Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 07

  • எனக்குத் திருமணம் நடந்தது. திவ்வியமான நாளாம். மங்களமான முகூர்த்தமாம். மங்களத்தின் லட்சணம் மறுமாதமே தெரிந்துவிட்டது. கழனியைச் சுற்றிப் பார்த்து விட்டு வரச் சென்ற கணபதி சாஸ்திரிகள் – என் கணவர் கால் வழுக்கிக் கீழே விழுந்து சில நாட்கள் படுக்கையில் இருந்து விட்டு பரலோகப் பிராப்தியானார். நான் விதவையானேன். சகுனத் தடையானேன். சமுதாயத்தின் சனியனானேன். பெற்றோரின் கண்களில் நீர் வழியும்படியான நிலை பெற்றேன். தீ மிதித்தவள் போல் . தங்கை சாந்தா திகில் அடையக் கூடிய உருவைப் பெற்றேன். என் இளமையும் எழிலும் போகவில்லை. என் கண்ணொளி போகவில்லை. நான் அபலையானேன். ஆனால், அழகியாகத்தான் இருந்தேன். தாலி இழந்தேன். ஆனால் சாய்ந்த தளிர் போலிருந்தேனே யன்றி சரகாக இல்லை, குங்குமமிழந்தேன். ஆனால் பொட்டிடாத என் நெற்றியும் பொலிவுடன்தான் இருந்தது. பார்சிக்காரிகள் பொட்டிடுவதில்லை. நம்ம காந்தாவின் முகம் அவாளுடையதைப் போலவே இருக்கிறதென்று அக்கம் பக்கத்தில் பேசுவார்கள். வாடாத பூவாக இருந்தேன். ஆனால் விஷவாடை உள்ள மலர் என்று உலகம் என்னைக் கருதிற்று. அது என்னுடைய குற்றமா? எனக்கு மணம் செய்வித்து விட வேண்டும் என்று துடித்தவர்கள். இன்று எனக்குத் துணையாகவா இருந்தார்கள்? ஏதோ அவள் எழுத்து என்று கூறிவிட்டு, என்ன செய்யலாம் கொடுத்து வைக்காதவள் என்று கூறிவிட்டு, அவரவர்கள் காரியத்தை அவரவர்கள் கவனிக்கத் தொடங்கினார்கள்.

 

  • உலகினிடம் வெறுப்பும் உண்டாக எனக்கு இந்த ஒரு சம்பவம் போதாதா? ஒழுங்காக நாணயமாக, நாலு போருக்குப் பயந்து நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்களே அதை நான் ஏன் பொருட்படுத்த வேண்டும்? என்னை இந்த உலகம் ஒழுங்காகவா நடத்திற்று? சாகப்போகும் கிழவனுக்குச் சல்லாபக் கருவியாக்கிற்று. இது ஒழுங்குதானா? என் இளமை அவனுக்குப் பலியிடப்பட்டது. நியாயமா அந்தச் செயல்? அவன் இறந்தும் நான் இருந்தும் இறந்தவளாக வேண்டும் என்று உலகம் கட்டளையிட்டது நீதியாகுமா? உலகத்திலே கொடுமைக்கு ஆளான நான் நன்றி செலுத்தி நல்லவளாக வாழ வேண்டுமா! நல்லவள் என்றால் என்ன பொருள்? நாதனை இழந்த நாரி, வாழ்வை இழந்து விடுவது தானா? என் வாழ்வு. என் பொருள் அல்லவா? அதனை, இறந்த என் கணவருடன் சேர்த்து வைத்தும் கொளுத்தினார்களே அதையும் நான் சகித்துக் கொள்ள வேண்டுமாம். எத்தனை எத்தனையோ விதவைகளின் விதியை எனக்கு உதாரணம் காட்டினார்கள்.

 

  • ‘ஜாக்ரதை’ சர்வ ஜாக்ரதையாக இருக்கவேண்டும். நாலுபேர் எதிரே வரவிடாதீர்கள். காலமோ கெட்டுப் போச்சு, பெண்ணோ சிறுசு, மூக்கும் முழியும் சுத்தமாக, அச்சுப் பதுமை போல் இருக்கிறது. தப்பித் தவறி ஏதேனும் நேர்ந்துவிட்டால் தலைமுறை தலைமுறைக்கும் கெட்ட பெயர் நீங்காது என்று என் பெற்றோருக்கு உறவினர் புத்திமதி கூறலாயினர். வெந்த புண்ணிலே வேலிட்டனர். நாங்களோ ஏழைகள். என்ன சொன்னாலும் தலையை அசைக்கத்தானே வேண்டும். செல்வன் வீட்டிலே சென்று இது போல் சொன்னால். நாக்கைத் துண்டிப்பார்கள். ஏழை குமாஸ்தாவிடம் உறவினருக்கு என்ன பயம்? எல்லாம் உனது நன்மைக்குத்தான் என்று ஒரே வார்த்தையில் முடித்துவிடுகிறார்கள். ‘காந்தா நல்லவள் தான், இருந்தாலும் அறியாதவள். யாரும் கொஞ்சம் கண்காணிப்பாகத்தான் இருக்க வேண்டும் என்றுரைத்தனர். அப்பாவிடம், எவ்வளவு அக்கறை பாருங்கள்! எங்கள் ஏழ்மையைக் கண்டு உதவி செய்ய யாரும் முன் வரவில்லை. என் வாழ்வு கொள்ளை போவதைத் தடுக்க யாரும் வரவில்லை.

 

  • எல்லாம் முடிந்து நான் விதவையானதும், என் விதவைத் தன்மையைக் கெட்டுப் போகாமல் பார்த்துக் கொள்ளும்படி எச்சரிக்கை செய்ய உபதேசிக்க உற்றார் வந்தனர். அவர்களுக்கிருந்த கவலையெல்லாம் குலப்பெருமைக்குப் பங்கம் வரக்கூடாது என்பது தான். என்னைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. எனக்கு வீடே ஜெயில், அப்பா, அம்மா காவலாளிகள் – உறவினர் போலீஸ், ஊரார் தண்டனை தரும் நீதிபதிகள். இது உலகம் எனக்கு உண்டாக்கி வைத்த ஏற்பாடு. இதற்காகவா நான் பிறந்தேன்?

 

  • விதவைகள் உலகில் நான் வாழ்ந்து கொண்டிருந்த போதுதான் மிராசுதார் வேதகிரி முதலியாரை அடிக்கடி கண்டேன். மரம் பழுத்தால் வெளவால் வருமென்பார்களே அது போல் அவர் எங்கள் வீடு வரத்தொடங்கினார். அவர் பெரும் பணக்காரர், அவரிடந்தானே எங்கள் ஜீவனம் நடக்கிறது. அடிக்கடி அப்பாவிடம் முதலியார் வந்து பேசத் தொடங்கியதும் எல்லோருக்குமே சந்தேகம் பிறந்தது. கூப்பிட்ட நேரத்துக்கு ஒடோடிப் போய் இட்ட வேலையைச் செய்ய அப்பா சித்தமாக இருக்கும்போது மிராசுதார் எங்கள் வீட்டுக்கு வந்து வலியப் பேசுவதென்றால் அது ஊராருக்கே ஆச்சரியமாகத்தானே இருக்கும். என் கணவன் எனக்களித்த தாலியையும் நான் இழந்து விட்டேன். அவரால் எனக்கு கிடைத்தது வேறெதுவுமில்லை. அவருடைய சொத்து முதல் தாரத்துப் பிள்ளைகளுக்கு போய் விட்டது. ஜீவனாம்சத்துக்கு வழக்குத் தொடுக்க வேண்டுமென்றார்கள். பணம் ஏது? வக்கீலுக்குக் கொடுக்க காசு இருந்தால் அதை வயிற்றுக்குக் கொடுப்போமே நாங்கள், என், கலியாணம் எனக்கு அளித்தது ஒன்றுமில்லை. விதவை கோலந்தான் மிச்சமாயிற்று.

 

  • அடிக்கடி அழுது சிவந்த என் கண்கள் செந்தாமரைப் போல் வேதகிரி முதலியாருக்குத் தோன்றிற்று போலும். அதற்கு நானா ஜவாப்தாரி? என் மனநிலை வேண்டுமானால் நான் கெட்ட எண்ணங்களைக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள முடியும். பிறர் மனதை அப்படி இப்படி அசையாதே என்று எப்படி அடக்க முடியும் பிறர் கெட்ட எண்ணங் கொண்டால், அதற்கு என்ன செய்வது? என் கண்ணைக் கட்டுப்படுத்தி விட்டேன். வேதகிரி முதலியாரின் கண்களை நான் என்ன செய்யமுடியும்? அவரது பார்வையும் பேச்சும், அவரது உள்ளத்தை வெளிப்படுத்திற்று. தெரிந்து கொண்டேன். திடுக்கிட்டேன். ஆனால் என்ன செய்ய முடியும்? புலி முன் மான் போரிட முடியுமா…?

 

  • ”சாமி! மகா பொல்லாத ஊர் இது?”

 

  • “ஏன்? என்ன விசேஷம்?”

 

  • விசேஷமென்ன இருக்கும்? வீண் வம்பளப்புதான். வாய்க்கு பூட்டா சாவியா?

 

  • என்ன சொல்லுகிறீர்கள்? எனக்கொன்றும் விளங்கவில்லையே?

 

  • ஏன் சாமி அந்த வயிற்றெரிச்சலைக் கேட்கிறீர்கள்? நல்லது கெட்டது தெரிந்து கொள்ளாத நாய்கள் ஏதேதோ வம்பும் தும்பும் பேசுகின்றனவாம்.

 

  • யார் பேசறா? எதைக் குறித்துப் பேசறா? விளங்கச் சொல்லுங்கள் கேட்போம்.

 

  • நான் இங்கே ஏதோ சத்விஷயம் பேசிவிட்டுப் போக வருகிறேன் பாருங்கள், அதைப்பற்றி ஊரார் தாறுமாறாகப் பேசுகிறார்களாம். எனக்கொன்றும் தலை போய்விடாது. நேற்றுதான் கேள்விப்பட்டேன். மனசு துடிதுடித்து விட்டது. நம்ம காந்தா இருக்கே, அதுக்கும் எனக்கும் ஏதோ நடப்பதாகப் பேசுதாம் நாய்கள்….

 

  • சிவ! சிவ! தங்கள் வாயாலேயா அதைச் சொல்ல வேண்டும்? மகா பாவம்! தோஷம். அத்தகைய பேச்சு சொன்னவா நிச்சயம் அழிந்து போயிடுவா.

 

  • இல்லை சாமி! இதுகளுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் பாருங்கள். என்னடா ஒரு குடும்பத்தின் பேரை இப்படிக் கெடுக்கிறோமே என்று கொஞ்சமாவது ஈவு, இரக்கம், நீதி, நாணயம் இருக்கிறதா? கண்ணாலே கண்டால் கூட இந்த மாதிரி விஷயங்களை விவேகிகள் வெளியே சொல்லமாட்டார்கள். இங்கே பார்த்தா ஒண்ணுமில்லை. நான் ஒரு பாவத்தையும் அறிந்தவனல்ல. ஏதோ பொழுது போக்கா வருகிறேன். பேசுகிறேன். போகிறேன். இதற்கு இப்படி வம்பளப்பு நடக்கிறது. இந்த ஊரிலே கேட்டது முதல் என் மனசு சரிபடவேயில்லை . வரக்கூடாது என்று நினைச்சேன் முதலிலே. வராமல் போனா ஒஹோ விஷயம் வெளியிலே தெரிந்துவிட்டதென்று முதலியார் இப்போது போகவில்லை என்று யோசித்தபிறகு வந்தேன். நான் போய் வருகிறேன் சாமி பசங்கள் செளக்கியந்தானே?

 

  • மிராசுதாருக்கும் அப்பாவுக்கும் ஒரு நாள் இதுபோல் பேச்சு நடந்தது. ஊரார் மீது பழி போட்டு மெதுவாகத் தமது கருத்தைத் தெரிவித்த தந்திரப் பேச்சு இது. ஊரார் வம்பளக்கவுமில்லை, மிராசுதார் வேண்டுமென்றே இப்படி ஒரு புகார் செய்து வைப்போம் என்று செய்தார். நன்றாகத் தெரிந்தது. ஆனால் நாங்கள் என்ன செய்யமுடியும்? ஊரார் வம்பளக்கிறதாகச் சொல்லுகிறீர்களே? நீங்கள் இனித் தயவுசெய்து இங்கே வரவேண்டாம் என்று அப்பா மிராசுதாரிடம் கூறமுடியுமா? கூறினால் அந்த ஆள் கோபித்துக் கொண்டு அவ்வளவு அலட்சியமா உனக்கு? என்று வைவாரே. வேலை போய் விடுமே, பிறகு பிழைப்புக்கு என்ன செய்வது?

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: