Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

அறிஞர் அண்ணாவின் ”குமாஸ்தாவின் பெண்” 02

  • இந்த நாடகக் கம்பெனிக்காரர்களின் வண்டி எங்கள் வீட்டுப் பக்கமாக வரும் போதெல்லாம் எனக்குக் கோபந்தான் வருவது வழக்கம். விதவிதமான பயங்கரங்களைக் காட்டிக் கொண்டு, ரக ரகமான நோட்டீசுகளைப் போட்டுக் கொண்டு மனத்தைக் கெடுத்தே விடுகிறார்கள். நெஞ்சை உருக்கும் பாடல்கள், உல்லாசமான சம்பாஷனை, உயர்தரமான நடிப்பு, அற்புதமான சீன் ஜோடிப்பு. அவர் பாடுகிறார், இவள் ஆடுகிறாள் என்றெல்லாம் நோட்டீஸ் போட்டு ஆசையைக் கிளப்பி விடுகிறார்கள். எங்களிடத்திலே பணமா இருக்கிறது. நாடகத்திற்குப் போக அப்பாவுக்கு வருவதோ மாதம் 26 ரூபாய். அடுப்பிலே உலை தவறாது ஏறினாலே போதும். இந்த இலட்சணத்திலே தம்பிக்கு வேறு. பள்ளிக்கூடச் சம்பளம் கட்ட வேண்டும். அவன் படித்து விட்டு என்ன சாதிக்கப் போகிறானோ தெரியாது. சாந்தாவின் குரல் தங்கக் கம்பி போலிருக்கிறது. பாட்டுச் சொல்லிக் கொடுத்தால் ரம்மியமாக இருக்கும் என்று சொல்லுகிறார்கள். எனக்கோ இன்னமும் கலியா –

 

  • நாடக வண்டிகளைப் பார்க்கக்கூடாது என்றிருந்தவள் அன்று பார்க்க வேண்டிய-தாயிற்று. ”குமாஸ்தாவின் பெண், குமாஸ்தாவின் பெண்” என்று கூறினர். நானும் ஒரு குமாஸ்தாவின் பெண்தானே! ஆகவே நோட்டீசை வாங்கச் சொன்னேன். சாந்தா ஓடிப் போய் வாங்கிக் கொண்டு வந்தாள். கதைச் சுருக்கம் அதில் இருந்தது . அசல் எங்கள் குடும்பக் கதைதான். ஆகவே இந்த நாடகத்தை எப்படியாவது போய்ப் பார்க்க வேண்டும் என்று ஆசை பிறந்தது. அப்பாவிடம் சொன்னேன். அவர் என்ன செய்வார் பாவம், ”கண்ணில்லை யோடி காந்தா, பெரிய பெண்ணாயிருக்கே, நோக்குத் தெரியாதோ நம்ம ஆத்துக் கஷ்டம்” என்று சொன்னார். வறுமை பிடித்து வாட்டும் நாங்கள் குடியிருக்கும் வீட்டுப் பக்கமாக, பாழாய்ப் போன சினிமா, டிராமா வண்டிகளும், பட்டுப் புடவைகாரனும். பம்பாய் சேட்டும் ஏன் தான் வரவேண்டும்? நாசமாய்ப் போகிறவள் எங்களை வறுமையோடாவது விட்டு வைக்கக்கூடாதா? இல்லாதவாளிடம் வருவானேன். இது வேண்டுமா, அது வேண்டுமா என்று கேட்பானேன்? இப்படிச் சித்திரவதை நடக்கிறதே உலகில் சிவனே என்று அவாளவாள், அவாவா காரியத்தைக் கவுனிச்சுண்டேதான் இருக்கா? மனுஷ்யர் மட்டுமா, தெய்வங்கூட சும்மா தான் இருக்கு.

 

  • இரண்டாம் வாரம், மூன்றாம் வாரம் ’குமாஸ்தாவின் பெண் நாடகம்’ நடந்து கொண்டே இருந்தது. ஒவ்வொரு நாளும் எனக்கு ஒயாத தொல்லை. அப்பாவுக்கு சங்கடம். என் முகத்தைக் கண்டு அவரால் சகிக்க முடியவில்லை.

 

  • ”காந்தா, நாளைக்கு ரெடியா இரு. நாடகம் செல்வோம். சாந்தாவும் வரட்டும்” என்று ஒரு தினம் அப்பா சொன்னார்.

 

  • ”என்ன வாலிபர் திரும்புகிறதோ, குடும்பம் கிடக்கிற கிடப்பிலே நாடகம் வேறே வேண்டியிருக்கோ, இங்கேதான் நல்லதங்கா நடக்கிறதே, நாடகம் போறாராம் நாடகம்” என்று அம்மா கோபத்தோடு கூறினார்கள். வாஸ்தவந்தானே, அந்த முக்கால் ரூபாய் இருந்தால் எங்கள் குடும்பத்துக்கு எவ்வளவோ செளகரியம்.

 

  • நாடகம் சினிமா இவைகள் இருக்கும் உலகத்திலே பணப் பஞ்சம் ஏன் இருக்க வேண்டும்? குமாஸ்தாவின் பெண் நாடகம் எவ்வளவு அருமையாக இருந்தது தெரியுமோ? என்ன அருமையாக நடிக்கிறார்கள் TK சண்முகம் கம்பெனியார் . இராமு வேடத்திலே சண்முகம் நடிப்பது எல்லோருக்கும் பிடித்தது. சீதா இறந்தது கேட்டு இராமு, சீதா! சீதா , என்று அலறிக் கொண்டு ஓடும் பொழுது, மனது துடிக்கிறது. சீதாவாக நடிக்கும் சிறுவன் அசல் பெண் போல்தான் தெரிகிறான். சீதாவின் தங்கை சரசுவாக MS திரெளபதி என்ற பெண் ஜோடியாக நடிக்கிறாள். ”நீங்கள் மிராசுதாரர், உங்காத்துலே விதவிதமாகக் குடங்கள் இருக்கும். எங்களுக்கு இருப்பது இந்த ஒரு குடந்தான்” என்று சரசு கூறும்போது கசியாதவர்கள் இல்லை. குமாஸ்தாவாக நடிப்பவர் ரொம்ப நன்றாக நடித்தார். ஆமாமா. யாரைச் சொல்லி யாரைச் சொல்லாமல் விடுகிறது. நீங்கள் பார்க்க வேண்டும் அவ்வளவுதான். நான் எவ்வளவு சொன்னாலும் போதாது, புரியாது போங்கள்.

 

  • கதை தெரியுமோ, முதல் தரமானது. ஒரே ஒரு குமாஸ்தா . எங்கப்பா போல் அவருக்கு இரண்டு பெண்கள், ஒரு ஆண். எங்காத்திலே நாங்கள் இருப்பது போல் சீதா மூத்தவள். நல்ல அழகி. சரசா இளையவள் எங்கள் சாந்தா போல். அழகு, குணம் எல்லாம் என் தங்கை போலத்தான். வறுமை பிடுங்கித் தின்றது. எங்காத்திலே இருக்கிற கஷ்டம் தான். சீதாவுக்கு இராமு என்ற ஒருவன் மேலே ஆசை. அவனுக்கோ கோயில் குளம், பூசை, புத்தகம் முதலியவற்றிலே ஆசை. அவளையும் கலியாணம் செய்து கொண்டு அவன் கோவிலுக்குப் போவதை எந்தக் கடவுள் வேண்டாமென்று கூறிவிடுமோ தெரியவில்லை. அவன் கல்யாணமே கூடாது என்று கூறி விட்டான். எந்தக் கோயிலும் பிள்ளையார் கோயில் தவிர, தேவி இருக்கே. நாம் ஏன் கல்யாணம் வேண்டாம் என்று சொல்ல வேண்டும், என்று இராமு யோசிக்கவில்லை. யோசிக்க நேரமேது? சதா தேவாரம் திருவாசகம் படிக்கவும், குளித்துப் பூசை செய்யவும் . நேரம் போய்விடுகிறது. வரதட்சணைதான் ஒரு சாபக்கேடு இருக்கிறதே எங்க குலத்திலே . சீதாவுக்குப் பணமேது? ஒரு கிழவனிடம் தள்ளுகிறார்கள்; அவன் சாகிறான். மொட்டச்சியாகிறாள் சீதா. பிறகு அந்த ஊர் மிராசுதாரன் சீதாவைக் கெடுக்க வருகிறான். எவ்வளவோ கஷ்டம் குமாஸ்தா காலமாகிறார். சீதா தற்கொலை செய்து கொள்கிறாள். பிறகு இராமு சரசாவைக் காப்பாற்றுகிறான். அவளை ஒரு கரம்புக்காரனுக்குக் கலியாணம் செய்ய ஏற்பாடாகிறது. கலியாணப் பந்தலிலேயே சண்டை. ”போடா போ! சரசாவை நானே கலியாணம் செய்து கொள்கிறேன்” என்று இராமு கூறி விட்டுக் கலியாணம் செய்து கொள்கிறான். சரசா நிம்மதியாக வாழ்கிறாள். இது கதை. பார்த்தால் தான் தெரியும். இதில் உள்ள சுவை.

 

  • சீதாவை ஒரு கிழவனுக்குக் கல்யாணம் செய்து கொடுக்கும் சீன் நடக்கும் போது, என் கதி என்னாகுமோ என்று எண்ணி, கண்களில் நீர் தளும்ப, அப்பாவை நோக்கினேன். அவர் மனதும் வேதனையில் இருந்தது போல தெரிந்தது. துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டதால் அப்பா கம்மலான குரலுடன், ‘பாவி கிளியை வளர்த்துப் பூனையிடம் கொடுத்தானே ‘ என்று குமாஸ்தாவைத் திட்டினார். என் மனதில் ஒரு ஆனந்தம் உண்டாயிற்று. அப்பா என்ன கஷ்டம் வந்தாலும் சீதாவைக் கிழவனுக்கு கொடுத்ததைப் போல என்னைக் கலியாணம் செய்துவிட மாட்டார்கள் என்று தைரியம் பிறந்தது.

 

  • இப்படிப்பட்ட நாடகங்களைப் பார்த்த பிறகாவது நம்ம குலத்திலே யிருந்து இந்த வரதட்சணைப் பேயை ஒட்டிவிட வேண்டாமா? கதை முடிந்தது. வீட்டுக்கு வந்தோம். அம்மாவிடம் கதையைச் சொன்னபோது அவள் , ’ஆமாம் அந்த ஏழைப் பிராமணன் வேறே என்ன செய்வான்? எத்தனை நாளைக்குச் சீதாவை வீட்டிலேயே வைத்திருக்க முடியும்? கிழமோ, குருடோ எதுவோ ஒன்றின் தலையில் கட்டித்தானே தீர வேண்டும்’ என்று கூறினாள். “சீ முட்டாளே அவன் காரியம் மகா பிசகு” என்று அப்பா வாதாடினார். சாந்தா துாங்கி விட்டாள். எனக்கோ அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நடந்த பேச்சு பயத்தை உண்டாக்கிவிட்டது. என்னை அழைத்துக் கொண்டு போகப் படு கிழவன் வருவதாகவும், நான் பயந்து கொண்டு அப்பாவிடம் ஒடுவது போலவும் கனவு கண்டேன். மறுதினம் காலையில் எழுந்ததும், வாசலில் நின்று கொண்டு தெருவை நோக்கினேன். எதிர் வீட்டில் ஒரு சுந்தர வாலிபன் நின்று கொண்டிருக்கக் கண்டேன்.

 

  • நெடு நாட்களுக்கு முன்பே கல்கத்தா சென்றிருந்த அலமு , தன் கணவனை இழந்து விட்டு மகனுடன் ஊர் திரும்பி எங்கள் வீட்டு எதிர் வீட்டை விலைக்கு வாங்கிக் கொண்டு, அதில் குடியேறினாள். அவள் வரப் போகிறாள் என்பது எனக்கு முன்னாலே தெரியும். அவள் பிள்ளைக்குத் தலை சவிச் சடை போட்டுப் பொழுது போக்கலாம் என்று நான் எண்ணியதுண்டு. ஆனால், அலமுவின் மகன் நான் எண்ணிக் கொண்டிருந்தபடி சிறிய அம்பியல்ல அலமுவின் பிள்ளைதான், நான் நாடகம் போய்வந்த மறுதினம் காலையில் என் கண்களுக்குக் காட்சி அளித்தது. நான் தொட்டு விளையாட முடியாத பருவம். என் கிட்ட வரமுடியாத வயது. ஏறக்குறைய இருபது இருக்கும் என்கிட்டே அந்த சுந்தர ரூபன் வர முடியாது என்று கூறினேனல்லவா? அவன் என்ன செய்தான் தெரியுமோ?! யாரது புதிதாக இருக்கிறதே என்று நான் பார்த்தேனோ இல்லையோ, ஒரே தாவாகத் தாவி என் நெஞ்சில் புகுந்து கொண்டான். அந்த உருவம் எதிர் வீட்டு வாசற் படியண்டைதான் இருந்தது. ஆனால் என் நெஞ்சிலே சித்திரம் பதிந்துவிட்டது. சுந்தரமான அவனது பெயர் சோமசுந்தரம். அலமு அதிர்ஷ்டக்காரி என்று அடிக்கடி அம்மா என்னிடம் கூறுவதுண்டு. அலமுவுக்கு ஐசுவரீயம் இருக்கு என்பதால் நான் நாக்கைத் தட்டுவது வழக்கம். ஐசுவரியம் இருக்கட்டுமே அவளிடம், அதனால் நமக்கென்ன என்று கூறுவதுண்டு. ஆனால், இப்படிப்பட்ட மைந்தனை அலமு பெற்றிருப்பது எனக்கென்ன தெரியும். அந்தச் செல்வத்தை நான் பெற வேண்டும் என்று, பார்த்ததும் குமாஸ்தாவின் பெண் எண்ணினேன். முன்னாளிரவு நான் கண்ட நாடகத்தால் பல எண்ணங்கள் என் மனதிலே உதித்தன. அதிலே முக்கியமானது கருத்துக்கிசைந்த மணாளனைப் பெற வேண்டும் என்பதுதான். அதே எண்ணத்தை அணைத்துக் கொண்டுதான் முன்னாள் இரவு நான் தூங்கினேன். காலையிலே எழுந்ததும் என் கண்களில் சோமசுந்தரம் தென்பட்டால், எனக்கு எப்படியிருக்கும் நீங்களே யோசியுங்கள். பசியோடு உலவும் ஒருவன் பட்சணக் கடையருகே வருகையில், கமகமவென வாசனை வீசினால் நாக்கில் நீர் ஊறாதா! நான் இதோ வெளிப்படையாகக் கூறுவதைப் போல பல பெண்கள் கூற மாட்டார்கள். ஆனாலும் நான் மயங்கினதைப் போல மயங்காத பெண்கள் எத்தனை பேர் இருக்க முடியும்? அந்த மரக் கட்டைகளைப் பற்றிப் பேசுவானேன்?

 

  இவ்வளவையும் எண்ணிக்கொண்டு நான் சோம சுந்தரத்தைப் பார்த்தபடி நின்று கொண்டேயிருந்தேன், என்று எண்ணுகிறீர்களா. அதுதான் இல்லை. ஒரு முறை பார்த்தேன். தலை குனிந்து கொண்டே யோசித்தேன். யாராக இருக்கும் என்று. அலமுவின் மகன் என்ற யோசனை தோன்றிற்று. மறுபடி ஒரு முறை பார்த்தேன். அதற்குள் அம்மா சொன்னார்கள். ”காந்தா! அவன் அலமுவின் பிள்ளை” என்று. உடனே நான் வேறு வேலைகளைக் கவனிக்கச் சென்று விட்டேன்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: