Tamil Madhura காதலினால் அல்ல! ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 19

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 19

19
 

    • அந்த இரவு மோகனமாக இருந்தது. பினாங்கின் நகரக் கடற்கரைப் பகுதியான கர்னி டிரைவ் அந்த சனிக்கிழமை பதினொரு மணி இரவிலும் ஆட்கள் நடமாட்டத்தோடு கலகலப்பாக இருந்தது. பலர் ஜோடி ஜோடியாக இருந்தார்கள். சிலர் குடும்பத்தோடு இருந்தார்கள். சிலர் தூண்டில் போட்டு மீன் பிடிக்க முயன்று கொண்டிருந்தார்கள். ஒட்டுக் கடை வியாபாரம் ஜேஜேவென்று நடந்து கொண்டிருந்து. ஆனால் கணேசனுக்கு அதெல்லாம் கருத்தில் படவில்லை. அகிலா ஒருத்தியே அவன் நினைவிலும் கண்களிலும் இருந்தாள். தான் கதாநாயகனாகவும் அவள் கதாநாயகியாகவும் நிற்கும் இந்தப் படத்தில் இந்தக் கூட்டமெல்லாம் அவ்வளவு முக்கியமில்லாத உப நடிகர்கள் கூட்டமாகத்தான் இருந்தது.

 

    • அவர்கள் முன்னால் கடல் விரிந்து கிடந்தது. இருட்டில் அதன் தண்ணீரின் நிறம் தெரியவில்லை. கரையிலுள்ள மங்கிய விளக்குக் கம்பங்களின் இலேசான பிரதிபலிப்பு மட்டும் அலை முகடுகளில் பட்டு மின்னியது. மென்மையான அலைகள் வந்து அங்கு கட்டப் பட்டிருந்த சுவர்த் தடுப்பை மோதும் போது தாளத்திற்கு இணங்காத சலசலவென்ற சத்தம் கேட்டுக் கொண்டிருந்து. ஆழமில்லாத சேற்றுக் கரையைக் கொண்ட இந்தப் பகுதியிலிருந்து சேற்றின் மணம் வந்து கொண்டிருந்தது.

 

    • பினாங்கின் இந்தக் கரையிலிருந்து ஏறிட்டுப் பார்த்தால் தூரத்தில் அக்கரையில் பட்டர்வொர்த் கடற்கரையும் செபராங் பிறை கடற்கரையும் அரை நிலா வட்டத்தில் தெரிந்தன. கடற்கரையோரமாக உள்ள விளக்குக் கம்பங்கள் ஒளிக் கோடுகள் போட்டிருந்தன. அக்கரையின் சில உயர்ந்த கட்டடங்களில் விளக்குகள் தெரிந்தன. கப்பளா பத்தாஸ் ராணுவ விமான தளத்தை நோக்கி ஒரு ராணுவ விமானம் வேகமாகப் பறந்து கொண்டிருந்தது புள்ளி விளக்காகத் தெரிந்தது. அதன் ஓசை சற்று தாமதமாக அவர்கள் காதுகளுக்கு வந்தது.

 

    • கர்னி டிரைவ் அருகில் உள்ள படகு கிளப்பில் (Yacht Club) சில இயந்திரப் படகுகள் துறையில் கட்டி வைக்கப் பட்டு லேசான அலைகளில் ஆடிக் கொண்டிருந்தன. ஒரு படகில் மட்டும் உள்ளே விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. அந்த விளக்குகளின் பிரதிபலிப்புகள் கடலுக்குள் ஒளித் தூண்களாக இறங்கியிருந்தன. கடலின் நெளிவில் அந்த ஒளித் தூண்களும்நெளிந்து கொண்டிருந்தன.

 

    • கரையோரச் சுவரின் மேல் அவனுக்கு அணுக்கமாக உட்கார்ந்திருந்தாள் அகிலா. ஒட்டுக் கடையில் மீ கோரேங் மற்றும் ஐஸ் கச்சாங் சாப்பிட்டுவிட்டு பழக் கலவையான பினேங் ரோஜாக்கை பொட்டலம் கட்டி வாங்கிக் கொண்டு இங்கு வந்து காற்றாட உட்கார்ந்தார்கள். ரோஜாக் இனிப்பும் புளிப்பும் உறைப்பும் கலந்திருந்தது. இன்றைக்குத் தன் அனுபவங்கள் இப்படித்தான் கலவையாக இருக்கின்றன என்று எண்ணினான் கணேசன். ஆனால் இப்போதைய கணம் முழுவதும் இனிப்புதான்.

 

    • அகிலாவின் முடி கொஞ்சம் கலைந்தாற்போல் இருந்தது. உடம்பிலிருந்து ஒப்பனையைக் கலைக்கப் பூசிய களிம்பின் மணம் இன்னும் வந்து கொண்டிருந்தது. கணேசன் அதை ரசித்துக் கொண்டிருந்தான். இது பெண்ணின் வாசனை. இது காதலியின் வாசனை.

 

    • அவள் காதலியாகிவிட்டாளா? அது சரியாகத் தெரியவில்லை. சாப்பாட்டுக்கு அழைத்து வந்ததற்காக இதுவரை பலமுறை நன்றி சொல்லி விட்டாள். ஷங்ரிலாவிலிருந்து மோட்டார் சைக்கிளில் ஏறி இங்கு வந்து சேரும் வரை தோளைத் தொட்டும் தொடாமலும் பிடித்து வந்தாள். சாப்பாட்டு நேரத்தில் தங்கள் பல்கலைக் கழகப் பாடம் பற்றிய கதைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். ஆரம்பப் பள்ளி இடை நிலைப் பள்ளிப் படிப்பனுபவங்கள் பற்றிப் பேசினார்கள். தங்கள் ஊர்களைப் பற்றிப் பேசினார்கள். நாளை நடை பெறவிருக்கும் பட்டமளிப்பு விழாவில் தங்களுக்கு என்னென்ன வேலைகள் உள்ளன என்பது பற்றிப் பேசினார்கள். அதற்கு மேல் அந்தப் பேச்சில் அந்தரங்கங்கள் ஏதும் பேசப்படவில்லை.

 

    • ஆனால் கடை மேசையில் கும்பலோடு உட்கார்ந்து சாப்பிட்டு முடிந்தவுடன் காசு கொடுத்து எழுந்து கடலலைகள் வருடும் இந்தச் சுவர் அருகில் கொஞ்சம் இருட்டான இடத்துக்கு வந்தவுடன் ஏற்பட்ட ஏகாந்தத்தில் ஒரு மோக உணர்ச்சி அவனுக்கு வந்தது. அதிலும் அவள் ஆடிக் களைத்திருந்து இப்போது சாப்பாட்டுக்குப் பின் பெற்றிருந்த மலர்ச்சியும் அவள் அணுக்கத்தினால் வந்து கொண்டிருந்த அந்த வாசனைகளும் அவனைக் கிறங்க அடித்துக் கொண்டிருந்தன.

 

    • இந்தத் தனிமையில் எதைப் பற்றிப் பேசுவது என்று தெரியவில்லை. அணுக்கமாகிவிட்டாளே என அந்தரங்கமாக ஏதாவது பேச ஆரம்பித்தால் அவள் கோபித்துக் கொள்ளக் கூடும். “உன்னை நண்பன் என்று நம்பி வந்தேன். இப்படிச் செய்து விட்டாயே!” என ஆரம்பித்துவிட்டால்? ஆனால் இத்தனை தனிமையில், அணுக்கத்தில் இருவரும் வந்து இங்கு அரையிருளில் கடலலைகள் பின்னணியில் உட்கார்ந்திருப்பது எதற்காக? பாடங்களையும் குடும்பக் கதைகளையும் பேசவா? இந்தச் சூழ்நிலையிலேயே சிருங்காரம் இருக்கிறதல்லவா? காற்றில் ஒரு காதல் ரசம் இருக்கிறதல்லவா?

 

    • ஆனால் அவளும் அப்படி நினைக்கிறாளா? இல்லாவிட்டால் உண்மையிலேயே ஹோட்டல் சாப்பாடு பிடிக்காமல் இங்கு வந்து சாப்பிட்டு திரும்ப விடுதிக்குப் போக தன்னைச் சோற்று டிக்கட்டாகவும் போக்குவரத்து வசதியாகவும் மட்டும் பாவித்துக் கொண்டாளா? ஐயோ, இந்தப் பெண்களையே புரிய மாட்டேனென்கிறது!

 

    • “அந்த பட்டர்வொர்த் கடற்கரை இங்கிருந்து ராத்திரியில பார்க்க ரொம்ப அழகா இருக்கில்ல கணேஷ்?” என்று மௌனத்தை அவளே உடைத்தாள்.

 

    • அவளுக்கு அவன் நேரடியாக பதில் சொல்லவில்லை. “ரொம்ப நன்றி அகிலா!” என்றான்.

 

    • திகைத்தவள் போல் பார்த்தாள். “எதுக்கு திடீர்னு நன்றி சொல்றிங்க! இங்க கொண்டு வந்து எனக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்ததுக்கு நானில்ல உங்களுக்கு நன்றி சொல்லணும்!” என்றாள். அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்திருந்தாள். பாதி இருளில் எஞ்சியிருந்த அரிதாரத் துளிகள் மின்னின.

 

    • “சாப்பாடு பெரிசில்ல அகிலா! அந்த சாப்பாட்டை இவ்வளவு சுவையுள்ளதா ஆக்கினிங்களே! அதுக்காக!”

 

    • “அது மீ கோரேங் பெரட்டிக் கொடுத்த அந்த மாமாவின் கை வண்ணமா இருக்கும். நான் என்ன பண்ணினேன்?”

 

    • “எவ்வளவோ பண்ணியிருக்கிங்க! இந்த இரவு நேரத்த இவ்வளவு அழகாக்கினது நீங்கதான். இந்த கர்னி டிரைவுக்கு நண்பர்களோடு வந்து எத்தனையோ முறை சாப்பிட்டுப் போயிருக்கிறேன். ஆனா இந்த இடம் இத்தனை அழகா இருந்ததில்ல!”

 

    • “அது ஏன் இன்னைக்கு மட்டும் அப்படி?”

 

    • “நீங்க என் பக்கத்தில இருக்கிறதுதான் காரணம். கேம்பஸ் கூட இப்ப எனக்குப் புதுசாத்தான் தெரியுது. ரொம்ப அழகான இடமா மாறிட்டதாத் தெரியுது!”

 

    • “ரொம்பத்தான் புகழ்றிங்க! எனக்குக் கூச்சமா இருக்கு போங்க!” என்றாள்.

 

    • கூச்சமாக இருந்தால் சரி. இல்லாவிட்டால் இவ்வளவு பேசியதற்குக் கோபம் வந்திருக்க வேண்டும்.

 

    • “உண்மையில என்ன இன்னைக்கி ரொம்ப சந்தோஷப் படுத்திட்டிங்க. என்னை அந்த ரேகிங் விசாரணையில இருந்து மீட்டதுக்கும் எனக்காக வருத்தப் பட்டு அழுததுக்கும் உங்களுக்கு நல்ல முறையில நன்றி சொல்ல ஒரு சந்தர்ப்பத்தை எதிர் பார்த்துக் கிட்டிருந்தேன். அது எதிர் பாராம இன்னைக்குக் கிடைச்சிது!” என்றான்.

 

    • அவனைச் சில விநாடிகள் கூர்ந்து பார்த்தாள். “அதே போல கணேஷ், ரேகிங்ல இருந்து என்னை நீங்க காப்பாத்தினதுக்கு உங்களுக்கு மனந் திறந்து நன்றி சொல்ல நானுந்தான் ஒரு சந்தர்ப்பத்த எதிர் பார்த்துக் கிட்டிருந்தேன். இன்னைக்கு அது வாய்ச்சது, எதிர் பாராம!” என்றாள்.

 

    • அவள் கையை குலுக்குவதற்காக நீட்டினாள். அவன் வலது கையால் அழுத்திப் பிடித்து அதன் மேல் இடது கையையும் வைத்து மூடினான். அவள் கொஞ்சம் தயங்கித் தன் இடது கையை அதன் மேல் வைத்து மூடினாள். கொஞ்ச நேரம் கைகளை உருவிக் கொள்ளாமல் அப்படியே ஒருவரை ஒருவர் பார்த்திருந்தார்கள்.

 

    • கடலை மூடியிருந்த இருட்டு வானத்தில் ஒரு மின்னல் நெளிந்து மறைந்தது. தொடர்ந்து இடி ஒன்று இடித்து உருண்டது. சடசடவென மழை கொட்ட ஆரம்பித்தது. சட்டென்று கையை உருவிக் கொண்டாள். “ஐயோ மழை வந்திருச்சே! வாங்க ரொம்ப வர்ரதுக்குள்ளே போயிடுவோம் கணேசன்!” என்று எழுந்தாள்.

 

    • அவனுக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தது. கையை விடாமல் பிடித்திருந்து அவள் விழிக்குள் இன்னும் ஒரு மணி நேரம் பார்த்திருக்கத் தயாராக இருந்தான். அவனுடைய காதல் துடிப்புக்களையெல்லாம் அவளிடம் மணிக் கணக்கில் சொல்லத் தயாராகியிருந்தான். ஆனால் இந்தப் பாழும் மழை…!

 

    • இருவருமாக அவன் மோட்டார் சைக்கிளை நோக்கி ஓடினார்கள். அவன் மழைக் கோட்டு ஒன்றுதான் வைத்திருந்தான். அவளிடம் கொடுத்தான். “நீங்க போட்டுக்கங்க!” அகிலா என்றான்.

 

    • அவள் மழைக் கோட்டைப் போர்த்திக் கொண்டு பின்னால் உட்கார்ந்தாள். அவன் மோட்டார் சைக்கிளை ஓட்ட ஆரம்பித்ததும் அதை இழுத்து அவன் தலைக்கு மேல் கொண்டு வந்தாள். அதை அப்படியே அவன் தோளோடு போர்த்தி அவள் இரு கைகளையும் அவன் கைகளுக்குள் நுழைத்து இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.

 

    • மழைக் கோட்டைச் சற்றும் சட்டை செய்யாமல் மழை அவர்களை தாரை தாரையாக நனைத்துக் கொண்டிருந்தது. ஆனால் அவன் மழைக்கு மனதார நன்றி சொல்லிக் கொண்டிருந்தான்.

 

    • பாதி வழியில் மழை நின்று விட்டது. ஆகவே மோட்டார் சைக்கிளை நிறுத்தி மழைக் கோட்டை மடித்து வைத்தான். அதன் பின்னர் பயணம் தொடர்ந்த போதும் அவள் கைகள் முன்னைப் போலவே அவனைப் பின்னியிருந்தன.

 

    • பல்கலைக் கழகத்துக்குள் அவர்கள் வந்து சேர்ந்த போது மணி பனிரெண்டாகி விட்டது. மறுநாள் காலை தொடங்கும் பட்டமளிப்பு விழாவிற்கான கடைகள் அமைப்பதில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் நடமாட்டம் அந்த இரவிலும் இருந்தது. தேசா கெமிலாங்குக்கு வந்து வாசலில் கொண்டு நிறுத்தினான். அவள் இறங்கினாள். “ரொம்ப நன்றி. அறைக்குப் போனதும் குளிச்சிடுங்க! இல்லன்னா சளிக்காய்ச்சல் பிடிக்கும்!” என்றாள் சிரித்துக் கொண்டே!

 

    • “இன்றைக்குப் பிடித்திருப்பது சளிக் காய்ச்சலல்ல, காதல் காய்ச்சல்” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு “நீயும் போய் குளிச்சிரு அகிலா!” என்றான். சொன்னவுடன் உதட்டைக் கடித்துக் கொண்டான். அவளை “நீ” என்று சொல்ல இப்படி உரிமை எடுத்துக் கொள்ளலாமா என அவனுக்கே தெரியவில்லை.

 

    • மறுக்கவில்லை. “சரி” என்றாள் சிரித்துக் கொண்டே.

 

    • அவன் புறப்படும் வரை வாசலில் காத்திருந்தாள். அவளுக்குக் கையசைத்துவிட்டு அவன் மோட்டார் சைக்கிளைக் கிளப்பித் திரும்பிய போது ஜெசிக்கா வரவேற்பறையின் கதவின் ஓரத்தில் நின்றவாறு தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பது அவன் கண்ணில் பட்டது. அவள் கண்களில் ரௌத்திரம் இருந்ததை அந்த ஒரு கணத்தில் உணர முடிந்தது.

 

    • *** *** ***

 

    • பட்டமளிப்பு விழாவின் பல்வேறு துணை நிகழ்ச்சிகளில் அகிலாவை கணேசன் தேடித் தேடிச் சென்று சந்தித்தான். ரோஜா மலர்கள் விற்க அவளுக்குத் துணை செய்தான். அவள் தோழிகளோடு சேர்ந்து கொட்டமடித்தான். பலமுறை அகிலா போக வேண்டிய இடங்களுக்கெல்லாம் அவளை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு போனான். அந்தச் சில நாட்களில் வளாகத்தில் அவர்கள் மற்ற மாணவர்களின் கண்களுக்கு வழக்கமான ஜோடியாகிப் போனார்கள்.

 

    • அதற்கு அடுத்த வாரம் வழக்கம் போல் புதன் கிழமை இரவில் ஐசெக் மீட்டிங் நடந்த போது ஜெசிக்கா உம்மென்றிருந்தாள். எப்போதும் கணேசனைத் தேடிப் பிடித்து அவனோடு மோட்டார் சைக்கிளில் ஏறி வருபவள் அந்த வாரம் தானாகத் தன் மோட்டார் சைக்கிளிலேயே வந்திருந்தாள். கணேசனும் அவளைத் தேட முயற்சி செய்யவில்லை. ஜெசிக்காவுக்கும் தனக்குமுள்ள தூரத்தை கொஞ்சம் அதிகப் படுத்திக் கொள்வதே இப்போதைக்கு நல்லது என அவனுக்குப் பட்டது. ஆனால் ஜெசிக்கா போன்ற ஒரு நல்ல தோழியை அவன் இழக்கவும் விரும்பவில்லை. நீண்ட கால நட்பு முறிந்து விடக் கூடாதே என்ற கவலை அவனுக்கு இருந்தது.

 

    • கூட்டத்தின் ஆரம்பத்தில் ஜெசிக்காவைப் பார்த்து அவன் சிரிக்க முயன்ற போது அவள் முகம் திருப்பிக் கொண்டாள். கூட்டத்தில் பல முக்கியமான விஷயங்கள் பேசப் பட்டன. அந்த ஆண்டு நடக்கவிருக்கும் அனைத்துலக ஐசேக் பேராளர் மாநாடு பற்றிய எல்லா விஷயங்கள் பற்றியும் சங்கத்தின் செயலாளரான அவள் உற்சாகமில்லாமல் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

 

    • கணேசனுக்கு அவளுடைய மன இறக்கத்தின் காரணம் புரிந்தது. அது அவனுக்குச் சங்கடமாகவும் இருந்தது. ஜெசிக்கா அவனுக்கு நல்ல தோழி. அவளோடு பல முறை சாப்பிடப் போயிருக்கிறான். ஐசெக் சங்க வேலைகளுக்காகப் பல முறை அவளோடு சுற்றித் திரிந்திருக்கிறான். நூலகத்தில் ஒரே மேசையில் உட்கார்ந்து அந்த இடத்தின் மௌனச் சூழ்நிலையில் கால்கள் உரசப் படித்ததும் உண்டு. அவனுடன் சிரித்துச் சிரித்துப் பேசவும் அவன் நலனில் அக்கறைப் படவும் அவளைப் போல் ஒரு துணை கிடைத்திருப்பது அவனுக்குப் பெருமையாக இருந்தது.

 

    • சில வேளைகளில் தோழி என்ற நெருக்கத்தைக் காதலி என்ற அளவுக்குக் கொண்டு போகலாம் என்ற ஆசையும் இருந்தது. தன்னை விட ஜெசிக்காவுக்கு அது இன்னும் அதிகமாக இருந்தது என்பது அவனுக்குத் தெரியும். ஆனால் ஜெசிக்கா அவன் மீது முற்றாக ஆதிக்கம் செலுத்த முயன்றது அவனுக்குப் பிடிக்கவில்லை. அவனுக்கு என்ன விருப்பம் என்பதைப் பற்றிச் சற்றும் கவலைப் படாமல் தான் விரும்பியதையெல்லாம் அவன் மீது திணிக்கின்ற அவளுடைய ஆர்ப்பாட்டம் அவனைத் தயங்கச் செய்தது.

 

    • கூட்டம் முடிந்த போது அவள் விசுக்கென்று எழுந்து விட்டாள். ஆனால் அவளை அந்தக் கோபத்தோடு அப்படியே விட்டு விட கணேசன் விரும்பவில்லை. அவள் அறையை விட்டு வெளியேறுவதற்குள் விரைந்து போய் அவள் கையைப் பிடித்தான். “என்ன” என்பது போல் திரும்பி அவனை முறைத்தாள்.

 

    • “ஏன் என்னிடம் பேசாமல் போகிறாய், ஜெசிக்கா?” என்று கேட்டான்.

 

    • “உன்னிடம் பேச என்ன இருக்கிறது? எனக்கு நிறைய வேலை இருக்கிறது. நான் போக வேண்டும்!” என்றாள். முகத்தில் கோபம் கொதித்துக் கொண்டிருந்தது.

 

    • “கொஞ்ச நேரம் உட்கார்ந்து என்னிடம் பேசு ஜெசிக்கா!” என்றான்.

 

    • கொஞ்சம் இணங்கி வந்து கலாச்சார மண்டபத்தின் படிகளில் அவனோடு உட்கார்ந்தாள்.

 

    • “என் மேல் உனக்கு என்ன கோபம்?” என்று அவளைக் கேட்டான்.

 

    • கொஞ்ச நேரம் பேசாமல் இருந்து அப்புறம் தரை பார்த்துப் பேசினாள். “அது உனக்கே தெரிய வேண்டுமே?”

 

    • “தெரியவில்லை. உனக்குக் கோபம் வருமாறு நான் என்ன செய்தேன்?”

 

    • “புதிதாக ஆள் பிடித்து விட்டாய். ஆகவே பழையவர்கள் துணை உனக்குத் தேவைப்படாமல் போய்விட்டது!”

 

    • “யார் புதிய ஆள்? யார் பழைய ஆள்?”

 

    • “உனக்கே தெரிய வேண்டும்!”

 

    • “அகிலாவைச் சொல்கிறாயா?” என்று நேராக அவள் கண்களைப் பார்த்துக் கேட்டான்.

 

    • “அந்தப் பிசாசை நீ மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வந்ததைப் பார்த்தேன். நட்ட நடுநிசியில் மழையில் நனைந்த ஈரத்துடன் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப் பிடித்துக் கொண்டு வந்து இறங்கினீர்களே! எனக்குத் தெரியாது என்று நினைத்துக் கொண்டாயா?” என்றாள்.

 

    • அவளிடம் தெளிவாகப் பேச வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான். “ஆமாம் ஜெசிக்கா! அன்றைக்கு வேந்தர் விருந்து முடிந்து அகிலாவுடன் சென்று சாப்பிட்டு விட்டு அவளைக் கொண்டு வந்து விடுதியில் விட்டேன். வரும் போது மழை வந்து விட்டது. நனைந்துதான் வந்தோம். இதில் உன்னிடம் என்ன மறைக்க வேண்டியிருக்கிறது?”

 

    • அவனை கோபத்தோடு ஏறிட்டுப் பார்த்தாள். “அவள் கூப்பிட்டாளா, நீ கூப்பிட்டாயா?”

 

    • “யார் கூப்பிட்டால் என்ன ஜெசிக்கா?”

 

    • தரையைப் பார்த்தாள். “நீ அவளைக் காதலிக்கிறாயா கணேசன்?” அவள் தொனி இறங்கியிருந்தது. குரலில் தளு தளுப்பு இருந்தது.

 

    • அவன் மென்மையாகப் பேசினான். “ஜெசிக்கா, நீ இப்படி மொட்டையாகக் கேட்பதால் நானும் சொல்கிறேன். ஆமாம். அவளைக் காதலிக்கிறேன். ஆனால் அவள் என்னைக் காதலிக்கிறாளா என்பது இன்னும் தெரியவில்லை!”

 

    • அவனை மீண்டும் ஏறிட்டுப் பார்த்தாள். “அப்படியானால் இதுதான் நம் உறவின் முடிவா?” என்று கேட்டாள்.

 

    • “ஏன் உறவு முடிய வேண்டும் ஜெசிக்கா? நீ எந்நாளும் எனக்குத் தோழிதான். அது ஏன் மாற வேண்டும்?”

 

    • “இதற்குக் காரணம் நான் சீனப் பெண் என்பதாலா? சீனப் பெண் தோழியாக இருக்கத் தகுந்தவள், ஆனால் காதலியாக இருக்கத் தகுந்தவள் இல்லை என முடிவு செய்து விட்டாயா?”

 

    • “இல்லை ஜெசிக்கா. உன் மேல் உண்மையான காதல் எனக்கு வளர்ந்திருந்தால் இந்த இன வேறுபாடு எனக்குத் தடையாக இருந்திருக்காது என்றுதான் நினைக்கிறேன். ஆனால் அந்த பிரச்சினை அளவுக்கு நம் உறவு போகவில்லையே! எனக்கு உன்மேல் அன்பு உண்டு. ஆனால் அது எந்தக் காலத்திலும் காதலாக வளர்ந்ததில்லை”

 

    • ஜெசிக்கா நீண்ட நேரம் யோசித்திருந்து பெரு மூச்சு விட்டுப் பேசினாள். “நான் உன்னைப் பற்றி வேறுவிதமான ஆசைகளை வளர்த்துக் கொண்டேன். என் தவறுதான் போல இருக்கிறது. உன் நெருக்கம் என்னை ஏமாற்றி விட்டது. உன் கம்பீரமும் புத்திசாலித் தனமும் என்னை வசீகரித்து என் புத்தியை மழுங்கடித்து விட்டன. இன வேறுபாட்டைக் கடந்து நம் புத்தியின் சம பலத்தால் நாம் காதலித்துக் கல்யாணமும் செய்து கொள்ள முடியும் என நம்பினேன். ஆனால் அது எல்லாம் தவறு என இப்போது தெரிந்து விட்ட போது என் மீதே எரிச்சல் வருகிறது. அந்த எரிச்சலை உன் மீது காட்டியதற்கு மன்னித்துக் கொள்!” என்றாள்.

 

    • “மன்னிப்பெல்லாம் தேவையில்லை! நாம் இன்னும் நண்பர்கள்தான். அது ஏன் மாற வேண்டும்?” என்றான்.

 

    • “அது மாற வேண்டியதில்லை. ஆனால் மட்டுப் படுத்தப் படவேண்டும். முன்பு போல் நாம் இறுக்கிப் பிடித்துக் கொண்டு மோட்டார் பைக்கில் சுற்ற முடியாது. அந்த உரிமை உன் புதுக் காதலிக்குத்தான் உண்டு!” என்றாள்.

 

    • “ஜெசிக்கா! திரும்பத் திரும்ப அப்படிச் சொல்லாதே! அவள் என் காதலியா என்று இன்னும் தெரியவில்லை. அவள் மனதை இன்னும் எனக்குத் திறந்து காட்டவில்லை. ஆகவே இது ஒரு தலைக் காதலாகவும் இருக்கலாம்!” என்றான்.

 

    • “நான் வேண்டுமானால் போய் அந்தப் பிசாசிடம் பேசி ஒரு பதில் வாங்கிக் கொண்டு வரட்டுமா?” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.

 

    • “ஐயோ வேண்டாம்! அதன் பின் உண்மையான பேயாக மாறி என்னைக் குடலைப் பிடுங்கிக் கொன்றாலும் கொன்று விடுவாள்!” என்றான் பதிலுக்குச் சிரித்துக் கொண்டே.

 

    • அவள் எழுந்தாள். “சரி கணேசன்! உனக்கென ஒரு நல்ல இந்தியப் பெண்ணைப் பிடித்துக் கொண்டாய்! இன ஒருமைப் பாட்டுக்காக நான் வகுத்திருந்த திட்டத்தை முறியடித்து விட்டாய். இனி நான் எனக்கேற்ற ஒரு சீன மாப்பிள்ளையைத் தேட வேண்டும். ஆனால் ஒரு இந்திய மாணவனோடு சுற்றியலைந்த சீனத்தியை எந்த சீன மாணவன் ‘செக்கன்ட் ஹென்டாக’ ஏற்றுக் கொள்வானோ தெரியவில்லை!” என்று சொல்லிவிட்டு தன் மோட்டார் பைக்கை நோக்கி நடந்தாள் ஜெசிக்கா.

 

    • கணேசன் அவள் மோட்டார் சைக்கிள் ஏறிப் போவதைப் பார்த்தவாறு இருந்தான். எத்தனை எளிதாக சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிச் சரிப் படுத்திக் கொண்டாள்! “என்னை ஏமாற்றி விட்டாய்! என் வாழ்வையே குலைத்து விட்டாய்!” என்று ஒப்பாரி வைக்காமல் சட்டென்று வழித்துப் போட்டு விட்டு வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்குத் தயாராகி விட்டாள்.

 

    • அவள் போவதை ஒருவித வருத்தத்தோடு பார்த்துக் கொண்டிருந்த கணேசனுக்கு திடீரென்று அவனுடைய அத்தை மகள் மல்லிகாவின் நினைவு வந்தது.

 

    ***

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 20ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 20

20  பல்கலைக் கழகத்தில் அந்த ஆண்டின் முதல் பருவம் ஒரு முடிவுக்கு வந்து கொண்டிருந்தது. பாடத் திட்டத்தின்படி விரிவுரைகளை முடிப்பதற்கு விரிவுரையாளர்கள் அவசரப் பட்டுக் கொண்டிருந்தார்கள். பருவ இறுதி எசைன்மென்ட் (assignment) கட்டுரைகளுக்கான முடிவு நாட்கள் நெருங்கிக் கொண்டிருந்தன. முதல் பருவத்

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 28ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 28

28  அம்மாவின் முகத்தில் ஏன் இத்தனை கனல் இருக்கிறதென்று அகிலாவுக்குப் புரியவில்லை. தீபாவளியன்று மாலை வரை விருந்தினர் வருகின்ற நேரமெல்லாம் அவர்களோடு புன்னகைத்து உரையாடி உபசரித்துக் கொண்டுதான் இருந்தாள். எல்லாரும் போய் வீடு ஓய்ந்த பிறகு பாத்திரங்களைக் கழுவ ஆரம்பிக்கும் போது

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 10ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 10

10  “இந்தப் பல்கலைக் கழகத்திற்கு இப்ப வருகிற இந்திய மாணவர்களை என்னால புரிஞ்சிக்க முடியல ராகவன்” என்றார் பேராசிரியர் முருகேசு.   கணேசனும் ராகவனும் காலை ஏழரை மணிக்கெல்லாம் அவருடைய அறையில் இருந்தார்கள். சரித்திரத் துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் இருந்த அவரை