Tamil Madhura என்னை உன்னுள் கண்டெடுத்தேன்,கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 23

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 23

23 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

சத்தம் கேட்டும் யாரும் மேலே போகும் தைரியம் இன்றி இருந்தனர். வந்த விருந்தினர் அனைவரும் கிளம்ப ஜெயேந்திரன், தனம், மரகதம், விக்ரம், சஞ்சனா, வாசு, பிரியா, ரஞ்சித், சிந்து, அக்ஸா அனைவரும் செல்ல ஆதர்ஷ் சோபாவில் அமர்ந்திருக்க அவன் பக்கத்தில் உடைந்த போட்டோவை கண்டு அனைவரும் தயங்கினர்.

விக்ரம் “ஆதர்ஷ் அது வந்து..” ஆதர்ஷ் முறைக்க அவனின் கோபம் கண்டு ஏதும் பேசாமல் அமைதியாகிவிட

வாசு “டேய்.. நாங்க பண்ணது எத நினைச்சுன்னா….” என முடிக்கும் முன் ஆதர்ஷ் அவனை பார்த்து  “பேசாம போயிடு.. நான் உங்க யார்கிட்டேயும் பேசற எண்ணத்துல இல்லை ” என அவன் வார்த்தையில் பார்வையில் இருந்த கோபம், நீங்களுமா இப்டி பண்ணீங்க என்பது போல இருந்த கேள்வி, ஆதங்கம் யாரையும் வாயை திறக்கிவிடவில்லை. இறுதியில் ஜெயேந்திரனை பார்க்க ஏன் இப்டி என்பது போல கேட்க அவரே “நான் அங்க சொன்னது உண்மைதான் ஆதர்ஷ். நீ என் தம்பி பையன் தான். நீ இங்க குழந்தைல இருக்கும் போது வந்திருக்க.. உனக்கு சின்னவயசுல நடந்த ஆக்சிடெண்ட்ல அடிவேற பலமா பட்டதுல முழுசா ஞாபகம் இருந்திருக்காது. இதை இங்க வந்த போதே சொல்லிருந்தா நீ கிளம்பி போயிருப்ப.. அப்போ உன்னோட மனநிலை அந்த மாதிரி இருந்தது. அதான் அப்போ சொல்லல. எங்க வீட்டு புள்ளை நீ மட்டும் இப்டி கஷ்டப்படறத எங்களுக்கு பாக்க கஷ்டமா இருக்காதா? இந்த கொஞ்ச நாளா உன் நடவடிக்கை அக்சராவை கல்யாணம் பண்ணிக்கிட்டு நீயும் எல்லாரை போல சந்தோசமா குடும்பம், குழந்தைன்னு இருப்பேன்னு நம்பிக்கை வந்தது. நீயும் பழையபடி மாறிட்டதா நினைச்சோம். அதான் இப்டி…” என

ஆதர்ஷ் பெருமூச்சுடன் எழுந்து “சரி, அங்க அத்தனை பேர் முன்னாடி சொல்றதுக்கு முதல என்கிட்ட சொல்லணும்னு தோணலையா?”

ஆதர்ஷ் பொறுமையாக ஆனால் அழுத்தமாக “கொஞ்சம், சொத்து, பணம்ன்னு காமிச்சு பழக்கப்படுத்திட்டா வந்துடுவேன்னு நினைச்சீங்களா?” என கேட்க

விக்ரம் “டேய், ஏன் டா இப்டி பேசுற? அப்டியெல்லாம் இல்லை.”

ஆதர்ஷ் “வேற எப்படி? அப்போ ஏன் முன்னாடியே சொல்லல.. இப்போ வெளில எல்லாரும் பேசுனத கேட்ருப்பிங்க தானே. எனக்கு இது தேவையா? நான் கேட்டேனா? இந்த சொத்து பணம் அந்தஸ்து எல்லாமே? இந்த மாதிரி சொத்து பிஸ்னஸ் பிரச்சனைன்னு தான் எல்லாத்தையும் எதுக்கு இழக்கறோம்னே தெரியாம விட்டுகுடுத்திட்டு இருகாங்க. அவங்களோட வாழ பிடிக்காம தான் நான் தனியா இருக்கேன். ஆனா இப்போ எனக்கே தெரியாம என்னை இன்வோல்வ் பண்ணி எனக்கு கிடைச்ச பேரை பாத்தியா? நான் இந்த வீட்டு வாரிசு, அதோட உன் சொத்தையும் சேத்தி எடுத்துக்க தான் இத்தனை வேலை செஞ்சேன்னு சொல்ராங்க. சரி இப்போ அப்டி இல்லேன்னாலும் பின்னாடி மாறிடுவானு சொல்ராங்க. சொல்லு நான் இதெல்லாம் எதிர்பார்த்தா இங்க வேலை செஞ்சேன். எல்லாத்துக்கும் அவ்ளோ ரிஸ்க் எடுத்தேன். நீங்க என் மேல வெச்ச நம்பிக்கையை காப்பாத்தணும்னு நினச்சேன். செய்ற வேலைய முழுமனசோட ஏத்துக்கணும்னு தான் நினச்சேன்.

உண்மைதான் என்னோட பிஸ்னஸ் அதுனு நினச்சா நான் எப்படி சாப்பாடு தூக்கம்னு இல்லாம வேலை பாப்பேனோ அதேமாதிரி தான் பண்ணேன். அதுக்கு காரணம் இத முன்னாடி கொண்டுவரதுக்கு.”

ஜெயேந்திரனை பார்த்து “நீங்க சொன்னிங்களே வேற யாருக்காவது வித்து அவங்க இத சரியா கவனிக்காம இல்ல அவங்க தேவைக்கு இத அழுச்சிட்டா நம்மள நம்பி வேலை செய்ற இத்தனை பேருக்கும் அது பெரிய அடியா விழுந்துடும்னு சொன்னதால. மனுஷங்கள அவங்க உணர்வுகளை மதிக்கிறிங்கனு நினச்சு தான் உங்க பிஸ்னஸ நான் முன்னாடி கொண்டு வர பாத்தேன். உங்க சொத்தை காப்பாத்தணும்னு இல்லை.”

 

தனம் “அப்டி எல்லாம் இல்லை பா… எங்களுக்கு உன் சந்தோசம் தான் முக்கியம். அதுக்குதான் நாங்க இவளோ நாள் சொல்லாம இருந்தது… நீயும் அக்சராவும் விரும்பறீங்கன்னு தெரிஞ்சதும் நீ மனசு மாறிருக்கேன்னு நம்பிக்கைல  தான் இப்போ சொல்லிட்டோம்.”

ஆதர்ஷ் “அப்டியே இருந்தாலும் என்கிட்ட கேட்ருக்கலாமே… நான் எதனால யார்கூடவும் அட்டச்மெண்ட் இல்லாம இருக்கேன், எல்லாரை விட்டு விலகி இருக்கேன்னு தெரியுமா? தெரியும்ன்னா அந்த பிரச்சனை இப்போ சரி ஆகிடுச்சா? சொல்லுங்க…” அவர் தலை குனிய,

ஆதர்ஷ் சலிப்புடன் “எனக்கு தெரியாம இருந்தத தெரியாமலே வெச்சிருக்கலாமே, ஏன் சொல்லி திரும்பி எல்லாரும் பிரச்சனை பண்றீங்க? இப்போ நான் சாராவை லவ் பண்றேனு சொன்னது தான் பிரச்னையா? ரொம்ப வருஷம் கழிச்சு ஒன்னு ஆசைப்பட்டு அது கிடைச்சு அத சந்தோசமா வெளில சொன்னேன். அத ஏன் டா சொன்னோம்னு நினைக்கவெச்சுட்டீங்களே?” என அவன் இயலாமையுடன் பேச தனம், ஜெயேந்திரன் இருவரும் வருந்த அதை பொறுக்காமல்

விக்ரம் “ஆதர்ஷ் நீ தப்பாவே புருஞ்சுக்கற… உன் மேல பாசம் காட்டுனது தப்புங்கிறியா? என்னமோ நீ இந்த பிஸ்னஸ் எல்லாமே முன்னாடி கொண்டு வரதுக்காகவும், சொத்தை காப்பாத்தறதுக்காகவும்  உன்னை யூஸ் பண்ணிக்கிட்ட மாதிரி சொல்ற? நீ இல்லாட்டி இத நடந்திருக்காதுன்னு சொல்றியா? நீதான் பெஸ்ட்னு நினைக்காத.” என அவன் கத்த

ஆதர்ஷ் விக்ரமை பார்த்தவன் “யார் மேலையுமே பாசம் காட்டி பாதில விட்டுட்டு போறது தப்புனு சொல்றேன். பிஸ்னஸ்க்காக இல்லை சொத்துக்காகன்னு சொல்லல. ஆனா உனக்கு நான் காலேஜ்ல இருந்து போட்டியா இருக்கேன் இப்போ ஜாப்லையும் அதனால  தானே என்னை வெளில நகர்த்தி என் சூழ்நிலையை யூஸ் பண்ணிகிட்ட இப்போ நீ நாம ஒர்க் பண்ண கம்பெனில பஸ்டா இருக்கே? அந்தமாதிரி எண்ணம் உன் மனசுல சின்னதா கூட இல்லேனு உன்னால சொல்லமுடியுமா? அண்ட் நான் பெஸ்ட்டா இல்லையா? எந்தளவுக்கு பெஸ்ட்னு உனக்கு நல்லாவே தெரியும். அதனால தானே தைரியமா உன் சொத்தை என்னை நம்பி விட்டு என்ன ரிஸ்க் வேணாலும் எடுக்கலாம்னு சொல்லிருக்க.. என் மேல நம்பிக்கைஇல்லாமலா?.. உன் திறமை மேல நீ வெச்ச நம்பிக்கையை விட என் திறமை மேல அதிகம் வெச்சிருக்க விக்ரம் .. அத மறந்துடாத.” என ஜெயேந்திரன் “ஆதர்ஷ் வேண்டாம் விடு, அவன் ஏதோ புரியாம கத்திட்டான் விக்ரம் நீ பேசாம இரு..”

வாசு “விடுங்க அங்கிள் அவன் பேசட்டும். விக்ரம் சொன்னதுல என்ன தப்பிருக்கு. ஆதர்ஷ் நல்லா கேட்டுக்கோ.. இவளோ நாள் நான் உன்கூட இருந்திருக்கேன், நீ சந்தோசமா எல்லாரமாதிரியும் இருக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன்டா.. ஒரு சிலர் பண்ண தப்புக்கு நீ எல்லாரையும் இப்டி நினைக்கிறது ரொம்ப தப்பு. நாங்க எல்லாருமே நீ எங்ககூட இருக்கணும்னு தான் நினச்சு இதை பண்ணோம். ஆனா வந்தவனுங்க ஏதோ தப்பா பேசுனதுக்காக எல்லாம் இங்க யாரும் பொறுப்பாக முடியாது. உன் மேல எல்லாரும் பாசமா தான் இருக்காங்க. உன்னோட வறட்டு பிடிவாதத்தால எல்லாத்தையும் இழந்துடாத. அப்புறம் தனியாளாதான் இருப்ப…” என கூற

ஆதர்ஷ் “என் வறட்டு பிடிவாதம். ம்ம்… வெறும் என் பிடிவாதத்துக்காக தான் நான் எல்லாரையும் விட்டு விலகி இருக்கேன்ல.” என குறுக்கும் நெடுக்கும் நடந்தவன் தன் கோபத்தை முஷ்டிகளை இறுக்கி கட்டுப்படுத்தி

சிந்துவிடம் சென்று “சிந்து கிளம்பு, சஞ்சீவை கூட்டிட்டு வா. நாம போலாம்.”

சிந்து “அண்ணா, சொல்றேன்னு கோவிச்சுக்காத… பெரியம்மா, பெரியப்பா நம்மகூட இருக்கத்தான் அண்ணா இது எல்லாமே பண்ணாங்க. நாம இங்கேயே இருக்கலாம் அண்ணா” என வாசு “ம்ம்ம்.. கேட்டுக்கோடா… அந்த சின்ன புள்ளைக்கு புரிஞ்சு அளவுக்கு கூட உனக்கு புரியலையா?.. ”

ஆதர்ஷ் மெலிதாக விரக்தியாக புன்னகைத்துவிட்டு சிந்துவிடம்  “ஒண்ணும் பிரச்னைஇல்லடா, தப்பும் இல்ல… இங்க இருக்கறவங்க எல்லாரும் நல்லவங்க தான். உங்களை நல்லா பாத்துக்குவாங்க… உனக்கு இங்கதான் பிடிச்சதுனா இங்கேயே இரு. அண்ணா கோவிச்சுக்கமாட்டேன்.. இன்னும் சொல்லப்போனா இதுதான் உங்களுக்கு பாதுகாப்பான இடமும் கூட. பத்திரமா இருங்க. நான் கிளம்புறேன்…” என கிளம்ப சிந்து பேச வந்தும் அவன் அவர்களை கோபப்படாமல் ஆனால் அங்கேயே இருக்கச்சொல்லிவிட சிந்து கண்கலங்க

வாசு “ஆதர்ஷ் இது ரொம்ப ஓவர்டா… நீ யார் மனசையுமே புரிஞ்சுக்கமாட்டியா? ச்சா… இவ்ளோதானா நீ?”

ஆதர்ஷ் “ஆமாடா, அவ்ளோதான் நான். அப்படித்தானே நினைச்சிருக்கீங்க. அப்டியே வெச்சுக்கோங்க. நான் இப்போவும் அதேதான் சொல்றேன். எனக்கு சொத்து, பிஸ்னஸ், குடும்பம், என்னை சுத்தி சொந்தபந்தம்னு எதுவும் வேண்டாம். போதுமா? என்னை தனியா விடுங்க கெட் லாஸ்ட் ஆல்..” என இறுதியாக கத்திவிட்டு சென்றுவிட்டான்.

 

அந்த இடமே இடிஇடித்து ஓய்ந்தது போல இருக்க ஜெயேந்திரன் அப்டியே சரிய அனைவரும் ஓடிச்சென்று அவரை பிடித்து வெளியே அழைத்து வந்து சோபாவில் அமர வைக்க அக்சரா தண்ணீர் கொண்டுவந்து கொடுத்துவிட்டு “நீங்க பீல் பண்ணாதீங்க அங்கிள்..சரி ஆகிடும்.” என வாசு, விக்ரம், சஞ்சனா, பிரியா அனைவரும் “என்ன இருந்தாலும் ஆதர்ஷ்க்கு இவளோ பிடிவாதம் இருக்கக்கூடாது. அவர்க்கு பாசமான குடும்பம் இல்லேன்னா சொல்லலாம். பாசம் வெக்க இத்தனை பேர் இருந்தும் ஏத்துக்கமாட்டேனு சொல்றவங்கள என்ன பண்ணுவாங்க? அவனுக்கு திமிர் தன்னையே எல்லாரும் தாங்குவாங்கனு நினைப்பு.. பாசம்னாலே என்னனு தெரியாதவன். யாருமில்லாம இருந்தான் அவனுக்கு எல்லாம் புத்தி வரும்.” என ஆளாளுக்கு பேச ஜெயேந்திரன் “போதும் நிறுத்துங்கடா… அவனுக்கு பாசம் வெக்க தெரியாது நீங்க எல்லாம் சொல்றிங்களா? அவன் அளவுக்கு யாருமே அன்பா இருக்கமுடியாது டா… பேசுற பழகுற எல்லாரையுமே அவன்கிட்ட இழுத்துடுவான். அவ்ளோ நல்லா பழகுவான். அவனுக்கு குடும்பம் தான் எல்லாமே. அவங்க தான் பஸ்ட். அவங்கள்ல ஒருத்தருக்கு பிரச்னைனாலும் அந்த சின்ன வயசுலயே அப்டி சண்டைபோடுவான். அதே சமயம் பீல் பண்ணவும் செய்வான். கோபமே தெரியாம இருந்தவன்டா ஆதர்ஷ். இன்னைக்கு அவன் இவ்ளோ கோபப்படறதுக்கு நாங்க எல்லாருமே ஒரு காரணம் ஆகிட்டோம்.” என வருத்தத்துடன் அவர் நடந்தவற்றை கூறினார்.

 

ஜெயேந்திரன் “எங்க அப்பா வெங்கடராமன். இந்த ஊட்டில இருக்கற பணக்காரங்கள அவரும் ஒருத்தர். நல்ல மனுஷன் தான் ஆனா ரொம்ப கோபக்காரர். அதோட இந்த கெளரவம், அந்தஸ்து எல்லாம் ரொம்ப பாப்பாரு. அம்மா என் தம்பி மகேந்திரன் ஸ்கூல் படிக்கும்போதே இறந்துட்டாங்க. நான் என் தம்பி மகேந்திரன் இரண்டுபேரும் ரொம்ப நல்லபடியாவே வளந்தோம். கேட்டதெல்லாம் கிடைக்கும். நான் கொஞ்சம் பொறுமை அமைதி, என் தம்பி அதான் ஆதர்ஸோட அப்பா அவன் கொஞ்சம் எங்க அப்பாமாதிரி கோபம், அடம்பிடிப்பான், நினைச்சதை சாதிச்சே ஆகணும்னு இருப்பான். ஆனா நல்லவன் எல்லாருக்கு ஹெல்ப் பண்ணுவான், அதுல பிரச்சனையே இருந்தாலும் கடைசிவரைக்கும் எடுத்த பொறுப்பை விடக்கூடாதுனு இருப்பான்.

 

எனக்கும் தனத்துக்கும் கல்யாணம் நிச்சயம் ஆன சமயம், மகேந்திரன் காலேஜ் கடைசிவருசம் படிச்சிட்டு இருந்தான். அவங்க பிரண்ட்ஸ்ல ஒரு பையன் லவ் மேரேஜ், அந்த பையனுக்கு ஹெல்ப் சப்போர்ட்க்கு, குடும்பம்ன்னு ஆளில்ல. பொண்ணு வீட்ல பிரச்சனை. இவனுங்க பிரண்ட்ஸ் தான் சேந்து கல்யாணம் பண்ணிவெச்சாங்க.  அந்த பொண்ணு கொஞ்ச நாள்ள உண்டாகிருந்தா. இவங்க பிரண்ட்ஸ் நல்ல சப்போர்ட் இருந்தும் விதி யாரை விட்டது அந்த பொண்ணுக்கு பிரசவ சமயத்துல அவ புருஷன் வண்டில வேகமா வர ஆக்சிடென்ட் ஆகி ஸ்பார்ட் அவுட். இதை கேட்டதும் குழந்தை பிறந்ததும் அந்த பொண்ணும் இறந்துட்டா. படிக்கற பசங்க, புள்ளைங்க குழந்தையை எடுத்துட்டு யார் வீட்டுக்கு போனாலும் பிரச்னை. ஆஸ்ரமத்துல குடுக்க பிடிக்கலேன்னு மகேந்திரன் குழந்தையை எடுத்துக்கிட்டு இங்க வரேன்னு எனக்கு நடந்த எல்லா தகவலும் சொன்னான். எனக்கு யோசையான இருந்தது அப்பா இத எப்படி எடுத்துக்குவாருன்னு ஆனாலும் தம்பி நல்லவிசயத்துக்காக சொல்லறான்னு நானும் வரட்டும் பாத்துக்கலாம்னு விட்டுட்டேன். என் கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடி இதெல்லாம் நடந்தது. மகேந்திரன் சொன்னமாதிரி குழந்தையோட வந்தான் கூடவே ஒரு பொண்ணும்.

எனக்கு என்ன சொல்றதுன்னு தெரில. எல்லாரும் அது அவன் குழந்தைன்னே முடிவு பண்ணிட்டாங்க. அவன் தனியா அப்பாகிட்ட பேசணும்னு சொல்லி பேசுனான். குழந்தை, பிரண்டோட குழந்தை, அம்மா அப்பா இரண்டுபேருமே அந்த குழந்தைக்கு இப்போ இல்ல. இறந்துட்டாங்க. நாம வளத்திக்கலாம்னு தான் தூக்கிட்டு வந்துட்டேன். கூட இருக்கற பொண்ணு நான் காதலிக்கற பொண்ணு தான். பேரு பைரவி. அவங்க வீட்ல ரொம்ப அவசரமா கல்யாண ஏற்பாடு பண்ராங்க. வேற வழி இல்லாம கூட்டிட்டு வந்துட்டேன்பா. நீங்க அவங்க வீட்ல பேசுங்கபான்னு சொன்னான்.

அப்பாவுக்கு பயங்கர கோபம், படிக்கப்போனவன் திரும்பி வரும்போது பொண்ணையும், குழந்தையும் கூட்டிட்டு வந்தா எல்லாரும் என்ன நினைப்பாங்க. அதோட அந்த பொண்ணு வேற சாதி, அதுல வேற அப்பாவுக்கும் மகேந்திரனுக்கும் பிரச்சனை, எல்லாத்துக்கும் மேல அது என் கல்யாண சமயம் வேற, கிட்டத்தட்ட சொந்தக்கரவங்க எல்லாரும் இருக்கும்போது இவன் இப்டி பண்ணிட்டானேன்னு அவரு திட்டி மூஞ்சிலையே முழிக்கக்கூடாதுன்னு சொல்லி அவனை அனுப்பிச்சிட்டாரு. நாங்க எவ்ளோ சொல்லியும் எங்க அப்பா அவனை மன்னிக்கல, ஏத்துக்கவும் இல்லை. மகேந்திரனுக்கும் ரொம்ப ரோசம். போய்ட்டான். வெறித்தனமா வேலை செஞ்சான். அந்த குழந்தையை ஆனந்த – மகேந்திரனும், பைரவியும் அவங்க சொந்த புள்ளையாவே வளத்தாங்க… அப்புறம் பைரவியோட அம்மா அப்பா பையன் நல்லபையான இருக்கறத பாத்து ரொம்ப சந்தோஷப்பட்டாங்க.. பைரவி – மகேந்திரனை ஏத்துக்கிட்டாங்க.. ஒரு 5 வருஷம் போச்சு. பொண்ணு அப்போதான் புள்ளத்தாச்சியா இருக்கான்னு அவங்க எல்லாத்தையும் மறந்துட்டு இவங்ககூடவே வந்து இருந்து பாத்துக்கிட்டாங்க. பைரவியோட அப்பாவும் ஓரளவுக்கு சொத்து பணம்ன்னு இருக்கறவருதான். மருமகனுக்கு பிஸ்னஸ் பண்ண அவரே பணம் தந்தாரு. மகேந்திரன் பிஸ்னஸ் வளர ஆரம்பிச்சது. அவங்களுக்கு ஆதர்ஷ் பொறந்தான்.

 

இங்க எனக்கும், தனத்துக்கும் அப்போவரைக்கும் குழந்தைகளே இல்லை. எங்க அப்பாவுக்கு ரொம்ப கவலை. என்னதான் வெளிப்படையா பேசலேன்னாலும் நான் மகேந்திரன் பத்தி விஷயம் தெரிஞ்சுவெச்சிருப்பேன். அதனால எங்க அப்பாகிட்ட அவனுக்கு குழந்தை பொறந்திருக்குன்னு சொன்னதும் அவருக்கு பேரனை பாக்கணும்னு ஆசை வந்திடுச்சு. பாசமும் இருக்கு இருந்தும் கௌரவத்தை விடமுடில அவரால. அதனால் பேரனை மட்டும் கூட்டிட்டு வர சொன்னாரு. சரி கொஞ்சம் கொஞ்சமா சரி ஆகிடுவாருன்னு நாங்க போயி ஆதர்ஷ கூட்டிட்டு வந்தோம். மகேந்திரன் முதல கோவப்பட்டான் அவரை வரமாட்டாரா? பேசமாட்டாரான்னு ஆனா பைரவி அவனை சமாதானப்படுத்தி பெரியவங்க கொஞ்சம் இப்போதான் இறங்கி வந்திருக்காங்க. நாமளும் பிரச்சனை பண்ணகூடாதுனு ஆதர்ச எங்களோட அனுப்பிச்சு வெட்சா.

ஆதர்ஷ் சிரிக்கறத பாத்தாலே கல்லு மாதிரி இருந்த எங்க அப்பாவே கரைஞ்சிடுவாரு. சொல்லுவாரு “டேய் ஜெயேந்திரா, இந்த பயல பாரேன் நானும் எத்தனையோ குழந்தைங்களை பாத்திருக்கேன். ஆனா எனக்கு சிரிக்கணும்ன்னு கூட தோணாது. ஆனா இந்த ஆதர்ஷ் பையன் சிரிச்சே மனுசனா வரவெச்சிடுறான். எந்த வேலையும் செய்யவிடாம பண்ணிடறான்…. குருக்களே, இங்க பாருங்க என் பேரனை… எப்படி?.. அதோட ஆசீர்வாதம் பண்ணிட்டு போங்க … பிரசாதம் கொடுக்க வந்த கோவில் அர்ச்சகர் அவனை பார்த்துவிட்டு “ஐயா நீங்க தான் 10வயசு குறைஞ்ச மாதிரி இருக்கீங்க எல்லாம் இவன் வந்த நேரம் தான். … என கூறிவிட்டு ஆதர்ஷ்ன் பெயர், பிறந்த தேதி எல்லாம் கேட்டுக்கொண்டு, பையன் ரொம்ப சூட்டிகையா வருவான். அவன் இருக்கற இடத்துல எப்போவுமே சந்தோசம் இருக்கும். அவன் மனசார ஒன்னு நினச்சா அது கண்டிப்பா நடத்திடுவான். மனசு ரொம்ப சுத்தம், ரொம்ப பாசமானவன், உங்க குடும்பத்தை ஒன்னு சேர்க்க போறவனே அவன் தான். எல்லாரும் மதிக்கிற மாதிரி உங்க பேரை காப்பாத்தி உங்களை விட பேரும் புகழோட இருப்பான். இந்த ஆஸ்தியை ஆள்ற யோகம் அவனுக்கு தான்  இருக்கு.” என கூறிவிட்டு வெளியே ஜெயேந்திரனிடம் “தம்பி அப்பாகிட்ட சொன்னா சங்கடப்படுவாருனு தான் சொல்லல…”

“பையனுக்கு எதுவும் பிரச்னை இல்லையே?”

“இல்லை இல்லை. பையனுக்கு ஆபத்துனு இல்லை. ஆனா ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல அவனுக்கு நிறையா பிரச்சனை குழப்பம் இருக்கும். அது அவன் வாழ்க்கையவே புரட்டிப்போட்ரும் .அத அவன் கடந்து வந்துட்டா அவனை அடுச்சுக்க ஆளே இருக்காது.” ஜெயேந்திரன் கவலை கொள்ள “வருத்தப்படாதிங்க.. என்ன பிரச்சனை வந்தாலும் அந்த கடவுள் அவன் கூடவே இருப்பான். எல்லாத்தையும் அவனே சமாளிச்சு வந்துடுவான்.” என குருக்கள் சென்றுவிட வெங்கட்ராமனோ தன் பேரனை எண்ணி எண்ணி பூரித்துப்போனார்.

அடுத்த வருடமே தனம் கர்ப்பம் தரிக்க அனைவர்க்கும் மேலும் சந்தோசம். எல்லாமே ஆதர்ஷ் வந்த சமயம் என அனைவரும் நம்பினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 08ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 08

8 – மனதை மாற்றிவிட்டாய் வீட்டினுள் நுழைந்த ஆதி, திவி நந்துக்கு ரசகுல்லா ஊட்டிவிட, நந்து திவிக்கு ஸ்வீட் ஊட்டிவிடுவதை பார்த்து ‘குடுத்துவெச்சவன் நந்து’ என்று நினைத்துக்கொண்டு அவளை சீண்டும் விதமாக “ஏன் மேடம்க்கு இன்னும் குழந்தைன்னு நினைப்போ? ஊட்டிவிடாம அவங்களுக்கா

வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 05வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 05

அந்த வார்த்தகர் அவனைக் கெஞ்சித் தமக்கு திவான் வரி போடாமல் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, அவனிடம்நூறு கொடுப்பார். இம்மாதிரி நமது சமயற்காரன் ஒவ்வொரு நாளும் பல உத்தியோகஸ்தர்களிடத்திலும் வர்த்தகர்களிடத்திலும் பெருத்த பெருத்த தொகைகளை இலஞ்சம் வாங்கத் தொடங் கினான். அவன் திவானினது

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 39ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 39

உனக்கென நான் 39 ” நீ ஏண்டி வந்த ” என்ற தாயிடம் தன் தந்தையிடம் வாங்கி வந்திருந்த அனுமதி கடித்ததை ஓப்பித்தாள். ” மறுபடியும் உனக்கு செல்லம் குடுக்க ஆரம்பிச்சுட்டாரா அவரு! கேட்டா என் பொண்ணுக்கு நான் செல்லம் குடுப்பேன்