யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 04

கனவு – 04

 

வைஷாலி வேலை முடித்து வீட்டிற்குத் திரும்பிய போது அதுல்யா வீட்டில் இருந்தாள். தாயாரோடு தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தவள், வைஷாலியைக் கண்டதும் பேச்சை முடித்துக் கொண்டு சமையலறைக்குச் சென்று இருவருக்கும் தேநீர் தயாரித்து எடுத்து வந்தாள். அதற்குள் வைஷாலியும் முகம் கழுவி உடை மாற்றி விட்டு வரவேற்பறையில் வந்து அமர்ந்திருந்தாள்.

 

“என்னாச்சு வைஷூ…? நாலைஞ்சு நாளாக முகத்தில ஒரு பல்ப் எரிஞ்சுது. இன்றைக்கு என்ன பியூஸ் போய்ட்டுதா?”

 

அதுல்யாவின் கேள்வியில் தன்னை நினைத்தே சற்று மனம் சுணங்கினாள் வைஷாலி. ‘இவ்வளவு பட்டதற்குப் பிறகும் இப்படியா அனைத்து உணர்ச்சிகளையும் முகத்தில் காட்டுவோம்’ என்று சிந்தித்தவாறே தேநீரை அருந்தலானாள். இவளது சிந்தனை வயப்பட்ட முகத்தைப் பார்த்து அதுல்யாவும் அதற்கு மேல் தூண்டித் துருவாது தொலைக்காட்சியைப் போட்டு விட்டு தேநீரை அருந்த ஆரம்பித்தாள்.

 

தேநீரைக் குடித்து முடித்த வைஷாலி ஏதோ முடிவெடுத்தவளாய் அதுல்யாவிடம் அனைத்தையும் சொல்ல ஆரம்பித்தாள். சஞ்சயனை வங்கியில் சந்தித்தது, பின்னர் கோயிலில் தானாகவே சென்று பேசியது, இப்போது சஞ்சயன் முரளியோடு கதைக்க வேண்டும் என்றது, டினருக்கு வருகிறேன் என்றது அனைத்தையும் சொல்லி விட்டு அதுல்யாவின் முகத்தையே  பார்த்தாள்.

 

“வைஷூ…! இன்னும் எவ்வளவு நாளைக்கு நீ இப்படி பிரச்சினைகளைக் கண்டு ஓடி ஒளிந்து கொண்டே இருக்கப் போறாய்? முரளிக்கு ஒளிச்சு இங்க வந்து இருக்கிறாய். ப்ரெண்ட்ஸ், சொந்த பந்தம் என்று யாரோடயுமே கதைக்காமல் இப்பிடித் தனிமையில் வாடுறாய். நீ என்ன தான் ஸ்ரோங்காக இருக்கிறது போல காட்டிக் கொண்டாலும் நீ அன்புக்கும் பாசத்துக்கும் ரொம்ப ஏங்கிப் போயிருக்கிறாய்.

 

அதனால தான் சஞ்சயனை உன் ஊர்க்காரனாக, சின்ன வயசு ப்ரெண்டாகக் கண்டதும் நீ போய்க் கதைச்சு இருக்கிறாய். நீயே யோசிச்சுப் பார். இவ்வளவு காலத்தில நீ உனக்கென்று போட்டு வைச்சிருக்கிற இந்த வட்டத்தை விட்டு வெளியே வந்ததே கிடையாது. முதல் தடவையாக சஞ்சுவோட தான் இவ்வளவு இயல்பாகக் கதைச்சிருக்கிறாய்.

 

உண்மையை சொல்லி அவனோட நீ ப்ரெண்டாகப் பழகுறதில என்ன தப்பு வைஷூ… நீ இப்பவும் ஒன்றும் டீன்ஏஜ்ல இல்லை. மனிசரை புரிஞ்சு நடக்கிற பக்குவம் வந்தாச்சு. நீ தான் யோசிச்சு முடிவெடுக்க வேணும்.

 

முரளி பற்றிக் கேட்டிட்டான் என்றதுக்காக மொபைலை எல்லாம் ஓஃப் பண்ணி வைச்சிருக்கிறது எல்லாம் உனக்கே சின்னப்பிள்ளைத் தனமாகத் தெரியேல்லையா? உன்ர ஃபோன் வேலை செய்யேல்ல, உன்னைச் சந்திக்க வேணும் என்றால் சஞ்சயன் இனி பாஃங்கில வந்து பார்க்கலாமே. அவனுக்குத்தான் நீ வேலை செய்யும் இடம் தெரியுமே.

