Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 05

  • திகிலோடு கலந்த காதல் என்னை மேலும் அதிகமாக வதைக்கத் தொடங்கிற்று. எங்கள் குடும்பக் கஷ்டமோ அதிகரித்துக் கொண்டே வந்தது. வீட்டின் மேல் வாங்கியிருந்த கடனுக்கு வட்டி கட்டத் தவறி விட்டார் அப்பா. அவர் என்ன செய்வார்? இல்லாத குறைதான். வட்டியைச் செலுத்தும்படி நிர்பந்தம் உண்டாகவே, அண்டிமாண்டு, எழுதிக் கொடுத்து வேறொரிடத்தில் கடன் வாங்கி, வட்டியைக் கட்டினார். இந்தக் கஷ்டத்திலே, ஒரு இளைப்பு இளைத்தே போனார். எவ்வளவு அலைச்சல், எவ்வளவு உழைப்பு என்ன செய்வார். மிராசுதாரரிடம் அவர் ஓர் கணக்குப் பிள்ளை . ஆயிரம் இரண்டாயிரம் என்று கணக்கெழுதுகிறார். தேள் கொட்டி விட்டால் விஷம் ஏறுவது போல் வயதும் மேல் வளர்ந்து கொண்டே வந்தது. எனது வயதும் வளர்ந்தது. ஊரார் ஏன் இன்னமும் காந்தாவுக்குக் கலியாணம் ஆகவில்லை என்று கேட்கும் கேள்வியும் வளர்ந்தது. அப்பா அம்மாவின் விசாரமோ சொல்ல முடியாது. இந்த நிலையில் தம்பி இராகவன் சொல்லாமற் கொள்ளாமல் ஊரை விட்டுப் போய் விட்டான். எங்கே போனானோ என்ன நேரிட்டதோயென்று நாங்கள் நெருப்பை வயிற்றில் கட்டிக் கொண்டிருந்தோம். ஒரு மாதத்திற்குப் பிறகு இராகவனிடமிருந்து கடிதம் வந்தது. மேல் விலாசம் இராகவன் கையெழுத்தாக இருந்ததால் மகிழ்ந்தேன். கடிதம் என் பெயருக்குத்தான் வந்தது. வீட்டிலும் சந்தோஷப்பட்டார்கள். ஆனால் உள்ளே இருந்த செய்தி எங்களுக்குச் சர்ப்பம் தீண்டியது போல் இருந்தது.

 

  • காந்தாவுக்கு NB நான் சொல்லாமல் ஒடிவந்து விட்டேன் என்று கவலைப்படுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். முதுகு வலிக்க மூட்டை சுமப்பவனுக்குப் பாரம் குறைந்தால் நல்லதுதானே . வறுமையிலே வதையும் நமது குடும்பத்தில் நான் இல்லாதிருப்பது ஒரளவு பாரம் குறைவதாகவே நான் கருதுகிறேன். இங்கு நான் வந்ததற்கு காரணம் வேலை ஏதாகிலும் கிடைக்கும் என்பற்காக மட்டுமல்ல; அங்குள்ள தரித்திரத்தின் கோரத்தைக் காணச் சகியாது வந்து விட்டேன். என்று சொல்வது போதாது. சோமுவின் நடத்தையினாலேயே நான் இப்படி வந்துவிட்ட நேரிட்டது.

 

  • காந்தா, நீ சோமுவைக் காதலிக்கும் விஷயம் எனக்குத் தெரியும். கண்ணில்லையா எனக்கு . கருத்து இல்லையா, சோமு நல்லவன். ஆனால் அவனுடைய உலகம் வேறு. அவன் ஒரு பணக்கார வேதாந்தி. நாம் ஏழைகள். அவனுக்கு உலகம் மாயமாம். வாழ்வு பொய்யாம். மணம் ஒரு சிறை வாசமாம், காதல் ஒரு பந்தமரம், அவன் வாழ்நாளில் பகவத் சேவையைத் தவிர வேறொன்றும் செய்ய மனம் இடந்தர வில்லையாம்.

 

  • உன்னை அவன் நிராகரிக்கிறான். பெண்கள் சமூகமே பேய்ச்சுரை என்று பேசுகிறான். ஏசுகிறான். நான் வெட்கத்தை விட்டு அவனிடம் உன் விஷயமாக பேசினேன்; வேண்டினேன், கெஞ்சினேன். உன்னைக் கலியாணம் செய்து கொள்வது. நமது குடும்பத்தை முன்னுக்குக் கொண்டுவரும் பேருதவியாக இருக்குமென்பதை எடுத்துக் காட்டினேன். குப்பையில் கிடக்கும் மாணிக்கத்தை எடுத்துக் கொள். என்று கதறினேன் காந்தா. துளியும் தயங்காமல் கலியாணம் என்ற பேச்சே எடுக்காதே என்று சோமு கூறிவிட்டான். நீ கட்டிய மனக்கோட்டை நொறுங்கிற்று. நானுங்கூட உன்னைப் போலவே மனக்கோட்டை கட்டினேன். சோமு உன்னைக் கலியாணம் செய்து கொள்வான் என்ற நம்பிக்கை எனக்கிருந்திராவிட்டால் அவனுடைய வேதாந்தப் பேச்சை ஒரு வினாடிகூட கேட்டுக் கொண்டிருக்கமாட்டேன்.

 

  • பெரிய வேதாந்தியாம் அவன். பக்தனாம் : ஆண்டவனிடம் அன்பு கொண்டவனாம். காந்தா இதைக் கேள் பணம் கிடைத்து விட்ட பிறகு அதைப்போல செல்வந்தராக இருப்பது எளிது. அவனுடைய வேதாந்தம் செல்வத்தினால் அவனுக்குக் கிடைத்திருக்கும் ஒய்வு நேரத்திற்கு ஒரு பொழுதுபோக்கு. அவனை நீ மறந்துவிடு. எத்தனையோ சீமான் வீட்டுப்பெண்களையெல்லாம் அவன் ஒப்பவில்லையாம். கேள் காந்தா, வறுமை நோய் கொண்ட நம்மை அவன் ஏற்றுக் கொள்வானா? அவன் உன்னைத் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று சொன்னதும் என் மனம் பட்டபாடு நீ அறியமாட்டாய். அந்த ஊரில், அவன் எதிரில், இருக்க மனம் ஒப்பவில்லை.

 

  • பணம். பணம். பணம். அதைத் தவிர உலகம் வேறு எதையும் உள்ளன்போடு பூசிக்கக் காணோம். அது கிடைத்தால் ஊர் திரும்புகிறேன். அந்தச் சோமு பேசும் வேதாந்தத்தைவிட வண்டி வண்டியாக, அப்போது என்னால் பேச முடியும். அந்தக் காலம் வரட்டும். பார்த்துக் கொள்வோம். நீ சோமுவை மறந்து விடு. உன் கதி என்னாகுமோ நானறியேன். அறிந்து தான் என்ன செய்ய முடியும்? அப்பாவும் அம்மாவும் கோபித்து வைத்தால் நீ குறுக்கிட்டு தடுக்காதே. அவர்களுடைய விசாரம் என்னைத் திட்டுவதனாலாவது கொஞ்சம் குறையட்டும்.

 

  • இப்படிக்கு,

 

  • உன் தம்பி இராகவன்.

 

  • கண்களிலே நீர் அருவியாக ஓடிற்று. இந்தக் கடிதத்தை படித்தபோது, வீடு முழுவதும் விசாரம். சோமுவைப் பற்றி நான் எண்ணிக்கொண்டிருந்தது போலவே அப்பாவும் அம்மாவும் எண்ணிக் கொண்டிருந்தார்களாம். எல்லோருடைய எண்ணத்திலும் மண் விழுந்தது. என் காதல் பொய்மான் வேட்டையாகி விட்டது. என் மனதில் எழும்பிய மாளிகைகள் மண் மேடாயின. கண்ணாடியில் என் முகத்தைப் பார்க்க நேரிட்டது. என் அழகை நான் சபித்தேன்; எனக்கு எதற்கு அழகு!

 

  • குமாஸ்தாவின் பெண் நாடகத்திலே கதாநாயகன் இராமுவை, அவன் தாயாரே சீதையைக் கலியாணம் செய்து கொள்ளச் சொல்லியும், இராமு மறுத்து விட்டான். என் வாழ்க்கையில் என் தம்பியே சோமுவைக் கேட்டுப் பார்த்தும் பயன் ஏற்படவில்லை பாபம்! கேட்கும் முன் என்னென்ன எண்ணினானோ, தமக்கை தங்கப் பதுமை போன்ற அழகுடன் இருக்கிறாள் என்று யாரார் புகழக் கேட்டானோ தெரியவில்லை. தரித்திரத்தால் நான் வாழக்கூடாது. தனவந்தனை மணம் செய்து கொண்டு சுகமாக வாழ வேண்டும். கண்குளிரக் காணவேண்டும் என்று எண்ணியிருப்பான். ”என் தமக்கை கணவன் பெரிய தனவந்தன்” என்று கருதியிருப்பான். சகஜந்தானே, அவன் நேரிலே கேட்டும் சோமு மறுத்து விட்டது என் துரதிர்ஷ்டமா? தலை விதியா?”

 

  • குமாஸ்தாவின் பெண் நாடகத்தை நான் கண்டபோது நினைத்தேன். கதாநாயகி சீதாவோ, இராமுவிடம் தன் காதலைத் தெரிவித்திருந்தால், காரியம் பலித்திருக்கும் என்று கூச்சத்தால் சீதா இராமுவிடம் உண்மை உரைக்கவில்லை. அது தற்கொலையில் முடிந்தது. நானும் அந்தக் கதிதான் அடைய வேண்டுமோ என்று பயந்தேன். கூச்சத்தை மறந்தேன். என் மனதிலே கொந்தளித்துக் கொண்டிருந்த எண்ணங்களைக் கடிதத்தில் எழுதினேன். சாந்தாவிடம் கொடுத்தனுப்பிவிட்டு மார்பு துடிதுடிக்கக், கண்கள் மிரள மிரளக் காத்துக் கொண்டிருந்தேன். நெடுநேரங் கழித்து வந்த சாந்தாவின் முகத்தைக் கண்டதும் காரியம் கைகூடவில்லை என்று புரிந்து விட்டது.

 

  • ”அக்கா! அவர் படித்தார். கடிதத்தை. முதலிலே பிரித்தார். பிறகு காந்தாவை இப்படிப்பட்டவள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. அச்சம், மடம், நாணம் எதுவும் இல்லையே. இப்படி ஒரு அன்னியனுக்குக் கடிதம் எழுதலாமா? இதெல்லாம் சினிமா பார்ப்பதாலும், நாவல் வாசிப்பதாலும் வருகிற கேடுகள். இனி இவ்விதமாக நடக்க வேண்டாமென்று சொல்லு. தரித்திரம் பிடுங்கித் தின்கிறது. இந்த லட்சணத்திலே துடுக்குத் தனமும் தாண்டவமாடுகிறது . உன் அக்காவிடம், காதலாம்! ஆசையாம்! எதற்காக ஆசை? பணம் இருக்கிறது என்னிடம் அதற்காகத்தானே இந்த பிளான். அதற்கு வேறே ஆளைப் பார்க்கச் சொல்லு. நான் கலியாணம் செய்து கொள்வது என்று தீர்மானித்து விட்டால் எங்கள் குடும்ப அந்தஸ்துக்கேற்ற பெண்கள் ஆயிரம் கிடைக்கும். நான் கலியாணமே செய்து கொள்ளப் போவதில்லை. அதிலும் இப்படிப்பட்ட வெட்கம் கெட்டவளைக் கண்ணெடுத்தும் பாரேன்” என்று திட்டினார். நான் அழுதுவிட்டேன் அக்கா. ஏன் அந்தக் கடிதம் எழுதினாய்? என்று சாந்தா சோகத்துடன் கூறினாள்.

 

  • நான் என்ன செய்வது? மனம் அனலில் விழுந்த புழுப்போல் துடித்தது. மிக்க கேவலமான காரியத்தையன்றோ செய்து விட்டேன்? சோமு என்னை ஏற்க மறுத்ததோடு, ஏளனம் செய்யவுமன்றோ இடங்கொடுத்து விட்டேன். அவருடைய அந்தஸ்து என்ன? நான் யார்? அவர்மீது எனக்குக் காதல் ஏற்பட்டதென்றால், அவரது பணத்தைப் பெறுவதற்கே நான் பசப்புகிறேன் என்று அவர் கருதுகிறார். நான் செய்தது தவறு. கண்ணிழந்தவள் காட்சிக்குச் செல்வானேன்? காலிடறி விழுவானேன்? செவிடனுக்கு சங்கீதம் ஒரு கேடா?

 

  • என் கடிதத்தைக் கண்டு அவர் சிரித்தாராம். எவ்வளவு ஏளனம்? என் இருதயத்தில் இடம் பெற்று என்னை வாட்டி வதைத்த எண்ணங்களை நான் அக்கடிதத்தில் எழுதினேன். அதைக் கண்டு அவர் சிரித்தாராம். நீங்கள் சற்றுப் படியுங்கள் . என் கடிதத்தை. சிரிக்க வேண்டுமா? அழவேண்டுமா? கூறுங்கள். இதோ என் கடிதம் படியுங்கள்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: