யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 09

அத்தியாயம் – 09

 

தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் ஆலயம் மங்களகரமாக அலங்கரிக்கப்பட்டு மக்கள் கூட்டத்தில் அமிழ்ந்து போயிருந்தது. அக்கம் பக்கமிருந்த இந்துக்கள் எல்லாம் தைப் பூச நன்னாளில் முருகன் அருளைப் பெறவெனக் கூடியிருந்தனர். ஊரைச் சுற்றி ஐந்து தேர்கள் வேறு இழுக்கப்படுமே. முருகனோடு சேர்த்து எம்பிரான் அன்னை, தந்தை அனைவர் அருளையும் பெற்றுக் கொள்ளலாம் எனும் போது பக்தர்கள் கூட்டத்திற்குக் குறைவேது?

 

வைஷாலி என்ன தான் வேகமாகக் கோயிலை அடைந்தாலும் கூடப் பூசைகள் ஆரம்பமாகி விட்டிருந்தன. அந்த பக்தர்கள் திரளில் தானும் ஐக்கியமாகி வழிபட ஆரம்பித்தாள். உள்மண்டப பூசைகள் நிறைவடைந்து இறைவன் திருவுருவங்களைத் தேரில் ஏற்றி இழுக்க ஆரம்பித்தார்கள். வைஷாலியும் பெண்கள் கூட்டத்தில் தானும் ஒருவராகி வடம் பிடித்தாள். பக்தர்களின் அரோகரா கோசம் வானைப் பிளக்கத் தேர்வலம் இனிதே ஆரம்பித்தது.

 

மெதுமெதுவாகத் தேர் அசைந்து கொண்டிருக்க, அந்த கண்கொள்ளாக் காட்சியில் மனதைச் செலுத்தியிருந்த வைஷாலி தன்னைக் கவனிக்க மறந்து விட்டாள். இவள் முன்னால் நின்றிருந்த பெண்மணியின் மெட்டியில் இவள் சேலைக் கரை சிக்கியிருந்தது. அவ்வப்போது பக்தர்கள் நெருக்குப்பட, இடிபட்டும் ஒதுங்கியுமாகத் தான் தேரோடு சேர்ந்து பக்த குழாமும் நகர்ந்து கொண்டிருந்தது.

 

அதில் வைஷாலி சேலை கீழே இழுபடுவதைப் பெரிதாகக் கவனிக்காமல் கையால் வெறுமனே மேல் நோக்கி இழுத்து விட்டுத் தேர் இழுப்பதே கவனமாக இருந்தாள். ஒரு கட்டத்தில் முன்னால் நின்றிருந்த பெண் வைஷாலியை விட்டு நகர முனைய மெட்டியில் சிக்கிய சேலைக் கரை சர்ரெனக் கிழிந்தது. இவளும் நிலை தடுமாறி விழப் பார்த்தாள்.

 

அப்போது பின்னாலிருந்து யாரோ இவள் இடையைத் தாங்கி இவள் விழ விடாது தடுத்தனர். அதற்குள் முன்னால் நின்றிருந்த பெண்ணும் மெட்டியில் கொழுவியிருந்த சேலையை எடுத்து விட்டு மன்னிப்பு கேட்கவும், வைஷாலியும் புன்னகை முகத்துடன் அவரிடம் மறுப்புத் தெரிவித்து விட்டுத் தேர் வடத்தை விட்டு விட்டு மக்கள் கூட்டத்தைத் தாண்டி ஓரமாய் ஒரு மரத்தடியை அடைந்தாள்.

 

இரவு முழுவதும் உறங்காததும் காலையிலிருந்து வாயில் பச்சைத் தண்ணீரும் படாதது தலை சுற்றுவது போல இருந்தது. வீட்டுக்குத் திரும்புவோம் என்று முடிவெடுத்தாலும் தனியாக நடந்து செல்லப் பயமாக இருந்தது. எங்கே நடு வீதியில் மயங்கி விழுந்து விடுவாளோ என்று. இந்த சன சமுத்திரத்திற்குள் நீந்திச் சென்று முச்சக்கர வண்டியைப் பிடிப்பதும் சாத்தியம் போலில்லை.

 

“என்ன வைஷூ… ரொம்ப யோசிக்கிறாய்? வீட்ட போக வேணுமா?”

