக்கு ஞாபகமில்லே. திகைச்சு நின்னேன். “என்ன சார்வாள், என்னை தெரியலியா?” கொம்பங்குளம் சிங்காரவேலுயில்லியா” என்கவும் எனக்கு ஒரே ஆச்சரிய மாயிட்டுது.

“அடப் பாவி, நீயா இங்கேயா இருக்கே?”ன்னு கத்திப்போட்டேன். ஏன்டே சொல்லாம, புரையாம ஊரைவிட்டு ஓடி வந்திட்டே? அப்புறம் தகவல்கூட தெரிவிக்கலியே? நாங் கள்ளாம் உனக்கு என்ன துரோகம் செய்தோம்னு கேட்டேன். மாமா, முதல்லே சாப்பிடுங்க. நம்ம கதையை சாவகாசமாப் பேசிக்கலாம்னான். தடயுடலா உபசரிச்சான். ஸ்பெஷல் ரவா தோசை, பொங்கல் வடைன்னு ஏகமா கவனிப்பு. பணம் வாங்க மாட்டேன்னுட்டான்.

நீங்க இன்னிக்கு நம்ம விருந்தாளி. ரெண்டு மூணு நாளு வேணுமின்னாலும் நம்ம வீட்டிலே தங்கலாம்னான். சொந்த ஒட்டலு, சொந்த வீடு, நல்ல மனைவி, குழந்தைன்னு வசதியா இருக்கான்.”

அது சரி, அவன் ஏன் ஊரை விட்டுப் போனானாம்? என்று குறுக்குச்சால் ஒட்டியது ஒரு அவசரம்.

“அதைத்தான் சொல்ல வாறேன். பக்கத்து டவுணிலே அவனுக்குத் தெரிஞ்ச ஒருவர் மதராசிலேயிருந்து வந்திருந்தாராம். அவரைப் பார்த்துப் பேச இவன போனானாம். அப்படியே அவரு கூடவே பட்டணத்துக்குப் போயிட்டானாம். சினிமாவிலே நடிக்க வாய்ப்பு தேடலாம்னு நினைச்சானாம். அவன் நினைத்தது நடக்கலே. கொம்பங்குளம் திரும்பவும் மனசில்லே. ஊர் சுற்றியா திரிஞ்சிருக்கான். நம்ம ஊருக்கு கொடை சமயத்திலே எப்பவோ வந்த ஒருவர் அவனை மதுரையிலே கண்டுக்கிட்டார். அவரோட ஊருக்கு அழைச்சுக்கிட்டுப் போயிருக்காரு. அவரோட கிளப்புக் கடையிலேயே அவனுக்கு வேலையும் கொடுத்திருக்கார், கேஷியர் வேலை. அங்கேயே இருந்து அந்த ஓட்டலுக்கு முதலாளி ஆயிட்டான். அது எப்படீன்னா, அவரு வீட்டோட அவரு மக ஒருத்தி விதவைப் பொண்ணா இருந்திருக்கா. அவளை நம்ம சிங்காரம் மறுமணம் செய்துக்கிட்டான். அவன் நினைச்சபடி சினிமா ஹீரோ ஆகலைன்னாலும், சமூக சீர்திருத்த ஹீரோ ஆகிவிட்டான். கலப்புத் திருமணம், விதவை மறுமணம் என்று இரண்டையும் ஒரே சமயத்திலே செய்திருக்கானில்லே!”

பெரியவர் பேசி நிறுத்தினார்.

“சிங்கார வேலு நம்ம ஊருப் பக்கம் வரமாட்டானாமா?” என்று கேட்டார் ஒருவர்.

“அவன்கிட்டே கேட்டேனே. சொன்னான். வரணும் மாமா. நம்ம ஊரையும் நம்ம ஆட்களையும் மறக்க முடியுமா? எல்லாரும் என் கண்ணுக்குள்ளேயே நிக்கிறாக, எல்லோரையும் தேடத்தான் செய்யுது. ஒரு கொடை சமயத்திலே கட்டாயம் வருவேன்னு சொன்னான்” என்றார் அவனைக் கண்டு வந்தவர்.

“மடையன்! ஒரு லெட்டராவது போட்டிருந்திருக்கலாம்” என்று அலுத்துக் கொண்டான், சிங்காரத்தின் முன்னாள் சிநேகிதன் ஒருவன்.
(குங்குமச் சிமிழ்”, 1996)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

என்ன சொல்ல போகிறாள் – சாயி பிரியதர்ஷினிஎன்ன சொல்ல போகிறாள் – சாயி பிரியதர்ஷினி

என்ன சொல்ல போகிறாள்? இன்னும் அவ வெளில வரல. மறுபடியும் என்ன கூத்து அடிக்க போறாளோ. ஆண்டவா எப்படியாவது என்ன காப்பத்திரு ப்ளீஸ்.. – கண்மூடி வேண்டினான் ஜீவா. அன்று காலையில் அமைதியாக அறையில் இருந்து எழுந்து வந்தாள் தேஜு. என்னடா

சேது விஸ்வநாதனின் ‘பத்தோட இதுவும் ஒன்னு’சேது விஸ்வநாதனின் ‘பத்தோட இதுவும் ஒன்னு’

இதுவும் கடந்து போகும் என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சராசரி பெண் நான். அப்படி தான் என் வாழ்க்கையும் இருந்தது. படிப்பு, வேலை எல்லாமே போராட்டம் தான் எனக்கு. சிறுவயதிலே அப்பா இல்லாமல் அம்மாவின் கடின உழைப்பால் ஏதோ கொஞ்சம்

வல்லிக்கண்ணன் கதைகள் – புன் சிரிப்பு – Audioவல்லிக்கண்ணன் கதைகள் – புன் சிரிப்பு – Audio

ஒளிப் பூக்கள்போல் இனிமையாகச் சிரித்துக் குலுங்கும் விளக்குகளின் மத்தியில், பேரொளிச் சுடரெனத் திகழ்ந்தாள் அகிலாண்ட நாயகி. கருவறையின் புனிதச் சூழல் குளுகுளு விளக்குகளின் ஒளியினாலும் பன்னிற மலர்களின் வனப்பாலும், வாசனைப் பொருள்களின் நறுமணத்தாலும் சிறப்புற்று விளங்கியது. அந்த இடத்துக்கு தெய்வீகத்தன்மை தந்து