அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 08

  • ஒரு இரவு. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நடந்த சம்பாஷணை வாழ்வு எவ்வளவு வேதனைக் குழியில் விழுந்து விட்டது என்பதைக் காட்டிற்று.

 

  • ”விஷயம் விபரீதமாகிவிட்டதே தெரியுமோ” என்று பேச்சை ஆரம்பித்தார் அப்பா.

 

  • ”என்ன சொல்லுங்கோ ? என்ன விபரீதம்..” என்று அம்மா அச்சத்துடன் கேட்டாள்.

 

  • ”மிராசுதார் ….” என்று இழுத்தாற்போல் மெதுவாக சொன்னார் அப்பா.

 

  • அம்மா பதைத்து மிராசுதாருக்கு என்ன என்று கேட்டாள்.

 

  • ”அவனுக்கு என்ன? கல்லுப் பிள்ளையார் போலிருக்கான். மெதுவாகப் பேசடி . அவள் காதிலே விழப் போகிறது. மிராசுதாரன் நம்ம குடியைக் கெடுத்து விடுவான் போலிருக்கு. காந்தா மீது கண் வைத்து விட்டான், இன்று காலையிலே அவன் தைரியமா , என்னிடம் சொல்லுகிறான், ஏன் சாமி நம்ம வீட்டிலே இருந்தா எவ்வளவு செல்வமாக வாழும் தெரியுமா என்று. எரிகிறது. இனி அரைக்ஷணம் இந்த ஊரிலே இருக்கப்படாது” என்றார் அப்பா.

 

  • ”அம்மா ஐயோ தெய்வமே அநியாயக்காரன் அழிந்து போக அம்பிகே! நீதாண்டியம்மா துணை” என்று கூறி அழுதார்கள். அப்பா சமாதானங் கூறினார்கள். வயோதிகப் பருவத்திலே அவர்கள் பாபம் என்னால் வதைக்கிறார்கள். நான் குடும்பத்துக்குச் சுமை மட்டுமல்ல. அவர்கள் வறிற்றுக்கே பெருந் தீ! நான் அபலை மட்டுமல்ல அபாயக்குறி!

 

  • கடன்பட்ட நெஞ்சம் கலங்காதிருக்குமா? என் அப்பா ஒர் பச்சைப் பிராமணன். அவர் பிழைக்குமிடமோ காமாந்தகாரரின் கொலுமண்டபம். அவனோ என்னைப் பெற வேண்டுமென்று ஏதேதோ சூழ்ச்சி செய்த வண்ணம் இருந்தான். அவனுடைய உப்பைத் தின்று வளரும் நாங்கள், அவனை என்ன செய்ய முடியும்? அவனை விரோதித்துக் கொள்ளவும் முடியாது , இணங்குவதோ கூடாது. இந்நிலையில் தவித்தோம். ஆசை கொண்ட அவன். நான் அந்தண குலமென்றோ விதவையென்றோ கருதுவானா? மேலும் காலம் எப்படிப்பட்டது. பிராமணர்களிடம் பயபக்தியுடன் இருந்தது போய், வெறுப்புடன் மக்கள் வாழும் காலம். ஆகவே மிராசுதார் நாளாகவாக, தமது எண்ணத்தை ஜாடை மாடையாகக் காட்டிக்கொண்டே வந்தார். நான் தெரிந்தும் தெரியாதவள் போல் நடந்து கொண்டேன்.

 

  • எங்கள் வீட்டுக்கு மிராசுதார் வேதகிரி முதலியார் வருகிறபோது, எனக்கு அடிவயிறு பகீர் என்றாகிவிடும். என்னை இணங்கச் செய்ய இந்த முறை பலிக்காதது கண்ட மிராசுதாரர், வறுமையை ஏவி, எங்களை வாட்டி, சரணமடையச் செய்யத் துணிந்து விட்டார். சில்லரைக் கடன்காரர்களைத் தூண்டிவிட்டார். அவர்கள் அப்பா மீது படை எடுத்தார்கள். பல்லைக் காட்டினார் – இல்லை போ என்றார் கடன் கொடுத்தவர்கள் கண்டிக்கலாயினர். கோர்ட்டுக்கு அப்பா போக நேரிட்டது. கடன் தொல்லையுடன் அப்பாவுக்கு உடலிலும் தொல்லை ஏற்பட்டுவிட்டது. கிடைக்கிற சம்பளத்திலே பகுதி. பழைய கடனைத் தீர்க்கச் சரியாகிவிடும். சாப்பாட்டுக்கே சனியன் பிடித்துக் கொண்டது. சாந்தா புஷ்பவதியானாள். அப்பா காய்ச்சலில் விழுந்தார். ஒரு மாதமாக வேலைக்குப் போகவில்லை. எங்கள் நிலைமை எப்படி இருக்குமென்பதை ஈவு இரக்கமுள்ளவர்கள் சற்று யோசித்துப் பாருங்கள். கடன்காரர்கள் தொல்லை. காய்ச்சல். வருமானம் பூஜ்யம், வாட்டம், இவைகள் போதாதா ஒருவரைச் சித்திரவதை செய்ய புண்ணில் வேலிடுவது போல, அடிக்கடி வேதகிரி வருவார். ”ஐயருக்குக் காய்ச்சல் எப்படி இருக்கிறது?” என்று விசாரிப்பார். மிராசுதார் வந்து போகும் போதெல்லாம், ‘காந்தா என்ன சொல்லுகிறாய்? இந்த வறுமையை ஓட்டும் வல்லமை எனக்கிருக்கிறது, என்னை வசீகரிக்கும் அழகும் இளமையும் உன்னிடம் இருக்கிறது. பரஸ்பரம் உதவி செய்து கொள்வோம். சம்மதமா? என்று என்னைக் கேட்பது போலிருக்கும் அவருடைய பார்வை.

 

  • அப்பாவை மதனபள்ளி ஆஸ்பத்ரிக்கு அழைத்துக் கொண்டு போனால்தான் பிழைப்பார் என்று டாக்டர் முடிவாகக் கூறிவிட்டார். அம்மாவின் கண்களில் நீர் தாரை தாரையாகப் பெருகிற்று. மஞ்சளும் குங்குமமும் போகுமே. மக்கள் தெருவில் நின்று திண்டாடுமே, நான் என்ன செய்வேன். ஜகதீஸ்வரி ! என்று அம்மா அழுதார்கள். ஜகதீஸ்வரிக்கு இந்தக் கஷ்டம் எப்படித் தெரியும் அவள் வாழ்கிறாள், வாட்டம் வருத்தமின்றி.

 

  • மதன பள்ளிக்குப் போகவேண்டுமாம். மதன பள்ளிக்கு நான் வர இசைந்தால் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தர மிராசுதார் இருக்கிறார். அப்பாவின் சாவைத் தடுக்க வேண்டுமானால் நான் மிராசுதாருக்குச் சரசக் கருவியாக வேண்டும். ஆனால் அது நேரிட்டால் உலகம் பழிக்காதோ அப்பாவின் மானம் பறிபோகுமே. குடும்பக் கீர்த்தியும், குலப் பெருமையும் என்ன கதியாவது, வறுமையை விரட்ட நான் விபசாரத்தை உதவிக்குக் கூப்பிட வேண்டிய நிலை நேரிட்டது. என் மனம் அந்த நிலையில் எவ்வளவு பாடுபட்டிருக்கும்? நான் சொன்னால் யார் நம்புவார்கள்? பாய்ந்தோடி வரும் புலியைக் கண்டு பயந்து, பாழுங் கிணற்றில் குதித்தாவது உயிரைக் காப்பாத்திக் கொள்வோம் என்று எண்ணுவதில்லையா? வறுமை என்னை வதைக்கிறது. அதனை நான் வதைக்க வேண்டுமானால், மிராசுதாரின் வைப்பாட்டியாக இசையவேண்டும்.

 

  • அப்பா படுக்கையில் புரளுவதும், அம்மா கண்களைக் கசக்கிக் கொள்வதும், சாந்தா திகைத்துக் கிடப்பதும், என் மனக் கண்களிலே சதா தாண்டவமாடின. விபரீத எண்ணங்கள் என் மனதிலே உதித்தன.

 

  • ”காந்தா! அடி முட்டாளே தானாக வருகிற சீதேவியைக் காலால் உதைத்துத் தள்ளாதே.”

 

  • ”வேண்டாமடி காந்தா! பாபக்கிருத்யம் செய்யாதே. ஏழேழு ஜென்மத்துக்கும் விடாது. கெட்ட எண்ணங் கொள்ளாதே. கடவுள் தண்டிப்பார்.

 

  • “அவர் யார் உன்னைத் தண்டிக்க! உன் கஷ்டத்தைப் போக்க இதுவரை அவர் என்ன உதவி செய்தார்? சீச்சி! பைத்தியக்காரி , பணம் இல்லை கையிலே. படுக்கையிலே அப்பா சாகக் கிடக்கிறார். அடுப்பிலே காளான் பூத்திருக்கிறது. உலகிலே பணம் படைத்தவர்கள் உல்லாசமாக வாழுகிறார்கள். நீ வறுமையால் உருக்குலைந்து போகிறாய். உன் அப்பா பிழைக்கவும், குடும்பம் நடக்கவும், நீ வாழவும் மிராசுதாரர் மார்க்கம் காட்டுகிறார். அதைப் பாரடி! பார்த்துப் பிழை”

 

  • ”பணத்துக்காக உன் மானத்தை இழக்காதே.”

 

  • ”மானம் வேறு தொங்குகிறதா உனக்கு? உலகில் உண்ணச் சரியான உணவின்றி வாழ வழியின்றி இருப்பதனால், மானம் போகவில்லையா? சுத்தத் தரித்திரம், அன்னக் காவடி, நித்தியப் பட்டினி என்று இப்போது உலகம் உன் குடும்பத்தைத் துாற்றுகிற-தல்லவா? கடன்காரன் கேட்கிறானே, வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லையா. வயிற்றுக்கு என்ன தின்கிறீர்கள், என்று. மானம் இருக்கிறதா? அந்த நேரத்திலே, உன் குடும்பத்தை யாரடி மதிக்கிறார்கள்? பணமில்லை என்றால் பிணந்தானே”

 

  • ”ஏழையாக இருக்கலாம். சகித்துக் கொள்ளலாம். ஆனால் விபசாரம் செய்து வாழ்க்கையை நடத்துவது என்றால் உலகம் வெறுக்கும்.”

 

  • ”உலகம் வெறுக்குமா? பேஷ்! பேஷ்! காந்தா! இப்போது உலகம் உங்கள் குடும்பத்திடம் பாசம் வைத்திருக்கிறதா? உலகம் உங்களிடம் ஆசை கொண்டால், இப்ப ஏனடி உண்ணவும் வழியின்றிக் கிடக்கிறீர்கள்? உலகமாம், உலகம்! எந்த உலகத்தைப் பற்றி உளறுகிறாய், புத்தகங்களிலே படிக்கிறாயே அந்த உலகமா! பைத்தியமே! அது வேறு! உண்மை உலகம் வேறு. ஏழைகளின் உலகமே தனிரகம். அதனை ஏறெடுத்துப் பார்க்காது. பணக்கார உலகம். பணக்கார உலகத்தின் மீது படை எடுத்துச் செல். உன் அழகையும் இளமையையும் அம்புகளாகக் கொள். மிராசுதாரர் வில்லாக வளைவார். உன் மனம் போனபடி, அம்புகளைப் பணக்கார உலகில் பறக்க விடு. அப்போது அந்த உலகம் உன் காலடியில் வந்து விழும். செய்து பார்.”

 

  • ”காதைப் பொத்திக் கொள்ளடி காந்தா அத்தகையப் பேச்சைக் காதால் கேட்பதும் தோஷம். பணத்தைக் கண்டு மயங்காதே, அது ஒரு பிசாசு!”

 

  • ”பணமா பிசாசு? அந்தப் பிசாசுதானடி உலகிலே பூஜிக்கப்படுகிறது. அதன் கடாட்சம் இருப்பவர்களைத் தான், பூர்வ புண்ணியத்தால், நிம்மதியாக செல்வமாக குபேர சம்பத்துடன் வாழுகிறார்கள் என்று. உலகம் துதிக்கிறது, அதன் சக்தி அபாரம்! உனக்குத் தெரியாதா? அனுபவமில்லையா? இதோ உன் அப்பாவைப் பார். அவர் சாவதும், பிழைப்பதும், அந்தப் பிசாசைப் பொறுத்துத் தானே இருக்கிறது.”

 

  • ”ஆமாம்! ஆனாலும்…”

 

  • என் மனதிலே இந்தச் சொற்போர் நடந்தபடி இருந்தது. சாதாரண காந்தாவுக்கும் சஞ்சலப்படும் காந்தாவுக்கும் இந்தச் சம்பாஷணை நடந்து வந்தது.

 

  • அப்பா ஈனக்குரலுடன் இருமும் வேளையிலும், அம்மா விம்மும் வேளையிலும், தங்கை சாந்தா தன் முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொள்ளும்போதும், காசு தராவிட்டால் மருந்து கிடையாது என்று டாக்டர் கண்டிப்பாகக் கூறும்போதும், ”காந்தா! இன்னமும் யோசிக்கிறாய்?’ என்று ஒரு குரல் என் செவியிற் கேட்கும். ”ஜாக்கிரதை காந்தா உன் கற்பை இழக்காதே” என்று மற்றோர் குரல் கூறும்.

 

  • குடும்பத்திலே வேதனை. அப்பாவின் உடலிலே வேதனை, என் மனதிலும் வேதனை, இந்த சோதனையில் நான் தத்தளித்தேன். உலகிலே வழக்கப்படி காரியங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. என் மனதிலே எரிமலை இருப்பது பற்றி யாருக்கு என்ன கவலை. எங்கள் கஷ்டத்தை நிவர்த்திக்க ஒருவரும் முன் வரவில்லை. கண்ணாடியைக் காண நேரிடும்போது, ”ஆமாம் காந்தா, பார்த்தாயா? நீ எவ்வளவு இளையவள், நல்ல முகவெட்டு, அழகு ததும்புகிறது. ஆனால் அசடே! எவ்வளவு அவதிக்கு ஆளாயிருக்கிறாய். ஏன் இந்தச் சிறையிலே கிடக்கிறாய்? வா வெளியே! உன்னை வரவேற்க மிராசுதாரர் காத்துக் கொண்டிருக்கிறார்” என்று காந்தா நம்பர் இரண்டு கூறுவாள். காந்தா, நம்பர் ஒன்று ”வேண்டாம் விபரீதப் புத்தி வினாச காலே” என்று எச்சரிக்கை செய்வாள். இந்த இரு காந்தாக்களின் போராட்டம் இடைவிடாது நடந்தது. இறுதியில் வறுமையால் வாடிய காந்தா நம்பர் ஒன்று வாழவேண்டுமென்று ஆசை கொண்ட காந்தாவிடம், இரண்டாம் நம்பர் காந்தாவிடம், தோற்றுத்தான் போனாள். மிராசுதாரர் அப்பாவை, மதனபள்ளிக்கு அனுப்பினார். அவருக்கு இல்லாத அக்கரையா? விஷயம் அப்பாவுக்குத் தெரியாதபடி மூடி வைத்தேன். ஊராரின் வாயை மூட முடியுமா? அம்மாவின் கண்ணீர் பெருகிற்று. ”தலையிலே இடிவிழுந்ததேடி பாவி” என்று அம்மா வைத்தார்கள். நான் பழைய காந்தா என்று எண்ணிக்கொண்டு மிராசுதாரரின் மடியிலே விழுந்த எனக்கு, அம்மாவின் அழுகை பற்றிய கவலை உண்டாகவில்லை. நான் ஆயிரந் தடவை அழுதிருக்கிறேன் முன்பு அப்பா பிழைத்துக் கொள்வார் அது போதும் என்று இருந்தேன். ஆனால் அப்பா மதனபள்ளியிலேயே இறந்து விட்டார். பூவையும் குங்குமத்தையும் அம்மா இழந்தார்கள். நானோ, அழுதேன், புரண்டேன், அலறினேன். பிறகு, கண்களைத் துடைத்துக் கொண்டேன். புதிதாக எனக்குக் கிடைத்த பூவும் குங்குமமும் பெற்றுக் கொண்டு, புது உலகில் வசிக்கப் புறப்பட்டேன்.

 

  • மிராசுதாரின் ஏற்பாட்டின்படி நான் வீட்டை விட்டு வெளியேறி தனிப் பங்களாவில் வசிக்கலானேன். நான் வாழ்வதுடன் என் உதவியைக் கொண்டு அம்மாவும் தங்கையும் வாழலாம். பணம் தர நான் தயாராக இருந்தேன். அம்மா ஒரு காசுகூட அந்த விபசாரியிடமிருந்து பெறமாட்டேன் என்று கூறிவிட்டார்கள். அம்மாவுக்குத் தெரியாது நான் எப்படி எப்படி குடும்பத்துக்கு உதவி செய்தேன் என்பது. ஏலம் போன வீட்டை மீட்டேன். என் பேருக்கு விலைக்கு வாங்கினேன். வீம்புக்கு அதை உயில் வேறு கைக்குப் போக விடுவேனோ? குடும்பம் நடத்த என்னிடம் பணம் வாங்க மறுத்து விட்டார்கள். ஆனால் நான் மாதா மாதம் பல அறநிலையங்களின் பெயர் வைத்துப் பணம் அனுப்பிக் கொண்டே இருந்தேன். அம்மாவுக்கு விஷயமே தெரியாது.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 09வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 09

சமயற்காரர், “மகாராஜனே அந்தப் பணத்தை நான் என் கையாலும் தொடுவேனா? தொட்டிருந்தால் சட்டப்படி அது குற்றமாய் விடாதா? பிறருடைய பொருளை எவனொருவன் சுய நலங்கருதி அபகரிக்கிறானோ அவன் சட்டப்படி குற்றவாளியா கிறான் அல்லவா? ஆகையால், நான் என் சுய நலத்தைக் கருதவே

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 40ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 40

40 – மனதை மாற்றிவிட்டாய் மகா இதயத்தை பிடித்துக்கொண்டு கண்ணீர் விட அவளிடம் வந்த மதி “மகா சொன்னா கேளுமா. உனக்கு நெஞ்சு வலி வேற இருக்கு. ” என அவரை அடக்க “இல்ல அண்ணி, என்னால முடியல. எப்படி இருந்த

சிவகாமியின் சபதம் – மூன்றாம் பாகம்சிவகாமியின் சபதம் – மூன்றாம் பாகம்

வணக்கம் தோழமைகளே, சிவகாமியின் சபதம் மூன்றாவது பாகம் உங்களுக்காக. அன்புடன், தமிழ் மதுரா Free Download WordPress ThemesDownload Premium WordPress Themes FreeFree Download WordPress ThemesDownload Premium WordPress Themes Freedownload udemy paid course for freedownload