 

கேட்டுக்கொண்டே இடையில் சுற்றிக் கட்டியிருந்த சேர்ட்டை எடுத்து அணிந்தவாறே வந்தான் சஞ்சயன். உண்மையில் அவனைக் கண்டதும் வைஷாலிக்குக் கடவுளைக் கண்டது போல தான் இருந்தது.

 

“ஓமடா சஞ்சு… எப்பிடி வீட்ட போறது என்று தான் யோசிச்சுக் கொண்டிருக்கிறன். எங்க போய் ஓட்டோ பிடிக்கிற என்று தெரியேல்ல.”

 

“நீ உடம்புக்கு ஏலாது என்றால் எதுக்குக் கோயிலுக்கு வந்தனி? விரதம் வேற போல… இன்னும் கொஞ்சம் சாறி காலுக்க மிதிபட்டு இழுபட்டிருந்தால் ஒன்று விழுந்து அடிபட்டிருக்கும்… இல்லை என்றால் சாறி அவிழ்ந்து மானம் போயிருக்கும்… எனக்கு உண்மையில வாற கோபத்துக்கு… சின்ன வயசில இருந்து உள்ள நாட்டு விரதம் எல்லாம் பிடிச்சு என்னத்தைக் கண்டாய்? இப்ப இப்பிடித் தனிய இருந்து கஷ்டப் படுறதை விட…”

 

பொரிந்து கொண்டு போனவனை ஒரு விதமான ஆச்சரியத்துடனும் இயலாமையோடும் பார்த்தாள் வைஷாலி.

 

“நான் விழப் பார்த்தது உனக்கு எப்படித் தெரியும்?”

 

“உனக்குப் பின்னால நின்று விழாமல் தாங்கிப் பிடிச்சதே நான் தானே… சரி… சரி… வா… என்ர பைக் பக்கத்தில தான் நிற்குது. பைக்கில இருப்பியோ? அல்லது அதுக்கும் ஏலாமல் தலையைச் சுத்திக் கித்தி விழுந்திடுவியோ?”

 

அவன் ஒரு வித சினத்துடன் கூறியவாறு முன்னே நடக்கவும் பின்தொடர்ந்தவளுக்கு உள்ளே வலித்தது. அவளுக்குத் தெரிந்த சஞ்சயனுக்கு ஒரு வார்த்தை கோபமாகப் பேசத் தெரியாதே. அதுவும் அவளிடம் அவன் சினந்ததே கிடையாது. இப்போது எதற்கு இந்தக் கோபம் என்று சிந்தித்தவாறே அவனது மோட்டார் சைக்கிளில் ஏறியமர்ந்தாள். எதுவும் பேசாது அவள் வீட்டு வாசலில் இறக்கி விட்டு விட்டுத் தனது வீட்டிற்குத் திரும்பினான் சஞ்சயன்.

 

வேட்டியை அவிழ்த்து எறிந்து ஒரு முக்கால் காற்சட்டைக்கு மாறியவன் ஸோபாவில் வீழ்ந்தான். வைஷாலியின் சிவத்துத் தடித்திருந்த விழிகள் இரண்டும் அவள் தூக்கம் தொலைத்து அழுதிருக்கிறாள் என்பதைத் தெளிவாகவே அவனுக்குப் புரிய வைத்தன. அவளுக்கு எதற்கு இப்படியொரு நிலை?

 

‘வைஷாலியின் பெற்றோர், சகோதரிகள் இவளை இப்படித் தனியாக விட்டு விட்டு என்ன செய்கிறார்கள்? டைவேர்ஸ் எடுக்கத்தானா இத்தனை வருசங்களாக முரளியை உருகி உருகிக் காதலித்தாள்? இப்படியொரு நிலை வரும் என்று தெரிந்திருந்தால் இப்படி அவளை விட்டு விலகி வந்து இருக்க மாட்டேனே… அவள் கூடவே இருந்து அவளைப் பாதுகாத்திருப்பேனே… எல்லாம் என் பிழை தான். இப்படி யாருடைய தொடர்பும் இல்லாமல் நான் ஒதுங்கியிருந்த படியால்தான் ஒரு விசயமும் தெரியாமல் போய் விட்டது…’

 

மனதுக்குள் பலதும் யோசித்துத் தன் மீதே பழி போட்டு வருந்தியவன் முதல் வேலையாகச் செய்தது, ஒரு முகப் புத்தகக் கணக்கொன்றை ஆரம்பித்தது தான். முதலில் முரளிதரனைத் தேடிப் பிடித்துப் பார்த்தவன் அதிர்ந்து போனான். அவன் முகப்புப் படமே ஒரு வெள்ளைக்காரியோடு ஜோடியாக நிற்கும் புகைப்படம் தான். அதுவும் அவன் கோட்சூட்டும் அந்தப் பெண் வெள்ளை நிறச் சட்டையுமாக அது திருமணப் புகைப்படம் என்பது பார்த்த உடனேயே தெரிந்தது.

 

சஞ்சயனுக்கு உண்மையில் எதையும் நம்ப முடியவில்லை. அப்போ வைஷாலியின் காதல் முடிந்தே விட்டதா? காதலின் வெற்றி திருமணத்தில் இல்லையா?

 

முரளிதரனுக்கு ஒரு குறுஞ்செய்தியை மெசெஞ்சரில் அனுப்பி விட்டு முரளியின் முகப் புத்தகத்தை அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்து மேய ஆரம்பித்தான். முரளிதரன் முகப் புத்தகக் கணக்கு ஆரம்பித்த இறுதிநாள் வரைப் போய்ப் பார்த்தும் விடை பூச்சியம் தான். வைஷாலி பற்றி எந்தவிதமான தகவல்களும் இல்லை.

 

மூன்று, நான்கு வருடங்களுக்கு முன்பு ஒரு பதிவு மாத்திரம் ‘சில நேரங்களில் பிரிவு கூட நிம்மதிக்கு ஒரு வழி தான்’ என்று போடப்பட்டிருந்தது. மற்றபடி எதுவுமே சந்தேகத்துக்கிடமாகக் கண்ணில் படவில்லை.

 

இவன் வேறு நண்பர்களையும் நட்புப் பட்டியலில் இணைத்துக் கொண்டிருக்க, முரளியிடமிருந்து பதில் வந்திருந்தது.

 

“நான் தான் இனி அவள் வாழ்வில் எந்தப் பிரச்சினையும் எடுக்க மாட்டேன் என்று சொல்லிட்டனே. இப்போ உனக்கு என்ன வேணும்? தயவுசெய்து இனி அவள் விசயமாக என்னைத் தொந்தரவு பண்ணாதே…”

 

முரளி இதை அனுப்பி விட்டு சஞ்சயனை ப்ளொக் செய்திருந்தான். முரளிதரனின் இந்தச் செய்கையால் சஞ்சயனே பெரிதும் குழம்பி விட்டான். எல்லாக் கேள்விகளுக்கும் பதில் வைஷாலி ஒருத்தியிடம் மட்டுமே என்று புரிய அவளுக்கு அழைத்தான். கோயிலில் வைத்து அவளிடம் கோபப்பட்டது வேறு மனதுக்கு ஒரு மாதிரி இருந்தது.

 

இரண்டு, மூன்று தடவைகள் மறுபடி மறுபடியும் அழைத்தும் வைஷாலியிடமிருந்து பதிலில்லை. கோபத்தில் இருக்கிறாள் போலும் என்று எண்ணியவனாய் ‘ஸொரி’ என்று வாட்ஸப்பில் அனுப்பி விட்டு, குறுஞ்செய்தி சென்றடைந்து வாசித்ததற்கான அடையாளமாக அந்தச் சரி அடையாளம் இரண்டும் நீலமாக மாறுகிறதா என்று கைத் தொலைபேசியையே பார்த்துக் கொண்டிருந்தான். இதை அறியாத வைஷாலியோ உடல் அலுப்பிலும் மனக் களைப்பிலும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.

 

நான்கு மணி நேரங்களுக்கு மேலாக அவளிடமிருந்து பதில் இல்லை எனவும் சஞ்சயனின் பொறுமை காற்றில் பறந்தது. மறுபடியும் அவளுக்கு அழைப்பெடுத்துப் பார்த்தவன், நேரே அவள் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டினான். இரண்டு, மூன்று முறை பலமாகத் தட்டிய பிறகு தூக்கம் அகன்றிராத விழிகளோடு வந்து கதவைத் திறந்தாள் வைஷாலி.

 

“என்ன சஞ்சு…? எதுக்கு இந்த நேரத்தில வந்திருக்கிறாய்?”

 

“ஃபோன் அடிச்சால் எடுக்காமல் இவ்வளவு நேரமாக என்ன செய்து கொண்டிருந்தாய்?”

 

“நான் கோயிலால வந்து சாப்பிட்டிட்டுப் படுத்தது. இப்ப நீ வந்து கதவைத் தட்டவும் தான்டா எழும்பிறன்…”

 

“ஓ… அப்ப சரி… நான் போய்ட்டு வாறன்…”

 

“லூசாடா நீ… நல்ல நித்திரையாகக் கிடந்தவளை எழுப்பிக் கத்துறாய்… பிறகு போய்ட்டு வாறன் என்றுறாய்… என்னதான் ஆச்சு உனக்கு…?”

 

“எனக்கு ஒண்ணுமில்லை. நேரம் வேற இரவு ஏழு மணி ஆகுது… நான் இரவுச் சாப்பாடு எடுக்கப் போக வேணும். போய்ட்டு வாறன்…”

 

கூறிவிட்டு அவள் பதிலை எதிர்பாராது விருட்டென்று மோட்டார் சைக்கிளைத் திரும்பிக் கொண்டு சென்றான். வைஷாலியோ இவன் நடவடிக்கைகள் எதுவும் புரியாது வீட்டினுள்ளே சென்றாள்.

 

கைத்தொலைபேசியை எடுத்துப் பார்த்தவளுக்கு மேலும் குழப்பமே அதிகரித்தது. இருபத்தேழு மிஸ் கோல் சஞ்சயனிடமிருந்து வந்திருந்தது. அத்தோடு வாட்ஸ்அப், வைபர், எஸ்எம்எஸ் எல்லாவற்றிற்கும் ‘ஆர் யூ ஓகே?’ என்று குறுஞ்செய்தி வந்திருந்தது. ‘இவனுக்கு என்னதான் நடந்தது?’ என்று சிந்தித்தவாறே அவனுக்கு அழைப்பெடுத்தாள்.

 

“ஹலோ…”

 

“ஹலோ… சொல்லு வைஷூ…”

 

“எதுக்கு இவ்வளவு தரம் ஹோல் பண்ணினனி?”

 

“நீ கோயிலால களைச்சுப் போய் போனாய்… அதுதான் என்ன செய்யிறாய் என்று கேட்க எடுத்தனான். அதுசரி… ஃபோன் அடிச்சதும் தெரியாமல் அப்பிடியென்ன நித்திரை?”

 

“நான் போனை வைபிரேட்ல போடுற என்று புல்லா சைலன்டில போட்டிட்டன். அதுதான் கவனிக்கல…”

 

“சரி… சரி… சாப்பிட்டிட்டுப் படு… நாளைக்கு வேலையெல்லோ… குட் நைட்.”

 

அவளது பதிலை எதிர்பாராது அழைப்பைத் துண்டித்தான் சஞ்சயன். மனது ஏனோ ஒரு நிலையில்லாமல் அலைந்தது. வைஷாலியைத் தவிர வேறு எதைப் பற்றியும் சிந்திக்க முடியாமல் தவித்தான்.

 

வைஷாலியோ இவனுக்கு என்ன நடந்தது என்று யோசித்துக் கொண்டிருந்தாள். முரளிக்கும் இவளுக்கும் இடையில் என்ன நடந்தது என்று விசாரிப்பான் என்று பார்த்தால், சஞ்சயன் அதைப் பற்றி வாயைத் திறக்காதது ஒரு வகை ஏமாற்றத்தையே அவளுக்குக் கொடுத்தது.

 

சொந்த ஊரை விட்டு ஓடி வந்து இந்தப் புது ஊரில் அவள் தலைமறைவு வாழ்க்கை வாழ்வதே ஊரிலே காண்பவர் எல்லோரும் இவளிடம், முரளிக்கும் இவளுக்கும் என்ன பிரச்சினை வந்தது என்று குடைந்து குடைந்து இவளின் சொந்த விசயத்தை அலசி ஆராய்ந்தது தான்.

 

ஆனால் இப்போது இவளே சஞ்சயன் கேட்க மாட்டானா என்று ஏங்கினாள். ஆனால் அவனோ முரளி என்ற ஒருத்தன் அவள் வாழ்வில் இருந்ததில்லை என்பது போல நடந்து கொண்டிருந்தான். நீண்ட நாட்களின் பின்னர் தன் மனப்பாரம் இறக்கி வைக்க ஒரு தோள் கிடைத்து விட்டது என்று மகிழ, சஞ்சயனோ அவள் மனதை அறிய எந்தவித ஆர்வமும் காட்டவில்லை.

 

‘இவன் என் பழைய சஞ்சு இல்லை… ரொம்ப மாறிட்டான்… முந்தியெல்லாம் நான் கவலையாக இருக்கிறன் என்று வாயால கூடச் சொல்லத் தேவையில்லை. என்ர முகத்தைப் பார்த்தே கண்டு பிடிச்சிடுவான். இப்ப என்னடா என்றால் நான் தனியாக கஷ்டப் படுறன் என்றதை வாய்விட்டுச் சொல்லியும் கூட இந்த லூசன் அதைப் பற்றி அக்கறை எடுக்கேல்ல…

 

நான் தான் இவனை அதே பழைய ப்ரெண்டாக நினைக்கிறன் போல… அவனுக்கு அந்தப் பள்ளிக்கூடக் காலம் எல்லாம் மறந்திட்டுப் போல… ஏழெட்டு வருசத்துக்குக் கூட ஆச்சே. அவனுக்கு இப்ப என்னை விட வேற யாரும் குளோஸ் ப்ரெண்ட்ஸ் கிடைச்சிருப்பினம்… எனக்குத்தான் நல்ல ஒரு ப்ரெண்ட்ஸ்ஸிப்க்குக் கூடக் குடுப்பினை இல்லை. ஏதோ அதுல்யாவாச்சும் இருக்காளே என்று மனசைத் தேத்திக்க வேண்டியது தான்.

 

இனி ஐயா எனக்கு ஹோல் எடுக்கட்டும் இல்லை நேரில வரட்டும். கதைக்கிறதே இல்லை. அவருக்கு ஆகத்தான் லெவல்… என்னைப் பற்றித் தெரியாதோ? என்ன நினைச்சுக் கொண்டிருக்கிறாராம்? இவனையெல்லாம் ஒரு காலம் ஃபெஸ்ட் ப்ரெண்ட் என்று சொல்லித் திரிஞ்சேனே… என்னைச் சொல்லோணும்…’

 

சஞ்சயன் முன்பு போல இவளிடம் உரிமை எடுத்துப் பழகாமல் மூன்றாம் நபராய் விலகி நிற்பதை அவளால் தாங்க முடியவில்லை. பழைய அன்பை எதிர்பார்த்தவளுக்கு இவனின் இந்த சினத்தோடு கூடிய அக்கறை ஒரு விலகல் தன்மையை மனதில் விதைக்க ஆரம்பித்தது.

 

பலதும் எண்ணிப் பார்த்துத் தெளிவாய்க் குழம்பியவள், ஒரு விரக்திப் பெருமூச்சோடு  தூங்கச் சென்றாள்.

 

நட்பு மீளவும் இறுகுமா? இல்லை தளருமா?

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 40ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 40

40 – மனதை மாற்றிவிட்டாய் மகா இதயத்தை பிடித்துக்கொண்டு கண்ணீர் விட அவளிடம் வந்த மதி “மகா சொன்னா கேளுமா. உனக்கு நெஞ்சு வலி வேற இருக்கு. ” என அவரை அடக்க “இல்ல அண்ணி, என்னால முடியல. எப்படி இருந்த

காதல் வரம் யாசித்தேன் – 8காதல் வரம் யாசித்தேன் – 8

வணக்கம் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு பின்னூட்டம் இட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இனி இன்றைய பதிவு அன்புடன், தமிழ் மதுரா Free Download WordPress ThemesFree Download WordPress ThemesDownload Nulled WordPress ThemesFree Download WordPress

சாவியின் ‘ஊரார்’ – 03சாவியின் ‘ஊரார்’ – 03

3 “ஜக்கம்மா, ஜக்கம்மா!” – சிவாஜி கூச்சலிட்டுக் கொண்டிருந்தார். நடு நசி நேரத்தில் அந்த சிம்மக் குரல், டெண்ட் சினிமாவிலிருந்து பயங்கரமாக ஒலித்தது. சாமியார் அந்தப் படத்தை மூன்று முறை பார்த்தாயிற்று. ‘வானம் பொழியுது, பூமி விளையுது’ டயலாக் அவருக்கு மனப்பாடம்.