யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 2

நிலவு 2

 

வினோவும், தேவியும் அங்கிருந்து சென்ற பிறகு, அப்படியே கதிரையில் அமர்ந்தார் அருணாச்சலம். 

 

‘என் மகன் வளர்ந்து விட்டானா? எனக்கு அறிவுரை கூறும் அளவிற்கா? நான் அனைவரின் சந்தோஷத்திற்கும், நிம்மதிக்கும் குறுக்காக இருக்கிறேனா? ஒரு வேளை வினோ கூறியது போல என் பிடிவாதம் தான் அத்தனைக்கும் காரணமா?’ என நினைத்தார்.

 

‘அவன் கூறியதும் உண்மையே இந்த 5 வருடங்களில் ஒருவருமே எந்த பண்டிகையையும் கொண்டாடவில்லையே!!! மீரா என் அன்பு மகள் குடும்பமே உலகம் என்று வாழ்ந்தவள் இன்று மொழியறியா ஒரு இடத்தில் வாழ்கிறாளே.. வீட்டிற்கு வந்தாலும் ஏதோ பொம்மை ஒன்று போல தான் வலம் வருகிறாள் அதுவும் ஆண்டிற்கு ஒரு முறை. என் மனைவியும் அவள் குடும்பமும் கண்ணீர் விடாத நாள் இல்லையே.. அஸ்வினும் என்ன சிரமமான வேலை இருந்தாலும் வீட்டிற்கு நண்பர்களுடன் வந்து விடுவானே.. நண்பர்களும் வீட்டில் ஒருவர் போலவே நடந்துக் கொள்வார்களே. ஆனால் இன்று மும்பையில் தனிமையில் வாழ்கிறான். அவனுடைய நண்பர்களுடனும் அவன் தொடர்பில் இல்லையே. கிறுஸ்தி அவள் வீட்டின் சுட்டிப் பெண். அனைவரிடமும் அன்பாகப் பழகுவாள். மாமா மாமா என்று என்னைச் சுற்றிச் சுற்றி வருவாளே… என் பாசமிகு மருமகள். அனைவருக்கும் செல்லம் அவள். அவளை அவளுடைய பதினாறு வயதிலே இறுதியாகப் பார்த்தேன். நான் மட்டுமா? அனைவருமே அவளை அன்றே இறுதியாக பார்த்தார்கள். இன்னும் எவருமே அவளை பார்க்கவில்லையே. 

அவளும் அனைவரையும் விட்டு தூரமாக வாழ்கிறாளே. மீராவும், கிறுஸ்தியும் ஒரு நிமிடமும் பிரிந்து இருக்கவில்லை, மீரா கிறுஸ்தியை விட ஒரு வயதே பெரியவள். ஆனாலும் நெருங்கிய தோழிகள். இந்த ஐந்து வருடங்களாக இருவருமே பார்க்கவும் இல்லை. பேசவும் இல்லை. ஆரவ் அவன் யாருமற்று தனியே வாழ்ந்தவன். என்னை அறியாமல் ஏதோ ஒன்று அவனை என்பால் ஈர்க்கும். இன்று அவனை என்னில் இருந்து தூரத்தில் வைத்து இருக்கிறேன். இன்று அவனுடைய தனிமையான வாழ்விற்கு நான் காரணமாகி விட்டேனே. அவனும் எவருடனும் தொடர்பின்றி வாழ்கிறானே. அனைவரின் வாழ்கையையும் நான் கெடுத்துவிட்டேனா? எனக்கும் அவர்களைத் தவிற நெருங்கிய உறவொன்று கூறும் வகையில் இல்லையே. அவர்களும் நிம்மதி இல்லாமல் இருக்கிறார்களே. என் மகன் என்னை அவனது ஹீரோவாகவே பார்க்கிறான். அவன் என்னைப் பார்த்து பெருமைபடும் அளவு நடந்துக் கொள்ளவில்லையே’ என்று அவர் மனம் நொந்து தன்னுள்ளே பேசி ஒரு முடிவு எடுத்தவராக உறங்கச் சென்றார். 

 

காலையில், அருணாச்சலம் காபியை பருகிக் கொண்டே மனைவியை அழைத்தார். அதே நேரம் வினோவும் மாடியிலிருந்து கீழே வந்தான். 

 

தேவியிடம் அவர், “தேவி நாம இந்த வாட்டி உங்க ஊருக்கு போறோம். வீட்டில் எல்லாருக்கும் சொல்லிவிடு” என்று கூறி, மகன் புறம் திரும்பி, ‘நாங்க மூன்று பேரும் கோயமுத்தூருக்கு போறதுக்கு இன்றைக்கே டிகட் போட்டுவிடு. மீராவையும் ஊருக்கு வர சொல்லு” என்று கூறினார்.

 

தேவியோ நான் கேட்டது அனைத்தும் உண்மையா என தன் மகனைப் பார்க்க அவனும் அதே பாவனையில் தன் தாயைப் பார்த்துக் கொண்டு இருந்தான். 

 

இருவரின் நிலையையும் பார்த்து புன்னகைத்து, 

 

“தேவி மா போறதுக்கு தேவையான திங்கசை சீக்கிரமா பெக் பன்னு. டைம் இல்லை. வினோ நீ என்ன முழிச்சு பார்த்துட்டு இருக்க, நீயும் சீக்கிரமா கிளம்பு” என்று தனது அறைக்குச் சென்றார் அருணாச்சலம்.

 

வினோ இரண்டே தாவலில் அன்னையினைக் கட்டிக் கொண்டான். 

 

“அம்மா, அப்பா நாம போறதுக்கு ஒத்துகிட்டாரு” என்று கத்தினான். 

 

“இருடா ஒரு நிமிடம் நான் இதை அப்பாக்கிட்ட போன் பன்னி சொல்றேன்” என்று தன் தந்தைக்கு அழைத்து அவர்கள் வரும் விடயத்தைக் கூறினார். 

 

“அம்மா எப்படிமா நான் கொஞ்சம் சென்டிமன்டா பேசினா அப்பா கவுந்துருவாருன்னு சொன்ன?” எனக் கேட்டான் வினோ.

 

தன் கணவர் வருகிறாரா என அறையைப் பார்த்து விட்டு, 

 

“டேய் நான் உங்க அப்பா கூட 27 வருஷமா வாழுறேன் டா. எனக்கு தெரியாதா எப்படி ball போட்டா எப்படி wicket எடுக்கலாம்னு. என்கிட்ட இருந்து நீ நிறைய கத்துக்க வேண்டி இருக்கு டா”என்று தனக்கு இல்லாத காலரை தூக்கிக் காட்டினார். 

 

“கேடி மா நீ, அப்பாவை மடக்க என்ன மா ஐடியா பன்னி இருக்க” என வியக்க 

 

“என்ன பன்னா என்னடா நமக்கு தேவையானத நடந்திருச்சி. போடா போய் கிளம்புற வழிய பாரு. உங்க அப்பாவோட மனசு மாற முன்னாடி கிளம்பனும்” என்றாள் தேவி.

 

கோயமுத்தூரில்….

 

விஜயசோதிலிங்கம் தன் மருமகள்களையும், தன் மகன்களையும் அழைத்து மகள், மருமகன் மற்றும் பேரப்பிள்ளைகள் வரும் விடயத்தைக் கூற அவர்கள் மிக்க சந்தோஷம் அடைந்தனர். வீடே விழாக்கோலம் பூண்டது. மீராவிற்கு அழைத்து வினோ ஊரிற்கு செல்வதைக் கூறியதும் அவள் விண்ணில் பறப்பதாய் உணர்ந்தாள். இத்தனை வருடங்களிற்கு பிறகு தூய்மையான காற்றை சுவாசிக்க செல்கிறோம் அத்தோடு தன்னவனையும் பார்க்கப் போகிறோம் என்று ஊரிற்கு செல்ல அவசரமாக தயாராகினாள். 

 

மீரா ஐந்தரை அடி பதுமை. மற்றைய பெண்களை விட சற்று உயரமானவள். இரு வில் போன்ற புருவங்கள் ,வேல் விழிக் கண்கள், மெலிவான உடல், வட்ட முகம், சிவப்பு நிற இதழ்கள், பஞ்சுக் கண்ணங்கள், இடை வரை நீண்ட கருங்கூந்தல், கூரிய மூக்கு, எலுமிச்சை நிறம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் அழகுடைய 22 வயது பெண்.

 

எதோ யோசணையில் கண்களை மூடி சுழல் கதிரையில் சுற்றிக் கொண்டு இருந்தவனை நிஜ உலகிற்கு அழைத்து வந்தது அவனது தொலைப்பேசி அழைப்பு. அதை எடுத்து திரையைப் பார்த்தபோது பெரியப்பா என்று இருந்தது. அழைப்பை ஏற்றவன், 

 

“சொல்லுங்க பெரியப்பா, என்ன விஷயம்?” என்றான்.

 

“அஸ்வின்; மாமா, அத்தை, வினோ, மீரா எல்லாருமே ஊருக்கு வருகிறாங்க டா நீயும் வாபா” என்றார் அரவிந்நாதன். 

 

“பெரியப்பா உண்மைய தான் சொல்றிங்களா? இல்லை என்னை அங்கே வரவைக்க பொய் சொல்றிங்களா?” என்றான். 

 

“நான் எதுக்குடா உன் கிட்ட பொய் சொல்லனும்? உன்ன ஊருக்கு வர வைக்க எனக்கு நிறைய வழி இருக்கு டா” என்றார் அரவிந்.

 

“உண்மையா௧வா பெரியப்பா?” என்று மீண்டும் சந்தோஷம் கலந்த ஆச்சரியக் குரலில் கேட்க, 

 

“என் அப்பா மேல சத்தியம் டா” என்றார். 

 

“ஐயோ பெரியப்பா என்னது இது? தாத்தா மேல சத்தியம் பன்றிங்க, நான் நம்புறேன், அது சரி மாமா எப்படி ஒத்துக்கிட்டாரு?” என வினவ, 

 

“தெரியாது பா. அவர்கள் வந்த பிறகே இதைப் பற்றி பேசலாம்னு தேவி சொன்னா. நீயும் சீக்கிரமா கிளம்பி வருகிற வழியைப் பாரு” என்றார் அரவிந்.

 

“சரி பெரிப்பா, நான் இன்றைக்கு எல்லா வேலையையும் முடிச்சிட்டு நாளைக்கே வருகிறேன்” என்றான் உற்சாகமாக. 

 

தான் பிறந்து வளர்ந்த ஊரைக் காணப்போகிறோம் என்ற சந்தோஷம் ஒரு புறம் இருக்க, தன் உயிரானவளைக் காணப்போகிறோம் என்ற எண்ணமும் மேலோங்கி, அவசரமாக வேலைகளை முடிக்கச் சென்றான் அஸ்வின்.

 

அஸ்வின், ஆறடி உயரமானவவன், நிமிர் நடைக் கொண்ட மிடுக்கான தோற்றம், எதையும் ஆராயும் கண்கள், எப்போதும் புன்னகை குடியிருக்கும் சிரிக்க மறந்த உதடுகள், அளவான மீசை, தாடி, அலைப்பாயும் கேசம், கட்டுமஸ்தான உடல், மாநிறமுடைய பெண்களின் மனதைக் கவரும் 27 வயதுடைய ஆணழகன் அவன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 64யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 64

நிலவு 64   அவர் கூறி முடியும் போது ஆரவின் வளர்ப்புத் தாயின் கன்னத்தை பதம் பார்த்தது ஒரு கை. அனைவரும் திரும்பிப் பார்க்க மீரா அவர்கள் முன் காளியாய் நின்று இருந்தாள். மீராவின் கோபத்தை எவருமே பார்த்தது இல்லை. முதன்

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 40யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 40

நிலவு 40   “நீ விருப்பம் இல்லாமல் தான் நெட்போலை விட்டு இருக்க. அன்றைக்கு டிரஸ் எடுக்க போகும் போது நீ ஸ்போர்ட்ஸ் டீ சர்டை பார்த்து கண்கலங்கின. அன்றைக்கு மீரா உன் கிட்ட பேசினப்ப கூட கண் கலங்கியது. அப்போ

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 12யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 12

அஸ்வினும், கிறுவும் வீட்டிற்கு வந்தனர்.   இந்து “அண்ணனும் , தங்கச்சியும் எங்க போனிங்க இவளோ நேரமா?” என்று கேட்க,   இந்துவின் அருகில் அமர்ந்தவள் அவர் கன்னத்தைக் கிள்ளி   “இந்துமா, அஸ்வின் என்னை சில்ரன்ஸ் பார்க்கிற்க்கு கூட்டிட்டு போனான்”