Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 01

என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

 

உறவுகள் இருப்பினும் ஏமாற்றம், குழப்பம் என அன்பிற்கு அடங்கி தன் சுயத்தை இழந்து அனைவரையும் வெறுக்கும்  நிலையில் தனித்து வாழும் நாயகன். உறவுகளை இழந்தாலும் அன்பையே ஆதாரமாக கொண்டு மகிழ்ச்சியாக வாழும் நாயகி. விஷமென நினைத்து அவளை விட்டு விலக, பின்  மருந்தென அவளே மனதில் பதிய அவனின் சுயத்தையும், மகிழ்ச்சியையும் மீட்டு தருவாளா அவள்? என்பதே இந்த கதை என்னை உன்னுள் கண்டெடுத்தேன்“.

 

1 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

அன்று மலர்ந்த மலர்களோடு, பறந்து திரியும் பறவைகளோடும் பச்சை பசேலென்ற தெரியும் மரங்களும் மலைகளும் மௌன மொழிகளில் உரையாடிக்கொண்டிருக்க வேகமாக வீசிய காற்று சில்லென்ற உடலை சிலிர்க்க செய்ய அதைவிட வேகமாக அதற்கு நேர் எதிராக இங்கே ஒருவனின் உள்ளமோ கொதித்துக்கொண்டிருந்தது. அவனின் மனதில் ஆயிரம் கேள்விகள், பல போராட்டங்கள் ஆனால் போரிடப்போவது யாருடன் என்றே புரியாமல் உழன்றுகொண்டிருக்க, இந்த பாதை இந்த பயணம் பல வளைவுகளை கடந்து எங்கே முடியும் என்பது அவனுக்கு தெரியும். அது இன்றைக்கான முடிவு. ஆனால் தன் வாழ்வின் பயணம் எதை நோக்கி, எதற்காக, எப்படி எப்போது முடிவடையும், இதற்கு தீர்வென்பது உண்டா இல்லையா? என்பது எதையும் உணரமுடியாமல் அதேசமயம் பெண்களின் மேல் தனக்கிருக்கும் நன்மதிப்பை நாளுக்கு நாள் அனைவரும் குறைத்து இப்போது இல்லாமலே செய்துவிட்டனரே என்று அவன் தவித்துக்கொண்டிருந்தான்.

“பொண்ணுங்க தான் பிடிச்சதே பிடிவாதம்னு இருக்காங்க, எப்படியாவது நினைச்சதை அடைஞ்சராங்க, ஏமாத்தறது நடிக்கறது, பொய்னு நிறையா வகையில பாத்து பொண்ணுங்கள கொஞ்சம் வெறுத்தாலும், அம்மா, அண்ணினு குடும்பத்துல பாத்த பொண்ணுங்களோட அன்பு பாசம் பாத்து ஒருவகைல இப்படியும் இருப்பாங்கன்னு நம்புனது தப்பாயிடிச்சே..அவங்களும் எமோஷனலா அவங்க பாசம், பீலிங்ஸ வெச்சு தான் அடக்கபாக்கறாங்க. மத்தவங்க உணர்ச்சிக்கு மதிப்பு குடுக்காம தியாகம்ங்கிற பேர்ல அவங்களும் சங்கடப்பட்டு அடுத்தவங்களையும் கஷ்டப்படுத்தி இது தேவையான்னு கேட்டா கண்ணீர் மட்டும் தான் பதிலா வருது… பொண்ணுங்களோட பாவம், பகையை சம்பாரிச்சாதா பிரச்சனை டேஞ்சர்னு எல்லாரும் சொல்ராங்க. அதைவிட டேஞ்சர் அவங்களோட பாசத்துல அடிமையாகிறது. அத எப்போ எல்லாரும் புரிஞ்சுக்கப்போறாங்களோ?”

 

அதுசரி, இத புரிஞ்சுக்க உனக்கே இத்தனை வருஷம் ஆச்சு. இன்னமும் உனக்கு விழுகுற ஒரு ஒரு அடில இருந்து அது புரிஞ்சாலும் நீ அவங்கள நம்புறதானே ஏதோ ஒரு மூலைல அவங்க பாசத்துக்காக தானே செய்றாங்கன்னு உனக்கு தோணுது தானே? என அவன் மனம் அவனிடம் வினா எழுப்ப,

இவனோ “உண்மை தான் இதுவரைக்கும் அப்டி ஒரு எண்ணம் இருந்தது. ஆனா இதுக்கு மேல அப்டி இருக்கமாட்டேன். பாசம்ங்கிற பேர்ல பயந்து கட்டிப்போட்டு வாழவெக்கிறதுல மட்டும் என்ன நல்லது இருக்கப்போகுது. இந்த முடிவுல யார்தான் சந்தோசமா இருக்காங்க… இனி எந்த பொண்ணுக்கும் என் வாழ்க்கைல இடமில்லை. முக்கியமா அவங்களோட பாசத்துக்கு அடங்கி இருக்கப்போறதில்லை…” என்றான்.

அவனது மனமோ அப்போ இப்போ உன்கூட வர உன் தங்கச்சி? அவ மேல உனக்கு பாசமில்லையா? அவ வேண்டாமா?”

திரும்பி அவளை பார்த்தான். இன்னமும் குழந்தைத்தனம் மாறாதா முகம், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் உலகம் அறியாத குழந்தை அதற்குள் இவளுக்கு தான் எத்தனை துயரம் என்றிண்ணியவன் அவளது தலையை வருடிக்கொடுத்து “இவளை நான் நல்லாத்தான் வளர்ப்பேன். எதையுமே யோசிக்காம தன்னோட தைரியத்தை தப்பா உபயோகிக்கிற, தனக்காக மட்டுமே சுயநலமா இருக்கற பொண்ணு மாதிரியும் இல்லாம, தனக்குனு எதையுமே யோசிக்காம தியாகம், பாசம்ங்கிற பேர்ல கோழையா இருக்கற பொண்ணு மாதிரியும் இல்லாம தைரியமா பிரச்சனைய கண்டு பயப்படாம அதே சமயம் மத்தவங்க மனசையும், உணர்ச்சிகளையும் புரிஞ்சுக்கறவளா தான் வளர்ப்பேன்” என தன் தங்கை சிந்தியாவை தோளில் சாய்த்துக்கொண்டான். அதோட அவன் மடியில் இருந்த ஒன்றரை வயது குழந்தை சஞ்சீவ் சிணுங்க அவனையும் தட்டிக்கொடுத்து சமாதானப்படுத்தி தூங்க வைத்தான்.

 

டிரைவரிடம் “அண்ணா, உங்களுக்கு ரொம்ப டையார்டா இருந்ததுன்னா பக்கத்துல டீ ஏதாவது குடிச்சிட்டு கொஞ்ச நேரம் கழிச்சுக்கூட போலாம்..” என்றான்.

இந்த கரிசனத்தில் அவரும் புன்னகைத்துவிட்டு “சரிங்க தம்பி, நீங்களும் கொஞ்சம்கூட தூங்கவே இல்லேங்களே. தூக்கம் வராட்டி நீங்களும் அப்டியே டீ குடிங்களேன் தம்பி, வாங்கிட்டு வரேன். இன்னும் ஒன்றரை மணி நேரம் தான் அதுக்குள்ள நாம போய்டலாம்.. ” என்று அவரும் நிறுத்த அவனும் குழந்தைகளை சீட்டில் படுக்க வைத்துவிட்டு வெளியே இறங்க டீயுடன் வந்த டிரைவர் “தம்பி மத்தவங்க எல்லாம் எப்போ வருவாங்க.. இங்கே எவ்ளோ நாள் தம்பி இருக்கப்போறிங்க?. உங்களுக்கு ஆட்சேபனை இல்லாட்டி சொல்லுங்க.” என கண்டிப்பாக தெரிந்துகொள்ளவேண்டும் சொல்லு என கேள்வி கேட்டு குடையாமல் அவன் பொறுப்பில் விட அவரது இந்த குணம் பிடிக்க அவனும் சன்னமாக புன்னகைத்துவிட்டு “நாங்க மட்டும் தாங்க. இனி இங்க தான் இருக்கப்போறோம். ஜெயேந்திரன் சாரோட எஸ்டேட்ல தான் வேலை பாக்கபோறேன். தங்கச்சிக்கு ஸ்கூல் இதெல்லாம் இங்கதான் இனி பாக்கணும்.” என

அவரும் “அப்டிங்களா? ஐயாகிட்ட நான் 10 வருசமா வேலை பாக்கிறேன். ரொம்ப முக்கியமானவங்க வந்தாதான் என்னை கூட்டிடுவர அனுப்புவாங்க… இல்லாட்டி அங்கன இருக்குற வேலைய பாக்க சொல்லுவாங்க. அதனால தான் ஐயாவுக்கு சொந்தம்னு நினச்சனுங்க. இங்க தான் வேலை பாக்கப்போறிங்களா? நல்லதா

போச்சு தம்பி, ஐயா ரொம்ப தங்கமானவர், நீங்க இந்த ஊட்டில இருக்கறவரைக்கும் எந்த குறையும் இல்லாம இருக்கும். என் பேரு மூர்த்தி.. நீங்க எப்போ என்ன வேணும்னாலும் என்கிட்ட கேளுங்க தம்பி ” என மொபைல் நம்பரை தந்தார். அவனும் குறித்துக்கொள்ள இருவரும் கிளம்ப உங்க பேரு தம்பி?”

ஆதர்ஷ் யாதவ்.”

 

அந்த கார் பங்காளவில் நுழைய அங்கே உள்ளே இருந்து ஜெயேந்திரன் இவர்களை கண்டதும் “அடடே வர லேட்டாகும்னு நினைச்சேனே. வாப்பா ஆதர்ஷ். எப்படி இருக்க. ட்ராவல் எப்படி இருந்தது. ஏதும் சிரமம் இல்லையே ” என அவர் சகஜமாக பேச இவனும் சிரித்துவிட்டு “ரொம்ப நல்லா இருந்தது சார். அதான் மூர்த்தி அண்ணாவை அனுப்பிச்சிருந்திங்களே. பத்திரமா கூட்டிட்டு வந்துட்டாரு” என்க மூர்த்தி சங்கோஜமாக சிரித்துவிட்டு “அதெல்லாம் ஏதுமில்லேங்க ஐயா. தம்பி எல்லாம் சொன்னா சொன்ன டைம்க்கு ரெடியா இருந்தது. அதனால சீக்கிரமே வந்துட்டோம்.” என கூற அவரது மனைவி தனலட்சுமி வர அவரிடமும் ஓரிரு வார்த்தை பேசிவிட்ட பின்

ஜெயேந்திரனும் புன்னகைத்துவிட்டு “குழந்தைங்க? ”

“கார்ல இருக்காங்க. நல்லா தூங்கிட்டாங்க சார்.”

“ஆமா பாவம் அசதியா இருக்கும்ல. சரி மூர்த்தி, ஸ்டோன் ஹவுஸ்கிட்ட இருக்கற நம்ம கெஸ்ட் ஹவுஸ ரெடி பண்ண சொல்லிருந்தேன். நீ எல்லாமே பண்ணிட்டாங்களா கேளு. இவங்களும் அங்க தான் இனி தங்க போறாங்க. ஆதர்ஷ் நம்ம விக்ரம் கூட படிச்ச பையன். இவங்க அப்பாவும் எனக்கு நல்ல பழக்கம். விக்ரம் தான் இங்க இருக்கற எஸ்டேட், கார்டன், காட்டேஜ் எதையும் பாத்துக்கமாட்டேன், இதுல இன்டெரெஸ்ட் இல்லேனு சொல்லிட்டானே. எனக்கும் வயசாகுது முடியறதில்லை. அதான் ஆதர்ஷ அந்த பொறுப்புல விட்றலாம்னு இருக்கேன். நாளைல இருந்து எல்லாமே நீதான் பாத்துக்கணும். ஜஸ்ட் சைன்க்கு மட்டும் தான் என்கிட்ட வரணும் ஆதர்ஷ் என்றவர் மூர்த்தியிடம் மீண்டும் திரும்பி

அதனால அவங்களுக்கு என்ன வேணுமோ தங்கறதுக்கு, வெளில போக எந்த பிரச்சனையும் இல்லாம நீ பாத்துக்கோ” என

மூர்த்தியும் “கண்டிப்பாங்க ஐயா” என அங்கிருந்து நகர்ந்தார்.

அவனோ “ஐயோ என்ன சார், எல்லாமே என்கிட்ட எப்படி சார். அது சரிவராது. ஜஸ்ட் மேனேஜர் இல்ல சூப்பர்விஸிங் அந்தமாதிரி மட்டும் போதுமே? வேலைக்குத்தானே சார் வந்தேன்.” என அவன் இழுக்க

ஜெயேந்திரன் சிரித்துக்கொண்டே அவனின் தோளில் கைபோட்டு அழைத்து சென்று அமர வைத்து “இதுவும் வேலை தானே பா? ”

“இல்ல சார். நான் கேக்கறது வேலை. நீங்க சொல்லி செய்றது. நீங்க சொல்றது பொறுப்பு குடுத்துட்டு நீயே எல்லாமே பாத்துக்கோன்னு சொல்றிங்க. முழுசா குடுக்கறீங்க. இதுல நிறையா சிக்கல் இருக்கும் சார். அதான் வேண்டாம்னு சொல்றேன்”

“அதெல்லாம் இல்லப்பா…எந்த ப்ரோப்லேமும் வராது… நீ இருக்கறவரைக்கும் நீ பாக்கப்போற.இதுல உனக்கு என்ன பிரச்சனை… என்ன எஸ்டேட் மட்டும் இல்லாம காட்டேஜ், கார்டன் எல்லாமே…இன்னும் சொல்லப்போனா உனக்கு வேலை தான் ஜாஸ்தி இருக்கும்..நீ மகேஸ்வரனோட பையன் உன் திறமை பத்தி அவர்மூலமாவும் எனக்கு தெரியும், என் பையனே வேற உன்னை பத்தி சொல்லிருக்கான்… அப்டிப்பட்டவனா சும்மா சாதாரண வேலை குடுத்து உன் திறமையை குறைகிறதா? எனக்கு நீயும் விக்ரம் மாதிரி தான்… சோ உன்கிட்ட பொறுப்பை குடுக்கிறதுல எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை..”

அவன் இன்னும் தயங்க “ஆனா சார், என்ன இருந்தாலும் விக்ரம் தான் எல்லாமே பாத்துக்கணும். அந்த இடத்துல நான் இருக்கறது சரியா வராது. அதோட எல்லாரும் இந்த முடிவை ஏத்துக்கணும்ல?”

அவர் இவனை கூர்மையாக பார்த்துவிட்டு சிரிக்க பின் “உன்கிட்ட வாசுவும், விக்ரமும் எதுவும் சொல்லலையா?”

அவனும் மறுப்பாக தலையசைக்க அவரும் “அது சரி…பின்ன நீ இப்டி தயங்குற. அதனால கூட சொல்லாம இருந்திருக்கலாம்… விக்ரம்க்கு இதுல முழு சம்மதம். இன்னும் சொல்லபோனா இப்டி ஒரு ஐடியா சொன்னதே அவன் தான். ‘அப்பா எனக்கு இந்த பீல்ட்ல இன்டெரெஸ்ட் இல்ல. ஆதர்ஸ்க்கும், அவன் குடும்பத்துக்கும் இப்போ பாதுகாப்பான இடம் வேணும். அதோட அவன் திறமையை குறைச்சு எடைப்போடக்கூடாது. செமையா மேனேஜ் பண்ணுவான். உங்களுக்கு அவன் தான் கரெக்ட். அவனை இதெல்லாம் பாத்துக்கசொல்லுங்கன்னு’ சொன்னதே விக்ரம் தான். அதனால அவன் இதுல எதுவும் சொல்லமாட்டான்.

வேற யாரு என் மனைவியை சொல்றியா? ஏம்மா உனக்கு ஆதர்ஷ்கிட்ட முழு பொறுப்பை குடுக்கறதுல ஏதாவது பிரச்சனையா?”

 

தனலக்ஷ்மியோ “நீங்க இப்போதைக்கு அவனுக்கு வேலை மாதிரி தான் சொல்றிங்க. எனக்கு முழுசா நீங்க தூக்கி குடுத்தாக்கூட நான் எதுவும் சொல்லமாட்டேன். வயசாகுது உடம்பை பாத்துக்கோங்கன்னு சொன்னா நம்மள நம்பி இத்தனை குடும்பம் இருக்கு. இத வெளில வித்தாவோ விட்டுட்டு போனாவோ அவங்க எந்த அளவுக்கு இதெல்லாம் ஒழுங்கா நடத்துவாங்கனு ஒரு உறுத்தல் இருந்திட்டே இருக்கும். அதனால மனசில்லைனு சொல்லிடீங்க. உங்க பையனோ இதுல விரும்பம் இல்லேனு வெளியூர்ல போயி உக்காந்திட்டு வேலை பாத்து அவனும் சொத்து சேத்திகிட்டு இருக்கான். எல்லாம் வெச்சு என்ன பண்றது. சந்தோசமா ஒரு வார்த்தை பேசக்கூட டைம் பிக்ஸ் பண்ணவேண்டியதா இருக்கு. அதனால எனக்கு இது எதுலயும் விரும்பம் இல்ல. என்ன பண்ணாலும் நான் கேட்கமாட்டேன்பா. ஆதர்ஷ் உனக்கு இதெல்லாம் பிடிச்சிருந்தா முடிஞ்சா நீயே மொத்தமா எழுதிவாங்கிட்டு எல்லாமே நல்லபடியா நடத்துப்பா…” என ஒரு தாயின் ஆதங்கத்தில் அவர் கூற

அவனும் புன்னகைத்துக்கொண்டு “இல்லேங்க, நீங்க எல்லாரும் இவ்ளோ சொல்றதாலே நான் எல்லாமே பாத்துக்கறேன். ஆனா அத்தாரிட்டி எல்லாமே உங்ககிட்ட விக்ரமகிட்டேயே இருக்கட்டும். நான் இங்க எப்போவரைக்கும் இருக்கபோறேனு தெரில. ஒண்ணுல இறங்கிட்டோம்னா அத கடைசிவரைக்கும் விடக்கூடாது. நான் உங்ககிட்டேயே ரிப்போர்ட் பண்றேன். அதுவும் உங்களுக்கு உடம்பு முடிலேன்னு இவ்ளோ தூரம் சொல்றதால விக்ரம்க்கும் இப்போ இன்டெரெஸ்ட் இல்லேன்னு சொன்னதால தான். எப்போ அவன் வந்து கேட்டாலும் மொத்தமா இன்ச்சார்ஜ் அவனே எடுத்துக்கட்டும். அப்போ நீங்க யாரும் இவன்கிட்ட முழுப்பொறுப்பும் உன்னோடதுன்னு சொல்லிட்டோமே எப்படி சொல்றதுன்னு தயங்கக்கூடாது” என

அவர்களும் சிரித்துக்கொண்டே “ரொம்ப சந்தோசம், முடிஞ்சளவுக்கு இப்போதைக்கு உனக்கு எல்லாமே கொஞ்சம் மேனேஜ் பண்ற அளவுக்கு நான் ஹெல்ப் பண்றேன் கொஞ்சம் செட் ஆகுற வரைக்கும். அதுக்கப்புறம் நீயே பாத்துக்கோ. மத்தபடி நீ சொல்றது எல்லாமே ஓகே. நீ பாத்துக்கிட்டா போதும்.” என அவனும் “ஓகே சார். அப்போ நான் கிளம்பறேன்.”

“இருப்பா. டீ குடிச்சிட்டு போ. அதோட சார் எல்லாம் விட்று. நீயும் எங்களுக்கு விக்ரம் மாதிரி பையன் தான். அப்பா அம்மானே கூப்டு.” என தனலட்சுமி கூற அவனும் மெலிதாக புன்னகைத்துவிட்டு தலையசைக்க ஜெயேந்திரன் “அதோட மத்த பிரச்சனையும் இப்போதைக்கு ஒதுக்கி வெச்சுட்டு கொஞ்சம் குழந்தைகளையும் உன்னையும் பாரு. யோசிச்சு முடிவு பண்ணு. அடுத்து என்ன பண்ணலாம்னு.. எப்போ என்ன வேணும்னாலும் என்கிட்ட கேளு. ஒரு அப்பா ஸ்தானத்துல இருந்து எல்லா வகைலையும் சப்போர்ட் பண்றேன். அதோட உங்க குடும்பத்துல நடந்த விஷயம் எனக்கு, என் மனைவி, விக்ரம், வாசு தவிர வேற யாருக்கும் தெரியாது. உனக்கு விருப்பம் இல்லாட்டி நீயும் தெரிஞ்சமாதிரி காட்டிக்கவேண்டாம். இங்க உனக்கு எந்த தொந்தரவும் வராது. சரியா? நீ கொஞ்சம் இன்னைக்கு ரெப்பிரேஷ் ஆகிட்டு பிரீயா சொல்லு.. தங்கச்சிக்கு ஸ்கூல் எல்லாமே சொல்லிவெச்சாச்சு. நாம நாளைக்கு அட்மிஷன் போட்டுக்கலாம். வேற ஏதாவது வேணுமா?”

அவனும் நன்றியுடன் “இல்லை. எல்லாமே நீங்களே பாத்து பண்ணிட்டிங்க. ரொம்ப தேங்க்ஸ்.. இத நான் எப்போவும் மறக்கமாட்டேன். உண்மையாவே அப்பா இடத்துல இருந்து கரெக்டா எனக்கான எல்லா கைடென்ஸும் குடுத்திட்டிங்க.”

“என்ன நீ அப்பா மாதிரின்னு சொல்லிட்டு தாங்ஸ் எல்லாம் சொல்ற. அப்போ உண்மையாவே அப்டி நினைக்கலையா? அப்டின்னா நீ இந்த எஸ்டேட் பாத்துக்க நானும் தேங்க்ஸ் சொல்லனுமா?”

அவனும் சிரித்துவிட்டு “அப்படி இல்லப்பா, கண்டிப்பா உங்க ஆசைப்படி இத எல்லாமே பத்திரமா பாத்துகிட்டு உங்களுக்கு திருப்பி தரேன். கவலையே படாதீங்க. அண்ட் சஞ்சீவ் பாத்துக்க தான் இங்க கிரச் (creche) எங்க இருக்குன்னு சொன்னா…”

தனம் “அதுசரி, நான் இங்க எதுக்கு இருக்கேன். இங்க கொண்டுவந்து விடு.”

“அம்மா அவன் ரொம்ப அடம்பண்ணுவானே அதனால தான் யோசிக்கிறேன்.”

“குழந்தையோட இருந்தா மனசு சந்தோசமா இருக்கும். விக்ரமுக்கு கல்யாணம் பண்ணி பாக்கலாம்னு பாத்தா அவன் பிடிக்குடுக்க மாட்டேங்கிறான். அப்டி ஆகியிருந்தா இந்நேரம் அவன் குழந்தையா நாங்கதானே வளத்திருப்போம். நீயும் பையன்னு சும்மா சொல்லல. அதனால அதெல்லாம் யோசிக்காத. இங்க நான் மட்டும் இல்ல. இங்க இவங்க தங்கச்சி, அவங்க பொண்ணு, அதோட வேலை பாக்றவங்க எல்லாம் இருக்காங்க. அதனால நீ காலைல கொண்டுவந்து விட்டுடு ஈவினிங் நீ போகும்போது கூட்டிட்டு போய்டு.” என அன்பு கட்டளையிட அவனும் ஒருவழியாக ஒத்துக்கொண்டான்.

அவன் கூறிவிட்டு கிளம்ப ஜெயேந்திரனிடம் தனம் “என்னங்க ஆதர்ஸ்கிட்ட உண்மைய சொல்லிருக்கலாமே. ஏன் இப்டி?”

அவரோ “அவன் இப்போ இருக்கற மனநிலை நாமளும் அவன் குடும்பம்னு எல்லாம் சொன்னா அவன் கண்டிப்பா இங்கே இருக்கமாட்டான்.”

“சரி, அவனை இங்கேயாவது இருக்க சொல்லலாமே.”

“தனம், நீ புரிஞ்சுக்காம பேசுற. அவன்கிட்ட இவ்ளோ பொறுப்பை குடுத்ததுக்கே எவ்வளோ யோசிக்கிறான். ஜஸ்ட் பையனோட பிரண்ட்க்கு இவ்வளோ செய்வாங்களான்னு அவனோட எண்ணம். இதுல வீட்ல எல்லாம் தங்கவெட்ச்சோம் அவன் உடனே கேள்வி கேட்டு எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டு சட்டுனு கிளம்பி போய்டுவான். கொஞ்சம் பொறுமையா இரு. விக்ரம், வாசு இவங்கிட்டேயே சொல்லிவெச்சுஇருக்கேன். அவன்கிட்ட இப்போதைக்கு எதுவும் சொல்லவேணாம்னு இதுல நீ அவ்ளோ அவசரப்பட்டா இருக்கறதும் போயிரும். அதனால அமைதியா இரு.” என அவரும் அமைதியானார்.

 

[ஒவ்வொருவரும் காலத்திடம் பதிலையும், பொறுப்பையும் விட்டுவிட்டு பொறுமையாக காத்திருந்தனர்.அந்த விதியின் விந்தையை உணராமல் என்னதான் வாழ்க்கை என தன் புது பயணத்தை நோக்கி செல்பவனுக்கு புரியாது தான் அவனது எதிர்கால வாழ்வும், இழந்த மகிழ்ச்சி அனைத்தும் அடையப்போகும் அழகான சோலைவனம் தான் இது என்று.

2 Comments »

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: