Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

உள்ளம் குழையுதடி கிளியே – 5

அத்தியாயம் – 5

றுநாள் ஹிமாவதியின் வீட்டுக்கு வந்தவன் க்றிஸ்டியையும் தங்கள் உரையாடலில் இணைத்துக் கொண்டான்.

 

“ஹிமாவின் வாழ்க்கையில் அக்கறை கொண்டவர்களில் நீங்களும் ஒருத்தர். எங்களுக்குள் ஒரு நல்ல லாபகரமான ஒப்பந்தம் ஏற்பட ஒரு யோசனை வச்சிருக்கேன். அதை அவளிடம் பேசும்போது நீங்க கூட இருந்தா நல்லாருக்கும். அதைத்தவிர ஹிமா சின்ன பொண்ணு அவளுக்கு யோசனை சொல்ல நம்பிக்கையான துணை தேவைப்படலாம்” என்று தெளிவாக சொல்லிட்டே  தனது திட்டத்தை சொன்னான்.

 

தானும் நக்ஷத்திராவும் பத்து வருடங்களாக ரிலேஷன்ஷிப்பில் இருப்பதையும், தனது தாய் செய்த கல்யாண ஏற்பாட்டைத் தடுக்க தங்களுக்கு மணமாகிவிட்டதாய் பொய் சொல்லியதையும், அதை நம்பிய அவன் தாய் தெய்வானை கோபித்துக் கொண்டு பேசாமல் இருப்பதையும், நக்ஷத்திராவுக்கு வந்த வாய்ப்புகளால்  தங்களது திருமணம் தள்ளிப் போவதையும் சொன்னான்.

 

அவனது தாய்க்கு இருதய அறுவை சிகிச்சை முடிந்ததை சொல்லி அவர் அவனது குடும்பத்தோடு தனது இறுதி நாளை கழிக்க ஆசைப்படுவதை சொன்னபோது சரத்தின் கண்கள் அவனையும் அறியாது கலங்கிவிட்டன.

 

“ராஜியை.. சாரி  நக்ஷத்திராவை நான் ரொம்ப லவ் பண்றேன். அவளைத் தவிர வேற யார் கூடவும் வாழ முடியும்னு எனக்குத் தோணல. ஆனா இப்ப நிலைமை என்னன்னா எங்கம்மாவால் எந்த ஒரு அதிர்ச்சியையும் தாங்க முடியாது’ சில நிமிடங்கள் மௌனம் காத்தான். அது அவன் தன்னைத்தானே தெற்றிக் கொள்ளும் முயற்சி என்பது தோழிகளுக்குப்  புரிந்தது.

 

“எங்கப்பா நான் சின்னதாயிருக்கும்போதே தவறிட்டார். அதுக்கப்பறம் எங்கம்மாதான் எல்லாம். அவங்க இதுவரைக்கும் நல்லதே அனுபவிச்சதில்லை. இப்ப என்னோட, என் மனைவியோட, என் குடும்பத்தோட தன்னோட கடைசி காலத்தை வாழணும்னு ஆசைப்படுறாங்க. ஒரு மகனா அதை நிறைவேத்தி வைக்கிறது என் கடமை”

 

“இதுக்கு ஹிமா எப்படி உதவ முடியும்”

 

“ஹிமா என் மனைவியாக கொஞ்ச நாள் நடிக்கட்டும். அவளோட அம்மாவுக்கு சிகிச்சைக்கும், துருவ்வின் படிப்புக்கும் நான் பொறுப்பேத்துக்குறேன்”

 

“சரி அந்த கொஞ்ச நாள் எவ்வளவு நாள்?”

 

“எனக்கும் நக்ஷத்திராவுக்கும் கல்யாணம் நடக்கும் வரை”

 

“அதுக்கப்பறம் உங்களுக்கு ஆசை நாயகியா இருந்தான்னு அவப்பேரோட ஹிமா வாழணுமா?” கிறிஸ்டியின் குரலில் எரிச்சல்.

 

“ஹிமாவுக்கு ஏற்படும் இழப்புக்காகத்தான் அவளோட குடும்பத்தோட நீட்ஸ் எல்லாத்தையும் நான் தீர்த்து உதவுறேன். அதுமட்டுமில்லாம அவளுக்கும் கணிசமான பணத்தையும், எதிர்காலத்துக்காக உத்திரவாதமும் தர்றேன்” தனது செயலை நியாயப்படுத்தினான் சரத்.

 

“ஆனால் இதெல்லாம் எதுக்காக செய்யுறீங்கன்னு புரியல”

 

“ஹிமா முறைப்படி என்னைக் கல்யாணம் செய்துக்கணும். என்னோட மனைவியா என் ஊரில் என் அம்மா கூட வசிக்கணும். நான் கேட்கும்போது டைவர்ஸ் தரணும். இதுதான் என் ஒரே நிபந்தனை. இதுக்கு ஒத்துகிட்டா நான் ப்ராமிஸ் செய்த எல்லாத்தையும் அதுக்கு மேலயும் அவளுக்கு செய்யத் தயாரா இருக்கேன். இதைப்பத்தி நீங்க நல்லா யோசிச்சுட்டு பதில் சொல்லுங்க”

 

“சரத்… ஏன் நான்… நீங்க தரும் பணத்துக்கு எத்தனையோ பெண்கள் நடிக்க வருவாங்களே” குழப்பத்துடன் கேள்வி கேட்டாள் ஹிமா.

 

“முதலாவது உனக்கும் எனக்கும் ஒரு நல்ல புரிதல் உண்டு. நம்ம ரெண்டுபேரும் அடுத்தவர் மேல அக்கறை கொண்டவங்க. இந்த மூன்று வருடமும் பெரிய பிரச்சனை இல்லாம போயிடும்.

 

இரண்டாவது நான் தரப் போகும்  பணம்….  பணத்தேவை இருக்கும் உனக்கு உதவும் என்பதை உன்னால் மறுக்க முடியாது. வேற யாருக்கோ போகும் இந்த செல்வம் தேவைப்படும் உனக்காவது வரட்டுமே என்ற எண்ணம்.

 

மூன்றாவது முக்கியமான காரணம் என் அம்மாவும் உன்னை மாதிரியே மகனுக்காக வாழறவங்க. அவங்களுக்கு ஒரு நல்ல மருமகளா இருப்பண்ணு என் மனசு சொல்லுது”

 

சரத் கிளம்பி சென்றுவிட்டான். இரவு முழுவதும் தோழிகள் யோசித்தார்கள்.

 

“சரத்தை எவ்வளவு தூரம் நம்பலாம்?”

 

“நல்லவர்… இந்த நக்ஷத்திரா இந்த மாதிரி ஒரு அருமையான ஆளைவிட்டுட்டு பணத்தை ஏன்  துரத்துறான்னு தெரியல” என்றாள் ஹிமா.

 

“இத்தனை வருஷமா லவ் பண்றவனை கூடக்  கல்யாணம் பண்ணிக்க முடியாம அவ எங்க லாக் ஆயிருக்காளோ யாருக்குத் தெரியும். பணம் அதிகமாக பிரச்சனையும் அதிகமாகும்” உலக வாழ்க்கைத் தத்துவத்தை சொன்னாள் கிறிஸ்டி.

 

“சரி எனக்கு என்ன பதில் சொல்றதுண்ணே புரியலடி”

 

“எனக்கென்னமோ கடவுளா பார்த்து ஒரு வழி காட்டிருக்க மாதிரி தோணுது. பேசாம ஓத்துக்கோ… உங்கம்மாவுக்கு சிகிச்சை தரலாம். துருவ்வை அந்த ஸ்பெஷல் ஸ்கூலில் சேர்த்து விடலாம். நீயும் உன் தகுதியை வளர்த்துக்கலாம். டைவர்ஸ் கிடைச்சதும் நல்ல வேலையில் சேர்ந்துக்கோ”

 

“இருந்தாலும் ரெண்டாவது திருமணம் சத்யாவுக்கு செய்ற துரோகம் இல்லையா… “ ஹிமாவின் குரல் நடுங்கியது.

 

“வாழவே வழி இல்லாதவங்க இதை பத்தி எல்லாம் பேசிக் கூடாது. சத்யா மாசா மாசம் உனக்கு உக்காந்து தின்னுற மாதிரி வருமானமும், வீடும், நிலமும் வச்சுட்டு போயிருந்தா இதை எல்லாம் கடை பிடிக்க ஒரு பிரச்சனையும் இல்லை.

 

நம்ம பெத்தவங்க நம்ம படிப்புக்கு முக்கியத்துவம் தரல. ஒரு பெண்ணுக்கு கல்யாணம் ஒண்ணுதான் வாழ்க்கையின் தலையாய தேவைன்னு நினைச்சே வளர்த்துட்டாங்க. படிச்சு முடிச்ச கையோட ஒருத்தனை பிடிச்சு அவங்க கடமையையும் நிறைவேத்திட்டாங்க. என் வீட்டுக்காரன் பக்கத்து வீட்டு பொம்பளையோட ஓடிட்டான். உன் வீட்டுக்காரன் உலகத்தை விட்டே ஓடிட்டான். இந்த மாதிரி எதிர்பாராத சூழ்நிலையை பேஸ் பண்ண முடியாம, நம்ம தேவையை நிறைவு செய்யும் பொருளாதார வசதியும் இல்லாம நட்டாத்தில் நிக்கிறது என்னமோ நம்ம ரெண்டுபேரும்தான்.

 

கம்ப்யூட்டர் கோர்ஸ் செக்கரேட்டரி கோர்ஸ் இதை போல தேவை இருக்குற வேலைகளுக்கான தகுதிகளும் நமக்கு இப்போதைக்கு இல்லை. இப்ப பாக்குற வேலை மட்டும் போச்சு மகளே நம்ம ரெண்டு பேரும்  சிங்கித்தான் அடிக்கணும்” என்று அவர்களின் நிலைமையின் பயங்கரத்தை எடுத்துரைத்தாள்.

 

“இங்க பாருடி…. ஆம்பளைங்க சொல்வாங்களே பொண்டாட்டி செத்தா புது மாப்பிள்ளைன்னு… அந்த மாதிரி சொகுசு வாழ்க்கைக்காகக் கல்யாணம் பண்ணிக்கல. ஒரு பேசிக்கான வாழ்க்கைக்கும் கடமைக்கும்தான் இந்த யோசனைக்கு சம்மதிக்கிற.

 

நல்லா கேட்டுக்கோ… இப்பவும் நீ சத்யாவுக்கு துரோகம் செய்யல… அவரோட மகனுக்கு நல்ல எதிர்காலத்தைத் தரத்தான் இந்த தியாகத்தை செய்ற. சரத் ராஜி ராஜின்னு சொல்றதை பார்த்தா உன்னைக் கெட்ட எண்ணத்தோட திருமணம் செய்துக்குற மாதிரி தெரியல. அதனால் கல்யாணத்துக்கு சம்மதி.

 

கடவுள் கிட்ட தீர்வு வேணும்னு தினமும் ப்ரே பண்ணா மட்டும் பத்தாதுடி. அவரே பாத்து தரும் இந்த சந்தர்ப்பத்தை புத்திசாலித்தனமா உபயோகப் படுத்திக்கணும். என்ன முழிக்கிற…. சரத் மோசமானவரா என் கண்ணுக்குப் படல… என்கிட்டே கேட்டிருந்தா நான் ஒத்துகிட்டு லைபில் செட்டில் ஆயிருப்பேன். ஆனால் அவருக்கு நீ பலனடையனும் என்ற எண்ணம்தான் இருக்கு. அதனால் என்னை கேட்டா உனக்கு இது சூட் ஆகும் ” என்றாள்.

 

அந்த வார இறுதியில் தாயை சந்தித்தாள் ஹிமா. உடன் கிறிஸ்டியும் சென்றிருந்தாள்.

 

“ஆன்ட்டி, அன்னைக்கு சரத் வந்தார்ல… அவரைப்பத்தி என்ன நினைக்கிறீங்க?”

 

“நல்ல தங்கமான பிள்ளை. ஏன்மா கேக்குற”

 

“அந்த தங்கமான பிள்ளை ஹிமாவைக் கல்யாணம் செய்துக்க ஆசைப்படுது. நீங்க என்ன சொல்றிங்க”

 

கண்களை மூடிக் கொண்டார். மூடிய கண்களிலிருந்து தாரை தாரையாய் நீர். “கடவுளே நீ கண் திறந்துட்டியா.. என் வேண்டுதல் உனக்கு கேட்டுருச்சா” என்றவர் ஹிமாவை தன்னருகே அழைத்தார்.

 

“நீ மறுமணம் செய்துக்கிறதில் என்ன தப்பு. சத்யா நல்லவன்தான். ஆனால் அவன் கூட வாழ நமக்கு கொடுப்பினை இல்லையே. உன் அப்பா மட்டும் உயிரோட இருந்திருந்தா உன்னை இந்த நிலமையில் விட்டு வைச்சிருப்பார்னா நினைக்கிற” தனது கேவலைக் கட்டுப்படுத்திக் கொண்டார்.

 

“உன்னை பாக்கும்போது எனக்கு எவ்வளவு வேதனையா இருக்கு தெரியுமா. சீக்கிரம் செத்து போய்டணும்னு தோணுது. நீ சரத்தை கல்யாணம் செய்துட்டு சந்தோஷமா இருந்தால் அதுவே எனக்கு வாழணும் என்ற நம்பிக்கையை தரும்”

 

தாயின் கண்களைத் துடைத்து விட்டாள் ஹிமா.

 

“சரிம்மா… உன்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு சம்மதம் சொல்லலாம்னு நினைச்சேன். அவர் உன் மருத்துவ செலவையும் ஏத்துக்குறேன்னு சொல்லிருக்கார். நீ உடம்பு சரியாகி என் கூட வந்துடும்மா. அப்பறம் நீ நான் துருவ்  மூணு பேரும்  “

 

குறுக்கிட்டு மகளைத் திருத்தினார் “இனி நீ, துருவ், சரத் மூணு பேர்தான் நானெல்லாம் அடுத்தவங்கதான். இல்லையா கிறிஸ்டி”

 

ஆசையுடன் சொன்ன தாயின் முகத்தில்தான் எத்தனை மலர்ச்சி. அவர் இதே எண்ணத்துடன் இருக்கட்டும். ஒப்பந்தம் எல்லாம் எங்களோடு போகட்டும். முடிவு செய்தாள்.

 

அன்று மாலையே சரத்தை அழைத்தவள் தனது சம்மதத்தை சொன்னாள்.

 

“சரத் நீங்க உங்க காதலியை லவ் பண்றதை போலவே நானும் என் கணவர் சத்யாவை உயிருக்குயிரா காதலிக்கிறேன். அவர் இடத்துக்கு இன்னொருத்தர் வர முடியாது. அதனால என்னால உங்க மனைவியா நடிக்கத்தான் முடியுமே தவிர மனைவியா வாழ முடியாது”

 

“புரியுது… உனக்கு சம்மதமில்லாதது எதுவும் நடக்காது”

 

அடுத்த வாரமே ஹிமாவின் தாயார் மற்றும் கிறிஸ்டியின் குடும்பத்தினர் முன்னிலையில் எளிமையாக அவர்களது ரெஜிஸ்டர் மேரேஜ் நடந்தது.

 

“ஒரு போட்டோ எடுத்துக்குவோம். அம்மாவுக்காக” என்றான் சரத்.

 

“ஸார், மேடம் தோளில் கை போட்டுக்கோங்க. இன்னும் கொஞ்சம் நெருக்கமா நில்லுங்க” என்று உத்தரவுடன் போட்டோவைக் க்ளிக்கினான் போட்டோகிராபர். சரத் இயல்பாக அந்த உத்தரவை நிறைவேற்ற ஹிமாவுக்குக் கூசிப் போனது.

 

‘கடவுளே இந்த மூணு வருஷத்தில் இன்னும் இது மாதிரி எத்தனை சோதனைகளை தாங்கணுமோ’ என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.

 

“ஈஸி ஹிமா… கிறிஸ்டி கிட்ட நிக்கிற மாதிரி நினைச்சுக்கோ… எல்லாம் சுலபமாயிடும்” என்ற சரத்தின் வார்த்தைகள் அவளுக்குத் தனித் தெம்பைத் தந்தன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: