Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

உள்ளம் குழையுதடி கிளியே – 23

அத்தியாயம் – 23

ன்று கோவிலில் நடந்த பூஜையில் என்ன நடந்தது என்று கேட்டால் ஹிமாவுக்கு பதில் சொல்லத் தெரியாது. நடந்தது எதுவும் அவள் மனதில் பதியவில்லை. சரத்தின் கையால் தாலி கட்டிக் கொண்ட கணத்திலேயே அவளது மனம் உறைந்திருந்தது.

‘நானா! இன்னொரு கல்யாணம் செஞ்சுட்டேனா! ’ என்று ஹிமாவும்.

“எங்கம்மா பாட்டி இவங்க வழி வழியா, பரம்பரையா கட்டிட்டு வந்த தாலி இப்ப ஹிமா கழுத்துல கட்டிருக்கேனா…” என்ற அதிர்ச்சியில் சரத்தும் இருந்ததால் அவர்களை சுற்றி நடந்த நிகழ்ச்சிகள் மனதில் பதியவில்லை.

பூசாரி என்றால் தாடி மீசையுடன் குறி சொல்பவரைப் போலக் காண்பிக்கும் இந்த சமூகத்தில், ஆச்சிரியப்படத்தக்க வகையில் அவர் எல்லாரையும் போல சாதாரணமாக இருந்தார். பட்டப்படிப்பு முடித்துவிட்டு அந்த கிராமப் பள்ளியிலேயே வேலை பார்ப்பவர் தனது கடமையோடு தன் தந்தை செய்துவந்த பூசாரி என்ற கடமையையும் ஏற்றுக் கொண்டார். கிராமத்துப் பாடல்களுடன் அழகான தேவாரப் பதிகங்களைப் பாடி வழிபாடு செய்தார்.

சரத்தின் குடும்பத்தை ஆசீர்வதித்த பின் தனது மன ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். “குலசாமி வழிபாடு நம்ம தமிழ் கலாச்சாரத்துக்கே தனிப் பெருமை தர்ற விஷயம். வெள்ளைக்காரன் ஐநூறு வருஷமா வரலாற்றை பதிவு செஞ்சிருக்குறத பெருமையோட சொல்றோம். ஆனா பலநூறு வருஷங்களா நம்ம குலதெய்வ வழிபாட்டை கடைபிடிக்கிறதையும் இந்த தெய்வங்கள் உண்மையான மனிதனின் வாழ்க்கைதான்றதையும் வசதியா மறந்துட்டோம். இவங்க வரலாற்றையும் வழிபாடு முறையையும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருத்தர் பொறுப்பேத்துட்டு ஆவணப் படுத்தினா நல்லாருக்கும்.

இந்த இளைய சமுதாயத்துகிட்ட கேட்டுக்குறது எல்லாம் ஒன்னே ஒண்ணுதான். உங்களுக்கு கடவுள் நம்பிக்கை வேண்டாம் ஆனால் இந்தக் குலதெய்வ வழிபாட்டை திசைக்கொரு பக்கமா பிரிஞ்சு போன குடும்பத்தோட இணைப்பு நாளா பயன்படுத்திக்கலாமே. பேஸ்புக் ட்விட்டர்ன்னு நண்பர்களைத் தேடும் நாம் நம் உறவினர்களோட பொழுதைக் கழிக்கவும், சொந்தங்களைக் கண்டு மகிழவும் வருடத்துக்கு ஒரு நாளாவது முயற்சிக்கலாமே…

இயற்கையா பறந்து விரிஞ்சிருக்க இறைவன் ஒன்றே அப்படின்னு சொல்லும்போது எந்த கோவிலில் மொட்டையடிச்சா என்ன… எதுக்கு குலதெய்வம் கோவிலில் மொட்டையடிக்கணும். பாருங்க நம்ம குடும்ப சங்கிலியின் அடுத்த கண்ணி ஆரம்பிச்சிருச்சுன்னு முன்னோர்களிடம் மனசில் சொல்லி சந்தோஷப்படவும், அந்தக் கண்ணியில் ஒண்ணா உன் மகனை அவனது அறியா வயசிலேயே இணைக்கவும்தான்.

இப்ப இருக்கவங்ககிட்ட இன்னொரு கவலையா சொல்றது ‘கோவில் அத்துவான காட்டில் இருக்கு. பேருந்து வசதி கூட இல்லை’.

ஆமாம் பெரும்பாலான குலதெய்வம் காட்டுலேயோ மேட்டுலையோதான் இருக்கும். ஏன்னா பலநூறு வருசங்களுக்கு முன்னாடி உன் பாட்டன் பூட்டன் இந்தக் காடு கரையில்தான் வாழ்ந்திருப்பான். அவன் கும்பிட்ட சாமியும் அவன் பக்கத்துல நின்னு அவனைக் காக்குற மாதிரிதான் இருக்கும். சாமி கும்பிடுறோம்னு நினைச்சுக் கூட வரவேண்டாம். பல நூறு வருடங்களுக்கு முன்னாடி உன் குடும்பத்தோட வேர் ஆரம்பிச்ச இடம் இதுன்னு நினைச்சு வா… வலியோ சங்கடமோ தெரியாது”

அவரது கூற்றை ஆமோதித்தனர் அனைவரும்.

சாங்கியத்தின் ஒரு பகுதியாக வேப்பமரத்தின் கீழே வாழை இல்லை படையல் ஒன்றைப் போட்டனர். “சாமியப்பா அய்யா… உங்க கொள்ளுப்பேரன் வந்துட்டான். அவன் கையால பொங்கல் வைக்கிறான் வாங்கிக்கோங்க” என்று சரத்தின் தாத்தாவுக்கு சர்க்கரைப் பொங்கலை வைக்க சொல்லி துருவ்வைப் பணிந்தனர்.

துருவ் சிறியவன் என்பதால் சரத், ஹிமா உதவியுடன் வாழை இலையில் வைத்தான். மற்ற பதார்த்தங்களை சரத்தும் ஹிமாவும் பரிமாறி முடித்தனர். அவர்கள் அனைத்தையும் படித்துவிட்டு நகரக் கூட இல்லை எங்கிருந்தோ வந்த காக்கை அவர்கள் முன்னாலேயே இலையில் அமர்ந்து, மற்ற அனைத்தையும் ஒதுக்கிவிட்டு துருவ் வைத்த சர்கரைப் பொங்கலை ஒரு வாய் உண்டுவிட்டுப் பறந்து சென்றது.

அங்கிருந்த அனைவருக்கும் அந்தக் காட்சியைக் கண்டு மெய் சிலிர்த்தது.

அதன் பின் வந்த மற்ற காக்கைகள் அங்கிருந்த உணவு அனைத்திலும் ஒவ்வொரு வாய் உண்டுவிட்டு சென்றது.

“தெய்வானையம்மா… உங்க வீட்டுப் பெரியவரே பேரனையும் மருமகளையும் ஏத்துகிட்டப்பறம் வேறென்ன அப்பீலு… பேரனை ஏத்துகிட்டா எல்லாரையும் எத்துகிட்டதா அர்த்தம். அதனால நடந்ததெல்லாம் கனவா நினைச்சு மறந்துட்டு சந்தோஷமா இருங்க” என்றனர் அனைவரும்.

குலசாமியை வணங்கி, சுமங்கலிகள் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டு நள்ளிரவு வீடு திரும்பினர்.

வீடு திரும்பிய அனைவரையும் வரவேற்றார் சின்னசாமி. நல்லவேளை காலையில் இவர் இல்லாம போனார். சாரதா இந்தப் பிரச்னை தீர வழி செஞ்சாங்க. இவர் மட்டும் இருந்திருந்தா இதை ஊதி பெருசாக்கி குடும்பத்தையே ரெண்டாக்கிருப்பார். கடவுளுக்கு நன்றி சொன்னபடி தூங்கிக் கொண்டிருந்த துருவ்வை கையில் வாங்கிக் கொண்டான்.

“அம்மா காலையில் நடந்தது நம்ம குடும்ப விஷயம். அது நம்மோட இருக்கட்டும்” என்றான் தாயிடம்.

அவன் சொன்னதைக் கேட்டு பின்னால் இறங்கிக் கொண்டிருந்த பழனியம்மா வருத்தத்துடன் பார்த்தார்.

“நம்ம குடும்பம்னு சொன்னது உங்களையும் சேர்த்துத்தான்…” என்று அவருக்கு பதில் சொல்லிவிட்டு ஹிமா இறங்க கார்க் கதவைத் திறந்துவிட்டான்.

அவர் மகிழ்ச்சியாக “அக்கா அண்ணன்கிட்ட எதுவும் மூச்சு விடாதே… நல்லவேளை பங்காளிங்க முறைன்னால வரல… இல்லைன்னா அங்கேயும் ஏதாவது பிரச்சனையை ஆரம்பிச்சிருப்பார்” என்றார் பழனி தெய்வானையிடம்.

“என்ன குலதெய்வம் பூஜை நல்லபடியா முடிஞ்சதா… உன் கொழுந்தன் அந்த ஒன்றகண்ணு என்ன பண்றான். “ என்றார்.

“பூஜை நல்லபடியா முடிஞ்சது. தூக்கமா வருது. காலைல பேசிக்கலாம்” என்றபடி அறைக்கு விரைந்தார் தெய்வானை.

“பழனி, ஹாலெல்லாம் மஞ்சளும் குங்குமமுமா பாக்கவே கன்றாவியா இருக்கு. முதலில் கூட்டித் துடைச்சுட்டுப் படு”

“கோவில்ல இருந்து வந்ததும் துடைக்கக் கூடாதுன்னு அக்கா சொல்லிட்டாங்க. நாளைக்குக் காலைலதான் மத்ததெல்லாம். நான் போயி தூங்கப் போறேன்” என்று அவரும் சமையலறைக்குள் நுழைந்துவிட்டார்.

களைப்புடன் அனைவரும் தங்களது அறைக்கு சென்ற வேகத்தில் தூங்க ஆரம்பிக்க, சின்னசாமியின் முன் ஹிமாவிடம் எதுவும் பேச மனமில்லை சரத்துக்கு.

இடது தோளில் உறங்கிய துருவ்வை ஒரு கையால் பிடித்தபடி மற்றொரு கைகளால் ஹிமாவின் கைகளைப் பற்றி அவனது அறையை நோக்கி இழுத்தான்.

“சரத்…”

“ஷ்…” கண்களால் சின்னசாமி வருவதை காண்பித்தவன் அவளை இழுத்துக் கொண்டு மாடி அறைக்கு வந்து சேர்ந்தான். அவளும் மறுக்காமல் அவனுடன் வந்தாள்.

அறைக்குள் நுழைந்ததும் அலுங்காமல் அவனது கட்டிலில் துருவ்வை படுக்கவைத்தவன் திரும்பிப் பார்க்கும் வரை அதே இடத்தில் உறைந்த பார்வையுடன் நின்றுக் கொண்டிருத்தாள் ஹிமா.

“ஹிமா, என்னம்மா…” என்ற அவனது ஒரு வார்த்தைக்கு அத்தனை நேரமும் காத்திருந்தாற்போல அவளது கண்களிலிருந்து பொல பொலவெனக் கண்ணீர் கொட்டியது.

“ஹிமா… ஹிமா…” சரத் அழைக்க அழைக்க அவ்வளவு நேரமாக சமாளித்திருந்தவள் நிற்க முடியாமல் துவண்டாள். அவளைத் தூணாய் தாங்கிக் கொண்டான் சரத்.

“ஹிமா… ஐ ஆம் சாரி… வெரி ஸாரி… உன்னைப் போயி என் பிரச்சனைல இழுத்துவிட்டுடேன்”

அவள் நொறுங்கிப் போனதைத் தாங்க முடியாது ரொம்ப நாட்களுக்குப் பின் சரத்தின் கண்களில் நீர் எட்டிப் பார்த்தது.

ஹிமாவின் கேவல் அந்த அமைதியான இரவில் சரத்தின் அணைப்பில் மட்டுப்பட்டது.

“இன்னொரு தரம் தாலி கட்டிட்டு… நான் சத்யாவுக்கு துரோகம் செய்துட்டேனா சரத்… எங்க துருவ் நல்லாருக்கணும், அம்மா பொழைக்கணும்னு இந்த வேலைக்கு ஒப்புக்கிட்டதுக்கு பதில் நாங்க எல்லாரும் செத்திருக்கலாம்ல”

சோபாவில் சரிந்து அமர்ந்தவன் தனது தோளில் அவளை சாய்த்துக் கொண்டான். அவனது கரங்களில் அவளது கரங்கள் அடைக்கலாமாயிற்று,

“எதுக்கு ஹிமா நீ சாகணும். எதுக்காக தப்பு செஞ்சதா நினைச்சு வருத்தப்படுற.

சின்ன பொண்ணு நீ… சுத்திலும் பணக் கஷ்டமும் மனக் கஷ்டமும் உன்னை சூழ்ந்திருந்தப்ப யாராவது உனக்கு உதவுனாங்களா… இல்லையே… உனக்குன்னு ஒரு வழி கிடைச்சப்ப அதை பிடிச்சுட்ட… இது எப்படி தப்பாகும்.

நீயே என்னை அப்ரோச் பண்ணல, என்னை மேனுபுலேட் பண்ணல… நான் சஜஸ்ட் பண்ண இந்தக் கல்யாண நாடகம் டீசெண்டா தோணவும் ஒத்துகிட்ட. இதில் உன் தப்பு எங்கிருக்கு…”

அவளது முகத்தில் ஒரு தெளிவு

“நான் தப்பு பண்ணலையா சரத்… தாலி, அதுவும் உங்க அம்மா கட்டிருந்த தாலியை ஏத்துகிட்டு நிக்கிறது எவ்வளவு பெரிய தப்பு. ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணும்போது கூட அவ்வளவா பாதிக்கல சரத். இன்னைக்கு எல்லார் முன்னாடியும்…” சொல்ல முடியாமல் திக்கினாள்.

“மனசுக்கு கஷ்டமா இருக்கு சரத்…”

“ஹிமா இது சும்மா ஒரு நாடகம்… ஸ்டேஜ் டிராமா அவ்வளவுதான்… அப்படி நினைச்சுக்கோ சுலபமாயிடும்”

சொன்னாலும் அவனது கண்கள் அவளது கழுத்திலிருந்த மாங்கல்யத்தின் மேல் நிலைத்திருந்தது. இந்த நாடகத்தை ஆரம்பித்து வைத்த அவனுக்கே இந்த எதிர்பாராத திருப்பத்தை ஏற்க முடியவில்லை. இவளால் எப்படி முடியும்.

“இருந்தாலும் அந்த குலதெய்வம் வழிபாட்டப்ப ஒவ்வொரு நொடியும் நக்ஷத்திராவின் இடத்தில் இருக்கோமேன்னு முள்ளில் நிக்குற மாதிரி இருந்துச்சு சரத். காக்கா சர்க்கரை பொங்கல் சாப்பிட்டது கூட என்னால நம்ப முடியல. துருவ் எப்படி அவருக்குப் பேரனாவான். அவன் சத்யாவோட குழந்தைதானே”

“சத்யாவின் குழந்தைதான் மறுக்கல. நம்ம ஒப்பந்தப்படி எனக்கும் அவன் பிள்ளை முறைதானே… அதனால்தான் எங்க தாத்தா மனசார அவன் வச்ச ஸ்வீட்டை சாப்பிட்டிருப்பார். இல்லை…”

“இல்லை…”

“அந்தக் காக்காவுக்கு சர்க்கரைப் பொங்கல்தான் பிடிச்ச பதார்த்தமாயிருக்கலாம்”

“ம்…” கொட்டியபடியே உறங்கிவிட்டாள்.

“ஹிமா எந்திருச்சு பெட்டில் படு”

“நான் சோபால தூங்குறேன்… நீங்க பெட்ல”

குலதெய்வம் கோவிலில் நடந்த சம்பவத்தை எண்ணி வியந்தபடி அவன் அங்கேயே அமர்ந்திருந்தான். இடம் பத்தாமல் நகர்ந்து படுத்து ஹிமா அவனது காலை தலையணையாக எண்ணிவிட்டாள் போலிருக்கிறது. மடிமீது தலைவைத்துத் தூக்கத்தைத் தொடர்ந்தாள்.

அந்த நள்ளிரவில், கடிகாரத்தின் டிக் டிக் ஓசையின் பின்னணியில் சோபாவில் சாய்ந்து அமர்ந்திருந்தான் சரத். அவன் மடியில் அழுதழுது கண்களில் நீர் காய்ந்து போய் உறக்கத்தின் பிடியில் ஹிமா…

இறந்து போன சத்யாவின் இடத்தில் என்னைப் பொருத்தி பார்க்க முடியாது தவிக்கிறாள் இவள். இவள் இடத்தில் ராஜி இருந்திருந்தால் என்று நினைத்தான்… ஆனால் சோதனையாக கற்பனையில் கூட அவனது தாலியை சுமக்கிறவள் ஹிமாவாகவே தோன்றினாள்.

காலையில் தெய்வானை இழுத்ததால் சிவந்து வீங்கியிருந்தது ஹிமாவின் கழுத்திலிருந்த காயம். கைக்கு அருகிலிருந்த டிரெஸ்ஸிங் டேபிளில் இருந்த க்ரீமை எடுத்துத் தடவினான். எரிச்சலில் ஸ்… என்று முனகினாள் ஹிமா. பாதிக் கண்களைத் திறந்து சரத்தைப் பார்த்தாள்.

“என்னாச்சு சரத்”

“ஆயின்மென்ட் தடவுறேன்… காலைல சரியாயிடும்” என்றபடி சிரத்தையாகத் தடவிவிட்டான்.

அவனது மனதில் தோன்றியிருந்த உணர்வுகளை அடக்கிக் கொண்டு கேட்டான்.

“ஹிமா… கழுத்தில் காயமாயிருக்கே… வேணும்னா தாலியைக் கழட்டி வச்சுறலாமா…”

“வேண்டாம்… இருக்கட்டும்…” என்றுவிட்டு மறுபடியும் தூங்க ஆரம்பித்து விட்டாள்.

அந்த பதிலால் மிக நிம்மதியான ஒரு புன்னகை சரத்தின் முகத்தில் தோன்றியது.

‘ஹிமா… கிறிஸ்டி ஒரு கேள்வி கேட்டா… அதுக்கு பதில் யோசிக்க ஆரம்பிச்ச வினாடியிலிருந்து உன் கூட வாழுற வாழ்க்கை போலின்னு என்னால நம்பவே முடியல… என் மனநிலை தெரிஞ்சா நீ அடுத்த நிமிஷம் என் வீட்டை விட்டுப் போயிடுவ’

முதலில் உறுத்தலாக இருந்த ராஜியின் நினைவுகள் கூட அவ்வளவாக பாதிக்கவில்லை. முப்பத்தி நான்கு ஆண்டுகள் எதைத் தேடினானோ அது முழுமை அடைந்துவிட்டதைப் போன்ற ஒரு உணர்வு அவனுள் நிறைந்தது.

ஆனால் தான் ராஜியை விரும்பியது உண்மைதானே. அவளுக்காகத்தானே எல்லாம். இந்த உடை நிறம் பொருந்தவில்லை என்றால் வேறு ஒன்றை எடுத்து அணிவதைப் போல காதல் என்ன அத்தனை சுலபமானதா… ராஜி அருகிலில்லை என்றவுடன் ஹிமாவை பற்றிக் கொள்வது எந்த விதத்தில் சரி… இல்லை என் மனம் என்ன அத்தனை கேவலமானதா…

குழம்பிய மனதுடன் அங்கிருக்க விருப்பமில்லை அவனுக்கு. அதனால் மறுநாளே ஊருக்குக் கிளம்ப முடிவு செய்தான். முடிவை ஹிமாவிடம் தெரிவித்தபோது அவளுக்கும் அதிர்ச்சி.

“மெட்ராஸ் போனதும் அங்கிருந்து அடுத்த நாளே கிளம்பி துபாய்க்குப் போறேன்னு வேற சொல்றிங்க. அங்க போனா வீட்டுக்கு வர ஒரு மாசமாவது ஆகும். அதனால ப்ளீஸ் இந்த வாரம் முடியுற வரை இருந்துட்டுப் போங்க சரத்”

“நீ இப்படி கேட்டா நான் மறுக்க மாட்டேன்னு தெரிஞ்சே கேக்குற… சரி” சம்மதித்தான்.

“எங்க கழுத்தில் காயத்தைக் காமி பார்க்கலாம்” என்றவாறு காலையிலும் மருந்து தடவினான்.

மகன் ஊருக்குக் கிளம்புகிறான் வருவதற்கு நாளாகும் என்று தெரிந்து தெய்வானைக்கு வருத்தம் இருந்தும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் துருவ்வுடன் ஒட்டிக் கொண்டார்.

சரத் ஊருக்குக் கிளம்பும் நாள் இவ்வளவு விரைவில் வந்துவிட்டதா என்றிருந்தது அனைவருக்கும்.

“வாராவாரம் வந்துட்டுப் போ…” என்றார் தெய்வானை வேதனையை மறைத்த குரலில்.

