Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

உள்ளம் குழையுதடி கிளியே – 7

அத்தியாயம் – 7

கோவையின் சற்று ஒதுக்குப்புரத்தில் தனிமை விரும்பிகளுக்காகக் கட்டப்பட்ட வில்லாவில்தான் சரத் தன் தாயாருக்காக அந்த வீட்டினை வாங்கியிருந்தான்.

அக்குடியிருப்பில் ஒவ்வொரு வீடுகளும் குறிப்பிட்ட இடைவெளியில் கட்டப்பட்டிருந்தன. சுற்றிலும் பல நிறங்களில் பூக்கள், புல்வெளிகள் என்று வடிவமைக்கபட்டுப் பராமரிக்கப்படும் தோட்டம், நடுவே வீடு.

அனைவருக்கும் பொதுவாக நடுவில் குழந்தைகளுக்கான பார்க், அரசாங்க வங்கி ஒன்றின் எக்ஸ்டென்சன் கிளை, போஸ்ட் ஆபிஸ், அன்றாடப் பொருட்களை விற்பனை செய்யும் சிறிய பலசரக்குக் கடை என்று அந்தக் குடியிருப்பை விட்டு வெளியே வர அவசியமில்லாத அளவுக்கு வசதிகள் நிறைந்திருந்தன.

தோட்டத்தைப் போலவே வீடும் அழகாய் வடிவமைக்கப் பட்டிருந்தது. மூன்று கார்களை நிறுத்தும் அளவுக்கு இடம் விட்டுக் கட்டப்பட்ட போர்ட்டிகோ. அங்கு காரை நிறுத்துவிட்டு வீட்டினுள் நுழைந்தால் செருப்பைக் கழற்றி வைக்க அழகான ஷூ ரேக் ஒன்று சுவற்றோடு சுவராய் பதிக்கப் பட்டிருந்தது.

ஷூ ரேக்கின் கதவைத் திறந்தால் ஒவ்வொரு அடுக்காக விரிந்து செருப்பை வைக்க சிறு சிறு கம்பார்ட்மென்ட்கள் தென்பட்டன. காலனியை வைத்ததும் மறுபடியும் சாத்திவிட்டால் இடமும் மிச்சம், பார்க்கவும் அழகாய் இருக்கும். அதுதவிர குடைகளை மடக்கி வைக்கவும், பைகளை அடுக்கி வைக்கவும் ஒரு தனி ஷெல்ப்.

அதைத்தாண்டி வந்ததும் பளிங்குத் தரையில் பளிச்சிடும் வரவேற்பறை. இரவில் மின்விளக்கின் ஒளியில் மேலும் பளீரென்று தெரிந்தது. அதற்குக் கான்ட்ராஸ்ட் நிறத்தில் கருப்பு லெதர் சோபாக்கள் மேலும் பணக்காரதன்மையை பறை சாற்றியது.

ஹாலின் வழியே போர்டிகோவைப் பார்க்குமாறு ஒரு சிறிய அறை. படிப்பதற்கு, அலுவலக வேலைகள் செய்ய எதுவாக இருக்கும். அங்கேயே மேலும் இரு படுக்கை அறைகள். இரண்டும் தாராளமாக மிகப் பெரிதாக பாத் அட்டாச் வசதியுடன் இருந்தன.

ஒவ்வொரு படுக்கை அறையிலும் குயின் சைஸ் பெட், தாராளமான ஷெல்புகள் என்று விஸ்தாரமாகவே இருந்தது. அங்கிருந்த ஒரு அலமாரியிலேயே ஹிமாவின் துணிகளும், துருவ்வின் துணிகளும் மற்றும் அவனது விளையாட்டு சாமான்களும் அடங்கிவிட்டன.

“சரத் நானும் துருவ்வும் கீழ் பகுதியில் இந்த அறையில் தங்கிக்கிறோம்”

“அங்கேயா… டிவி இருக்காதே… நாளைக்கே அந்த ரூமுக்கு ஒரு டிவி டெலிவர் பண்ண சொல்றேன்” என்ற வண்ணம் கடைக்கு ஆர்டர் தரும் பொருட்டு செல்லை எடுத்தான் சரத்.

“வேண்டாம் சரத். ஹாலில் இருக்க டிவியே போதும். படுக்கை அறையில் டிவி வச்சா நைட் கூட படம் பாக்கத் தோணும். தூக்கம் கெட்டுப் போய்டும்”

செல்லைக் கையில் பிடித்தவண்ணம் அவளைக் கேலியாகப் பார்த்தான்

“நான் வாங்கிதரேன்னு சொல்ற ஒவ்வொண்ணுத்துக்கும் ஒரு காரணம் கண்டுபிடிச்சு அவாய்ட் பண்ணு”

“அப்படியெல்லாம் இல்ல… இது நிஜம்மான ரீசன்தான்”

“சரி டிவி வேண்டாம்… விளையாட கொஞ்சம் விளையாட்டு சாமான்களாவது கண்டிப்பா வாங்கித் தருவேன்”

“சரி” என்றாள் ஏனென்றால் பழனியம்மாள் விளையாட்டு பொருட்களைத் தேடி, இருந்ததில் சுமாராய் தோன்றியதைப் பொறுக்கி எடுத்து சென்றது அவளது மனதை பாத்திருந்தது.

நாய் வேஷம் போட்டால் குறைக்கத்தான் வேண்டும். சரத்தின் மனைவி வேஷம் ஏற்றதால் அவனது செல்வ நிலமைக்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும். துருவிற்கு நல்ல விலையுர்ந்த விளையாட்டு சாமான்கள், அப்படியே இருவருக்கும் சில நல்ல உடைகளும் இருந்தால் பார்ப்பவர்களின் சந்தேகப் பார்வையிலிருந்து தப்பிக்கலாம் என்ற எண்ணத்தில்

“வெளிய போறப்ப நாங்களும் வரோம். சில உடைகள் கூட வாங்கணும்”

“குட்… ஒரு மணி நேரத்தில் கிளம்பலாம். நானும் ரெடியாயிட்டு வரேன்” என்று இரண்டிரண்டு படிகளாக மாடியில் ஏறினான்.

மாடியில் மூன்று அறைகள் இருக்கும் போலிருக்கிறது. அதில் ஒன்றில் சரத் தங்குவான் போலும். அவன் தாய் பெரும்பாலும் கிராமத்திலேயே இருப்பாராம். கிராமம் மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் இருக்கிறதாம் பேர் கூட ‘அன்னூர் ‘என்று சொன்னதாய் நினைவு.

அங்கு அவர்களது தோட்டமும் அதில் தந்தை கட்டிய வீடும் இருக்கிறதாம். அதை விட்டு வர மனமில்லாததால், இந்த வீட்டுக்கு அவ்வளவாக வருவதில்லை என்றும் கூடுதல் தகவலாய் சொன்னான்.

யாரும் இல்லாத இந்த வீட்டுக்கு வந்துதான் என்ன செய்யப்போகிறார். அதற்கு சொந்தக்காரர்களின் அருகிலாவது இருக்கலாம் என்று ஹிமா தன் மனதில் சொல்லிக் கொண்டாள்.

இப்போது உடல்நிலை சரியில்லாத நிலையில் என்ன செய்வார் என்று தெரியவில்லை. சரத்தும் சொல்லவில்லை. பணம் வாங்கிக் கொண்டு, மனைவி வேடம் போடும் தனக்கு, என்னென்ன கேள்விகள் கேட்க அனுமதி இருக்கிறது என்று தெரியாமல் விழித்தாள்.

பின்னர், அவங்க எப்ப வந்தா என்ன… என்னால முடிஞ்ச அளவுக்கு அவங்களுக்கு நிம்மதியைத் தர மாதிரி நடந்துக்கலாம்… என்று முடிவு செய்தாள். இதனால் அவளது நிம்மதி பறி போகப் போவது அறியாமல்.

மாலை நேரக் காற்று வாழ்த்திச் செல்ல, இருமருங்கிலும் தென்பட்ட வண்ண வண்ண மலர்கள் தங்களது ஓய்வுக்குத் தயாராகின. அவர்களுக்குத் தொந்தரவு தரவேண்டாம் என்று எச்சரித்து கூடுகளிலிருந்த தாய் பறவைகள் தங்கள் குஞ்சுகளுக்கு உணவு தந்து உறங்கவைக்க முயன்றன. அந்த வயல்வெளியில் தங்களது தோட்டத்து வீட்டை நோக்கி தனது காரில் பயணித்துக் கொண்டிருந்தான் சரத் சந்தர்.