 

அவன் எப்படிப் பட்டவன் என்றெல்லாம் எனக்குத் தெரியாது வைஷூ. அது உனக்குத் தான் தெரியும். நான் உனக்கு ஒன்று மட்டும் தான் சொல்லுவன். ஒரு மனுசர் வாழுறதுக்கு வேலையும் கதைப் புத்தகங்களும் மட்டும் போதாது. அன்பு செலுத்த நாலு மனுசரும் தேவை. இனியாவது இப்படி ஓடி ஒளியாமல் நல்ல உறவுகளாகப் பார்த்துப் பேசிப் பழகு.

 

சஞ்சயன் எப்படியென்று நீயே முடிவு செய்து, அவன் நல்லவன் என்றால் நாளைக்கு லஞ்ச்சுக்கு வீட்டுக்கு வரச் சொல்லு. லஞ்சுக்கென்றால் நானும் நிப்பன். இப்போ எனக்கு நைட் டியூட்டிக்கு நேரம் ஆகுது. நான் வெளிக்கிடுறன். நீ பொறுமையாக யோசிச்சு முடிவெடு…”

 

கூறி விட்டு வேலைக்குச் செல்லத் தயாராகுவதற்கு எழுந்து சென்றாள் அதுல்யா. தோழியின் வார்த்தைகளைக் கேட்டவள் பழைய ஞாபகங்களில் ஆழ்ந்தவளாய் ஸோபாவில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.

 

நீண்ட நாட்களின் பின்னர் கேட்ட முரளியின் பெயர் அவளைப் பழைய ஞாபகங்களிற்கு அழைத்துச் சென்றது. அவள் இறக்கும் வரை அவன் ஞாபகங்கள் அவளை விட்டு அழியப் போவதில்லை. புகை படிந்த ஓவியமாய் அவளின் இதயத்தின் அடி ஆழத்தில் வீற்றிருக்கத்தான் போகிறது. காரணம், அவள் முரளி மீது கொண்ட காதல் அத்தகையது.

 

காதல் என்ற சொல்லின் அர்த்தம் புரிந்து கொள்ள முன்னரே முரளி என்றால் அவளுக்கு அவ்வளவு பிடிக்கும். கொஞ்சம் கொஞ்சமாக ஹார்மோன்கள் தங்கள் வேலையைக் காட்ட ஆரம்பித்த நேரத்தில் முரளி தான் தனது உலகமென ஒரு மாயையில் வாழ்ந்து கொண்டிருந்தவளால் எப்படி அவனை அடியோடு மறந்து விட முடியும்?

 

இப்போதெல்லாம் தினம் தினம் முரளியை எண்ணி வருந்துவதில்லை. இருந்தாலும் ஏதாவது கதைகளில் அவன் பெயரைப் பார்த்தாலோ, அல்லது யாராவது அவன் பெயர் சொன்னாலோ, அவள் அவன் ஞாபக அடுக்குகளை ஒரு தடவை தூசு தட்டிப் பார்க்காமல் விடுவதில்லை. அது தரும் வலி உயிரை உலுக்கக் கூடியதாக இருந்தாலும் இவள் அதைப் பற்றிக் கவலைப்படாமல் முரளி பற்றிய எண்ணங்களை ஒரு தடவை மீட்டிப் பார்ப்பாள்.

 

இந்த வலியும் வேதனையும் மனதில் இருக்கும் வரையில் அவள் இந்த ஜென்மத்தில் இது போன்றதொரு தப்பை மறுபடியும் செய்ய மாட்டோம் தானே என்று அவளாகவே முடிவெடுத்து நினைவு வரும் போதெல்லாம் நினைத்துப் பார்ப்பாள் கடந்து வந்த காலங்களை. வழக்கமாக முரளியை உருகி உருகிக் காதலிக்க ஆரம்பித்த நாட்களிலிருந்து தான் இவள் எண்ணங்கள் அசை போடப்படும். இன்று முரளி பற்றிக் கேட்டது சஞ்சயன் என்றதாலோ என்னவோ சிறு வயதுக்கே சென்று விட்டாள்.

 

முரளி என்று அழைக்கப்படும் முரளிதரன், சஞ்சயன், வைஷாலி எல்லோரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் தான். யாழ்ப்பாணத்தில் வடமராட்சிப் பிரதேசத்தில் அரசடி எனும் ஊரைச் சேர்ந்தவர்கள். முதலாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரைக்கும் ஒரே பாடசாலையில் தான் படித்தார்கள்.

 

அந்த பாலர் வகுப்புகளில் இவளது நெருங்கிய தோழமையாக சஞ்சயன் இருந்தது நினைவுக்கு வந்தது. சஞ்சயன் சிறு வயதிலிருந்தே அமைதியானவன். மலர்ந்த முகத்துடன் இருக்கும் அவனை எல்லோருக்கும் பார்த்த உடனே பிடித்து விடும்.

 

பாடசாலைக்கு முதல் நாள் சென்ற போது வைஷாலிக்கு அந்தப் பெரிய கட்டிடங்களும், சீருடை அணிந்த மாணவர்களும், ஆசியர்களின் கண்டிப்பு நிறைந்த முகங்களும் வைஷாலி வயிற்றுக்குள் பயப் பந்தை உருள வைக்க, கண்களில் மிரட்சியோடு இருந்தவளை நெருங்கினான் சஞ்சயன்.

 

“நான் சஞ்சு… உன்ர பேர் என்ன? எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு. எனக்குப் பக்கத்தில இருக்கிறியா?”

 

அவளோடு மொன்டசரியில் சேர்ந்து படித்திருந்த யாரும் இந்த வகுப்பிற்கு வரவில்லை எனவும் தனிமையில் தவித்துக் கொண்டிருந்தவளுக்கு சஞ்சயன் தானாகவே வந்து பேசவும் ஒரு ஆறுதல் வந்தது.

 

“நான் வைஷூ… ப்ரெண்ட்ஸ்…”

 

என்று உடனடியாக கைகொடுத்து அவனை தனது நண்பனாக்கிக் கொண்டாள். முதலாம் வகுப்பு என்பதால் ஆசிரியர் தங்களுக்குப் பிடித்தவர்களோடு சேர்ந்து அமருமாறு சொல்லவும் இவளும் சஞ்சயனும் அருகருகே அமர்ந்து கொண்டனர்.

 

கொண்டு செல்லும் உணவைப் பகிர்ந்து உண்பதாகட்டும் எங்கே சென்றாலும் சேர்ந்தே செல்வதாகட்டும் பாடசாலை நேரம் முழுவதும் இவர்கள் இருவரும் இணை பிரியாத தோழர்களாகத் தான் இருந்தனர். முரளிதரனும் அதே பாடசாலையில் படித்திருந்தாலும் அவன் வேறு வகுப்பு. முதலாம் தரத்திற்கே தரம் ஒன்று ஏ, தரம் ஒன்று பி என இரண்டு வகுப்புகள் இருந்தன. இவர்கள் ஏயிலும் முரளி பியிலும் படித்துக் கொண்டிருந்தார்கள்.

 

இடைவேளை நேரங்களில் உணவுண்டு விட்டுக் கை கழுவப் போகும் போதோ, அல்லது அவர்கள் வகுப்பறையின் முன்பிருந்த முற்றத்தில் விளையாடும் போதோ வைஷாலி முரளிதரனைச் சந்தித்து இருக்கிறாள். வெள்ளையாக உயரமாக அழகாக இருக்கும் அவனை ஒரு வித பிரமிப்போடு பார்ப்பாள். எங்கேயென்றாலும் நடுநாயகமாக இருக்கும் அவனைப் பார்க்கும் போது அவளுக்கு அவனிடத்தில் ஒரு பிரமிப்புத் தோன்றுவது தவிர்க்க முடியாததாய் இருந்தது.

 

முரளிதரனின் தந்தை நெல்லியடி நகரத்தில் இருந்த ‘வானவில்’ ஆடை நிலையத்தின் உரிமையாளர். கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் அவர்களுக்கு கிளைகள் இருந்தது.

 

பெரும் பணக்காரப் புள்ளியான அவரது ஒரேயொரு புத்திரனுக்கு பாடசாலையில் பிரத்யேகக் கவனிப்புக்கு குறைவேது? ஆனால் முரளியும் உண்மையில் படிப்பு, விளையாட்டு என்று அனைத்திலும் கெட்டிக்காரனாகத் தான் இருந்தான்.

 

வைஷாலிக்கு முரளியோடு நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது மூன்றாம் வகுப்புப் படிக்கும் போது தான். பாடசாலையின் ஆண்டு விழாவிற்கு கலை நிகழ்ச்சிகள் பழக்கிக் கொண்டிருந்தார்கள். ஒரு ஆங்கிலப் பாடலுக்கு முரளி நாயகனாகவும் வைஷாலி நாயகியாகவும் நடிக்கும்படி அமைந்தது.

 

நாயகன், நாயகி இருவரும் நண்பர்கள் புடை சூழ ஆடிப் பாடுவதாக அமைந்திருந்தது அந்தப் பாடல். வைஷாலிக்கு இப்போது அது எந்தப் பாடல் என்று மறந்திருந்தாலும் பாடலின் கருப்பொருள் ஞாபகம் இருக்கிறது.

 

நாயகனைக் கண்டு காதல் வசப்படும் நாயகி, தன்னை மணந்து கொள்ள வேண்டும் என்று கேட்பாள். அதற்கு அவன் திருமணம் செய்வதற்கு பொருத்தமாகத்  தன்னிடம் உடை இல்லை என்பான். நாயகி உடையைக் கொடுத்து மறுபடியும் திருமணம் புரியுமாறு கேட்க கழுத்துப் பட்டி இல்லை, கோட்சூட் இல்லை, காலணி இல்லை என்று நாயகன் திருமணம் செய்ய மறுத்து நாயகியிடமிருந்து ஒவ்வொன்றாகப் பெற்று விட்டு இறுதியில் அவளை ஏமாற்றிச் செல்வது போல நகைச்சுவையாக அமைக்கப்பட்டிருந்த பாடல் அது.

 

காதலுக்கோ, கல்யாணத்துக்கோ அர்த்தம் புரியாத வயது அது என்றாலும் ஜோடி சேர்ந்து ஆடிப் பாடியது வைஷாலியின் மனதில் முரளி மேல் ஒரு மட்டற்ற அன்பை விதைத்திருந்தது. கலை நிகழ்ச்சிக்கு பழகும் நாட்களில் எல்லாம் வாய்ப்புக் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களில் முரளியோடு பேசிப் பழகுவதற்கு முனைவாள். அவனோ இவளை விட்டு விலகித் தனது மற்றைய நண்பர்களோடு பேசிக் கொண்டிருப்பான்.

 

ஒரு விதத்தில் அவனின் விலகலே இவளுக்கு அவன் மீது அதிக ஆர்வத்தை உண்டு பண்ணியது எனலாம். முரளி இவளை ஒதுக்குவதைக் கண்டு விட்டு சஞ்சயன் இவளோடு வந்து பேசிக் கொண்டிருப்பான். ஏதாவது கதைகள் கூறி சிரிக்க வைத்து இவள் மனம் வாடாமல் பார்த்துக் கொள்வான்.

 

நாலாம் தரம் படிக்கும் போது பாடசாலை நூலகத்தில் எடுத்த ஒரு கதைப் புத்தகத்தை இவள் எங்கோ தொலைத்து விட்டாள். நூலகப் பொறுப்பாசிரியர் நடேசன் ஆசிரியர் பிரம்படிக்குப் பெயர் போனவர். மிகுந்த கோபக்காரரான அவர் அடித்து விட்டுத்தான் விசாரிக்க ஆரம்பிப்பார். அப்படிப்பட்டவரிடம் புத்தகம் தொலைந்து விட்டதாகச் சொன்னால் அடி பின்னி விடுவாரே என்று வைஷாலி அழுதே கரைந்து கொண்டிருந்தாள்.

 

அதைக் கண்ட சஞ்சயன் அவளிடம் விசயத்தை அறிந்து விட்டு, நடேசன் ஆசிரியரிடம் சென்றான்.

 

“சேர்…! வைஷாலி எடுத்த கதைப் புத்தகத்தை நான் வாங்கிக் கொண்டு போனான். எங்கேயோ துலைச்சுப் போட்டன் சேர்…”

 

இனி இந்தத் தவறைச் செய்யக் கூடாது என்று அவர் பிரம்பால் அடித்த நான்கு அடிகளையும் உள்ளங்கைகள் இரண்டும் சிவக்க, பல்லைக் கடித்து வாங்கிக் கொண்டவன், அமைதியாக வகுப்பில் வந்து அமர்ந்து கொண்டான். இவன் பென்சில் பிடிக்க முடியாது விரல்களை மூடித் திறந்தபடி இருக்கவும் வைஷாலி என்ன ஏதென்று விசாரித்தாள். இவன் எதுவுமில்லை என்று மறுக்கவும் சஞ்சயனின் அருகிலிருந்த நண்பன் நடந்தவற்றைச் சொல்லி விட்டான்.

 

வைஷாலிக்கு உண்மையில் நம்ப முடியவில்லை. தனக்காய் அடி வாங்கி வந்தவனைக் கண்கள் கலங்கப் பார்த்தாள்.

 

“ரொம்ப நன்றி சஞ்சு… ஆனால் நீ ஏன் இப்பிடிச் செய்தாய்? நான் செய்த தப்புக்கு நான் தானே தண்டனை வாங்கியிருக்க வேணும்…”

 

“நீ அழுதால் உன்ர மூஞ்சியைப் பார்க்கவே சகிக்கலை வைஷூ… அடி வாங்க முதலே இப்படி அழுகிறனி… அடி வாங்கின பிறகு எவ்வளவு அழுவாய்…? நான் வேற உனக்குப் பக்கத்திலேயே இருந்து இதையெல்லாம் சகிக்க வேணுமே என்று தான் நானே போய் அடியை வாங்கிட்டேன்…”

 

சஞ்சயன் சிரித்தபடி சொல்லவும் அன்று முதல் அவன் மீது இருந்த நட்பு மேலும் இறுக்கமாகியது. ஐந்தாம் தரம் படிக்கும் போது இவர்கள் இனி பெரிய பிள்ளைகள் என்று சொல்லி ஆண்களை ஒரு பக்கமாகவும் பெண்களை மறுபக்கமாகவும் வகுப்பறையில் இருத்தினார்கள். அப்போது தான் இவள் முதன் முறையாக சஞ்சயனை விட்டு விலகி இருந்தது.

 

அப்போதும் கூட இருவரும் கரையிலேயே இருக்க இவர்களைப் பிரிக்கும் இடைவெளி சிறிதாகவே இருந்தது. இருவரும் வழக்கம் போலவே பேசிக் கொள்வார்கள். ஐந்தாம் தரத்தில் நடக்கும் புலைமைப் பரீட்சை முக்கியமான ஒன்றாகக் கருதப்பட்ட நேரத்தில் படிப்பு, படிப்பு என்று இவர்களுக்கு பொழுதெல்லாம் பரீட்சைக்குத் தயாராவதிலேயே சென்றது.

 

வைஷாலினியும் சஞ்சயனும் வெட்டுப் புள்ளியை விட அதிக புள்ளிகள் எடுத்துச் சித்தியடைந்திருந்தார்கள். ஆனால் முரளியோ அதிக புள்ளிகள் எடுத்து மாவட்ட மட்டத்தில் முதலாவதாக வந்திருந்தான். பாடசாலயே விழாக் கோலம் பூண்டு அவனைக் கொண்டாடியது.

 

முரளிதரனை விட அவனை எண்ணி வைஷாலி அதிகம் பெருமைப்பட்டாள் எனலாம். சஞ்சயனிடம் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனாள்.

 

“சஞ்சு…! முரளி எவ்வளவு கெட்டிக்காரன் பார்த்தியா? படிப்பில, விளையாட்டில எல்லாத்திலயும் அவன் தான் முதலாவது. எவ்வளவு வடிவாக வேற இருக்கிறான். எனக்கு அவனைப் பார்த்துக் கொண்டே இருக்க வேணும் போல இருக்கு…”

 

“முரளியென்றால் உனக்குப் பிடிக்குமா வைஷூ?”

 

“ஓமடா… ரொம்பப் பிடிக்கும். நான் வளர்ந்த பிறகு அவனைத்தான் கல்யாணம் செய்யப் போறன்… அப்ப நான் முரளியோடவே இருக்கலாம் தானே…”

 

பத்து வயதில் திருமணம் என்பதன் அர்த்தம் புரியாது விட்டாலும் கூட, பெரியவர்கள் ஆனதும் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வார்கள். திருமணம் செய்தால் ஒரே வீட்டில் வசிக்கலாம் என்ற அளவில் அவளுக்கு விளக்கம் இருந்தது.

 

அவளின் பதிலைக் கேட்டு சிந்தித்த சஞ்சயன்,

 

“உனக்கு மட்டும் அவனைப் பிடிச்சால் போதுமா? அவனுக்கு உன்னைப் பிடிக்க வேண்டாமா?”

 

சஞ்சயனின் இந்தக் கேள்வி வைஷாலி மனதில் ஆழவே தைத்தது. அன்று சஞ்சயனுக்குப் பதிலளிக்காது விட்டாலும் முரளிக்குத் தன்னைப் பிடிக்க வைக்க வேண்டும் என்று உறுதியாக முடிவெடுத்துக் கொண்டாள்.

 

ஆறாம் தரத்திற்கு முரளியும் சஞ்சயனும் வடமராட்சியில் பிரசித்திபெற்ற நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்திற்கு மாறிச் சென்றார்கள். உயர்தரம் வரை அங்கே தான் படித்தார்கள். அது ஆண்கள், பெண்கள் இருவரும் சேர்ந்து படிக்கும் ஒரு கலவன் பாடசாலை. வைஷாலியும் அதே கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்று வீட்டில் எவ்வளவு அடம் பிடித்தும் அவளது பெற்றோர் அவளை வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரிக்குத் தான் அனுப்பி வைத்தனர். அது பெண்கள் மட்டுமே கற்கும் பாடசாலை.  

 

முரளிதரனை இனிப் பாடசாலையில் காண முடியாது என்று வருந்தியவளுக்கு ஒரே ஆறுதல், பாடசாலை இரண்டு மணிக்கு முடிவடைய மாலை மூன்றரை மணியிலிருந்து ஆறு மணி வரைக்கும் நடைபெறும் டியூசன் வகுப்புத்தான். அங்கு ஆண்கள், பெண்கள் இரு பாலினரும் கலந்தே படித்தனர். ஆறாம் வகுப்பில் இருந்து பதினோராம் வகுப்பு வரை அவர்கள் படித்தது ரலன்ட் டியூசன் சென்டரில் தான்.

 

முரளிதரன் மீதிருந்த விருப்பம் வயதுக் கோளாறு காரணமாக, பருவக் கவர்ச்சியாக, அந்த வயதுக்கே உரிய ஈர்ப்பாக, ‘காதல்’ என்ற பெயரில் வைஷாலியின் மனதில் விதையாக விழுந்து பெரும் விருட்சமாக வளர்ந்தது அங்கே வைத்துத் தான்.

 

அதுல்யாவோடு பேசிய பிறகு ஆன் செய்து வைத்திருந்த கைப்பேசி ஒலித்த சத்தத்தில் பழைய நினைவுகளிலிருந்து தன் நிலைக்கு வந்து அழைப்பது யாரென்று எடுத்துப் பார்த்தாள் வைஷாலி. சஞ்சயன் தான் அழைப்பது என்றதும் கைப்பேசியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

சஞ்சயனோடு மீண்டும் பேசுவாளா? நட்பு மீண்டும் துளிர்க்குமா?

 

3 thoughts on “யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 04”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

காயத்திரியின் ‘தேன்மொழி’ – 11காயத்திரியின் ‘தேன்மொழி’ – 11

பாகம் 11 தேனுவிற்கு ராசாத்தியின் நிலையை பார்க்க பார்க்க மனம் வெறுப்பு தட்டியது.ஒருபக்கம் சிவமூர்த்தியின் இழப்பு மற்றொரு பக்கம் தன் தோழியின் நிலை…சிவமூர்த்தியின் அம்மா நல்ல மனம் உள்ளவர் என்பதால் சிவமூர்த்தியின் கரு அவளிடம் இருப்பதை ஏற்றுக்கொண்டாள்.மூர்த்தி அவன் தாயிடம் அதிகம்

சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 7சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 7

பாகம் – 7 “காற்றெல்லாம் உன் வாசம் உன் வாசங்களை கோர்த்து உணவாய் உண்டு இராட்சனாகிக் கொண்டிருக்கிறேன் …“   அன்று ஸ்வேதாவிடம் கைப்பேசியில் பேசிக் கொண்டிருக்கும் ஏனோ குமாரை பார்த்த விசயத்தை கடைசி நொடியில் சொல்லாமல் தவிர்த்தாள் ஸ்ருதி. “இன்றைக்கு?”

கணபதியே வருவாய்கணபதியே வருவாய்

  இராகம்: நாட்டை தாளம்: ஆதி கணபதியே வருவாய் அருள்வாய் (கணபதியே) மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்க மங்கள இசை என்தன் நாவினில் உதிக்க (கணபதியே) ஏழு சுரங்களில் இன்னிசை பாட எங்கணும் இன்பம் பொங்கியே ஓட தாளமும்