தில்லுக்கு துட்டு

“பந்தயம் ரெண்டாயிரம் ரூபா”

இந்த வார்த்தைகள் ராணிக்கு சபலத்தைத் தூண்டிவிட்டதென்னவோ உண்மை.

“நீ போகலைன்னா  ஐநூறு ரூபாய் மட்டும் தா. ஆனா நீ ஜெயிச்சேன்னா ரெண்டாயிரம் ரூபாய்… யோசிச்சுப் பாரு” என்று ராணியை மேலும் உசுப்பேத்தி விட்டாள் அறைத்தோழி பார்கவி.

அவர்கள் அனைவரும் மைசூரின் கான்வென்ட் ஒன்றில் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் தோழிகள். அது ஒரு டிசம்பர் மாத குளிர் இரவு. பாதி மாணவிகள் தேர்வு முடிந்து ஊருக்கு சென்று விட்டனர். தரைத்தளத்தில் இரண்டு அறைகளில் மட்டுமே மாணவிகள் இருந்தனர். அன்று அவர்களுக்குத் தேர்வு முடிந்திருந்தது. பக்கத்து அறையில் இருந்தவர்கள் உறங்கிவிட, இவர்கள் அறையில் பொழுது போகாமல் பேச ஆரம்பித்தது கடைசியில் இந்த விபரீதத் பந்தயத்தில் வந்து நின்றது.

பரிட்சையில் தோல்வி அடைந்த மாணவி ஒருத்தி தற்கொலை செய்துக் கொண்டு பேயாக இரவு நேரங்களில் அலைகிறாள். அதனால் இரவு தனியாக செல்லாதீர்கள். இதுதான் அந்த விடுதியின் சீனியர் மாணவிகள் ஜூனியர் மாணவிகளுக்கு விட்டுச் சென்ற தகவல்.

இப்படி அவர்கள் விடுதியில் இது சம்மந்தப்பட்டப் பேய் கதைகள் ஜாஸ்தி.அவர்கள் ஹாஸ்டலில் மட்டுமல்ல எல்லா விடுதிகளிலும், கல்லூரிகளிலும் ஏதோ ஒரு ரூபத்தில் பேய் கதைகள் உலாவிக் கொண்டுதான் இருக்கின்றன. அதை அங்கிருக்கும் பெரும்பாலான மாணவிகள் அறிந்திருந்தனர்.

என்னதான் இருந்தாலும் நள்ளிரவு நேரத்தில் பயந்த மாணவி ஒருத்தியை அமரவைத்துக் கொண்டு பல பேய் கதைகள் சொல்லி மேலும் அவளை பயப்படுத்துவதில் இருக்கும் இன்பம் அலாதியானது. அதைத்தான் அவர்களும் செய்து கொண்டிருந்தனர். இதில் அவர்கள் கையில் வசதியாக சிக்கிய பரிசோதனை எலியின் பெயர் ராணி.

ராணி இயற்கையிலேயே பயந்த சுபாவி. இரவு நேரங்களில் தனியாகக் கழிவறைக்கு செல்லவே பயப்படுவாள். ஏனென்றால் கழிப்பறை சற்று ஒதுக்குப் புறத்தில் இருக்கும். எனவே யாராவது கூட்டமாகச் செல்லும்போது கூட சேர்ந்து கொள்வாள்.

எனவே அவளை அழைத்த தோழிகள் ஒரு பந்தயம் கட்டினர். ராணி அவர்கள் அறையிலிருந்து வெளியேறி ஹாஸ்டலை ஒரு சுத்து சுத்தி அறையின் மற்றொரு கதவு வழியாக வரவேண்டும் என்பதுதான் அது.

நூறு ரூபாயில் தொடங்கிய இந்தப் பந்தயம் கொஞ்சம் கொஞ்சமாய் எகிறி ரெண்டாயிரம் ரூபாயில் நிற்கிறது.

“அதுக்கெல்லாம் தைரியம் வேணும். அவளுக்கு பேரு மட்டும் தான் ராணி. பயத்தில் தெனாலி. விழிக்க பயம், நடக்க பயம்… பாத்ரூம் போக பயம்…” என்று ஸ்வேதா சொல்ல வெடித்துக் கிளம்பியது சிரிப்பலை.

“எனக்கு பயமெல்லாம் இல்லை” என்று வீம்பாகச் சொன்னாள் ராணி.

“இப்ப என்ன ஒரு ரவுண்டு அடிச்சுட்டு வரணும் அவ்வளவுதானே… போயிட்டு வரேன்” என்றபடி அறைக் கதவைத் திறத்து மெதுவாக வெளியே எட்டிப் பார்த்தாள் ராணி.

தூரத்தில் தெரிந்த வெளிச்சம் அவர்களது அறையில் அடிக்க அந்த வெளிச்சத்தில் நிழலுருவமாய் ராணி தெரிந்தாள். கடிகாரத்தில் நேரம் பார்க்க, பன்னிரெண்டரை என்றது.

பின்னால் திரும்பி,விளக்கை அணைத்துவிட்டு இருளில் அமர்ந்திருந்த தோழிகளைப் பார்த்து, “டீ… கொஞ்ச நேரம் கழிச்சு, ஒரு அஞ்சு மணிக்குப் போறேனே…” என்றாள்.

“அஞ்சு மணிக்கு வாட்ச்மேன் ரவுண்ட்ஸ் வரும்போது நைசா போகத் திட்டமா…. போயிட்டு வாடி…”

மனதை திடப்படுத்திக் கொண்டு “காக்க காக்க கனகவேல் காக்க… ” என்று முணுமுணுத்த வண்ணம் அறையை விட்டு வெளியே சென்றாள். ஸ்டூடெண்ட்ஸ் யாருமில்லாததால் ஒரு பகுதி முழுவதும் இருளில் மூழ்கியிருக்க, அதற்கு நடுவே இங்கும் அங்கும் ஏதோ அசைவது போலத் தெரிய,
“கடவுளே… ” என்றபடி அப்படியே நின்றாள்.

அறையின் உள்ளே இருந்தபடி வெளியிலிருந்து வந்த வெளிச்சத்திலிருந்து நிழலுருவமாய் ஜன்னலுக்கருகே தெரிந்த ராணியைக் கண்டு கடுப்பானார்கள் தோழிகள்.

“இவ ஏண்டி அங்க போயி அப்படியே நிக்கிறா… ”

“இருட்டைப் பார்த்ததும் பயந்திருப்பாடி…”

மேலும் சில நிமிடங்கள் சென்றும் கூட அந்த போசிலிருந்து அவள் மாறவே இல்லை. சிறிது நேரம் கழித்து அவர்களது ஜன்னலுக்கருகே வந்த நிழலுருவம் அப்படியே உறைந்துவிட்டது.

“பேசாம ராணியை உள்ளக் கூப்பிட்டுடலாம்டி. அவ வேற ரொம்ப பயந்தவ… ஏதாவது ஆயிடப் போகுது” நம்ம ரொம்ப ஓவரா போறோம் என்று ஒருத்தி சுட்டிக் காட்ட

“ராணி உள்ள வா… ” என்று ஜன்னலில் தெரிந்த நிழலலுருவத்தைப் பார்த்துக் கத்தினாள் மாளவிகா.

“வந்துட்டேன்டி… ” மூச்சு வாங்கியபடி ஜன்னலுக்கு நேர் எதிரே இருந்த பின்கதவு வழியாக ரூமுக்குள் ஓடி வந்தாள் ராணி..

” சக்ஸஸ்புல்லா.. ஒரு ரவுண்டு போயிட்டு வந்துட்டேன்… ரெண்டாயிரத்தைத் தா….” என்றபடி கைநீட்ட…

தோழிகள் திகிலோடு பெண் நிழல் உருவம் தெரிந்த ஜன்னலைப் பார்த்தார்கள். அந்த உருவம் மெதுவாக நகர, அனைவரும் வெளியே ஓடிச் சென்று பார்த்தார்கள். அந்த வராந்தா கண்ணுக்கெட்டிய தொலைவு வரை யாருமே இல்லாமல் வெறிச்சோடி இருந்தது.

5 Replies to “தில்லுக்கு துட்டு”

  1. புது கதையா சகோ… ஆரம்பமே த்ரில்லா இருக்கே

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: