Tamil Madhura கதை மதுரம் 2019,கதைகள்,கல்யாணக் கனவுகள்,தொடர்கள்,யாழ் சத்யா யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 25 நிறைவுப் பகுதி

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 25 நிறைவுப் பகுதி

கனவு – 25
நிறைவு

அன்று வைஷாலியின் வீடே விழாக் கோலம் பூண்டிருந்தது. குடும்பத்தவர்கள் மட்டுமே அங்கிருந்தாலும் உற்சாகத்துக்கும் கலகலப்புக்கும் குறைவில்லை.

“சஞ்சு மாமா… இந்த பலூனை ஊதித் தாங்கோ…”

என்று கேட்டபடி அவனிடம் பலூனைக் கொடுத்தான் ஆயுஷ். அப்போது அங்கே வந்த விசாலியின் மகள்,

“சஞ்சு மாமா… எனக்குத் தான் முதல்ல ஊதித் தர வேணும்…”

என்று கூறியபடி சஞ்சயனிடமிருந்த ஆயுஷின் பலூனைப் பறித்தாள். அப்போது அங்கு வந்த இவர்களில் சற்றுப் பெரியவனான விசாலியின் மகன் ஏகன் தங்கையின் பலூனை வாங்கித் தான் ஊதிக் கொடுக்க அங்கே ஆரம்பமாக இருந்த ஒரு மகாபாரத யுத்தம் புஷ்வாணமாய் அடங்கியது.

“ஸ்ஸப்பா….”

என்று ஒரு பெருமூச்சை சஞ்சயன் வெளியேற்ற அங்கு வந்த கடம்பன் அவனை பார்த்து வாய் விட்டுச் சிரித்தான்.

“டேய் மச்சான்… சிரிக்காதை… அப்புறம் உன்னை மாட்டி விட்டிடுவன்… நேற்று நடந்த சண்டை தெரியும் தானே… யாருக்கு நான் முதல்ல ராக்கெட் செய்து தாற என்று…”

“சரி… சரி… நான் சிரிக்கேல்ல… பிள்ளையள் எல்லாம் மாமா மாமா என்று உன்னட்டத் தானே வருகினம். நீயே சமாளி இந்தப் பட்டாளத்தை… வைஷூ சிவாஸ் பேக்கரில கேக் ஓர்டர் பண்ணிருக்கிறாளாம். நான் போய் எடுத்திட்டு வாறன். உன்ர காரைத் தான் எடுத்திட்டுப் போறன்…”

“ஓகேடா… சின்ன டிக்கெட் ஒன்றைக் கூட்டிட்டுப் போவன்…”

“அதுசரி… கேக் பிறகு கேக்கா வராது… வைஷூ சமையல் முடிச்சிட்டுக் குளிக்கப் போய்ட்டாள். இப்ப வந்திடுவாள். அதுவரைக்கும் பிள்ளையளைப் பாருடா…”

“சரி மச்சான்… நீ போய்டு வா…”

என்று கூறி கடம்பனை வழியனுப்பி வைத்த சஞ்சயன் குழந்தைகளோடு குழந்தையாக தானும் சேர்ந்து விளையாட ஆரம்பித்தான். வைஷாலி கடம்பனின் ஒரு வயது மகள் சஞ்சயன் மாடு போல நாலு காலில் நடக்க அவன் மீது ஏறியிருந்து வாயால் வண்டியோட்டிக் கொண்டிருந்தாள்.

அப்போது அங்கே வந்த வைஷூ,

“சஞ்சு…! விளையாடினது காணும். எழும்பு… உனக்கு நாரிக்க பிடிக்கப் போகுதடா…”

என்றபடி மகளை அவனிடமிருந்து தூக்கிக் கொஞ்சி விட்டுக் கீழே இறக்கி விட்டாள். சஞ்சயனும் எழுந்து ஸோபாவில் அமர்ந்தான். வைஷாலியைக் கண்டதும் பிள்ளைகள் எல்லாம் கப்சிப்பாக ஸோபாவில் ஏறி அமர்ந்து கொண்டார்கள்.

வைஷாலி எந்தளவுக்கு அன்பானவளோ அந்தளவுக்கு கண்டிப்பானவளும் கூட. பெரியவர்களான ஆயுஷும் ஏகனும் அங்கிருந்த விளையாட்டுப் பொருட்களை ஒழுங்கு படுத்தத் தொடங்கினர். அவர்கள் உரிய இடத்தில் அடுக்கி முடித்ததும் அனைவருக்கும் மதிய உணவைக் கொடுத்துத் தூங்க வைத்து விட்டு வந்து வரவேற்பறையில் அமர்ந்தாள் வைஷாலி. கடம்பனும் கேக்கோடு வந்திருக்க பெரியவர்கள் அனைவரும் உணவுண்ண அமர்ந்தார்கள்.

பேச்சும் சிரிப்புமாக ஒருவரை ஒருவர் வாரியபடி உணவை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது விசாலி,

“சஞ்சு அண்ணா…! எப்ப கல்யாணம் செய்யப் போறீங்கள்?”

என்ற கேள்வியை நூற்றியொரு முறையாக அவனிடம் கேட்டாள். அனைவரும் கூடிடும் விசேசங்களில் எல்லோரும் சஞ்சயனைக் கேட்டிடும் ஒரே கேள்வி இதுதான். அவனும் எதையாவது சொல்லித் தப்பித்துக் கொண்டே தான் இருக்கிறான்.

“ஏன் விசாலி… நான் நிம்மதியா இருக்கிறது உங்களுக்கெல்லாம் பிடிக்கேலையா…? எனக்கு நீங்கள், பிள்ளையள் எல்லாரும் போதும்… இனி வாறவள் எல்லாரையும் புரிஞ்சவளாக இல்லாட்டில் என்ர வாழ்க்கை நரகமாகிடும். அதை விட இப்படியே இருக்கிறதுதான் எனக்கு நிம்மதி… தயவுசெய்து ஒவ்வொரு முறையும் இங்க வரேக்க எப்ப கலியாணம் எப்ப கலியாணம் என்று கேட்டுச் சாவடிக்காதீங்கப்பா…”

என்று கொஞ்சம் கடுப்பாகவே கூறி முடித்தான். மற்றவர்கள் அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அதனை உணர்ந்த சஞ்சயன்,

“இங்க பாருங்கோ… ஒவ்வொருத்தருக்கு வாழ்க்கையில ஒவ்வொரு விதமான சந்தோஷம். எனக்கு வைஷூ சந்தோசமாக வாழுறதைப் பார்க்கிறதுதான் சந்தோசம், மகிழ்ச்சி, நிம்மதி எல்லாமே… கடம்பனும் வைஷூவும் இப்படிப் பிள்ளையளோட நிறைவாக வாழுறதைப் பார்க்கிறதே எனக்குப் போதும். எனக்குக் குடும்பமா நீங்க இருக்கிறியள்… இந்த நாலு பிள்ளையளுமே மாமா மாமான்னு என்னில உயிரையே வைச்சிருக்கிதுகள்… இதை விட வேற என்ன வேணும் எனக்கு…?”

கூறியவனையே வாஞ்சையாகப் பார்த்தனர் அனைவரும். இந்த விசயத்தில் அவன் பிடிவாதத்தை யாராலும் மாற்ற முடியவில்லை. கடம்பனும் வைஷாலியும் சில பெண்களை அவனுக்காகப் பார்த்தும் சஞ்சயன் ஒரேயடியாக மறுத்து விட்டான். இருந்தாலும் சற்றும் தளராத விக்கிரமாதித்தனாக வைஷாலியும் அவன் கல்யாண விடயத்தை லேசில் விடுவதாக இல்லை.

மாலை ஐந்து மணி. பிள்ளைகள் சூழ்ந்திருக்க கடம்பனும் வைஷாலியும் நடுநாயகமாக நின்று அவர்களின் மகளது கையைப் பிடித்துக் கேக்கை வெட்ட மற்றவர்கள் பிறந்தநாள் வாழ்த்துப் பாட இனிதாய் அந்த பிறந்தநாள் விழா ஆரம்பமாகிக் களை கட்டியது.

தனது தோழியின் பூரண மகிழ்ச்சியான வாழ்க்கையின் அச்சாரமாய் இந்த நிறைவான காட்சியைக் கண்ட அந்த ஆருயிர்த் தோழன் சஞ்சயன் தன் விழிகளில் துளிர்த்த ஆனந்தக் கண்ணீரை உள்ளிழுத்தவாறே கை தட்டியவாறு பிறந்தநாள் வாழ்த்தைப் பாடிக் கொண்டிருந்தான். அவன் மனம் மகிழ்ச்சியால் நிறைந்திருந்தது.

அனைவரும் கேக் வெட்டி பிறந்தநாள் பாடல் பாடிக் கொண்டிருக்கும் பொழுது அங்கே வந்த அழகான ஒரு இளம்பெண் சஞ்சயனைக் கண்டதும் அதிர்ந்து நின்றாள்.

அவள் அதிர்ந்து நின்றது ஒரு நொடி தான். அடுத்த நொடியே வேகமாக சஞ்சயனிடம் ஓடிவந்து,

“சஞ்சு…! இத்தனை நாளாய் என்னை விட்டுட்டு எங்க போயிருந்தனீங்கள்? உங்களை எவ்வளவு மிஸ் பண்ணினேன் தெரியுமா? இனி உங்களை விட்டு நான் எங்கேயும் போக மாட்டன்… ஐ மிஸ்ட் யூ ஸோ மச்… அன்ட் ஐ லவ் யூ வெரி மச்…”

என்று கூறியவாறு அவனது கழுத்தில் தனது இரு கைகளால் மாலைபோல் கட்டி கொண்டு தொங்கினாள். அவளது அதிரடியில் சுற்றியிருந்த அனைவரும் அதிர்ச்சியும் ஆச்சரியுமாக நின்றிருந்த பொழுது, வைஷாலி மட்டுமே எதுவும் தெரியாத பாவனையில் அமைதியாக ஒரு கள்ளச் சிரிப்பைக் கொடுப்புக்குள் அதக்கிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஹேய்…! நீயா? எப்பிடி இங்க வந்தாய்…?”

ஒரு இன்ப அதிர்வோடு அவளிடம் கேட்டவன், மெதுவாய் திரும்பி வைஷாலியைப் பார்த்தான். அவளின் முக பாவனையைக் கண்டதுமே சஞ்சயனுக்குப் புரிந்துபோனது இது அவளது வேலை என்று.

தனது கழுத்தில் கட்டிக் கொண்டு தொங்கியவளைச் சற்று தள்ளி நிறுத்தியவன்,

“இன்னும் நீமாறவில்லையா…?”

என்று அவளிடம் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கும் பொழுதே ஆயுஷ், “அத்தை…!” என்றவாறு அந்தப் பெண்ணை ஓடிச் சென்று கட்டிக் கொண்டான். அவளும் அவனை வாரியணைத்து முத்தமழை பொழிந்தவாறே சஞ்சயனை ஒரு நமட்டுச் சிரிப்புடன் பார்க்க அவனோ வைஷாலியையும் அவளையும் பார்த்து முறைத்தவன்,

“நான் நிம்மதியாக இருக்கிறது உனக்குப் பிடிக்காதே…”

என்று சற்றே கோபத்தோடே கூறினாலும் அவன் கண்களில் பல்பு எரிந்து கொண்டிருந்தது. வைஷாலியின் காதைக் கடித்த அந்தப் பெண்,

“வைஷூக்கா…. இனி உங்க ப்ரெண்டிட குடுமி என்ர கையில… நீங்க இவர் சத்தம் போடுற எல்லாத்தையும் கண்டுகொள்ளாதையுங்கோ…”

என்று கூறிக் கண்ணடிக்க, தனது நண்பனின் வாழ்வும் இனி முழுமை பெற்று விடும் என்ற மகிழ்ச்சியில் வைஷாலி மனதும் நிறைந்தது.

கண்ட கனவுகள் ஆயிரம்

பட்ட வலிகள் ஏராளம்

தாண்டிய தடைகள் தாராளம்

இந்த நண்பர்களின்

நட்பின் பிணைப்போ பாராளும்!

இனியாவது இந்தத் தோழர்கள் வாழ்வில் சந்தோசச் சாரல் மட்டுமே வீசட்டும்!

~ சுபம் ~

1 thought on “யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 25 நிறைவுப் பகுதி”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ராணி மங்கம்மாள் – 30 (final part)ராணி மங்கம்மாள் – 30 (final part)

30. இருள் சூழ்ந்தது உணர்வு மங்கிய அந்த நிலையிலும் கூடப் பேரனுக்குக் கெடுதல் நினைக்கவில்லை ராணி மங்கம்மாள். ‘தனக்குக் கெடுதல் செய்தாலும் நாட்டு மக்களுக்கு அவன் நன்மை செய்து சிறப்பாக ஆட்சி நடத்தி நாயக்க வம்சத்துக்கு நற்பெயர் தேடித்தர வேண்டும்’ என்றே

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 04யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 04

கனவு – 04   வைஷாலி வேலை முடித்து வீட்டிற்குத் திரும்பிய போது அதுல்யா வீட்டில் இருந்தாள். தாயாரோடு தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தவள், வைஷாலியைக் கண்டதும் பேச்சை முடித்துக் கொண்டு சமையலறைக்குச் சென்று இருவருக்கும் தேநீர் தயாரித்து எடுத்து வந்தாள். அதற்குள்

கபாடபுரம் – 12கபாடபுரம் – 12

12. அந்த ஒளிக்கீற்று   இருளில் எங்கிருந்தோ எதிர்வந்த அந்த ஒற்றை ஒளிக்கீற்றே கரைகாணாப் பேரிருளுக்குப் பின் விடிந்து விட்டாற் போன்ற பிரமையை உண்டாக்கிற்று அவர்களுக்கு.   “மற்றொருவருடைய ஆட்சிக்குட்பட்ட கோ நகரத்தில் இப்படியொரு இருட்குகை வழியைப் படைக்கும் துணிவு வர