இந்தப் பயணத்தின் குறிக்கோள் அவனது தாயாரை சமாதனப் படுத்துவது. இரண்டு நாட்களாக அவர் வருவார் என்று காத்திருக்கிறான். ஆனால் வந்தபாடில்லை. ஒரு நாள் பயணத்தை தள்ளியும் போட்டாயிற்று.

அவன் மறுநாள் காலை கண்டிப்பாக டெல்லி செல்ல வேண்டும். அவன் இருக்கும் போதே ஹிமாவை தாயார் சந்தித்தால் அவளுக்கும் சுலபமாக இருக்கும் பிரச்சனையின் தாக்கமும் பாதியாகக் குறையும்.

அவன் வீட்டில் இல்லாதபோது தாயார் ஏதாவது கேட்டால் ஹிமாவால் சமாளிக்க முடியுமா என்று தெரியவில்லை. இதுவே உண்மைத் திருமணமாக இருந்திருந்தால் இந்த அளவுக்குப் பிரச்சனை இருந்திருக்காது. நினைக்கும்போதே சரத்துக்கு ஆயாசமாக இருந்தது.

தோட்டத்து வீட்டுக்கு சென்றதும், அவனை முன்பே எதிர்பார்த்தது போல அவனது மாமா, அம்மாவின் அண்ணன், பெயர் சின்னசாமி

“வாப்பா எப்படி இருக்க… அம்மா வீட்டு வழி தெரிய ரெண்டு நாளாச்சாக்கும் “ என்றார் எகத்தாளமாய்.

“தெய்வானை உன் மவன் வந்திருக்கான் பாரு” என்று வீட்டினுள் நோக்கிக் குரல் குடுத்துவிட்டு, வெற்றிலை போடும் வேலையை சிரத்தையாகத் தொடர ஆரம்பித்தார்.

வழக்கம் போல் தோட்டத்திலிருந்த பாத்ரூமுக்கு சென்று, சிமெண்ட் தொட்டியில் எப்போதும் கதகதப்பாக இருக்கும் வெந்நீரால் கால்களை அலம்பிவிட்டு, வீட்டினுள் சென்றான். அதுதான் அவர்கள் வீட்டுப் பழக்கம்.

அழகான எளிமையான கிராமத்து இல்லம் அது. கோவை மாவட்ட கிராமங்களில் இருப்பதைப் போலவே பழமை மாறாத வீடு. கூப்பிடு தூரத்தில் உறவினர்களின் வீடுகள். ஒருவர் வீட்டு வயல் வேலைக்கு மற்றவர்கள் ஒத்தாசை செய்வது வழக்கம். சில நிறை குறைகள் இருந்தாலும் இதைப் போன்ற சொந்தங்களை இப்போதெல்லாம் காண்பது அபூர்வம்தான்.

அவன் வீட்டினுள் சென்று சில நிமிடங்களாகியும் அவனது தாய் வரவில்லை. பின்னர் அவனுக்காக ஒரு தட்டில் பலகாரத்துடன் வேலை செய்யும் பெண்மணி ஒருவர் கண்முன் தோன்றினார்.

தட்டிலிருந்த கச்சாயமும், மகிழம்பூ முறுக்கும். இரண்டுமே அவனுக்குப் பிடித்தமானவை. முறுக்காவது முன்னரே செய்திருக்கலாம். ஆனால் சூடாக இருந்த கச்சாயம் இவனைப் பார்த்தவுடன் செய்ததாய் இருக்கவேண்டும்.

பச்சரிசியும், வெல்லமும் கலந்து செய்த கச்சாயம் திகட்டாமல் இருக்க வாழைப்பழமும் தேங்காய்த் துருவலும் ஒரு ஓரத்தில் வைப்பது அவன் அன்னையின் வழக்கம். அன்றும் அவற்றை தட்டின் ஓரத்தில் கண்டதும் அன்னைதான் அடுப்பிலிருந்து சூடாக எடுத்துத் தந்திருக்கிறார் என்று சொல்லி மனதில் ஒரு துள்ளலை உண்டாக்கியது.

இனிப்பை அவன் உண்டு முடித்து, ஒரு முறுக்கும் சாப்பிட்டானதும் அடுத்த முறுக்குடன் சூடான காப்பி வரும் என்பது அவனுக்குத் தெரியும். அதுதான் அவன் தாயார்… அவனுடன் பேசாவிட்டாலும் சிறு சிறு செயல்கள் மூலம் அக்கறையையும் அன்பையும் வெளிக்காட்டும் ஜீவன். இந்த ஜீவனுக்கு மகிழ்ச்சியைத் தருவதை விட வேறென்ன வேண்டும் அவனுக்கு.

இந்தக் காதலில் மாத்திரம் மாட்டாமல் இருந்திருந்தால் இவ்வளவு பிரச்சனைகள் இருந்திருக்காது. அவர் கை காட்டிய பெண்ணை மணந்திருக்கலாம். சந்தோஷமாகவோ, எரிச்சலுடனோ வாழ்க்கை வண்டி ஓடியிருக்கும்.

உணவு உண்டு, காப்பி அருந்தி, ஜன்னலின் வழியே சூரியன் மறைவதையும் நிலவு தோன்றுவதையும் கண்டு களித்து, பொறுமை அவனை விட்டு விடை பெறும் வரையில் அவன் அன்னை தெய்வானையின் தரிசனம் கிடைக்கவில்லை.

இவருக்காக எவ்வளவு பெரிய நாடகத்தை எல்லாம் அனாயாசமாக நடத்தி இருக்கிறான். இவருக்கு மகனைப் பார்க்கக் கூடப் பிடிக்கவில்லை. இனியும் இப்படியே விட முடியாது. வேகமாக கூடத்தை ஒட்டியிருந்த அவனது தாயின் அறைக்குச் சென்றான்.

“மருமகளைப் பாக்கணும் பாக்கணும்னு உயிரை எடுத்திங்கல்ல. இப்ப நாங்க கோயம்பத்தூர் வீட்டுக்கு வந்து ரெண்டு நாளாச்சு இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இப்படி என்னை விட்டுத்தள்ளி இருப்பிங்க”

மகன் திடீரென்று அறைக்குள் நுழைந்து பேசியது தன்னை பாதிக்காதது போல தெய்வானை காட்டிக் கொண்டாலும் அவரது இதழ்களின் ஓரம் ஒரு வெற்றிப் பெருமிதம். அந்த அரையிருட்டில் சரத்தின் கண்களில் அது தென்படவில்லை. பதில் கூறாமல் உதாசீனப் படுத்தியபடி துணி மடித்த தாயை எரிச்சலுடன் முறைத்தான்.

“இப்ப வருவிங்களா மாட்டிங்களா. உங்களுக்கு வர விருப்பமில்லைன்னா ஹிமாவை மெட்ராசுக்கே கூட்டிட்டு போயிடுறேன்” என்று சரத் போட்ட குண்டு உடனடியாக வேலை செய்தது.

“ஏன்… என் மகனைத் தட்டிப் பறிச்சுட்டவளுக்கு மாமியார் கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்கணும்னு தோணலையா” என்று நிதானமாக சொன்னார்.

“இழுத்துட்டுப் போனதும் இல்லாம பள்ளிக்கூடம் போற அளவுக்கு ஒரு பிள்ளையையும் பெத்துருக்கா… நாளைக்கு என் பேரன் அவளை மதிக்காம யாரையாவது இழுத்துட்டு வந்து நின்னாத்தான் என் கஷ்டம் புரியும்.

நான் வந்து அந்த மகாராணியைப் பாக்கணுமாமா… ஒரு நல்ல குடும்பத்துப் பொண்ணா இருந்தா என் பேரனையும் கூட்டிட்டு வந்து என் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிருக்கணுமா இல்லையா…”

தாயின் பேச்சில் தெரிந்த நியாயம் புரிய, என்ன பதில் சொல்வது என்று புரியாமல் திகைத்தான் சரத்.

“அவளைப் பார்க்க வரலைன்னாலும் என் பேரனைப் பாக்கவாவது வருவேன். ஆனால் இன்னும் கொஞ்ச நாளாகும்” பேச்சு முடிந்தது என்பது போல எழுந்து சென்றுவிட்டார்.

பழனியம்மாளின் மூலம் அவர் அவனது வீட்டு விஷயங்களை அறிந்திருக்கிறார் என்பது புலப்பட்டாலும் அதனுடன் அவரது ஊகங்களையும் சேர்த்துக் கொண்டார். இதில் எத்தனை சதவிகிதம் உண்மை என்பதை சொல்ல வழியின்றி இறுக்கமான முகத்துடன் வீட்டுக்கு சென்றான்.

இரவு அவன் சென்றபோது துருவ் தூங்கியிருந்தான். ஆனால் ஹிமா அவனுக்காக உணவு உண்ணாமல் காத்திருந்தாள்.

“எனக்காக காத்திருக்காம சாப்பிட்டிருக்கலாம்ல”

“நீங்க நாளைக்கு ஊருக்குப் போனதும் நான் தனியாத்தான் சாப்பிடணும். ஒரு நாள் லேட்டா சாப்பிட்டா ஒண்ணும் குறைஞ்சு போய்ட மாட்டேன்” என்றாள்.

அறையில் உடை மாற்றி வந்தபோது மல்லிகைப்பூ நிறத்தில் இட்டிலியும், காரம் குறைவாக போட்ட புதினா சட்டினியும் செய்திருந்தாள்.

“அம்மா வீட்டில் பலகாரம் ஏதாவது சாப்பிட்டிருப்பிங்கன்னு லைட்டா டின்னர் செஞ்சேன்”

“நிஜம்தான்… எங்கம்மா கச்சாயமும் முறுக்கும் செஞ்சிருந்தாங்க”

“கச்சாயமா…”

“எங்க ஊர் ஸ்வீட். பழனியம்மாகிட்ட கேளு செஞ்சு தருவாங்க”

“அதைவிடுங்க… போன காரியம் ஸ்வீட்டா இருந்ததா”

“எங்கம்மாவோட வருத்தம் இன்னமும் குறையல. நான் வீட்டில் இருக்கும்போது வந்தா நிலமையை கொஞ்சம் சுலபமா ஹேண்டில் பண்ணலாம்னு நினைச்சேன். ஆனால் நான் ஊரில் இருக்கும்போதுதான் வருவாங்க போலிருக்கு”

“கவலைப்படாதிங்க நான் சமாளிச்சுக்குறேன்”

“எங்கம்மா கிராமத்து மனுஷி, மனசில் பட்டதை வெடுக்குன்னு சொல்லிடுவாங்க”

“சரத்… அவங்க எவ்வளவு கடினமா இருந்தாலும் நான் எப்படியாவது சமாளிக்கிறேன். நீங்க ஆபிஸ்ல கவனம் செலுத்துங்க. ஒகே…”

பேசாமல் இருந்தவன் பாதி உணவைக் கூட உண்ணாமல் எழுந்து கை கழுவினான்.

“என்னாச்சு சரத்…”

“பழனியம்மா மூலமா நம்ம வீட்டு விவகாரங்கள் அவங்க காதை எட்டும் போலிருக்கு”

“ம்ம்…”.

“என் மனைவி மேல இருக்கும் கோபம் குறையல. ஆனால் அவங்க பேரனைப் பார்க்க வராங்களாம்”

“பேரன்னா… துருவ்வா…” திகைப்புடன் கேட்டாள்.

ஆமாம் என்று தலையசைத்தான்.

அந்த சின்ன தலையசைப்பு, ஹிமாவின் மனதில் மிகப் பெரிய சுனாமியை ஏற்படுத்தியது.

துருவ்வுக்கு சரத் எப்படி அப்பாவாக முடியும். என் சத்யா அல்லவா அவனுக்குத் தகப்பன். மனம் கொதிப்பது வெளியே தெரியாமல் படாத பாடு பட்டு அடக்கினாள். வேகமாய் அவளது அறைக்கு சென்றவளைத் தடுக்கத் தோன்றாமல் சோர்வாய் மாடிப் படியில் ஏறத்தொடங்கினான் சரத்சந்தர்.

2 Comments »

  1. Hai sis,
    Enna achu “உள்ளம் குழையுதடி கிளியே” update pannave illa, I’m waiting sis, pl. update soon, last i read only 8 epi, then u removed the link. But time na miss panna virumbala so update soooooon sis…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: