Tamil Madhura காதலினால் அல்ல! ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 5

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 5

5
 

    • “பஹாசா மலேசியாவும் குடிமக்கள் கடப்பாடுகளும்” என்ற பாடம் எல்லா பல்கலைக் கழக மாணவர்களுக்கும் கட்டாயப் பாடமாக ஆக்கப் பட்டிருந்தது. அதில் தேர்வடையாவிட்டால் பட்டம் கிடைக்காது என்பதால் எல்லா மாணவர்களும் அதில் மிகவும் தீவிரமாக இருப்பார்கள். “பூசாட் பஹாசா” என்னும் மொழிகள் மையம் அந்தப் பாடத்தை நடத்தியது.

 

    • முதல் வாரத்தில் முதலாண்டு மாணவர்களுக்கான அந்தப் பாடத்தின் டுயுடோரியல் வகுப்புக்களுக்கான நாள் நேரப் பட்டியல் வெளியிடப்பட்டு மாணவர்கள் தங்களுக்கு வசதியான நாள் நேரத்தை அதில் குறிக்கும்படிக் கேட்டுக் கொள்ளப் பட்டிருந்தார்கள். ஒரு டியூட்டோரியல் வகுப்பில் பதினைந்து பேர்தான் பெயர் எழுத முடியும். எல்லா நல்ல வசதியான நேரங்களிலும் பெயர்கள் நிறைந்து கொண்டே வந்தன.

 

    • சில பட்டியல்கள் முழுமை ஆகிவிட்டன.

 

    • பெயர் குறிக்கும் அறிக்கைப் பலகைக்கு முன் மாணவர்கள் கூட்டமாக நின்றிருந்தார்கள். அகிலாவால் பலகைக்கு முன் செல்லத் தள்ளி முன்னேற முடியவில்லை. மாணவர் முதுகுக்குப் பின் நின்று எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

    • கொஞ்ச நேரத்துக்கு முன் இந்தக் கூட்டத்தில் அவள் பரசுராமனைப் பார்த்தாள். அவளைப் போலவே பட்டியலில் பெயர் எழுத அவனும் முயன்று கொண்டிருந்தான். அவளைப் பார்த்ததும் ஒரு கோமாளித் தனமாகச் சிரித்தான். அகிலா சட்டென்று முகம் திருப்பிக் கொண்டாள். நேற்று அவன் முகம் ஒரு விஷக்காற்று போல தன் கன்னத்தைத் தீண்ட வந்த அவமானமான நினைவு இன்னும் அவளுக்கு அகலவில்லை.

 

    • முதுகை யாரோ தட்டினார்கள். திரும்பிப் பார்த்த போது அறைத் தோழி ஜெசிக்கா நின்றிருந்தாள். “என்ன ஜெசிக்கா?” என்று கேட்டாள் அகிலா.

 

    • “உன்னுடன் பேச வேண்டும். முக்கியம், அவசரம்!” என்றாள் ஜெசிக்கா.

 

    • அகிலா திரும்பி கூட்டத்தைப் பார்த்தாள். அப்புறம் ஜெசிக்காவைப் பார்த்தாள். “டியுட்டோரியலுக்கு இப்போது பெயர் குறிக்காவிட்டால் எனக்கு வேண்டிய நேரம் கிடைக்காதே!” என்றாள் இரக்கமாக.

 

    • ஜெசிக்கா அறிக்கைப் பலகையையும் கூடியிருந்த கூட்டத்தையும் கொஞ்சம் கண்ணோட்டம் விட்டாள். “உனக்கு எந்த நாள், நேரம் வேண்டும்?” என்று கேட்டாள் ஜெசிக்கா.

 

    • “புதன்கிழமை காலையில் எந்த நேரமும். வெள்ளிக்கிழமை பிற்பகல். இதுதான் எனக்கு ஓய்வாக உள்ள நேரங்கள் மற்ற நாட்களிலும் நேரங்களிலும் விரிவுரைகள் வேறு டியூட்டோரியல்கள் இருக்கின்றன!”

 

    • “என்னுடன் வா!” என்று அவள் கையைப் பிடித்துக் கொண்டு கூட்டத்திற்குள் நுழைந்தாள் ஜெசிக்கா. “எக்ஸ்யூஸ் மீ, எக்ஸ்யூஸ் மீ!” என்று அவள் போட்ட அதிகாரமான சத்தத்தில் யாரோ விரிவுரையாளர் வந்திருக்கிறார் போலும் என்று சில மாணவர்கள் வழி விட்டார்கள்.

 

    • பலகை அருகில் சென்றதும் புதன்கிழமை பட்டியலைக் கண்டுபிடித்து காலை 9 – 10 மணிப் பட்டியலில் அகிலாவின் பெயரை எழுதினாள். வெள்ளிக்கிழமை பிற்பகல் பட்டியல் எல்லாம் நிறைந்திருந்தன. 3 – 4 மணிப்பட்டியலில் 15 பேர்கள் நிறைந்திருக்க 16வது பெயராக அகிலாவின் பெயரை எழுதினாள். அப்புறம் இருவரும் வெளிவந்தார்கள்.

 

    • ஜெசிக்காவின் செயல் அவளுக்குக் கொஞ்சம் வெட்கமாக இருந்து. துணிச்சலான பெண். அவள் துணிச்சல் எனக்கு வராமல் போவது ஏன்? ஆனால் ஜெசிக்கா செய்ததை நினைத்துக் கொஞ்சம் பயமாகவும் இருந்தது.

 

    • “அதெப்படி ஜெசிக்கா! ஒரு டுயூட்டோரியலுக்கு 15 பேர்தானே இருக்க முடியும். 16வதாத என் பெயரை எழுதியிருக்கிறாயே!” என்று பயத்துடன் கேட்டாள் அகிலா.

 

    • “அதெல்லாம் விரிவுரையாளரிடம் பின்னால் கெஞ்சிக் கூத்தாடி மன்னிப்புக் கேட்டுக் கொள்ளலாம். மன்னித்து சேர்த்துக் கொள்வார்கள். அல்லது இந்தப் பட்டியலிலிருந்து ஒன்றிரண்டு பேர் மாறி வேறு நேரத்துக்குப் போகக் கூடும். அப்போதும் இடம் காலியாகும். பிரச்சினை இருக்காது!” என்றாள் ஜெசிக்கா.

 

    • “இதையெல்லாம் விரிவுரையாளர்கள் சொல்லவில்லையே!” என்றாள் அகிலா.

 

    • “இதையெல்லாம் சொல்ல மாட்டார்கள். அனுபவத்தில்தான் தெரிந்து கொள்ள வேண்டும்! காரியத்தை சாதித்துக் கொள்ள கொஞ்சம் குறுக்கு வழிகளை நாடுவதில் தப்பில்லை”

 

    • பூசாட் பஹாசா கட்டடத்திற்கு வெளியில் வந்தார்கள்.

 

    • “எதற்கு என்னை அவசரமாகப் பார்க்க வந்தாய் ஜெசிக்கா?” என்று கேட்டாள் அகிலா.

 

    • “உன்னை ரேகிங்கிற்கு ஆளாக்கியவர்கள் பற்றி உடனே போய் முறையீடு செய் என்று நேற்றே உனக்குச் சொன்னேன். நீ மறுத்துவிட்டாய். இன்றைக்கு அது கொஞ்சம் விபரீதமாகப் போய்விட்டது”

 

    • ஜெசிக்கா வலியுறுத்தியும் அகிலா முறையீடு செய்யாமல் விட்டது உண்மைதான். அன்று பிற்பகல் முழுதும் அழுதும் ஆத்திரமடைந்தும் இருந்து, இந்த காராட் கேங்கை கத்தியெடுத்துக் குத்திக் கிழிக்க வேண்டுமென நினைத்து மாலையில் கொஞ்சம் ஆறுதல் வந்தவுடன் இதைப் பெரிது படுத்தாமல் விட்டு விடுவதுதான் நல்லது என அவளுக்குத் தோன்றியது.

 

    • முதலில் இந்த விவகாரம் பெரிதாகி துணை வேந்தர் அலுவலகத்தில் வழக்காகி பல்கலைக் கழக வளாகத்தில் தான் விளம்பரமாகிப் போவதில் அவளுக்கு ஆசையில்லை. இரண்டாவதாக இதில் சம்பந்தப் பட்ட மாணவர்கள் இந்தியர்களாக இருப்பதால் அவர்கள் பெயரைக் கெடுக்கவும் விரும்பவில்லை.

 

    • அன்று இரவு வீட்டுக்குப் போன் செய்து அப்பாவுடன் பேசிய போது தான் ரேகிங் செய்யப்பட்ட விஷயத்தை அதன் கடுமையைக் கொஞ்சம் குறைத்துத்தான் சொன்னாள். கேலி செய்யப்பட்டதாகச் சொன்னாள். அந்த முத்த விவகாரம் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. அப்படியிருந்தும் அப்பா படபடத்தார். “பத்திரமா பாத்துக்கம்மா! நான் வேணுமானா பேராசிரியர் முருகேசுகிட்ட பேசட்டா? எனக்குத் தெரிஞ்சவர்தான்!” என்றார். அகிலா மறுத்துவிட்டாள். சமாளித்துக் கொள்ளுகிறேன் என்று தள்ளிவிட்டாள்.

 

    • இது எப்படி இப்போது விபரீதமாகப் போனது?

 

    • “என்ன சொல்கிறாய் ஜெசிக்கா?”

 

    • “நீ ரிப்போர்ட் செய்யவில்லை. ஆனால் அந்த ரௌடிக் கும்பல் அந்த பரசுராமனை வற்புறுத்தி கணேசன் மேல் ரிப்போர்ட் கொடுக்க வைத்துவிட்டது!”

 

    • பரசுராமனை அந்தக் கூட்டத்தில் பார்த்த நினைவு வந்தது. ஒரு கோமாளியைப் போல எப்போதும் இளித்த வாயுடன் இருக்கும் அவனா போய் முறையீடு செய்தான்? ஆனால் யார் இந்த கணேசன்?

 

    • “கணேசன் என்பது யார்?” என்று கேட்டாள்.

 

    • “உன்னைக் காப்பாற்றினான் என்று சொன்னாயே, அவர்தான். அந்த சீனியர் மாணவன். மேனேஜ்மென்ட் மேஜர். என்னுடைய நண்பன்!” என்றாள்.

 

    • அந்த ஆணழகன் ஒரு அழகான ராஜகுமாரன் போல அகிலாவின் நினைவுக்கு வந்தான். ஆம்! அன்று வெள்ளைக் குதிரையில் ஏறி வந்து இந்த வில்லன்களிடமிருந்து தன்னைக் கவர்ந்து சென்றிராவிட்டில் தான் இன்னும் என்ன துன்பமெல்லாம் பட்டு அவமானப்பட்டுப் போயிருப்பேனென்று சொல்ல முடியாது.

 

    • “அவர் மேல் எப்படி ரிப்போர்ட் கொடுக்க முடியும்? அவர் ஒன்றும் செய்யவில்லையே!”

 

    • “அந்தப் பரசுராமன் என்ற பையனை கணேசன் ரேகிங் பண்ண முயன்றதாகவும் அவனை அடித்துத் துன்புறுத்தியதாகவும் பொய்யாக ரிப்போர்ட் செய்து விட்டார்கள்!”

 

    • “ஐயோ! அப்புறம்?”

 

    • “கணேசன் பாதுகாப்புத் துறையில் விளக்கிச் சொல்ல முயன்றும் விளக்கம் எடுபடவில்லையாம். உன்னைக் காப்பாற்றத்தான் அந்த மாணவனை அடிக்க வேண்டியதாயிற்று என்று சொன்ன போது, எந்தப் பெண்ணும் ரேகிங் செய்யப்பட்டதாக ரிப்போர்ட் இல்லையாதலால் அதை நம்பத் தயங்குகிறார்களாம்!”

 

    • “உனக்கு இதெல்லாம் எப்படித் தெரியும் ஜெசிக்கா?”

 

    • “கணேசன் உன்னைத் தேடி தேசா கெமிலாங்கிற்கு வந்திருந்தார். உன் பெயரும் தெரியாமல் விவரம் தெரியாமல் சோர்ந்து வெளியே உட்கார்ந்திருந்தார். நான் தற்செயலாகப் பார்த்தேன். நண்பன் என்பதால் விசாரித்தேன். விவரம் வெளிவந்தது.”

 

    • “ஆகவே…?”

 

    • “இப்போது நீ சென்று ரிப்போர்ட் செய்து விஷயத்தை விளக்கப் படுத்தினால்தான் கணேசனின் பெயர் தெளிவாகும். இல்லையானால் அவர் மேல் நடவடிக்கை எடுத்தாலும் எடுப்பார்கள்!”

 

    • அகிலாவுக்கு இதயத்தில் திகில் பிடித்தது. கணேசனைக் காப்பாற்றத்தான் வேண்டும். மனசுக்குள் நிறைய நன்றி உணர்ச்சி இருந்தது. ஆனால் இதற்கு விசாரணையென்றும் வழக்கென்றும் அலைய வேண்டும். தான் தவிர்க்க நினைத்த விளம்பரம் இன்னும் இரு மடங்காகிவிடும். தயங்கினாள்.

 

    • “என்ன யோசிக்கிறாய்?”

 

    • “இல்லை ஜெசிக்கா. இந்த விஷயம் பெரிதாகி கேம்பஸ் முழுக்கவும் பேசத் தொடங்கிவிடும். அவமானமாகிவிடும்!”

 

    • “அகிலா! நீ ஒரு கோழை மட்டுமல்ல. நன்றியில்லாதவள். உனக்கு நன்மை செய்ய வந்து கணேசன் இப்படி மாட்டிக் கொள்ளுவதா? கணேசன் என் நண்பன். ஐசெக் சங்கத்தில் நானும் அவரும் ஒன்றாகப் பல மாணவர் செயல் திட்டங்களில் உழைத்திருக்கிறோம். அருமையான குணமுள்ளவர். நீ அவருக்கு உதவ முன் வராவிடில் நானே போய் பாதுகாப்புத் துறையில் உண்மையைச் சொல்லிவிடுவேன். நேற்று அறைக்கு வந்த நீ அழுது என்னிடம் சொன்னதைச் சொல்லி விடுவேன். நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உன் பெயர் இழு படும். என்ன சொல்கிறாய்?”

 

    • ஜெசிக்காவின் துணிச்சலும் கோபமும் அகிலா தன்னையே எண்ணி வெட்க வைத்தன. ஒரு சீனப் பெண்ணுக்கு அவளுடைய இந்திய நண்பன் மேல் உள்ள அன்பும் அக்கறையும் தனக்கு இல்லாமல் போனதே!

 

    • சட்டென்று ஜெசிக்காவின் கையைப் பிடித்துக் கொண்டாள். “மன்னித்துவிடு ஜெசிக்கா! நீ சொல்வது சரி! நீயும் வா, போய் முறையீடு செய்து விடுவோம்!” என்றாள்.

 

    • ஜெசிக்கா மகிழ்ச்சியுடன் புன்னகைத்தாள். “சரி. ஆனால் கணேசன் விரிவுரைக்குப் போயிருக்கிறார். நாம் தேசாவுக்குப் போய் அவருக்காகக் காத்திருப்போம். 12 மணிக்கு வருவார். மூவருமாகச் சேர்ந்து போய் முறையீடு கொடுத்து வருவோம்!” என்றாள்.

 

    • ஜெசிக்கா தன் மோட்டார் பைக்கிலேயே அகிலாவைப் பின்னால் ஏற்றிக் கொண்டாள். விடுதிக்குத் திரும்பி கணேசனுக்குக் காத்திருந்தார்கள்.

 

    • *** *** ***

 

    • கணக்கியல் பாடத்தின் முதல் விரிவுரை விரிவுரை மண்டபம் க்யூ(Q)வில் நடந்தது. மாணவர்கள் கூட்டமாக இருந்தார்கள். உட்காரப் போதிய இடம் இல்லை. தாமதமாக வந்ததால் கணேசனுக்கு இருக்கை கிடைக்காமல் படியில் உட்கார வேண்டியதாயிற்று.

 

    • விரிவுரையாளர் பாடத் திட்டத்தை விநியோகம் செய்து இந்தப் பருவத்தில் அவர்களுக்குக் காத்திருக்கும் வேலைகள் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார். ஆனால் விரிவுரையில் கணேசனுக்குக் கவனம் செல்லவில்லை. ஜெசிக்கா அந்தப் பெண்ணைப் பார்த்திருப்பாளா பேசியிருப்பாளா, அந்தப் பெண் முறையாக முறையீடு எழுதிக் கொடுக்க ஒப்புக் கொண்டிருப்பாளா என்ற கேள்விகளே சுழன்று சுழன்று வந்து கொண்டிருந்தன.

 

    • ஜெசிக்காவை இரண்டாம் ஆண்டிலிருந்தே அவனுக்குப் பழக்கம். தொடர்புத் துறையில் ஒலிபரப்புத் துறையை மேஜராக எடுத்துக் கொண்ட மாணவி. நிர்வாகத் துறையைத் துணைப் பாடமாக எடுத்துக் கொண்டிருந்தாள். இரண்டு நிர்வாகத் துறைப் பாடங்களில் கணேசன் – ஜெசிக்கா இருவரும் இருந்தார்கள். ஐசெக் சங்கத்தில் செயலவையில் அவள் இடம் பெற்றிருந்தாள். அடிக்கடி சந்தித்ததன் மூலம் அவர்கள் நெருக்கமாக இருந்தார்கள். ஜெசிக்கா அவனுடன் பாசமாகப் பழகுவாள். “கணேசான், கணேசான்” என கொஞ்சம் நீட்டி வாய் நிறையக் கூப்பிடுவாள்.

 

    • சீனப் பெண்களுக்கே உரித்தான சுறுசுறுப்பு, துணிச்சல், கடுமையான உழைப்பு அனைத்தையும் கொண்டவள். பாடங்களிலும் புறப்பாடங்களிலும் ரொம்பவும் கவனமாக இருப்பாள். கடும் உழைப்பாளி. வகுப்பில் விரிவுரையாளர்களைத் துருவித் துருவி கேள்வி கேட்டு விளக்கம் பெறுவாள். அவளால் மற்றவர்களும் பலன் பெறுவார்கள்.

 

    • இது சீன மாணவர்களுக்கே உரித்தான குணம் என்பதை கணேசன் கவனித்திருக்கிறான். அறிவை ஒரு மூர்க்கத்தனமான வேகத்தோடு சென்று அடைவது அவர்களுக்கே கை வந்த கலையாக இருக்கிறது. மார்க் வாங்குவதில் குறியாக இருப்பார்கள். கொடுத்த வேலையை விரிவுரையாளர்கள் எதிர்பார்த்ததற்கு மேலேயே செய்வார்கள். ஒவ்வொருவரும் ஒரு கம்ப்யூட்டர் வாங்கி வைத்துக் கொண்டு கட்டுரைகளைக் கம்ப்யூட்டரில் அழகிய எழுத்துக்களில் அமைத்து, கட்டங்கள் போட்டு, வரைபடங்களும் கிரா•ப்களும் போட்டு பணம் செலவு செய்து கச்சிதமாக பைன்டு பண்ணி ஒப்படைப்பார்கள்.

 

    • அவர்கள் எதிர்பார்த்த மார்க் கிடைக்கவில்லையானால் விரிவுரையாளர்களிடம் தைரியமாகக் காரணம் கேட்பார்கள். அவர்கள் தவறாக இருந்தால் ஏற்று மறுமுறை கட்டுரை எழுதும்போது அந்தத் தவறுகளைக் களைந்து கொடுப்பார்கள். குழுவாக இருந்து விவாதித்துப் பாடங்களைப் படிப்பார்கள்.

 

    • சீன மாணவர்களிடமிருந்து மலாய்க்கார இந்திய மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது என்பதை கணேசன் அறிந்திருந்தான். குறிப்பாக சீன மாணவர்கள் எதிலும் ஒற்றுமையாக இருந்து முன்னேற்றத்துக்கு உழைப்பதை இந்திய மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இந்திய மாணவர்களிடையே பிளவுகள் பல இருந்தன. ஒற்றுமையாக அவர்கள் செயல்படுவது இந்த காராட் கேங் போன்ற குண்டல் கும்பல் ஒன்றில்தான்.

 

    • இந்த காராட் கேங் இந்த முறை தன்னைத் தண்டிப்பதில் வெற்றி பெற விட்டால் அவர்கள் அட்டகாசம் இன்னும் ஓங்கிவிடும். அவர்களின் இந்தப் பொய் வெற்றி பெற பல்கலைக் கழகம் அனுமதிக்காது என அவன் உள் உணர்வு சொல்லியது. ஆனால் பல்கலைக் கழகம் கண்மூடித் தனமாக விதிகளை வலியுறுத்துவதன் மூலமும் நல்ல இந்திய மாணவர்களின் அலட்சியப் போக்கு காரணமாகவும் அந்தப் பொய்யும் வெற்றி பெற முடியும் என நினைத்தான். உள்ளத்துக்குள் அவனுக்குக் கொஞ்சம் நடுக்கம் வந்தது.

 

    • ஜெசிக்காவைத் தற்செயலாக தேசா கெமிலாங்கில் சந்தித்தது நல்லதாகப் போயிற்று. அவளிடம் தன் நிலைமையைச் சொன்ன போது, “ஓ! அந்த அகிலா என்ற இந்தியப் பெண் என் அறைத் தோழிதான்” என அவள் கூறியது இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அந்தப் பெண் முறையீடு செய்ய மறுத்துவிட்டாள் என்று தெரிந்த போது மனம் இன்னும் கலவரம் அடைந்தது. ஆனால் ஜெசிக்கா அவனுக்கு உறுதி கூறி அனுப்பி வைத்தாள்.

 

    • “கவலைப் படாதே கணேசன். அவள் இன்று காலை பஹாசா மலேசியா வகுப்பில் டுயுடோரியலுக்குப் பெயர் பதியப் போயிருக்கிறாள். தேடிப் பிடித்து அவளை முறையீடு செய்ய சம்மதிக்க வைக்கிறேன். நீ வகுப்புக்குப் போ. வகுப்பு முடிந்து 12 மணிக்கு இங்கே வா. நானும் அகிலாவும் இங்கு உனக்காகக் காத்திருக்கிறோம்”

 

    • ஜெசிக்கா அகிலாவைத் தேடிப் பிடித்திருப்பாளா? அந்த பயந்தாங்கொளிப் பெண் முறையீடு செய்ய ஒத்துக் கொண்டிருப்பாளா? என் எதிர்காலத்தைக் காப்பாற்றுவாளா?

 

    • “சரி! உங்களுக்கு புத்தகப் பட்டியல் கொடுத்திருக்கிறேன். போய் எடுத்துப் படியுங்கள். டுயூடோரியல் அடுத்த வாரம் ஆரம்பிக்கும். சில நிறுவனங்களின் உண்மைக் கணக்குகளை எடுத்துக்காட்டாக வைத்துக் கொண்டு கணக்குத் தயாரிக்கும் சட்டங்களை ஆராயவிருக்கிறோம்!” என்று கூறி வகுப்பை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார் விரிவுரையாளர்.

 

    • வகுப்பு 11.50க்கெல்லாம் முடிந்தது. அடுத்த விரிவுரைக்காக மாணவர்கள் விரிவுரை மண்டபத்தைத் தேடி நடந்து செல்ல கால அவகாசம் அளிப்பதற்காக எல்லா விரிவுரைகளும் பத்து நிமிடம் முன்னதாக முடிவடைய வேண்டும் என்பது பல்லகலைக் கழக விதிகளில் ஒன்று. அதை விரிவுரையைளர்கள் கடைப்பிடிப்பதும் உண்டு, புறக்கணிப்பதும் உண்டு. இந்த விரிவுரையார் சரியாகக் கடைபிடித்தது நல்லதாகப் போயிற்று.

 

    • அவனுடைய மோட்டார் சைக்கிள் நூல் நிலையத்தின் பின் புறம் நிறுத்தி வைக்கப் பட்டிருந்து. நூல்நிலையத் தாழ்வாரம் வழியாகச் சென்று படிகளில் கீழே இறங்கி பேஸ்மன்ட் வழியாக வந்தால் மோட்டார் சைக்கிள் நிறுத்துமிடத்தை சீக்கிரம் அடையலாம் என்று விரைந்தான்.

 

    • நூல் நிலையத்துக்கு வெளியில் போடப்பட்ட பெஞ்சுகளில் மாணவர்கள் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்திருந்தார்கள். பருவத்தின் முதல் வாரத்தில் இப்படித்தான் மாணவர் கூட்டம் அலைமோதும். விரிவுரையாளர் புத்தகப் பட்டியலைக் கொடுத்தவுடன் புத்தகம் எடுக்க முந்திக் கொள்வார்கள். போகப் போக இந்தக் கூட்டம் குறையும்.

 

    • அந்தக் கூட்டத்தினுள் நுழைந்த போதுதான் நுழைவாயில் படியருகில் காராட் கேங் கூடியிருப்பது தெரிந்தது. ஒரு நிமிடம் நின்று திரும்பி வேறு வழியாகப் போகலாமா என நினைத்தான். ஆனால் இவர்களுக்கு ஏன் பயப்பட வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. தொடர்ந்து நடந்தான்.

 

    • ராஜன், கருணாகரன், டேவிட், தினகரன் இவர்களை அடையாளம் தெரிந்தது. ராஜன் அவனைப் பார்த்துவிட்டான்.

 

    • “டேய் ஹீரோ வர்ராரு பாத்தியா?” சத்தமாக கணேசன் காதில் விழச் சொன்னான்.

 

    • கூட்டத்தின் கவனம் கணேசன் பக்கம் திரும்பியது.

 

    • “ஹாய் ஹீரோ! உன்ன ஜீரோவாக்கப் போறோம் தெரியுமா?” இன்னொருத்தன் கத்தினான்.

 

    • அவர்களிடமிருந்து ஓட அவனுக்குப் பிடிக்கவில்லை. அவர்களை நோக்கிப் போனான். அவர்கள் எதிரில் நின்றான்.

 

    • “உனக்கு என்ன வேணும் ராஜன்?” என்று கேட்டான்.

 

    • “கணேசன்! ஒன்ன நாங்க சரியா •பிக்ஸ் பண்ணாம விடமாட்டோம். ஒண்ணு நீ நம்ப யுஎஸ்எம் உள்ளயே மாட்டிக்குவ! அப்படி இல்ல வெளியில வச்சி •பிக்ஸ் பண்ணிடுவோம். தமிளனுக்குத் தமிளன் நீ அவமானப் படுத்திட்டில்ல பாத்துக்குவோம்’லா!” என்றான் ராஜன்.

 

    • “நீ என்ன •பிக்ஸ் பண்றத பின்னால பாப்போம் ராஜன்! ஆனா தமிளனுக்குத் தமிளன்னு சொல்றவன் நம்ப பிள்ளைங்களேயே பிடிச்சி கொடுமைப் படுத்திறதுதான் பெரிய விசுவாசமா?”

 

    • “அது என்ன ஒரு சின்ன வெளையாட்டு. நீ தலையிட்டதினாலதான் அது இப்ப கேசா போச்சி!”

 

    • “ஒரு பையனப் பிடிச்சி ஒரு பெண்ண முத்தம் குடுக்க வைக்கிறதுதான் வெளையாட்டா?”

 

    • “முத்தம்தான குடுக்க வச்சோம், என்னமோ ரேப் பண்ணிட்ட மாறி கோவிச்சிக்கிறிய!”

 

    • “இந்த கேம்பசுக்கு பயந்து பயந்து வர்ர இளம் பெண்களுக்கு இப்படி வலுக்கட்டாயமா முத்தம் குடுக்க வைக்கிறது ரேப் பண்றதுக்கு சமானம்தான்”

 

    • ராஜன் முறைத்தான். “போடா ஒன்னப் பாக்க வேண்டிய எடத்தில பாத்திக்கிறோம்!” என்றான்.

 

    • கணேசன் அங்கிருந்து நடந்தான். அவர்களுக்குப் பயப்படாமல் அவர்களுக்கு முன்நின்று பதில் சொல்லியது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அவர்களின் மருட்டல் அவனுக்கு மருட்சியை அதிகப் படுத்தியது.

 

    • இவர்கள் பாதகத்திற்கு அஞ்சாதவர்கள். இவர்களை வளர விடக் கூடாது. ஆனால் இவர்களை நான் வெல்வதும் தோற்பதும் அகிலா என்ற முன்பின் தெரியாத ஒரு பெண்ணின் கையில் இப்போது இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு நடந்தான்.

 

    ***

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 8ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 8

8  அகிலாவுக்குப் பாடங்களில் மனம் ஒட்டவில்லை. விரிவுரை நடந்து கொண்டிருக்கும் போதெல்லாம் அவள் நினைவுகள் எங்கெங்கோ ஏங்கி அலைந்து கொண்டிருந்தன. கணேசனின் தொங்கிய முகம் அவள் மனதில் நிழலாடிக் கொண்டே இருந்தது. அவனுக்கு நேர்ந்துள்ள இந்த இக்கட்டுக்குத் தானே காரணம் என்ற

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 25ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 25

25  “என்ன உங்களுக்குப் பிடிச்சிருக்கா?” என்று கேட்டாள் அகிலா.   கடலை ஒட்டியிருந்த தென்னை மரங்களின் கீற்றுக்களை சிலுசிலுவென்று ஆட்டி விளையாடிக் கொண்டிருந்த முன்னிரவுக் காற்றில் புரட்டாசி மாதத்து முழு நிலவு வானத்தில் பழுத்து ‘ஆ’வென்று தொங்கிக் கிடந்தது. பினாங்கின் வட

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 29ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 29

29  அத்தையின் காரில் கிள்ளானுக்குத் திரும்பி வரும் போது கணேசன் வாய் மூடிக் கிடந்தான். காரில் மௌனம் கனத்துக் கிடந்தது. அத்தை முகத்தில் சவக்களைதான் இருந்தது. டிரைவரும் நிலைமையைப் புரிந்து கொண்டு “உம்” என்று ஓட்டி வந்தார்.   பகல் முழுவதும்