பரிசிலர்க்கு எளியன்!- புறநானூற்றுச் சிறுகதை

 

சிற்றரசனான பாரி வள்ளலின் பறம்பு மலையை மூவேந்தர் களும் முற்றுகையிட்டிருந்தனர். பாரியின் மேல் அவர்களுக்கு இருந்த பொறாமையின் அளவை அந்த முற்றுகையின் கடுமையே காண்பித்தது. பாரியை வெல்ல வேண்டும், அல்லது கொல்ல வேண்டும். இரண்டிலொன்று முடிந்தாலொழிய எவ்வளவு காலமானாலும் தங்கள் முற்றுகையைச் சிறிதளவும் தளர்த்தக் கூடாது என்று உறுதி செய்து கொண்டிருந்தனர் மூவேந்தர் பறம்பு மலைக்குக் கீழே சுற்றி வளைத்துக் கொண்டு முற்றுகையிட்டிருந்த அவர்கள் எப்படியும் என்றைக்காவது ஒருநாள் பாரி கீழே இறங்கி வந்து தங்களுக்குப் பணிந்துதான் ஆகவேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்தனர். பறம்பு மலையின் செங்குத்தான அரணமைப்பும் அதன் மேல் பாரியின் கோட்டையும் அவர்கள் மேலே ஏறிப்போய்ப் போர் செய்வதற்கு வசதியானதாக இல்லை. எனவேதான் மலையின் கீழ்ப் பகுதியிலேயே முற்றுகையை நீட்டித்தார்கள். 

ஆனால் பாரியோ, இவர்கள் முற்றுகையினாலோ, பயமுறுத் தலினாலோ சிறிதும் அயரவுமில்லை; அச்சமுறவுமில்லை. எப்போதும் போலப் பறம்பு மலையின் மேலே அவனும் அவனுடைய குடிமக்களும் வளமான நிலையில் மகிழ்ச்சி குன்றாமலே வாழ்ந்து வந்தார்கள். மூவேந்தரின் இலட்சியமே செய்யவில்லை . . 

கபிலர் பாரியின் உயிர் நண்பர். தமிழ்நாடு முழுவதும் நன்கு அறிந்த பெரும்புலவர். மூவேந்தர்களுக்கும் கூட அவரைப் பற்றி நன்றாகத் தெரியும். இந்த முற்றுகையின் போது அவர் பறம்பு மலையில் பாரியின் கூடவே இருந்தார். ஒரு நாள் பாரியின் சார்பாகக் கீழே முற்றுகையிட்டிருக்கும் மூவேந்தர்களைச் சந்தித் துச் செல்வதற்காகக் கபிலர் மலைமேலிருந்து கீழே இறங்கி வந்தார். 

அவர் பாரிக்கு வேண்டியவர் என்பதை எண்ணிப் பாராமுகமாக இருந்துவிடாமல் தமிழ்ப் புலவர் என்ற முறைக்கு மரியாதை கொடுத்து வரவேற்றனர் மூவரும். கபிலர் கீழே முற்றுகையிட்டிருந்த மூவேந்தர்களின் விருந்தினராக அவர் களோடு தங்கினார்

சில நாட்கள் கழிந்தபின், ஒருநாள் அவரோடு பேசிக் கொண்டிருக்கும் போதே அவர் வாயிலிருந்து பாரியின் மலை அரண்களைப் பற்றிய இரகசியமான விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள முயன்றனர் மூவேந்தர். ஆனால் கபிலர் அவர்களுக்குச் சரியானபடி அறிவுரை கூறிவிட்டார்

நாங்கள் இவ்வளவு நாட்களாக இங்கே முற்றுகை இட்டிருந்தும் உங்கள் பாரி சிறிதும் கவலையே இல்லாமல் மலைமேல் சுகமாக இருக்கிறானே? எங்கள் முற்றுகை அவனை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லையோ?” 

கபிலர் பதில் கூறாமல் மூவேந்தர்களையும் பார்த்து மெல்ல சிரித்தார். அவர் தங்களைப் பார்த்ததும் சிரித்தவிதமும் எத்தகைய அர்த்தத்துக்கு உரியன என்பதை மூவேந்தர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை

“பாரியைப் பற்றியா கேட்கிறீர்கள்? மிகவும் நல்ல கேள்விதான்! நீங்கள் இத்தனை பலமாகவும் பயங்கரமாகவும் முற்றுகையிட்டிருந்தும் கூடப் பாரி இன்னும் மலைமேல் குறைவின்றி எப்படி வாழ்கிறான்?’ என்ற விவரம் உங்களுக்கும் தெரிய வேண்டியதுதான். ஆனால்.’‘ 

“ஆனால் என்ன? சொல்லுங்களேன் புலவரே?” 

”அவற்றை எல்லாம் தெரிந்து கொள்வதனால் நீங்கள் செய்யப் போவதுதான் என்ன?” 

”அது என்ன அப்படிக் கேட்டு விட்டீர்கள் கபிலரே! நாங்கள் கையாலாகாதவர்கள் அல்லவே? காரியத்தோடுதான் இங்கே ஒன்று கூடியிருக்கின்றோம்.” 

 

”நான் உங்களைத் தாழ்த்திக் கூற வரவில்லை. பாரியைப் பொறுத்தமட்டில் உங்களால் ஏதும் செய்ய முடியாதே!’ என்றெண்ணும் போது எனக்கு உங்கள் மேல் மிக்க அனுதாபம் ஏற்படுகிறது.” 

”ஏன் முடியாது, கபிலரே? நாங்கள் மூன்று பேர். பாரி ஒரு தனியன். நாங்கள் மூவரும் பேரரசர் பெரும் படைகளோடு வந்திருக்கின்றோம். பாரி சிற்றரசன்; வெறுங் குறுநில மன்னன். அவன் படைகளின் தொகை எங்களுக்குத் தெரியும்! எங்கள் படைகளில் நூற்றில் ஒரு பங்கு கூடத் தேறாது” 

”நீங்கள் சொல்வனவெல்லாம் உண்மைதான் மூவேந் தர்களே! ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் படைகள் மட்டுமின்றி இன்னும் ஆயிரம் மடங்கு பெரும் படைகளை வேண்டுமானாலும் நீங்கள் கொண்டு வரலாம். பாரியை மாத்திரம் படை பலத்தால் அசைக்கக் கூட முடியாது உங்களால் இது நிச்சயம். மறந்து விடாதீர்கள்.” 

”அப்படியானால் பாரியிடம் படைபலத்தால் அசைக்க முடியாத அளவு அப்படி என்னதான் இருக்கிறது?” 

‘பாரியின் பறம்புமலையை எளியதாக நினைப்பதனால்தான் நீங்கள் இப்படிக் கேட்கிறீர்கள். உங்கள் மூவருடைய முற்றுகை யினாலும் பறம்பு மலை சிறிதும் பாதிக்கப்படாது. உழவர் உழாமலே இயற்கையிலேயே நான்கு உணவுப் பொருள்கள் மலை மேல் விளைகின்றன. மூங்கிலரிசி ஒன்று, பலாப்பழம் இரண்டு; வள்ளிக்கிழங்கு மூன்று, கொம்புத்தேன் நான்கு. இந்த நான்கு குறையாத உணவுப் பொருள்களோடு பளிங்கு போலத் தெளிந்த இனிய நீர்ச்சுனைகளுக்கும் பறம்பு மலையில் பஞ்சமே இல்லை. இதனால் மலைமேல் உணவுப் பஞ்சமோ, தண்ணீர்ப் பஞ்சமோ ஏற்பட்டுப் பாரி அவற்றைத் தாங்க இயலாமல் வருந்தி நடுங்கிக் கீழே ஓடி வந்து உங்கள் முற்றுகைக்கு அடிபணிவான் என்று கனவிலும் நினையாதீர்கள். யானைப் படைகளையும் தேர்ப்படைகளையும் மலைமலையாகக் குவித்தாலும் போர் 

 

முயற்சி பயன் தராது. நீங்கள் மூவர் மட்டும் மலைமேல் ஏறி அவனோடு வாட் போர் செய்யலாமென்றலோ வாட் போரில் பாரி உங்களை இலேசில் விடமாட்டான். ஆனால் நீங்கள் மூவரும் அவனை வெல்லுவதற்குரிய ஒரே ஒரு வழி எனக்குத் தெரியும். நீங்கள் தேவையென்று விரும்புவீர்களாயின் உங்களுக்கு அந்த வழியைக் கூறுவேன்!‘ கபிலர் குறுநகை புரிந்தார். 

“சொல்லுங்கள் – கபிலரே! நீங்கள் கூறும் அருமையான யோசனையைத் தேவையில்லை என்றா சொல்லுவோம்? உடனே சொல்லுங்கள். தாமதம் எதற்கு?” மூவேந்தர்களும் ஆத்திரமும் பரபரப்பும் நிறைந்த குரலில் துடிதுடிக்கும் வேகமான உள்ளத்தோடு கபிலரைத் துரிதப்படுத்தினர். 

”சொன்னால் என்னைத் தவறாகப் புரிந்து கொள்ள மாட்டீர்களே?” 

“வாக்குறுதி வேண்டுமானால் தருகிறோம் புலவரே! நீங்கள் கூறுவதற்காக உங்களை ஏதும் சினந்து கொள்ளவோ, துன்புறுத்தவோ நாங்கள் என்ன அறியாப் பிள்ளைகளா?” 

”அப்படியானால் சொல்லி விடுகிறேன் மூவேந்தர்களே! பாரியின் பறம்பு மலையைச் சேர்ந்ததாகவும் அவன் ஆட்சிக் குரியனவாகவும் முந்நூறு சிற்றூர்கள் உள்ளன. இந்த முந்நூறு ஊர்களையும் தன்னை நாடி வந்த பரிசிலர்களுக்கு ஒவ்வொன் றாகக் கொடுத்துத் தீர்த்துவிட்டான் பாரி. இப்போது அவனிடம் எஞ்சியிருக்கும் பொருள்கள் மூன்றே மூன்றுதாம். அந்தப் பொருள்கள் வேறெவையும் இல்லை, நானும் அவனும் பறம்பு மலையுமே. நீங்கள் என்னையும் பாரியையும் பறம்பு மலையையும் வெல்ல வேண்டுமானால் அதற்கு இம்மாதிரி ஆயுதங்கள் தாங்கிய போர்க்கோலமோ, படைகளோ தேவையில்லை!” 

“மூவேந்தர்களே! நீங்கள் பாட்டுப் பாடும் பாணர்களாகவும் கூத்தாடும் விறலியர்களாகவும் வேடமிட்டுக்கொண்டு பாரிக்கு முன்னால் சென்று ஆடி பாட வேண்டும். ஆடி பாடி முடிந்ததும் 

 

‘உங்களுக்கு என்ன பரிசில் வேண்டும்’ என்று கேட்பான் பாரி. ‘உன் உயிரும் பறம்பு மலையும் எங்களுக்கு வேண்டும்’ என்று நீங்கள் மூவரும் தலைவணங்கிக் குழைவான குரலில் கேளுங்கள். தயங்காமல் இரண்டையும் உடனே உங்களுக்குக் கொடுத்து விடுவான் அவன். நீங்கள் பாரியை வெல்ல இந்த ஒரே ஒருவழிதான் உண்டு. வாளோலோ, போராலோ, முற்றுகை யாலோ நீங்கள் நிச்சயமாக அவனை வெல்ல முடியாது!‘ கபிலர் கூறி முடித்தார். மூவேந்தர் நெஞ்சத்தை அணு அணுவாகச் சித்திரவதை செய்யும் விஷமத்தனம் நிறைந்த புன்னகை ஒன்று அவர் இதழ்களில் அப்போது நெளிந்தது. 

மூவேந்தர்கள் முகத்தில் ஈயாடவில்லை. கபிலர் அவர்களைச் சரியானபடி அவமானப்படுத்திவிட்டார். வெட்கித் தலைகுனியும் படியாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போலப் பேசப்பெற்ற அவர் சொற்கள் அவர்களைக் கூசிக் குறுகிச் சிலைகளாய் வீற்றிருக்கும்படி செய்துவிட்டன. 

”பாரி, வாளுக்கு முன் பணியமாட்டான். கலைக்குமுன் பணிவான். போரில் பகைவர்களுக்குத் தோற்காத் தன் நாட்டையும் உயிரையும் அரண்மனையில் தனக்கு முன் ஆடிப்பாடும் கலைஞர் களுக்குத் தோற்கத் தயாராயிருப்பான். கலைக்கும் கவிதைக்கும் தலை வணங்கி யாவற்றையும் அளிக்கத் தயாராயிருப்பான். ஆனால் போரால் அவனை அசைக்க முடியாது! முன்னிலும் பலமாக வாய்விட்டுச் சிரித்தார் கபிலர். சிரித்துக்கொண்டே மூவேந்தர்களையும் நோக்கி, ”வருகிறேன் மன்னர்களே! நான் மலைமேல் போக வேண்டும்” என்று கூறிவிட்டு, வெளியே நடந்தார் அவர். 

தைரியமாகக் கைவீசிச் சிரித்துக்கொண்டே நடந்து செல்லும் அந்தப் புலவரின் உருவத்தை இமைக்காமல் பார்த்துக் கொண்டே திக்பிரமை பிடித்துப்போய் வீற்றிருந்தனர் மூவேந்தர்! அவருடைய சிரிப்பொலி அவர்கள் செவிகளை நெருப்பாகச் சுட்டது!

2 thoughts on “பரிசிலர்க்கு எளியன்!- புறநானூற்றுச் சிறுகதை”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தலை கொடுத்த தர்மம் – புறநானூற்றுச் சிறுகதைதலை கொடுத்த தர்மம் – புறநானூற்றுச் சிறுகதை

  குமணன் காட்டுக்குத் துரத்தப்பட்டான். அவன் தம்பியாகிய இளங்குமணனிடம் அரசாட்சி சிக்கியிருந்தது. காமுகனிடம் அகப்பட்டுக் கொண்ட குலப் பெண்ணைப் போல, குமணன் அரசாண்ட காலத்தில் அடிக்கடி அவனால் உதவப் பெற்று வாழ்க்கையை நடத்தியவர் பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர். இளங்குமணன் ஆட்சிக்கு

ஒரு தயக்கம் – புறநானூற்றுச் சிறுகதை – Audioஒரு தயக்கம் – புறநானூற்றுச் சிறுகதை – Audio

      அது ஒரு வேடனின் குடிசை காட்டின் இடையே அமைந்திருந்தது. குடிசையின் முன்புறம் முசுண்டை என்ற ஒரு வகைக் கொடி படர்ந்திருந்தது. வீட்டிற்கு முன்புறம் பசுமைப் பந்தல் போட்டு வைத்தாற்போல் அடர்ந்து படர்ந்து நிழலையும் குளிர்ச்சியையும் அளித்துக் கொண்டிருந்தது

பாண்டியன் வஞ்சினம் – புறநானூற்றுச் சிறுகதைபாண்டியன் வஞ்சினம் – புறநானூற்றுச் சிறுகதை

  நெடுஞ்செழியன் மிக இளமையிலேயே பட்டத்துக்கு வந்துவிட்டான். அவ்வாறு பட்டத்துக்கு வந்த சில நாட்களிலேயே மிகப்பெரிய சோதனை ஒன்று அவனது அரசாட்சியை நோக்கி எழுந்தது. மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்ற சேர அரசனும் அவனைச் சேர்ந்தவர்களாகிய திதியன், எழினி முதலிய சிற்றரசர்களும் ஒன்று