Tamil Madhura காதலினால் அல்ல! ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 18

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 18

18
 

    • மோட்டார் சைக்கிளைக் கீழ்த் தளத்தில் நிறுத்தி விட்டு “ஷங்ரிலா” ஹோட்டலின் பிரம்மாண்டமான வரவேற்பறைக்குள் நுழைந்த போது அதன் அகண்ட பரப்பும் உயரமும் ஆடம்பரமும் கணேசனை வியப்பில் ஆழ்த்தின. பினாங்கின் மையப் பகுதியான கொம்தாரின் பக்கத்தில் அந்தக் கட்டடத் தொகுதியின் ஒரு பகுதியாக அமைந்திருந்தது அந்த ஆடம்பர ஹோட்டல். அதன் வரவேற்பு மண்டபம் விசாலமாக இருந்தது. இரு கைகளால் அணைக்க முடியாத தடித்த தூண்களில் மலாய் பாரம்பரியத்தில் இழைத்த பலகை வேலைப் பாடுகள் இருந்தன. எங்கும் தடித்த குஷன் வைத்த சோ•பாக்கள் போடப் பட்டிருந்தன. உயர்ந்த சீலிங்கிலிருந்து கண்ணைப் பறிக்கும் சரவிளக்குகள் தொங்கிக் கொண்டிருந்தன. பிரம்மாண்டமான மலர்க்கொத்து ஒன்று அதற்கென அமைக்கப் பட்ட மேசையில் மண்டபத்தின் நடுநாயகமாக வைக்கப் பட்டிருந்தது. கோட்டும் கழுத்தில் போ டையும் அணிந்த இளம் வெயிட்டர்கள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தார்கள்.

 

    • ஒரு காலத்தில் அரசர்கள் மட்டுமே தங்கள் கோட்டைகளுக்குள் அனுபவித்த ஆடம்பரங்களை நவீன பொருளாதார சமூக வாழ்க்கை பணம் படைத்த சாதாரண மக்களுக்கும் கொண்டு வந்து விட்டதை எண்ணிக் கொண்டே வேந்தர் விருந்து நடக்கவிருக்கும் மூன்றாம் மாடியின் கிரேன்ட் பால் ரூமை நோக்கிய எஸ்கலேட்டரில் ஏறினான் கணேசன்.

 

    • *** *** ***

 

    • ஒவ்வோராண்டும் பட்டமளிப்பு விழாவுக்கு முதல் இரவில் வேந்தரையும் இணைவேந்தர்களையும் கௌரவப் பட்டம் பெறவிருக்கும் அறிஞர்களையும் விழாவில் பங்கு கொள்ள அழைக்கப் பட்டுள்ள பிற பல்கலைக்கழகத் துணை வேந்தர்களையும் உபசரிக்கும் இந்த விருந்து நடத்தப்படும். பல்கலைக் கழக நிர்வாக மன்ற உறுப்பினர்களும் செனட் சபை உறுப்பினர்களும் மூத்த பேராசிரியர்களும் இந்த விருந்தில் கலந்து கொள்வார்கள்.

 

    • விருந்தை உபசரிப்பாளராக இருந்து நடத்தும் பொறுப்பு ஒவ்வோர் ஆண்டும் ஒரு கல்விப் பிரிவிடம் ஒப்படைக்கப்படும். இந்த ஆண்டு அந்தப் பொறுப்பு நிர்வாகக் கல்விப் பிரிவிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது. அந்தப் பிரிவின் விரிவுரையாளர்களும் அலுவலர்களும் விருந்தை நன்முறையில் நடத்த மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள்.

 

    • சில நாட்களுக்கு முன் நிர்வாகப் பிரிவுக் கட்டிடத்தில் கணேசன் நடந்து கொண்டிருந்தபோது அந்தப் பிரிவின் டீன் பேராசிரியர் முகமட் சுலைமான் அவனைத் தற்செயலாகப் பார்த்தார். தனக்கே உரிய இனிமையான முகத்துடன் “கணேசன், எப்படியிருக்கிறாய்?” என்று கேட்டார்.

 

    • “நன்றாக இருக்கிறேன் பேராசிரியர் அவர்களே” என்று அடக்கமாகச் சொன்னான் கணேசன். இரண்டாம் ஆண்டில் நல்ல மார்க்குகள் வாங்கியதற்காக கணேசன் டீன்ஸ் லிஸ்டில் இடம் பெற்று அவருடன் விருந்து உண்டு பாராட்டும் பெற்றிருப்பதால் அவருக்கு அவனை நன்கு தெரியும்.

 

    • “இந்த ஆண்டு டீன்ஸ் லிஸ்டில் இடம் பெறுவாயா?” என்று கேட்டார்.

 

    • “முயற்சி செய்கிறேன்! என்னை விடச் சிறந்த அறிவுள்ள மாணவர்களுடன் போட்டி போட வேண்டுமே!” என்றான்.

 

    • “உனக்கு முயற்சி இருக்கிறது. உன்னால் முடியும். ஊக்கத்தைக் கைவிட்டு விடாதே! ரேகிங் கேஸ் பற்றிக் கேள்விப் பட்டேன். உனக்கு நேர்ந்த இந்த துரதிருஷ்டமான விஷயம் உன் மனதைப் பாதிக்க இடங் கொடுத்து விடாதே!” என்றார்.

 

    • “அதெல்லாம் முடிந்து விட்டது. ஊக்கத்தைக் கைவிட மாட்டேன்!” என்றான்.

 

    • போகத் திரும்பியவர் திடீரென்று திரும்பினார்: “கணேசன், இந்த வேந்தர் விருந்தை நடத்துவதற்கு விருந்து அன்றைக்கு ஓடியாடி உதவி செய்ய எனக்கு இரண்டு மூன்று மாணவர்கள் தேவைப் படுகிறார்கள். நீ வரமுடியுமா?” என்று கேட்டார்.

 

    • வேலைகள் தலைக்கு மேல் கிடந்தாலும் அவரே கேட்கும் போது முடியாது என்று சொல்ல முடியாது. “சரி பேராசிரியர் அவர்களே!” என்றான்.

 

    • “நன்றி. விருந்து எட்டு மணிக்கு. நீ ஐந்து மணிக்கெல்லாம் வந்து விடு. உன்னிடமுள்ள முழுக்கை பத்தேக் சட்டைகளில் நல்லதாகப் பார்த்துப் போட்டுக் கொண்டு வா! கண்டிப்பாக பூட்ஸ் அணிந்த வரவேண்டும்!” என்று சொல்லிவிட்டுப் போனார்.

 

    • அவரிடம் பேசிவிட்டுத் திரும்பி நடந்த போது இந்த விருந்தில்தான் அகிலா ஆடப் போகிறாள் என்ற நினைவு வந்தது. முன்பு போல் இருந்திருந்தால் அந்த நினைவில் அவன் உள்ளம் துள்ளிக் குதித்திருக்கும். இப்போது அது பழைய நினைவாகிப் போய்விட்டது. யாரைக் கட்டிப் பிடித்து ஆடப் போகிறாள் என்று வேடிக்கை பார்க்கும் ஆர்வம் மட்டுமே இருந்தது. ஆனாலும் அகிலாவின் நினைவு நெஞ்சுத் தொட்டிக்குள் ஒரு மீன் குஞ்சைப் போல சிலிர்த்து தண்ணீரை அலைக்கழித்து நுரையெழுப்பி ஒரு கிளுகிளுப்பை ஊட்டிவிட்டு ஏமாற்ற ஏக்கத்தை விட்டுச் செல்வதை அவனால் தவிர்க்க முடியவில்லை.

 

    • *** *** ***

 

    • எஸ்கலேட்டரின் உச்சத்தில் பாதம் அழுந்தும் கம்பளம் பதித்த தரையில் நடந்து அவன் கிரேன்ட் பால் ரூமை அடைந்த போது அதன் கதவுக்கு வெளியே நிர்வாகப் பிரிவின் இரண்டு மூன்று அலுவலர்கள் மட்டுமே இருந்தார்கள். உள்ளே பரிமாறுநர்கள் வட்ட வட்ட மேசைகளைத் தயார் படுத்துவதிலும் விரிப்புப் போடுவதிலும் ஈடுபட்டிருந்தார்கள்.

 

    • கிரேன்ட் பால் ரூம் மண்டபம் பிரம்மாண்டமானதாக இருந்தது. ஏறக்குறைய நூறு வட்ட மேசைகள் போடப் பட்டிருந்தன. ஆயிரம் பேர் வசதியாக உட்கார்ந்து சாப்பிடலாம். ஒரு கோடியில் வேந்தர் உட்கார்ந்து உணவருந்த சிறப்பு மேசைகள் போட்டு அரச வண்ணமான மஞ்சள் விரிப்புப் போட்டிருந்தார்கள். அவர்களுக்கான விசேஷ பீங்கான் பாத்திரங்கள் பளபளத்துக் கொண்டிருந்தன. வேந்தர் உரையாற்ற சிறு மேடையும் மைக்கும் ஒரு ஓரத்தில் வைத்திருந்தார்கள்.

 

    • இங்கும் சீலிங்கிலிருந்து பிரம்மாண்டமான சரவிளக்குகள் தொங்கிக் கொண்டிருந்தன. கண்ணாடிக் குண்டுகளால் கோர்க்கப்பட்ட நூற்றுக் கணக்கான சங்கிலிகள் சூழ்ந்திருக்க அது ஒரு அத்திப்பழ வடிவில் இருந்தது. அதனுள்ளே நாற்பது ஐம்பது மஞ்சள் பல்புகள் இருந்தன. இந்த ஒரு விளக்கை ஓர் இரவு எரிப்பதற்கு ஆகும் மின்சாரச் செலவைக் கொண்டு ஒரு குடும்பம் ஒரு மாதம் விளக்கெரிக்கலாம் என நினைத்துக் கொண்டான். அதைப்போல கிட்டத்தட்ட 15 சரவிளக்குகள் தொங்கின.

 

    • எதிர்ப் புறத்தில் நடன மேடை இருந்தது. இதில்தான் இசை நடன நிகழ்ச்சிகள் நடக்கும் என யூகித்துக் கொண்டான். இசைக் குழுவினருக்கான நாற்காலிகள் பின்புறம் போடப் பட்டிருந்தன. மைக்குகள் தயாராக இருந்தன. “யுஎஸ்எம் 1995-ஆம் ஆண்டு பட்டமளிப்பை முன்னிட்டு வேந்தர் விருந்து” என்ற மலாய் வாசகம் பொன் எழுத்துக்களில் மேடையின் உயரத்தில் அமைத்த பெரிய பலகையில் ஒட்டப் பட்டு மினுமினுத்துக் கொண்டிருந்தது.

 

    • இந்த மேடையில்தான் அகிலா வந்து ஆடப் போகிறாள். தான் கதவோரத்திலிருந்து பார்க்கலாம். அவளால் தன்னைப் பார்க்க முடியுமா? ஆயிரம் விருந்தினர்கள் உட்கார்ந்திருக்கும் அரங்கத்தில் ஓரமாக நிற்கப் போகும் தன்னை அவள் பார்ப்பதென்பது இயலும் காரியம் அல்லவென்று தோன்றிற்று. ஆனால் அவள் தன்னைப் பார்ப்பதிலும் பார்க்காமல் இருப்பதிலும் என்ன முக்கியத்துவம் இருக்கிறது என்று கேட்டுக் கொண்டு அயர்ந்தான்.

 

    • வளாகத்தில் பல முறை அவளைச் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் இருந்தன. ஆனால் அவற்றை வலிய அவன் தவிர்த்து விட்டான். மோட்டார் சைக்கிளில் போகும் போதும் அவள் நடந்து வருகிறாள் என்று தெரிந்தால் பார்க்காதது போலப் போகத்தான் தோன்றியது. பார்த்தால் சிரிக்க வேண்டி வரும். சிரித்தால் மீண்டும் ஒரு முறை காதலிக்க வருகிறானோ எனத் தப்பர்த்தம் பண்ணிக் கொள்ளக் கூடும். அந்த வம்பைத் தவிர்ப்பதுதான் நல்லது என நினைத்தான். இன்றைக்கும் அப்படித்தான். பார்க்க வேண்டிய சந்தர்ப்பங்கள் வந்தால் வேறு பக்கம் திரும்பிக் கொள்வதே உத்தமம் என நினைத்துக் கொண்டான்.

 

    • ஆனால் அவள் நடனமாடுவதைப் பார்க்கலாம். அது பொது நிகழ்ச்சி. எல்லார் கண்களும் மேயும் போது தன் கண்கள் அவள் மீது மேய்வதை அவள் தவறாக எண்ணிக் கொள்ள முடியாது. என்ன உடை போட்டிருப்பாள், என்ன மேக்கப் போட்டிருப்பாள் என்ற கற்பனையில் ஆழ்ந்து கொண்டிருந்த போது “கணேசன்! இங்கு என்ன பண்ணிக் கொண்டிருக்கிறாய்? வா வேலை இருக்கிறது!” என ஒரு அலுவலர் இழுத்துப் போனார்.

 

    • “முதலில் இதை வைத்துக் கொள்!” என்று ஒரு டிக்கட்டைக் கொடுத்தார்.

 

    • “இது என்ன?” என்று கேட்டான்.

 

    • “இதுதான் உனக்கு சோற்று டிக்கட். நீ என்ன வேந்தரோடு உட்கார்ந்து சாப்பிடலாம் என்று பார்த்தாயா? விருந்து முடிந்தவுடன் நாம் கீழே அலுவலர் கேன்டீனில் சென்று சாப்பிட வேண்டும். அதற்குத்தான் டிக்கெட்!”

 

    • சரியென்று வைத்துக் கொண்டான்.

 

    • அதன் பின் விடாமல் வேலை இருந்தது. விருந்தினர் லிஸ்டைக் கொடுத்து ஒவ்வொரு மேசைக்கும் தனித்தனி அட்டைகள் எழுதச் சொன்னார்கள். விருந்தினர் பட்டியலை ஒட்டி வைப்பதற்கு ஒரு போர்ட் வேண்டு மென்றார்கள். தேடிப்பிடித்து ஒரு போர்டை கணேசனும் இன்னுமிரு மாணவர்களும் தூக்கி வந்தார்கள். அந்த போர்டில் விருந்தினர் பட்டியலை மேஜை எண் வாரியாக ஒட்டச் சொன்னார்கள். இப்படியாக எடு பிடி வேலை பார்ப்பதிலேயே காலம் போயிற்று.

 

    • ஏழு மணி அளவில் பேராசிரியர் முகமட் சுலைமான் வந்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு திருப்தியானவுடன் துணைவேந்தரை முன்நின்று வரவேற்க ஹோட்டலின் வாசலுக்கு இறங்கிச் சென்றார். எட்டு மணி முதல் விருந்தினர்கள் வரத் தொடங்கினார்கள். பெரும்பாலானோர் வண்ண வண்ண பத்தேக் சட்டையில் வந்தனர். சிலர் மட்டுமே கோட்டும் டையும் அணிந்து வந்தார்கள். நிர்வாகத் துறை விரிவுரையாளர்கள் விருந்து மண்டப வாசலில் நின்று கைகுலுக்கி அவர்களை வரவேற்றார்கள். பேராசிரியர் முருகேசு வந்ததை கணேசன் கவனித்தான். ஆனால் ஒதுங்கி நின்ற அவனை அவர் பார்க்கவில்லை.

 

    • பல்கலைக் கழக வேந்தரான பெர்லிஸ் மன்னரின் பாதுகாப்பு அதிகாரிகள் வந்து உட்காருமிடம் இளைப்பாறும் அறை ஆகியவற்றைப் பரிசோதித்துச் சென்றார்கள். கொஞ்ச நேரத்தில் வேந்தர், அவர் துணைவியார் இருவரும் இணை வேந்தர்கள், துணை வேந்தர், பினாங்கு முதலமைச்சர் ஆகியோரும் அவர்கள் மனைவியரும் புடை சூழ உள்ளே வர விருந்து தொடங்கியது. மேடையில் வாத்தியக் குழு மெல்லிசை வழங்கத் தொடங்கியிருந்தது. விருந்து மண்டபத்தின் சுவர்களில் பொருத்தப்பட்டிருந்த ஒலி பெருக்கிகளின் வழியாக அந்த இசை பரவி சாப்பாட்டுத் தட்டுகளில் கரண்டிகளும் முட்கரண்டிகளும் மோதும் சத்தத்தோடு போட்டி போட்டுக் கொண்டிருந்தது.

 

    • அதன் பின் கணேசனுக்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறு வேலையில்லை. வயிறு பசித்தது. இருந்தாலும் விருந்து முடியும் வரையில் சாப்பிட முடியாதாகையால் மற்றவர்கள் சூப்பும் இறைச்சியும் சோறும் சாப்பிடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

    • சற்று நேரத்தில் துணைவேந்தர் எழுந்து பேசினார். யுஎஸ்எம்மின் அந்த ஆண்டு சாதனைகளைப் பட்டியலிட்டார். அவரைத் தொடர்ந்து வேந்தர் சுருக்கமாகப் பேசி வெள்ளி விழா கண்டிருக்கும் பல்கலைக் கழகத்திற்குத் தன் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

 

    • எல்லாம் உற்சாகமாக நடந்தாலும் எதிலும் பங்கெடுக்காமல் ஓரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருப்பதில் அவனுக்கு போரடித்தது. இதில் மாட்டிக் கொள்ளாமல் விடுதியிலேயே இருந்திருந்தால் இன்றிரவு ஒரு கட்டுரையை எழுதி முடித்திருக்கலாம் என நினைத்தான்.

 

    • ஆனால் அகிலாவுக்கு இது உபயோகமான இரவு. அவள் திறமையைப் பலர் முன் காட்டுகின்ற வாய்ப்பு. அகிலா இப்போது அங்கே உள்ளே ஆடுவதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். உடை மாற்றும் அறையில் மேக்கப் எல்லாம் போட்டுத் தயாராக இருப்பாள். கடைசி நேரத்தில் நின்ற இடத்திலேயே கைகளை அசைத்து அபிநயங்களை அப்பியாசித்துக் கொண்டிருப்பாள்.

 

    • ஏன் சுற்றிச் சுற்றித் தான் அகிலாவையே நினைக்க வேண்டும் என்பது அவனுக்குப் புரியவில்லை. இது எட்டாத பழம், கிட்டாத கனி என்று எத்தனை முறை சொல்லிக் கொண்டாலும் மனம் கேட்கவில்லை. தூங்க இருப்பவனின் காதை ஙொய்ஙொய் என்று சுற்றுகின்ற விடாப்பிடியான கொசுவைப் போல அந்த நினைவு ரீங்காரித்துக் கொண்டே இருந்தது.

 

    • இவள் என்ன அப்படி உசத்தி? இவளை விட்டால் வேறு பெண்களே இல்லையா? அத்தை மகள் மல்லிகா ஒருத்தி என்றும் தயாராக இருக்கிறாள். நசநசவென்று சளைக்காமல் சின்ன சின்ன அர்த்தமில்லாத விஷயங்களைப் பேசி போரடித்தாலும் அன்பிலும் செல்லத்திலும் அவனைக் குளிப்பாட்டுகிறவள். அகிலாவைப் போல அழகில்லை. ஆனால் என்ன? தன்னையே தலைவனாக எண்ணிக் கொண்டிருக்கிறவள். தனக்கு அடிமையாக, மனைவியாக இருக்கத் தயாராக இருக்கிறவள்.

 

    • அழகு என்று பார்த்தாலும் ஜெசிக்காவின் அழகுக்கு இந்த அகிலா எந்த மூலை? ஜெசிக்கா வெள்ளையும் மஞ்சளும் கலந்த கலரில் இருக்கிறாள். எந்நாளும் வாடாத பிரகாசமான சிரிப்பு. எப்போதும் இறுக்கிப் பிடித்த ஜீன்ஸ், குட்டைப் பாவாடை என்று போட்டுக் கொண்டு கிறங்க அடிக்கிறாள். கிட்ட போய்விட்டால் அட்டை போல ஒட்டிக் கொள்ளுகிறாள். மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து கொண்டாளானால் காற்றுப் போக இடம் விடுவதில்லை. இவர்களை விட்டு விட்டு ஏன் இந்த முசட்டுக் குணமுள்ள தொட்டால் சிணுங்கிப் பெண்ணைத் திருப்பித் திருப்பி நினைக்க வேண்டும் என்று தன்னையே கேட்டுக் கொண்டு நின்ற வேளையில்…

 

    • “அடுத்ததாக யுஎஸ்எம் ஜோகெட். பேராசிரியர் முகமட் கௌஸ் குழுவினர்” என்று அறிவிப்பாளர் சொல்ல இசைக் குழு உற்சாகமான ஜோகெட் இசையை ஆரம்பித்தது.

 

    • நடன மேடையின் இரு பக்க மறைவுகளிலிருந்து நடன மணிகள் தூக்கிப் பிடித்த ஸ்லேன்டாங் (துப்பட்டா) துணியுடன் ஒரு சுழல்காற்றுப் போலப் புகுந்தார்கள். மலாய் பாரம்பரிய பாஜூ குரோங் பாணியில் பெண்கள் பச்சை மேற்சட்டையும் பழுப்பு நிற சாரோங்கும் அணிந்திருந்தார்கள். உடைகளில் வெள்ளிச் சரிகை வேலைப்பாடுகள் மின்னின. ஆண்கள் தொளதொளவென்ற மலாய் சட்டை அணிந்து காற்சட்டை அணிந்து அதன் மேல் பாதியாய் மடித்த சாரோங் கட்டியிருந்தார்கள். தலையில் அழகிய சொங்கோக் அணிந்திருந்தார்கள்.

 

    • அகிலா மிக அழகாக இருந்தாள். முகத்தில் அளவான ஒப்பனை இருந்தது. கன்னங்களில் இளஞ்சிவப்பு ரூஜ் பூசி அரிதாரம் பூசியிருந்தாள். அரங்கத்தின் சக்தி மிக்க ஒளி விளக்குகளில் அவை மினுமினுத்தன. தலைமுடியைத் தூக்கிக் கட்டி செயற்கை மலர்கள் அணிந்திருந்தாள். அலங்காரத்தில் முற்றாக மலாய்ப் பெண்ணாக இருந்தாலும் முகவெட்டில் அவள் தமிழ்ப் பெண் என்பது தெளிவாகத் தெரிந்தது.

 

    • இசை மிக விருவிருப்பாக இருந்தது. மலாய் அடிப்படையில் இந்திய சீன வாசனையுடன் கூடிய கதம்பம். தபேலாவும் வயலினும் அரங்கத்தை அதிரச் செய்தன. தாடி வைத்த பேராசிரியர் கௌசைத் தவிர மற்ற ஐந்து பேரும் இளைஞர்கள். வேகமாகச் சோர்வில்லாமல் ஆடினார்கள். அவரும் வேகமாக ஆடி மற்றவர்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருந்தார். கைகள், இடுப்பு, கால்கள் அனைத்தும் நிற்காமல் வளைந்து கொண்டிருந்தன. மேடையின் பரப்பை முற்றாகப் பயன்படுத்தி ஆடினார்கள். சிரித்துக் கொண்டே ஆடினார்கள். ஆடுவதில் தங்களுக்குள்ள மகிழ்ச்சி அவர்கள் சிரிப்பில் தெரிந்தது. யாரும் யாரையும் தொட்டு ஆடவில்லை என்பது கணேசனுக்கு ஆறுதலாக இருந்தது.

 

    • கணேசனின் கண்கள் அகிலாவின் மீதே இருந்தன. அவளை அத்தனை நேரம் உற்றுப் பார்க்க அவனுக்கு இதற்கு முன் வாய்ப்புக் கிடைத்ததில்லை. சாதாரண சமூக வாழ்வில் ஒரு பெண்ணை ஒரு ஆண் இப்படி உற்றுப் பார்க்க முடியாது. பேசும் போதும் முகத்தையும் கண்ணையும் தவிர வேறு அங்கங்களைப் பார்க்க முடியாது. அப்படிப் பார்த்தால் காமுகன் என்பார்கள்.

 

    • ஆனால் இது பொது அரங்கம். இங்கே மேடை போட்டு விளக்குகள் அமைத்து “எங்களைப் பாருங்கள்” என்று அழைப்பும் கொடுக்கப் பட்டிருக்கிறது. ஆகவே அவனால் கண்ணிமைக்காமல் பார்க்க முடிந்தது.

 

    • இவளை ஏன் தன் மனம் இப்படிச் சுற்றிச் சுற்றி வருகிறது என அவனுக்கு அப்போதுதான் புரிந்தது. அவள் அசைவில் ஒரு நளினம் இருக்கிறது. முகத்தில் தமிழ்ப் பெண்களுக்கே உரிய நாணம் கலந்த மலர்ச்சி இருக்கிறது. வாய் திறக்காத ஆனால் உதடுகள் மட்டுமே இலேசாக விரிந்த அந்தப் புன்னகையில் ஆண்களை மயக்கும் வசியம் இருக்கிறது. அந்த அகன்ற கண்களில் ஆடும் கருவிழிகளில் ரகசியம் இருக்கிறது. அதை அருகில் போய்த் தேடிப் பார்த்துத் தெரிந்து கொள்வதற்குத்தான் இந்த மனம் இப்படிப் பாடுபடுகிறது. அவன் பெரு மூச்சு விட்டான்.

 

    • நடனம் முடிந்தும் நீண்ட நேரம் அகிலா கணேசனின் மனதுக்குள் ஆடிக் கொண்டிருந்தாள்.

 

    • *** *** ****

 

    • விருந்து முடிந்து பெரும்பாலான விருந்தினர்கள் வெளியாகிவிட்ட பொழுது உதவியாளர்கள் கேன்டீனில் போய்ச் சாப்பிடலாம் என்று சொன்னார்கள். கணேசன் தன் நண்பன் ஒருவனுடன் கேன்டீனின் வாசலுக்குள் நுழைந்த போது ஏற்கனவே பலர் அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். உணவு மேசைக்கு முன் நீண்ட கியூ நின்றது. கியூவில் சேர்ந்து கொள்ள அவன் அடியெடுத்து வைத்த போது “கணேஷ்” என்ற அழைப்புக் கேட்டது. திரும்பிப் பார்த்தான். அகிலா! அகிலாவா? அகிலாதானா?

 

    • பெரிய சிரிப்புடன் “அகிலா” என்றான். ஒப்பனை பாதி கலைந்த நிலையில் இருந்தாள். அரிதாரத்தின் எச்சங்கள் இருந்தன. கன்னத்தில் இன்னும் ரூஜ் ஒட்டிக் கொண்டிருந்தது. கீழே டிரேக் சூட் அணிந்து மேலே டீ ஷர்ட் போட்டிருந்தாள். தலை அலங்காரத்தைக் கலைத்து உதறிவிட்டு பின்னால் குதிரை வாலாய்க் கட்டியிருந்தாள். கட்டுப் படாத சில மயிரிழைகள் கன்னத்தின் ஓரங்களில் தொங்கிக் கொண்டிருந்தன. நெற்றியில் இப்போது கருப்பு ஸ்டிக்கர் பொட்டு ஒட்டித் தமிழ்ப் பெண்ணாக இருந்தாள்.

 

    • “உங்கள அப்போது கூட்டத்தில பார்த்தேன். நீங்க இன்னைக்கு வரப் போறது எனக்குத் தெரியாது!” என்றாள். தன்னைப் பார்த்தாளா? ஆயிரம் பேர் இருக்கின்ற அரங்கில் கதவின் ஓரம் மறைந்து நின்ற என்னை, பரபரப்பான நடனத்தை ஆடிக் கொண்டே எப்படிப் பார்த்தாள்?

 

    • “உங்க ஜோகெட் ரொம்ப நல்லா இருந்திச்சி அகிலா!”

 

    • “நன்றி! சாப்பிடப் போறிங்களா?” என்று கேட்டாள்.

 

    • “ஆமாம். நீங்க?”

 

    • “சாப்பிடத்தான் வந்தேன். ஆனா இங்குள்ள சாப்பாடு ஒண்ணும் பிடிக்கில!”

 

    • “அப்புறம்?”

 

    • “நீங்க மோட்டார் சைக்கிள்ளதான வந்திங்க? என்னை எங்காவது வேற இடத்துக்குச் சாப்பிட அழைச்சிட்டுப் போங்களேன்!” என்றாள்.

 

    • அவன் இறக்கைகள் விரித்துப் பறக்க ஆரம்பித்தான்.

 

    ***

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 28ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 28

28  அம்மாவின் முகத்தில் ஏன் இத்தனை கனல் இருக்கிறதென்று அகிலாவுக்குப் புரியவில்லை. தீபாவளியன்று மாலை வரை விருந்தினர் வருகின்ற நேரமெல்லாம் அவர்களோடு புன்னகைத்து உரையாடி உபசரித்துக் கொண்டுதான் இருந்தாள். எல்லாரும் போய் வீடு ஓய்ந்த பிறகு பாத்திரங்களைக் கழுவ ஆரம்பிக்கும் போது

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 22ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 22

22  “சாப்பிடு கணேசு! பாரு எப்படி எளச்சிப் போய் கெடக்க! உங்க யுனிவர்சிட்டியில என்னதான் சாப்பாடு போட்றாங்களோ தெரியில! இப்படி எலும்புந் தோலுமா வந்து நிக்கிற” என்று அத்தை சத்தமாக உபசரித்தாள்.   யுனிவர்சிட்டியில் யாரும் சாப்பாடு போடுவதில்லை; வேண்டுவதைத் தானாகத்தான்

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 24ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 24

24  “காதல் என்பது இத்தனை சிக்கலானதாக இருக்கும் என நான் நினைக்கவே இல்லை” என்றான் கணேசன். ஜெசிக்கா வாய்விட்டு சிரித்தாள். அவள் வாயில் பாதி கடியுண்ட மெக்டோனால்ட்ஸ் ஹேம்பர்கரிலிருந்து தக்காளிச் சட்டினி சிதறித் தட்டில் விழுந்தது.   “காதல் என்பது மிகவும்