“சரத் மூணு சூட் எடுத்து வச்சிருக்கேன். மேட்சிங் பேன்ட் ஒவ்வொரு சூட்டுக்கும் ரெண்டு ஜோடி இருக்கு. நீங்க துவைக்க வேண்டாம். இதையே போட்டுக்கோங்க”

“தாங்க்ஸ் ஹிமா”

“இதென்னடா பொண்டாட்டி பிள்ளைக்கு நன்றி சொல்லிட்டு” மகனை செல்லமாகக் கடிந்து கொண்டார் தெய்வானை.

“அம்மாவுக்கு மட்டும்தான் தாங்க்ஸ் சொல்ல மாட்டேன்” என்றான் சரத்.

“அம்மா எத்தனை நாள் உன் கூட வருவேன்… இனிமே உனக்கு எல்லாமே ஹிமாவும் துருவ்வும்தானே”

சரத்தின் கண்கள் கலங்கிவிட்டது “இந்த மாதிரி பேசினாத் தெரியும்… உங்களுக்காக எத்தனை முயற்சி எடுத்திருக்கேன். உங்க வாயில் இந்த மாதிரி வார்த்தையைக் கேக்குறதுக்கா…”

“அத்தை, நீங்க இப்படி பேசினது தப்பு. சரத் மனசு எவ்வளவு கஷ்டப்படும்” ஹிமாவும் தெய்வானையின் தவறை சுட்டிக் காட்டினாள்.

“சரிடா… துருவ்வுக்குப் பேரன் பிறக்கும் வரை நான் நல்லா இருப்பேன் போதுமா”

தாயும் மகனும் ஒரு வழியாகப் பேசி சமாதானமானார்கள். துருவ் மட்டும் முகத்தை உர்ர்ரென வைத்திருந்தான்.

“ரெண்டு வாரம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ… அப்பறம் வந்துடுவேன்”

“போங்கப்பா… யாரு என்னை ஸ்விம்மிங் கூட்டிட்டு போவாங்க, யார் என் கூட விளையாடுவாங்க”

“நல்லா கேளு தங்கம். அப்பாவோட வேலையை யார் செய்வா?” எடுத்துக் கொடுத்தார் தெய்வானை.

“நானே சீக்கிரம் வந்து செய்வேன். கொஞ்ச நாள் பொறுத்துக்கோ கண்ணா… தினமும் விடியோ சாட் பண்ணலாம். நான் புது கம்பனி ஆரம்பிச்சுட்டு இங்கேயே வந்துடுவேன். ஒகேயா”

ஒரு வழியாக சமாதனம் செய்தான். ஹிமாவின் முகத்தில் மட்டும் இந்த நெருக்கத்தைக் கண்டு கலக்கம். சரத்துக்கு தந்தையின் அன்பை சிறுவன் தன்னிடம் தேடுவதை ஹிமா விரும்பவில்லை என்று கணித்தான்.

காரில் ஏறுவதற்கு முன் ஹிமாவிடம் தனிமையில் பேசக் கிடைத்த ஒரு நிமிடத்தில்

“சாரி ஹிமா… துருவ் சொன்னது உன்னை பாதிச்சிடுச்சா” என்றான் மென்மையாக

“சரத், சில வாரங்கள் பிரிவே இவனுக்குப் பிடிக்கலையே… நம்ம பிரிஞ்சப்பறம் எப்படி உங்களை விட்டுட்டு இருப்பான்” என்றாள் கவலையுடன்.

தன்னை துருவ் தந்தையாக நினைப்பது ஹிமாவின் மனதை நெருடவில்லை என்று தெரிந்ததும் ஓவென மகிழ்ச்சியில் கத்தவேண்டும் போலிருந்தது சரத்துக்கு. அவளே உணராததை இவன் கத்திக் காட்டிக் கொடுக்க முடியவில்லை.

“நான் ஊரிலிருந்து வரவரைக்கும் அதை யோசிச்சுட்டே இரு” என்று எடுத்துக் கொடுத்துவிட்டு பிரியவே சற்றும் மனமின்றி சென்னைக்குக் கிளம்பினான்.

ஊரையெல்லாம் சுத்தி வந்த ஒத்தைக் கிளியே

மனம் ஓரிடத்தில் நின்றதென்ன சொல்லு கிளியே

சொந்தபந்தம் யாருமின்றி நொந்த கிளியே

ஒரு சொந்தமிப்ப வந்ததென்ன வாசல் வழியே

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: