ஆர். சண்முகசுந்தரம் – ‘நாகம்மாள் – 22’

ராமாயினுடைய சகோதரன் இவர்கள் போவதற்கு முன்பே உயிர் விட்டுவிட்டான். ராமாயி விம்மினாள், விக்கினாள், முடித்தாள். ஆனால் அவன் எழுந்து வரவா போகிறான்.

     “கண்ணான என் பிறப்பைக்
          காணுவது எக்காலம்?
     பொன்னான என் பிறப்பைப்
          போய்ப் பார்ப்ப தெக்காலம்?”

     என்று பிலாக்கணம் சொல்லி அழுதாள். பயன் தான் ஒன்றும் இல்லை. அவன் நாலு பேருக்கு மேலாகத் தன் கடைசிப் பிரயாணத்தையும் முடித்து விட்டான்.

     கூட வந்திருந்த ஊர்க்காரர்கள் திரும்பலானார்கள். இரண்டொருவர் சின்னப்பனிடம், “நீ வருவதற்கு இன்னும் இரண்டொரு நாள் ஆகும் பாவம்; எங்கள மாதிரி உடனேயே வந்துவிட முடியுமா? என்னமோ சும்மா உங்க மாமியார் அழுது அரைச்சீவனாய் போறாள்” என்று கூறிச் சென்றனர்.

     தடியால் அடிபட்ட மாடு போல் சின்னப்பன் மௌனமாகவே இருந்தான். என்ன செய்வதென்று அவனுக்கு விளங்கவில்லை.

     “அதிர்ச்சியிலிருந்து இடி இடிக்கத் தலைப்படுகிறதே. குடித்தனம் ஸ்திரமாக நிற்குமா?” என்று எண்ணிக் கலங்கினான்.

     தன்னுடைய கனவுகள் இராத் தூக்கத்திலேயே மறைந்து மாயமாய் போனதால் காளியம்மாள் கலங்கினாள். என்னென்ன எண்ணியிருந்தாள். மகனுக்கு ஒத்தாசையாக மருமகனையும் தன் வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாம். அதோடு மருமகனது நிலபுலன்களை விற்ற ஆஸ்தி வேறு தன்னிடமே இருக்கும்! பார்க்கிறவர்கள் எல்லோரும் வியந்து, “ஆ, காளியம்மாளின் அதிர்ஷ்டத்தைப் பார்!” என்றல்லவா பேசிக் கொள்வார்கள். இப்படியெல்லாம் பின்னிப் பின்னித் திரித்து வைத்திருந்த அவளது சிந்தனைக் கயிறுகளில் சிக்கு விழுந்து விட்டது. இனி பிரிக்கவே முடியாதோ என்னவோ? உபயோகமற்ற ஓட்டை உடைசல் சாமான் போல், அப்பெரிய வீட்டின் ஓர் மூலையில் காளியம்மாள் விழுந்து கிடந்தாள். ‘அந்தோ’ அம்மணி உன்னுடைய துடிதுடிப்பான நடையும், பேச்சும் எங்கே? அற்புதமான கற்பனைக் கனவுகள் எங்கே? அவையெல்லாம் காளான் போல் மறைந்து விட்டனவா?” என்று கேட்கக் கூட யாருமில்லை.

     இடையிடையே ‘அப்போது’ வராதவர்கள், துக்கம் விசாரிக்க வந்து போவார்கள். கொஞ்ச நஞ்சம் பூத்துப் போயிருக்கும் கனலை விசிறி விடுவார்கள். ஆனால் எத்தனை நாளைக்குத்தான் ஸ்வரம் குறையாது அழுவது. அழுது அழுதுதான் அரை சீவனாய் விட்டாளே!

     ஆச்சு, ஒரு வாரமாயிற்று. காளியம்மாளின் இதய வேதனையும் சற்று மட்டுப்பட்டது. புத்திர வாஞ்சையில் விழுந்து கிடந்த உள்ளம், மகள், மருமகன், பாசத்தால் தலையெடுத்தது.

     சின்னப்பனுக்கு சீக்கிரமாக ஊர் போக வேண்டுமென்று. ஆனால் எப்படிச் சொல்வது? அங்கே கணக்கற்ற வேலைகளைப் போட்டுவிட்டு இங்கேயே இப்படிச் சும்மா உட்கார்ந்து கொண்டிருப்பதா? என்று சிந்தித்தான்.

     ஆளுக்கொரு மூலையில் சோர்ந்து கிடக்கும் பெண்களைப் பார்க்க அவனுக்குப் பரிதாபமாயிருந்தது. கடைசியாக இப்படியிருந்தும் தான் என்ன என யோசித்துத் தன் மனைவியிடம், “நாம் போகாது போனால் அங்கே என்ன நடக்கப் போகிறது. நாகம்மாள் சங்கதி உனக்குத் தெரியாதா? உன் அம்மாவிடம் சொல்வதுதானே?” என்றான்.

     ராமாயி, “நான் அம்மாவிடம் சொல்வதென்ன? நீங்களே சொல்லுங்களேன்” என்றாள்.

     சின்னப்பனும் அரை மனதாகக் காளியம்மாளிடம் தெரிவித்தான். அவளிடமிருந்து மங்கலான கம்மிய குரலில், “இன்னும் இரண்டொரு நாள் பொறுத்துப் போகப்படாதா” என்று பதில் வருமென எண்ணியிருந்த சின்னப்பன் ஏமாந்து போனான். ஏன்? காளியம்மாள் ‘கல கல’வென பேசலானாள்.

     “சாமி, இனி நீதான் எனக்கு மவனுக்குப் பதில் மவன். எப்போதும் என் மவன் தானப்பா நீ. என்னவோ கடவுள் செயல். இனி அரைக்கணம் உங்களிருவரையும் விட்டு இருக்க மாட்டேன். எனக்கு இனி உயிரோடு இருக்கலாமென ஆசையில்லை. என்னவோ உங்களிருவருக்காகத்தான் நான் இருக்கிறேன் – இனி யோசித்துப் பிரயோசனமில்லை. அவளை என்ன செய்கிறதென்பதுதான் பேச்சு. உன் மனதுக்குப் பிரியமானதைச் சொல்லுப்பா. அப்படியே செய்யலாம்.”

     சின்னப்பன் மெதுவாகத் தலையைச் சொரிந்து கொண்டே “என்ன?” என்றான்.

     காளியம்மாள் அதே குரலில், “நீயே சொல்லுப்பா?” என்றாள். கேள்வி அர்த்தமானால் தானே பதில் சொல்லலாம். நோயைத் தெரிந்து கொள்ளாமலேயே மருந்து கொடுப்பார்களா என்ன?

     “நீங்க சொன்னா, சரி. நான் அப்படியில்லெ என்று தாட்டியா விடுவேன்” என்று ரொம்பத் தெரிந்த பாவனையில் கூறினான்.

     காளியம்மாளுக்கு பாலாபிஷேகம் செய்த மாதிரி ஆனந்தம் பொங்கியது. “நான், இந்த உறுதியில் தானே மவன் போனதையும் மறந்திருந்தேன். என் அப்பன் பேச்சுக்கு அட்டி சொல்லவா போறான்; சரி, நாகம்மா விசயம் பைசல் ஆச்சா” என்றாள். அப்போது தான் சின்னப்பனுக்கு எந்த விஷயத்தைக் குறித்து காளியம்மாள் பேசுகிறாள் என்பது தெரிந்தது.

     “உங்களுக்கு அவள் கேட்டது ஒன்றும் தெரியாதே! பங்கு வேண்டுமென்று ரகளை எழுப்பி விட்டாளே!” என்றான் சற்று எரிச்சலாக.

     “ஓகோ, அவளே தொடங்கிவிட்டாளா? எனக்குத் தெரியாதே. இருக்கட்டும், நாச்சியப்பன் அண்ணன் இங்கு வந்திருக்கிறான். அவனைக் கண்டு பேசினாலே தம்பியிடம் பேசினது போலத்தான். செரி அடுத்த வாரமே கிரயத்தை முடித்துக் கொள்ளலாம். பணம் எட்டு நாளைக்கு முன் இப்போதே வேண்டுமென்றாலும் நோட்டு, நோட்டா எண்ணி வைக்கத் தயங்க மாட்டான்” என்று காளியம்மாள் சரமாரியாக அடுக்கினாள்.

     “அப்படியே முடித்து விடுவோம்” என்று சின்னப்பனும் உறுதி தந்தான். அடுத்த கணமே அவன் மனதில் ஓர் நினைவு பிறந்தது. சொந்த ஊர்ப் பாசம் குப்பென்று அவன் உள்ளத்தைக் கவ்வியது. ‘பரம்பரையாக வாழ்ந்த இடத்தை விட்டு வருவதா? அதுவும் அடியோடு சொத்து முழுவதும் விற்றுவிட்டா? பிறர் பார்த்து என்ன கேலி பேசுவார்கள்? ஆனால், அவர்களுக்காக என் சௌக்கியத்தைக் குறைத்துக் கொள்வதா? யார், என்ன பேசினால் எனக்கென்ன? வம்பர்கள் வீண் கதை கதைக்கத்தான் செய்வார்கள். நான் என் இஷ்டப்படியே நடப்பேன். ஆனால் நாகம்மாள்? அவளை எங்கே விடுவது. விடுவதென்ன? ஊரிலே வீட்டைக் காத்துக் கொண்டு கிடக்கிறாள். அவளுக்கு அநேகம் நேசர்கள் இருக்கிறார்கள். அவள் பக்கம் தானே மணியக்காரர் முதற்கொண்டு. எனக்குத்தான் அவர்கள் விரோதிகள். நான் தான் பயந்து கொண்டு ஓடி வருகிறேன். ச்சை, பயமா? இல்லை, நியாயமாக விலகிக் கொள்கிறேன். அந்த முட்டாள்களிடமிருந்து. ஆனால் உலகம்? உம், தலை கால் தெரியாத உலகம் – என்ன பிதற்றினால் எனக்கென்ன?’

     “யோசனை என்னப்பா? அடுத்த வாரமே நானும் வாரேன். போவோமே” என்றாள். சின்னப்பனும் வேறு ஒன்றும் கேட்காது, “உம்” என்றான்.

     இங்கே இப்படித் திட்டம் உருவாகிக் கொண்டிருக்கையில், அங்கே தனித்திருக்கும் நாகம்மாள் என்ன செய்கிறாள் என்பதைக் கவனிப்போம்.

ஆர். சண்முகசுந்தரம் 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் பார்த்திபன் கனவு – 20கல்கியின் பார்த்திபன் கனவு – 20

அத்தியாயம் 20 துறைமுகத்தில் அன்றிரவு குந்தவி சரியாகத் தூங்கவில்லை. சோழ ராஜகுமாரனுடைய சோகமும் கம்பீரமும் பொருந்திய முகம் அவள் மனக்கண்ணின் முன்னால் இடைவிடாமல் தோன்றி அவளுக்குத் தூக்கம் வராமல் செய்தது. நள்ளிரவுக்குப் பிறகு சற்றுக் கண்ணயர்ந்த போது, என்னவெல்லாமோ பயங்கரமான கனவுகள்

அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 05அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 05

திகிலோடு கலந்த காதல் என்னை மேலும் அதிகமாக வதைக்கத் தொடங்கிற்று. எங்கள் குடும்பக் கஷ்டமோ அதிகரித்துக் கொண்டே வந்தது. வீட்டின் மேல் வாங்கியிருந்த கடனுக்கு வட்டி கட்டத் தவறி விட்டார் அப்பா. அவர் என்ன செய்வார்? இல்லாத குறைதான். வட்டியைச் செலுத்தும்படி